Pages

Monday, March 26, 2012

நேசம் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை

புற்றுநோய் விழிப்புணர்ச்சிக்காக நேசம் அமைப்பினர் நடத்திய சிறுகதை போட்டி முடிவுகளை இன்று அறிவித்துள்ளார்கள். இதில் மூன்று பரிசுகளும் நான்கு ஆறுதல் பரிசுகளுக்கான சிறுகதைகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில் முதல் பரிசு பெற்றது அப்பாவி தங்கமணியின் சிறுகதை. எனது சிறுகதையான "பொழுது விடியட்டும்" சிறுகதையை இரண்டாம் பரிசு சிறுகதையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் நடுவர் குழுவினருக்கும் என்னுடைய‌ நன்றிகள்.



எல்லா புகழும் இறைவனுக்கே!

வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த வெற்றிபெற உதவிய உங்கள் அனைவரின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் என்னால் மறக்க இயலாது.

நண்பர் அக்பர் போன்மூலம் சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப சந்தோசமா இருந்தது.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருநிமிடம் விக்கித்து நின்றேன். இந்த சந்தோசத்தை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நேசம் போட்டி முடிவுகளை இங்கே காணலாம்.

போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை பொழுது விடியட்டும்.

தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் உடான்ஸ் திரட்டிக்கும் நடுவர் குழுவினருக்கும் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Thursday, March 15, 2012

கரையில்லா ஜோதி?..


கவியே என் ஆருயிர் கவியோ நீ
உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்..

வரிகளை கொண்டு உன்னையடையும்
வழிகளாய் உருவகப்படுத்தினோம்..
அது ஏக்கம், சோகம், இன்பம்,
தாங்கி நிற்கும் உணர்வுகளாக..

என்று எழுத்து என்னும் மூதாட்டியை
நிலாவில் கண்டோமோ அன்றே
நீயும் பிறந்திருப்பாய் என்றே
தோன்ற வைத்திருப்பாய்!!

சிக்கிமுக்கி காலம்முதல்
தீப்பொறிகள் போல
காதலுக்காக தூதுச்சென்றாயோ!!
அல்லது விதைகளை தூவிச்சென்றாயோ?..
உன் சக்தியால் சில மக்கியும்
பல விருட்சமாகவும் யெங்கெங்கிலும்...

ஆண்டியிலிருந்து கவிச்சக்கரவர்த்தியையும்
தாண்டி கவியரசாகவும் கவிபேரரசுகளாய்
பரந்துவிரிந்த தேசமிது
உன்னை விரும்பாதோர் அவனியில் உண்டோ?..

கவியே என் ஆருயிர் கவியோ நீ..
பூவையர் மனம் போல மென்மையானவளே!
ஒவ்வொரு நாளும் புத்தம்புது
மலராய் பூக்கின்றாய் என்னுள்..
எனை வந்து சேருவது என்னாளோ?..

வா அருகினில் வா
வந்தெனை அணைத்துக் கொள்
எமை உன் ஜோதியில் கலக்க வா..

உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்...

,

Post Comment

Saturday, March 10, 2012

நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறர்க்கு?..

இப்போதெல்லாம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவது மிக சாதாரணமாகி விட்டது.


"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார். அதில், அண்ணல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும்.

420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். ஆக மொத்த எடை... 1500 கிலோ..!

100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும் இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!.

அடேங்கப்பா......!


ஆட்சியாளர்களுக்கு இவ்வளவு வீண்செலவு செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பது சாதாரணமாக தோன்றுகிறது.

கஷ்டப்படும் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. இவ்வளவு பணத்தைக் கொண்டு பசியால் வாடும் கஷ்டப்பட்ட அரபிகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் செலவு செய்தால் அவர்கள் மனம் குளிருவார்களே..

இந்த பணத்தைக் கொண்டு நாட்டுநலப் பணித்திட்டங்களுக்கு செலவிட்டால் நாட்டில் பணப்பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டங்களும் விரைந்தோடுமே..

சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்?????....

******

* ஒரு 20 ரூபாயை 2 ஏழைகளுக்கு தர்மம் செய்வது நமக்கு பெரிய விசயமாக இருக்கும்.

* ஆனால் இந்த 20 ரூபாயை ஹோட்டல் சர்வருக்கு டிப் ஆக கொடுப்பது சாதாரணமாக தோன்றுகிறது.

* ஒரு 3 நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மிக கடினமாக தோன்றும்.
ஆனால் 3 மணி நேரம் சினிமா படத்தை உக்கார்ந்து பார்ப்பதில் கஷ்டமே தெரியாது.

* நாள்பூராவும் ஜிம்முக்கு போய் நேரத்தை வீணாக்கி கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்வது மிக பிடித்தமான ஒன்று.

* அதே நாள் வீட்டில் சின்னசின்ன வேலைகள் செய்து அம்மாவுக்கு உதவியாய் இருப்பதில் ரொம்பவே டயடாகி விடுவோம்.

* வருடத்தில் ஒருநாள் வரும் லவ்வர்ஸ் டே எப்போ வருதுன்னு ஆவலோடு இருப்போம்.

* ஆனால் அன்னையர் தினம் (மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) எப்போ வருதுன்னு தெரியாமலே போய்விடும்.



* இதோ இந்தப் படத்தில் தோன்றும் இரண்டு சிறுவர்கள் பசி மயக்கத்தில் சுருண்டு கிடக்கின்றனர். இவர்களுக்கு ஆளுக்கொரு ரொட்டித்துண்டுகள் வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு சந்தோப்படுவார்கள்.

* ஆனால் இதே சோகக் காட்சியை படமாக வரைந்து 1 லட்ச ரூபாய்க்கு விற்பது பேசனாகி விட்டது,....

என்ன செய்ய?..

நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறருக்கு அது ரொம்ப பெரிய விசயமாக இருக்கும்.

எனவே இறைவன் கொடுத்த பொருளாதாரத்தை வீண் வகைகளில் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஈடுபாடு காட்டினால் உலகில் வறுமை என்னும் சொல்லே இருக்காது.

,

Post Comment

Monday, March 5, 2012

ஏமாறுகிறவன் இருக்கும்வரை...

சென்ற ஆண்டு ஊருக்கு சென்றிருந்த சமயம், எப்போதும் மதியம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கத்தை போடுவதுண்டு. அப்படி ஒருநாள், சாப்பிட்டுவிட்டு குட்டித்தூக்கத்தை புரண்டு புரண்டு வரவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது அலைபேசி அலறிக்கொண்டிருந்தை பார்த்த என் மனைவி, "ஹலோ! ய்யாரு.." என்றார். "ஹலோ! மிஸ்டர் ஷேக் மைதீன் இருக்கிறாரா.. அவரிடம் கொடுங்க., கொஞ்சம் பேசணும்" என்று கொஞ்சும் குரலில் ஒரு பெண் மறுமுனையில். மனைவி ஒருவித பார்வையுடனே என்னிடம் போனை தந்தார்.



நான் "ஹலோ" என்றேன். "ஹலோ நீங்கதான் ஷேக்மைதீனா?" என்றாள். "ஆமா நாந்தான்.. என்ன வேணும் சொல்லுங்க" என்றேன். உடனே மறுமுனை பெண், "சார்! கன்கிராஜிலேசன்ஸ்! நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படப்போகுது! உங்க கனவு நனவாகப்போகிறது!" என்றாள் அவள். "அட! என்னங்க சொல்றீங்க.. ஒண்ணும் புரியலியே.." என்றேன். "ஆமா சார்.. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. எங்க நிறுவனத்தின் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்)ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் உங்க ரெண்டுபேரையும் செலக்ட் பண்ணிருக்காங்க. இலவசமா பாலிசி தர்றாங்க. பணமே கட்டவேண்டாம். உங்களுக்கு 2 லட்சரூபாய்க்கு பாலிசி இலவசம்" என்றார் அந்த பெண்.

"அடடே.. ரொம்ப நல்ல விசயந்தான் சொல்லியிருக்கீங்க.. அப்ப நான் அதிர்ஷ்டசாலிதான் ரொம்ப சந்தோசமா இருக்கு.." என்றபடி மனைவியை ஒரு லுக் விட்டேன். மனைவியும் "என்ன?.. யாருங்க போன்ல" என்றபடி ஆர்வமானார். இதுபோல நிறைய இலவச பாலிசி மேட்டர் கேள்விபட்டிருந்தாலும் இவங்க என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே என்று போனை துண்டிக்காமல் இன்சூரன்ஸ் கம்பெனி பெண்ணுடன் பேச்சை தொடர்ந்தேன். இதைக் கண்டு என் மனைவியும், அத்தாவும், அம்மாவும், தங்கையும் ஆர்வத்துடன் என் அருகே அமர்ந்ததும், நான் பேசுவதை ஸ்பீக்கர் போனில் போட்டு அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

"ஆமா சார்! நீங்க அதிர்ஷ்டசாலிதான். பாலிசியை வாங்கிக்கொள்ள எங்க அலுவலகத்துக்கு வாங்க" என்றார். "சரிங்க.. உங்க அட்ரஸ் கொடுங்க.. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்" என்றேன். அந்த பெண்ணும் ஆபீஸ் அட்ரஸ் கொடுத்தார். ரொம்ப நன்றி என்றேன். "பரவாயில்லை சார்! எங்களுக்கும் பங்கு கிடையாதா?.." என்றார் அந்தபெண். "என்னது?.. உங்களுக்கும் பங்கா?.. அஸ்குபுஸ்கு!" என்றேன் நான். "அட என்ன சார்! நான் சொன்னது உங்க சந்தோசத்தில்" என்றார் அந்த பெண். இருவரும் கடகடவென சிரித்தோம்.

"சரிங்க அப்ப நான் உங்க ஆபீஸ்க்கு வந்து பாலிசியை வாங்கிக்கிறேன்" என்றேன். "சரிங்க‌ சார்! வரும்போது மறக்காம உங்க மனைவியையும் கூட்டிட்டு வாங்க" என்று அடுத்த குண்டை போட்டார் அந்த பெண். "மனைவியை ஏன் கூட்டிட்டு வரணும்?.. நானே வந்து வாங்கிக்கிறேன் மேடம்" என்றேன். "இல்லீங்க.. கண்டிப்பா உங்க மனைவியையும் கூட்டிட்டு வரணும். மனைவியோட வந்தால்தான் பாலிசி கொடுப்பாங்க. மறந்துருராதீங்க சார்" என்றதும் நான், "மேடம்! மனைவியை இப்ப கூட்டிட்டு வரமுடியாது. நானே வந்து வாங்கிக்கிறேனே மேடம்" என்றதும் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார் அந்த பெண்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். மறுபடியும் அவளிடமிருந்து போன். "ஏன் சார்.. உங்க மனைவி வரமாட்டாங்க?. கண்டிப்பா வரணுமே சார்" என்றார் அந்த பெண். "இல்லீங்க.. அவங்க வரமுடியாத சூழ்நிலை. அதனாலதான் நான் வருகிறேன் என்று சொன்னேன்" என்றேன் நான். அந்த பெண்ணும் லேசுல விடலை. துருவிதுருவி கேட்டுக்கொண்டிருந்தார். "என்ன சூழ்நிலை?. உங்களுக்கு பாலிசி வேணுமென்றால் மனைவியோட வாங்க" என்றார். "என் வொய்ப் ஊருக்கு போயிருக்காங்க. வர 2 நாளாகும். நான்கூட இப்ப ஊருக்குதான் கிளம்பிக்கிட்டு இருக்கிறேன். அதனால நான் இப்ப வந்து வாங்கிக்கிறேன். பாலிசி டாக்குமென்ட்ஸ் எல்லாம் ரெடியா வச்சிருங்க. இப்ப வருகிறேன்" என்றதும் அந்த பெண் போன் இணைப்பை மறுபடியும் துண்டித்து விட்டார்.

எங்க வீட்டிலுள்ளவர்களுக்கு இது உண்மையா இல்லை பொய்யா?.. என்று ஒரே குழப்பம். பொய்தான் என்று தெரிந்தாலும் அந்த பெண் பேசுவதை வைத்து பார்க்கும்போது உண்மையா இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த பெண்ணின் பேச்சு அற்புதமாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. இவர்களுக்கு ரொம்ப நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காங்க.

அப்போதுதான் எனது சிஐடி மூளையில் பல்பு பிரகாசித்தது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் இடம் நன்றாகத் தெரியும். அங்கே சென்று இது பொய்யா?.. உண்மையா? என்று நேரில் பார்த்துவிடலாம் என்று தோன்றியது. உடனே அங்கே கிளம்பிவிட்டேன்.

அதுஒரு ஐந்துமாடி கட்டடம். கீழ் தளத்தில் பிரபலமான ரெஸ்டாரென்ட் இயங்குகிறது. நான் அங்கு சென்று லிப்டை ஆன் செய்தேன். அது ஒர்க் ஆகவில்லை. அங்கிருந்த காவலாளி, "லிப்ட் ஒர்க் ஆகாது., படியில் ஏறி போங்க சார்" என்றார். விறுவிறுவென படிகளில் ஏறி நான்காவது மாடியில் உள்ள அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்றதும் எனக்கு அதிர்ச்சியானது.

சரியாக கட்டிமுடிக்கப்படாத கட்டடம். சுற்றிலும் நோட்டம்விட்டேன். அங்கு யாருமே இல்லை. மேலும் முன்னேறி சென்றேன். அப்போது மீண்டும் அதே குரல். அதே குரல் பல குரல்களாக எதிரொலித்தது. அப்போது எதிரே ஒரு பெண் அலுவலகத்துக்கு உள்ளிருந்து வந்தாள். நான் சுற்றும்முற்றும் பார்ப்பதை உணர்ந்து என்னவென வினவினாள். அதற்கு நான், "நான் கீழே ரெஸ்டாரென்ட்க்கு வந்தேன். மேல்மாடியில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் இலவச பாலிசி தருவதாக பேசிக்கிட்டாங்க. அதான் இங்கே வந்தேன்" என்றேன். "அப்படியா.. ரொம்ப சந்தோசம். ஆமா., இங்கே இலவச பாலிசி உண்டு. உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா ஒய்பை கூட்டிட்டு வாங்க. இலவச பாலிசி தருவாங்க" என்றாள். நான் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நோட்டம் விட்டேன். "சரிங்க மேடம் அப்ப நா வாரேன்" என்று அங்கிருந்து கிளம்பினேன்.

நான் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சிதான் மிஞ்சியது. உள்ளே நாலைந்து கால் கேபின்களில் இளம்பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் பேசிய பெண்ணின் குரலும் கேட்டது. இவர்கள் பேச்சாலே கஸ்டமர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தனர். அந்த அலுவலகத்தில் பாலிசி கொடுப்பதாக இருந்தால் எதாவது அதிகாரியோ இல்லை அலுவலகமாகவோ இயங்கவேண்டுமே. அங்கு ஐந்தாறு பெண்களை தவிர வேறயாருமே இல்லையே?.. பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து ஏமாற்றுதல் முறையற்ற செயல். இந்த பெண்களையும் குற்றம் சொல்லி பயனில்லை

எனக்கு தெரிந்து,

இப்படித்தான் சில இடங்களில் இலவச பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து உங்களுக்கு இலவசமா பாலிசி தருவதானால் இவ்வளவு தொகை செலுத்தினால் போதும். அப்புறம் நீங்க பணம் எதுவும் கட்டவேண்டாம் என்று சொல்லி பணத்தை கறந்துவிடுவார்கள். இப்படி நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

முதலில் இலவசம் என்று சொல்லி பின்னர் டாக்குமென்ட்ஸ் கையெழுத்திடும்போது ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை கேட்டால் என்ன செய்வது?.. இவர்களது இலக்கு நடுத்தர வர்க்கத்தினரை இலவசம் என்ற பெயரில் கவர்ந்து இழுப்பதுதான். இதுபோல கம்பெனி தரும் இலவசங்களை கண்டும் காணாமல் விடுவது சாலச் சிறந்தது.

அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். இதுபோன்ற இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

மறுநாள், மறுபடியும் அதே பெண்

"ஹலோ சேக்மைதீன்!.. உங்க ஒய்ஃப் ஓகே சொன்னாங்களா.. உங்க ஒய்ஃபை கூட்டிட்டு எப்ப வாரீங்க? உங்களுக்கான இலவச பாலிசி வெயிட்டிங்ல இருக்கு.. வந்தீங்கன்னா வாங்கிக்கிரலாம். இல்லன்னா வேற யாருக்காவது கொடுத்திடுவாங்க‌" என்றாள். உடனே நான், "இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோட பாலிசிய வேற யாருக்காவது கொடுத்திடுங்க.. எதோ நம்மளால முடிஞ்ச உதவி. உங்க புண்ணியத்துல அவங்களாவது நல்லாருக்கட்டுமே" என்றேன்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்