Pages

Saturday, December 31, 2011

2011ல் கடந்த பாதைகள்

உணவு உலகம் சங்கரலிங்கம் சார் அழைப்பின் பெயரில் இந்த இடுகை.

இப்போதுதான் ஜனவரிக்கு ஊருக்கு சென்றதுபோல இருந்தது. அதற்குள் ஒரு வருடம் முடியப்போகிறது. அந்த பசுமையான நினைவுகள் இன்னும் மாறாமல் உள்ளது. இங்கே இரண்டுபேருக்கு வேலையில்லாத காரணத்தால் நான் கட்டாயமாக ஊருக்கு போகவேண்டிய சூழ்நிலை. 2 வருடம் கழித்து மனைவியையும் பெற்றோர்களையும் தம்பி தங்கைகளையும் உறவினர்களையும் ஆனந்த கண்ணீருடன் காணும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

மகிழ்ச்சியில் கரைந்து போன மூன்று மாதங்களிலும் புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஆனாலும் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்த மனைவிக்கும் பெற்றோருக்கும் நன்றிகள் பல சொன்னாலும் தகாது. இந்த நிலையில் மதுரையில் உள்ள நண்பர் பேராசிரியர் ஷேக் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்.

நான் கல்லூரியில் படிக்கும்போதே அறிமுகமானதில், அவங்க வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஷேக்கின் பாவா(அப்பா). மனிதர் ரொம்ப சுறுசுறுப்பானவர்; யாரையும் எதிர்பாராமல் தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்பவர். அவரது அருகில் நாம் இருந்தால் நமக்கும் அவரது சுறுசுறுப்பு தானாகவே தொற்றிக்கொள்ளும். அவரது சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, தைரியம் தன் பிள்ளைகளுக்கும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதற்காக பிள்ளைகளிடம் தீவிர கண்டிப்பு காட்டாமல் ரொம்ப சக‌ஜமாக தோழமையுடன் பழகுவார். நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் என்னிடமும் அப்படித்தான் பழகுவார். நாங்கள் அங்கு சென்றது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாகவும், எங்களுக்கு, எங்க குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு. மறக்கமுடியாத சந்திப்பு.

****

ஜூன் மாதம் நெல்லையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு மற‌க்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. எழுத்தின் மூலமாக சந்தித்த உறவுகளை நேரில் சந்திக்கும்போது மகிழ்ச்சியில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இனிமையான அந்த சந்திப்பில் பங்கேற்ற அத்தனை பதிவர்களை பற்றியும் அறிந்து கொள்ளமுடிந்தது. சங்கரலிங்கம் சார், சீனா அய்யா, சித்ரா, கௌசல்யா, நாஞ்சில் மனோ, இம்சையரசன் பாபு, ஷர்புதீன், மணிஜி, பலாபட்டறை சங்கர், சிபி, செல்வா, ரத்னவேல் அய்யா தம்பதியினர், பெசொவி, டாக்டர் கந்தசாமி, ரூபினா அக்கா, கல்பனா, ஜோசபின், வெடிவேல் சகாதேவன் மற்றும் பலர் சந்திப்பில் கலந்துகொண்டோம். எல்லோரிடமும் நாந்தான் ஸ்டார்ஜன் என்று என்னை அறிமுகப்படுத்தியதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இந்த இனிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார், சித்ராவுக்கு நன்றிகள் பல சொன்னாலும் தகாது.

****

சித்ராவுடனான இனிய சந்திப்பு

ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்த பதிவர் சித்ரா, ஒருநாள் எங்கவீட்டுக்கு வந்தது மறக்கமுடியாத இனிய தருணங்கள். சித்ராவை பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்லி வைத்திருந்தேன். அமெரிக்காவிலிருந்து சித்ராவும் எங்க‌வீட்டில் எல்லோரிடமும் பேசியிருந்தார். சித்ராவிடம், ஊருக்கு வந்தபின், ஒருநாளாவது எங்கவீட்டுக்கு வரணும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க வீட்டுக்கு வந்திருந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஊருக்கு செல்லும் அன்று பிசியான நேரத்திலும் சித்ரா எங்க‌வீட்டுக்கு வந்திருந்தார். சித்ராவின் கலகலப்பான யதார்த்தமான நகைச்சுவை கலந்த பேச்சினில் நேரம் போனதே தெரியலை. அவரது அப்பா பற்றியும் அப்பாவின் பட்டிமன்ற பேச்சுகள் குறித்தும் கலந்துரையாடினோம்.

****

வேலைக்கு நானும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் சவுதிக்கு செல்ல அக்பரும் அக்பரின் தம்பியும் எனக்காக விசா பார்த்துக்கொண்டிருந்தனர்.

****

மறுமாதம் ஜூலை, மாமனாருக்கு ஆக்ஸிடென்ட் ஆனது மிகுந்த வேதனையை அளித்தது. கஷ்டமான சூழ்நிலையில் இப்படி எதிர்பாராத விபத்து ஏற்பட்டது மனைவியின் குடும்பத்தினரை பாதித்தது. நான் அவர்களுக்கு ஆறுதல்கள் சொன்னேன். ரமலான் நெருங்கி வருவதால் புதுத்துணி எடுக்க ஏரலுக்கு கிளம்பும் முதல்நாள் விபத்தானது மாமாவுக்கு வருத்தம். ஆஸ்பத்திரியில் நான், கூடவே இருந்து பார்த்துக்கொண்டது அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாய் அமைந்தது. இப்போது கால் குணமாகிவருகிறது.

இன்னும் இரண்டு மாதங்களில் காலூன்றி நடந்துவிடலாம் என்று டாக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாரத்துக்கு ஒருமுறையும் பின்னர் இரண்டு வாரத்துக்கு ஒருமுறையும் தூத்துக்குடிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம். சவுதிக்கு கிளம்பும் 2 நாளுக்கு முன்னர் வழிசொல்ல சென்றிருந்தபோது மாமாவும் மாமியும் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் நெஞ்சினில் பசுமையாக உள்ளது.

விபத்து குறித்து பதிவுலக நண்பர்கள் போன்மூலமாகவும் மெயில் மூலமாகவும் ஆறுதல் சொன்னது மகிழ்ச்சியானது. ஆறுதல் சொன்ன அனைவருக்கும் எங்கள் நன்றிகள். குறிப்பாக சகோதரி கௌசல்யா தொடர்பு கொண்டு பணஉதவி எதுவும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்க என்று சொன்னது மாமாவுக்கும் எனக்கும் சந்தோசமாக இருந்தது.

****

சவுதிக்கு செல்ல விசாவுக்காக அக்பரின் தம்பி உதவி செய்ததை மறக்கமுடியாது. மீண்டும் என்னுடைய சவுதி பயணத்தில் இவர்கள் பங்கு முக்கியமானது.

சவுதிக்கு செல்ல எல்லோரிடமும் வழிசொல்லி விடைபெற்றேன். சகோதரி கௌசல்யாவும் அவரது கணவரும் நெல்லை ரயில்நிலையத்திற்கே வந்து வழியனுப்பி வைத்தனர்.

இப்போது இங்கே வந்து மூன்றுமாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவ்வப்போது ஊர்நினைவுகள் வந்து எட்டிப்பார்க்கின்றன. வேலை பிசியினால் எழுதமுடியாவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு எழுதிவருகின்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத முயற்சிக்கிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.

****
வரும் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று சந்தோசமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.




அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post Comment

Thursday, November 24, 2011

புரோட்டா சாப்பிடலாம்.. வாங்க

புரோட்டா

மக்கள் சாப்பிடும் அன்றாட உணவுவகைகளில் புரோட்டாவுக்கு தனியிடம் உண்டு. நகரத்திலிருந்து கிராமம் பட்டிதொட்டிவரை எல்லா இடங்களிலும் முக்குக்குமுக்கு புரோட்டா கடைகள் உண்டு. இந்த கடைகளில் இரவுநேரங்களில் வியாபாரம் படுஜோராக இருக்கும். கூட்டம் அலைமோதும்.
புரோட்டா ஒவ்வொரு ஊருக்கும் தனிசுவை என்று வித்தியாசப்படும்.

தினமும் இரவு புரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும் என்ற அளவுக்கு புரோட்டா மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. புரோட்டா ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுகள். விருதுநகர் புரோட்டா, நெல்லை, தூத்துக்குடி புரோட்டா, மதுரை கொத்து புரோட்டா, சில்லி புரோட்டா, சிக்கன் புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, மற்றும் இன்னும் வகைவகையான புரோட்டாக்களை பற்றி சொல்லும்போதே நாவில் நீர் ஊறுகிறது.


வட மாநிலங்களில், "பரத்தா' என அழைக்கப்படும், "அயிட்டம்' தான், மருவி தமிழகத்தில் "புரோட்டா' என்றானது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. "பரத்தா' என்பது கொஞ்சம் சப்பட்டையாக இருக்கும். புரோட்டா, கொஞ்சம் உப்பலாக இருக்கும். மற்றபடி, இரண்டுமே "அக்கா, தங்கச்சி' தான்.

இந்தியில் கோதுமை மாவுக்கு பெயர் "ஆட்டா'. "பரா' என்றால் அடுக்கு. சுட்ட பிறகு, அடுக்கடுக்காக அமைந்துள்ள மைதா மாவு என்ற அர்த்தத்தில் "பரா+ஆட்டா', "பரத்தா'வாகி இருக்கிறது.

புரோட்டா என்பது மைதா மாவினால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் தமிழக்கத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த புரோட்டா.

புரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?.. மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணீர்விட்டு பிசைந்து, அப்புறம் எண்ணெய் விட்டு ஊறவைத்து, உருட்டி, ஒவ்வொரு உருண்டையாக தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல பறக்கவிட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்டவடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போட்டு சுடுவார்கள்.

இப்போது புரோட்டாவின் மூலப்பொருளான மைதாவிலிருந்துதான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டுமல்லாது இன்னும் பல உணவு வகைகள் இந்த மைதாவிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். நாம் பிறந்தநாள் கொண்டாட வாங்கப்படும் கேக் உட்பட.

மைதா எப்படி தயாரிக்கிறார்கள்?..

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிற‌த்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.

( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயன‌ம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, SUgar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.

இதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்தத‌ல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.


Europe union, UK, China போன்ற நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதாவை நாம் உட்கொள்ளும்போது சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் மைதாவின் தீங்கு குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கைகளும் சமர்ப்பித்துள்ளனர்.

நண்பர்களே! ஆரோக்கியமான நம் பாரம்பரியமிக்க கேழ்வரகு, கம்பு, சோளம், போன்றவற்றை உட்கொண்டு புரோட்டாவை புறம் தள்ளுவோம்.


இப்போதாவது நாமும் விழித்துக் கொள்வோம். நம் தலைமுறை காப்போம்.

**************

டிஸ்கி:

இந்த தகவலை கொடுத்து நம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட வழிவகுத்து தந்த என் நண்பர் பேராசிரியர் ஷேக் அவர்களுக்கு நன்றி. அவரது வேண்டுகோளுக்கு இணங்க இந்த இடுகையினை வெளியிட்டுள்ளேன்.

நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Wednesday, November 16, 2011

கடவுள் எனும் முதலாளி..


என் பஞ்சம்தீர்க்க‌
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்லு
என் கதையை கேட்டபின் செல்!

கலங்கிய கண்களில் நீர்
என் கஷ்டங்களை நினைத்துப்
பார்க்கும்போதும் நீர்தானா
என் உழைப்பிலும் தெரிகிறது
உந்தன் சொகுசு வாழ்க்கை!

ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
அப்போதும் கலங்கிய‌ கண்களில் நீர்!!


வயக்காட்டில் விளைந்ததை
சந்தையில் விற்ற பணத்தை
எண்ணிப்பார்க்கும் உன் கைகளை
நோக்கியபோதும் கண்களிலும் நீர்..
நேற்றையவிட அதிகம் தரமாட்டாயா என்று!

"அப்பா, நா பள்ளிக்கொடம் போறேன்ப்பா",
என்ற மகனின் ஆசையை
நிராசையாகாமல் இருக்க
விலையாய் எந்தன் வயக்காடு
பத்திரமாய் உன் டிரங்குபொட்டியில்!!

பத்திரத்தை பத்திரமாய் மீட்டெடுக்க‌
உழைக்கிறேன் உழைக்கிறேன்
உழைத்துக்கொண்டே இருக்கிறேன்...

ஆளான மகனின் அந்தஸ்துகண்டு
அவனோடு கைக்கோர்க்க விழையும்
உன்னைக்கண்டு பெருமிதமாய்
கலங்கிய கண்களில் நீர்!

Post Comment

Sunday, November 6, 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்

நம்மையெல்லாம் படைத்து, காத்து, நம்முடைய தேவைகளை நிறைவேற்றித் தருகின்ற எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக‌ பக்ரீத் ஈகைத் திருநாள் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இங்கு சவுதி அரேபியாவில் இன்று இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித மெக்காவுக்கு ஹஜ் செய்த ஹாஜிகள் அனைவரும் ஹஜ்ஜை நிறைவு செய்கின்றனர்.

அவர்களின் ஹஜ்ஜை இறைவன் பரிபூரணமான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக நிறைவேற்றித் தருவானாக.. ஆமீன்.


ஹாஜிகளுக்கும், என் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவினர்களுக்கும், வலைப்பதிவு நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த பக்ரீத் ஈகைத்திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Saturday, October 22, 2011

சவுதியில் கருகிய இந்திய மலர்?..

மனிதன் எப்போது வாழ கற்றுக்கொண்டானோ அப்போதே பொறாமையும் பூசலும் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் சண்டையிட்டு மடிகின்றனர். இது தீருமா என்றால் தீராது. தன் தேவைகளையும் குடும்ப தேவைகளையும் நிவர்த்திசெய்ய மனிதன் உழைக்க கற்றுக்கொண்டான். உழைத்து பொருளீட்டி தன் சூழலை முன்னிலைப்படுத்துகிறான்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை சும்மாவா சொன்னார்கள். சிலருக்கு அவரவர் உள்நாட்டிலே பொருளீட்டக்கூடிய சூழல் இருக்கும். இந்த வாய்ப்பைத் தேடி எத்தனை எத்தனையோ பேர் அயல்நாடு செல்கிறார்கள். அப்படி செல்கின்றவர்கள் அந்நாட்டு குடிமக்களால் பலவித இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் படும் கஷ்டங்களை சொல்லி மாளா. இனவெறி தாக்குதல்கள் அளவுக்கு மீறிப்போய் சில சமயங்களில் உயிரையும் வாங்கிவிடும் சூழல் மிக கொடுமையிலும் கொடுமை. அந்த அளவுக்கு மனிதநேயம் அற்றிப்போய்விடுவது வருத்தமான ஒன்று.

இப்படியொரு சம்பவம்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்கே நடந்துள்ளது. ஆம் கொலை!. இங்கே, ஒரு இந்தியனையே, இந்தியன் கொலை செய்து விட்டான்.

நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் சுகைக் என்னுமிடத்தில் உள்ள பெட்ரோல் பல்கில் இந்தியர்களும், பங்காளி, மற்ற நாட்டுக்காரர்களும் அங்கே வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே மெஸ். அதாவது எல்லோரும் ஒன்றாக சமையல் செய்து சாப்பிட வேண்டும். தனித்தனியாக சமையல் செய்யமுடியாது. சென்ற ஆண்டு புதிதாக வந்த பாலக்காட்டை சேர்ந்த மலையாளியும் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு, இங்கு சாப்பாட்டில் அதிகளவு காரம் இருந்துள்ளது. இவரும் சரி என்ன செய்ய என்று சாப்பிட்டு வந்துள்ளார்.

தினமும் காரமான சாப்பாட்டை மலையாளியால் சாப்பிட முடியவில்லை. அதனால் சமையல் செய்யும் உ.பி(உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன்)யிடம் "சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்; சாப்பிடமுடியவில்லை" என்று முறையிட்டு இருக்கிறார். அதற்கு உ.பி காரன் அதெல்லாம் முடியாது. சாப்பிட்டுதான் ஆகணும் என்றிருக்கிறான். தினமும் மலையாளி சாப்பாட்டில் காரத்தை குறைக்க சொல்லியிருக்கிறான். இதனால் உ.பி காரனுக்கு காழ்ப்புணர்ச்சி அதிகமாயிட்டே இருந்திருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அறையில் தூங்கிக் கொண்டிருந்த மலையாளியை உ.பி காரன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். சத்தம் கேட்டு அறைக்கு வந்த பங்காளி, இதை பார்த்து அலறி எல்லோரையும் அழைத்துள்ளான். எங்கே தன்னையும் இப்படி செய்துவிடுவானோ என்றெண்ணி உடனே அறைக்கதவை தாளிட்டு கபிலுக்கு (முதலாளிக்கு) போன் செய்து விசயத்தை தெரிவித்துள்ளான்.

உ.பி காரனை போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். இன்னும் இரண்டு நாட்களில் உ.பி காரன் தலையை வெட்டப்போகின்றனர்.

இந்த செய்தியை சில நண்பர்கள்மூலம் அறிந்தபோது மனது மிகவும் வேதனையானது.

என்ன கொடுமை?.. சே..! யாரும் செய்யத் துணியாத காரியத்தை எப்படி துணிச்சலாக செய்தான் என்றே தெரியவில்லை. இந்த அளவுக்கா கொடும் மனசுக்காரானா இருப்பான். எந்த அளவுக்கு முரடனா இருந்தால் இப்படி செய்திருப்பான்?.. கேட்கும்போதே மனது வேதனையிலும் வேதனையானது.

பாவம் அந்த மலையாளி!. மலையாளிக்கு 24 வயசுதான் ஆகுதாம். அடுத்த வருடம் ஊருக்கு சென்று திருமணம் செய்ய முடிவு செய்திருந்தானாம். அவனை நம்பிதான் அவன் குடும்பமே இருக்குதாம். இப்போது அவனை இழந்து தவிக்கும் அவனது குடும்பத்தாருக்கு யார் பதில் சொல்வார்?.. அதுவும் இந்த இளம்வயதிலே இப்படியொரு இழப்பு யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்?.. தாங்கவே முடியாத சோதனை.

இறந்து போன மலையாளியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கலையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


குடும்ப சூழ்நிலையின் காரணமாக, வெளிநாட்டுக்கு வந்து கஷ்டப்பட்டு உழைக்கும் எத்தனை எத்தனையோபேர் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் இந்த சம்பவம் மிகக் கொடுமையானது. மலையாளி, அப்படியென்ன தவறு, பாவம் செய்துவிட்டான்?. சாப்பாட்டில் காரத்தை குறைக்க சொன்னதற்கு இப்படியொரு தண்டனை. ஒரு இந்தியனே மற்றொரு இந்தியனை கொலை செய்துள்ளது மனிதத்தன்மை அற்ற செயல்.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது உலகம்????.. வெளிநாட்டில் வாழும் இந்திய நண்பர்களே! இந்தமாதிரி ஆசாமிகள் உங்களருகில் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்க.

Post Comment

Monday, October 17, 2011

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

கடந்த சில நாடகளாக பதிவுலகில் நடந்துவரும் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் மனதுக்கு வேதனை அளிக்கிறது.

நேற்று சில நண்பர்கள் போனிலும் இமெயிலிலும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை கேட்டபோது வருத்தமாக இருந்தது.
ஊரிலிருந்து வந்த எனக்கு இது புதிதாக இருந்தது. அப்படியென்ன என்று விசாரிக்கும்போது தமிழ்மண நிர்வாகி ஒருவர் பெயரிலி என்ற பெயரில் சக பதிவர் ஒருவரின் பதிவில் கீழ்தரமான கமெண்ட்களை பகிர்ந்துகொண்டது வருந்தத்தக்கது.

இந்த செயலுக்கு அனைத்து பதிவுலக நண்பர்களும் தங்கள் எதிர்ப்பினை காட்டியுள்ளனர். அது மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பியுள்ளது.

ஒரு சாதாரண மனிதன் பேச யோசிக்கும் கீழ்த்தரமான வார்த்தைகளை சர்வசாதாரணமாக பின்னூட்டங்களாக வெளியிட்டிருக்கிறார்(விபரம் கீழே).

**************

சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.


"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"


ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.


இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.


அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).


இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றேன்.


தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.

--------------------

ஒரு தமிழ்மணத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் இந்தமாதிரி கீழ்தரமாக எழுதுவதை கண்டிக்காமல் இருந்தால் அது தமிழ்மணத்துக்குதான் கெட்டபெயர். அந்தமாதிரிதான் தமிழ்மணம் இதுவரை அந்த மேற்படி நபரை தட்டிக்கேட்காமல் மௌனம் சாதிப்பது மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது.

எந்த ஒரு தனிமனிதனாக இருந்தாலும் தனது மத கோட்பாடுகள், மொழி, பழக்கவழக்கங்கள் அவற்றை சார்ந்தே இருப்பான். இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். அதேமாதிரி மாற்றுமத நண்பர்களின் கொள்கைகள், பழக்கவழக்கங்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது சிலர், அடுத்தவர்களின் மத, ஜாதி பிரச்சனையை கிளப்பிவிட்டு அவர்களுடைய மனத்தை புண்படுத்தும்படி பேசுவதோ, எழுத்தின்மூலமோ செய்து பெருகிவருகிறனர். நான் ஏற்கனவே கூறியுள்ளபடி,

எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி.

தினமும் நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிட்டுவருகிறார்கள். இதில் நிறைய புதியவர்கள் எழுத வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம். அவர்கள் இதையெல்லாம் பார்த்து ஏன்டா நாம் எழுதவந்தோம் என எண்ணி வருந்தும் அளவுக்கு நம்முடைய பதிவுகள் இருக்கக்கூடாது. காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும். பிற்காலத்தில் நமது சந்ததியினர் திருப்பிப்பார்க்கும்போது நமது எழுத்துக்கள் அவர்களை ஈர்க்கவேண்டும்.

நாம் அனைவரும் நமக்கு தோன்றியதை எழுதிவருகிறோம். யாரும் இலக்கியமெல்லாம் படித்துவந்து எழுதவில்லை. அதற்காக, நம்முடைய வலைப்பூவில் இடுகைகள் கொச்சையாகவும் மோசமாக தாக்கியும் இருக்கக்கூடாது. பதிவு எழுதும்போது எழுத்தில் கவனமும் கண்ணியமும் இருக்கவேண்டும். அப்படி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் பதிவுகளை நாம் எட்டிக்கூட பார்க்ககூடாது.


தமிழ்மணத்தின் இந்த செய்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. நானும் எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். உடனடியாக‌, இதற்கு தமிழ்மணம் விளக்கம் அளித்து தீர்வு காணவேண்டும்.

,

Post Comment

Sunday, October 16, 2011

தொடரும் ஆரம்பமும்...


தொடர்கதையாய் தொடர்ந்திடும்
வாழ்வினில் விடுகதையாய்
இந்த (இந்திய) பயணம்
சில மாறா நினைவலைகளோடு
உலா வருதே...!

உற்று நோக்கி நலம்பல விசாரித்து
விருந்தோம்பலுடன் உண்டுறங்கி
கருத்துக்களை பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
மறந்தும் இருக்கமுடியுமா?..

அருகில் இருக்கும்போது
சொல்லத் தோன்றாதது
தூரத்தில் தெரியும்
ஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்கூடிய உணர்வுகள்
பொங்கி பீறிடுகின்றன!

உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
இப்போது நீ அருகில் இருப்பது
மாயையைத்தான் என்றாலும்
மனம் அதை விரும்புதே!

விடை சொல்லத் தெரியாத‌
கேள்விகள் ஆயிரம் உண்டு
விடைகள் மட்டும் காணாமல்
போய்விட்டது..!
தேடல்கள் தொடரட்டும்...!

,

Post Comment

Sunday, October 9, 2011

மீண்டும் ஒரு பயணம் (சவூதி)

நேற்றுதான் சவுதியிலிருந்து கிளம்பி ஊருக்குச் சென்றது போல இருந்தது. இப்போது இங்கே வந்து நாட்களும் ஐந்தாகிவிட்டன. ஆம்! மீண்டும் சவுதி வாழ்க்கையில் இணைந்து வேலையிலும் ஐக்கியமாகியாச்சு.. ஊரில் உள்ள நினைவுகள் மட்டும் பிம்பமாய் என் மனத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம்.......

எனது வலைப்பக்கத்துக்கு வருகை தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி...

மீண்டும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்டார்ஜன்.

Post Comment

Thursday, September 8, 2011

முட்டையிலிருந்து கோழி ?...



அப்புறம்...,


இதை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிக‌ள்...

Post Comment

Sunday, August 28, 2011

போதையின் விளைவு??...

எதிர்பாராமல் திடீரென வரும் சோதனை, நமக்கு தாங்கமுடியாத வேதனையையும் இழப்பையும் தரும்போது மிகுந்த மனஉளச்சல் உண்டாகிறது. அப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் சென்ற மாதம் நிகழ்ந்தது. அதனை வருத்தத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்று இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு உறங்க சென்றேன். உறங்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்போது மணி 12 இருக்கும்போது எனது செல்போன் அலறியது. "ஹலோ காக்கா.. நான் பாஸித் பேசுறேன். அஜீஸ் மாமாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருச்சி.. மாமிக்கு என்ன செய்வதென்றே தெரியலை. ரொம்ப பயப்படுதாங்க.. உடனே சீக்கிரம் கிளம்பி வாங்க" என்றதும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியானது. "எப்படிடா ஆச்சி.." என்றதுக்கு அவன், "மாமா, கடை அடைத்துவிட்டு 11.30 மணிக்கு சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது ஆம்னி கார் மோதி வலது காலில் எலும்பும் நரம்பும் கட்டாகிருச்சி.. நாங்க திருச்செந்தூர் ஆஸ்பிடலுக்கு கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். நீங்க சீக்கிரம் வாங்க" என்றான்.

விசயம் அறிந்ததும் எல்லோருக்கும் அதிர்ச்சி. கண்களில் கண்ணீருடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே என்னுடன் மனைவியும் என் அத்தாவும் அம்மாவும் கிளம்பும்போது 12.30 மணி. மறுபடியும் பாஸித்யிடமிருந்து போன். "காக்கா, மாமாவுக்கு ட்ரீட்மென்ட் பண்ண நாகர்கோவில் திரவியம் எலும்புமுறிவு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வருகிறோம். சீக்கிரம் வாங்க காக்கா" என்றான். "இதோ கிளம்பிட்டோம் பாஸித். கவலைப்படாமல் இருங்க. மாமிக்கு ஆறுதல் சொல்லு" என்று சொல்லும்போது எனக்கு குரல் உடைந்து கலக்கம்.

இரவு நேரம் என்பதால் ஆட்டோவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டோக்காரருக்கும் போன் செய்தால் எல்லோரும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் பஸ்ஸ்டாப்பில் கலக்கத்துடன் நால்வரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னவென்று கேட்டார். அவரும் விபரம் அறிந்து வருத்ததுடன் "நாங்க எதாவது ஆட்டோக்காரன் தென்பட்டால் அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லியபடி சென்றார். சிறிதுநேரத்தில் அங்குவந்த மற்றொரு போலீஸ் இன்ஸ்பெக்டர், விபரம் அறிந்து வருத்தமாகி, "சரி சரி கவலைப்படாதீங்க.. அன் டைம்மா இருக்கே.. டவுண் செக்போஸ்ட்டில் எதாவது பஸ்ஸை மறித்து எப்படியாவது அனுப்பி வைக்கிறேன். வண்டியில் ஏறுங்க" என்று சொல்லி எங்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

சிறிது தொலைவில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோக்காரர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பினால் "என்னால் இப்போது வரமுடியாது" என்று மறுத்துவிட்டார். உடனே இன்ஸ்பெக்டர் ஆட்டோக்காரரை சத்தம்போட்டு எங்களை அனுப்பி வைத்தார். புதிய பேரூந்து நிலையத்துக்கு அழைத்து வந்த ஆட்டோக்கார நண்பர் எங்களை நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.‌

நாங்கள் ஆஸ்பிடலுக்கு சென்றபின் சிறிதுநேரத்தில் மாமாவை ஆம்புலன்சில் கொண்டு வந்தார்கள். அடிபட்டு சுயநினைவு இல்லாமல் இருந்த மாமாவை ‌ பார்த்ததும் சொல்லமுடியாத மிகுந்த வேதனையாக இருந்தது. மாமாவுடன், மாமியும் அவர்கள் பக்கத்துவீட்டு பாஸித்தும் உடன் இருந்தார்கள். எப்படி இதெல்லாம் நடந்தது என்று விசாரிக்கும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

மாமா 11.30 மணிக்கு கடையடைத்துவிட்டு சைக்கிளில் வரும்போது அவரது கடைக்கு அருகில் டீக்கடை வைத்திருக்கும் நண்பர் பைக்கில் பின்னால் வந்து, "என்ன அஜீஸ்பாய்! கடையடைக்க இவ்வளவு நேரமாச்சா" என்று கேட்டிருக்கிறார். அதற்கு மாமா, "இன்னக்கி திங்கள்கிழமை சந்தையல்லவா.. அதான் கொஞ்சம் லேட்டாகிருச்சி...." என்று சொல்லிதான் முடிக்கவில்லை அதற்குள் எதிரே குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த ஒருவன் வேகமாக இருவர் மீதும் மோதி காரை சிறிதுதூரம் ஓட்டிசென்று நிறுத்தியிருக்கிறான். இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இருவரும் சைக்கிளையும் பைக்கையும் ரோட்டின் ஓரமாக நிறுத்திதான் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடோடி சென்று இருவரையும் தூக்கி அருகிலிருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்கள். வீட்டுக்கு தகவலறிந்து மாமி உட்பட தெருவில் உள்ளவர்கள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்ய அங்குள்ளவர்கள் எந்த அக்கறையும் இல்லாமலும் டாக்டர் பணியில் இல்லாமலும் இருந்திருக்கின்றனர். ஆம்புலன்ஸ் கேட்டதற்கு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர், டாக்டர் வந்ததும் இதுகுறித்து கேட்டதற்கு, அவர்மீது ஆஸ்பத்திரி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தன்னிடம் தகாதமுறையில் நடந்திருக்கிறார் என்றும் பொய் வழக்கு போட்டிருக்கிறார் அங்குள்ள அரசு பெண்டாக்டர். என்னத்த சொல்ல....

பின்னர் தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். திருச்செந்தூரில் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் "எங்களால் சிகிச்சை செய்யமுடியாது; வேறு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லுங்கள்" என்று சொல்லி, எங்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்த பணம் கொடுத்தால்தான் இங்கிருந்து நீங்கள் போகமுடியும் என்றும் கெடுபிடி செய்திருக்கிறார்கள். உடனே மாமி தன் காதில் இருந்த கம்மலை கழட்டி கொடுத்தும் நம்பிக்கை இல்லாமல் டிரைவரின் டிரைவிங் லைசன்ஸையும் வாங்கியிருக்கிறார்கள். பின்னர் மாமாவை நாகர்கோவிலுக்கும் இன்னொருவரை திருநெல்வேலிக்கும் மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

நாகர்கோவில் திரவியம் ஆஸ்பத்திரியில் மாமாவை பரிசோதித்த டாக்டர் உங்க மாமாவுக்கு வலதுகால் தொடை எலும்பு உடைந்துள்ளது; மூட்டு விலகியிருக்கு; கரண்டை கால் பின்பகுதியில் 10மீ அளவுக்கு சதை சிதைந்து 2 நரம்பு கட்டாகியுள்ளது. ஆண்டவன் கிருபையால் முக்கியமான நரம்பு கட்டாகாமல் இருப்பதால் காப்பாற்றி விடலாம். கவலைப்படாதீங்க. இப்போது அதிகப்படியான இரத்தம் வெளியேறியுள்ளதால் மயக்க நிலையில் இருக்கிறார். உடனடியாக ஆப்ரேசன் செய்யவேண்டும். எலும்பு ஜாயின்ட் பண்ண பிளேட் வைக்கணும்; கரண்டை காலில் கட்டான நரம்புகளுக்கிடையே பிளாஸ்டிக் நரம்பு வைத்து இணைத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணவேண்டும். இதற்கெல்லாம் நிறைய செலவாகும். உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு பணத்துக்கு ஏற்பாடு செய்யணுமே என்னசெய்ய.... சிலர் பண உதவி செய்வதாக சொன்னார்கள். அவர்களிடம் கேட்டபோது இப்போது எங்களால் முடியாது என்று மறுத்துவிட்டனர். நான், எனது மனைவியின் நகைகளை பேங்கில் அடகுவைத்து 1 1/4 லட்சம் கொடுத்தேன். இன்னும் பணத்துக்கு உறவினர்களிடமும் மற்றும் சிலர்களிடம் உதவி கேட்டோம். ஊரில் உள்ள நல்மனது கொண்ட மக்கள் சில தொகை கொடுத்தனர். அப்படியாக சேர்ந்த பணத்தைக் கொண்டு ஆப்ரேசனுக்கு பணம் கட்டினோம்.

இறைவனின் கிருபையால் ஆப்ரேசன் நல்லவிதமாக முடிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டுக்கு கூட்டிவந்தோம். இப்போது மருந்து கட்டுபோட வாரத்துக்கு 2முறை தூத்துக்குடியில் உள்ள திரவியம் மருத்துவமனைக்கு சென்று வருகிறோம். இப்போது உடல்நலம் தேறி வருகிறார். மாமா எழுந்து நடப்பதற்கு முயற்சித்து வருகிறோம்.

உடன்குடியில் உள்ளவர்கள், "அஜீஸ் பாய்க்கு இப்படி ஆகிட்டதே.. ரொம்ப நல்ல மனுசன்; ஓரமாக சென்று ஓரமாக வரக்கூடியவர்; அமைதியானவர்; அவருக்கா இந்த நிலைமை" என்று ‌மாமாவை பற்றி அவர்களுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது.

ஆக்ஸிடென்ட் செய்தவனை போலீஸார் பிடித்து எஃப் ஐ ஆர் போட்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவன் இரண்டே நாளில் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டான். திருநெல்வேலியில் கேஸ் போட்டிருக்கிறோம்.

மாமா இரவெல்லாம் வலியில் உறக்கம் வராமல் துடிப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. "நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன். சும்மா போனவனை அடித்துப்போட்டு விட்டானே... என்னோட உழைப்பு போயிவிட்டதே.. நடக்க எத்தனை மாசம் ஆகப்போகிறதோ தெரியவில்லையே.." என்று கண்ணீர் வடிக்கிறார். இதெல்லாம்‌ அவனுக்கு எங்கே கேட்கப்போகிறது?.. இந்த பாவம் அவனை ஒருக்காலும் சும்மா விடாது.

டிரைவர் என்றால் கட்டாயம் குடித்துவிட்டுதான் வாகனம் ஓட்டவேண்டுமா?.. அப்படி என்னைய்யா அதுல இருக்கு?.. உயிரை வாங்கும் அளவுக்கு குடி தேவையா?... கொஞ்சம் சிந்தித்து பார். உன்னால் எத்தனை உயிர்கள் போக வேண்டி இருந்தது?.. கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

தன்னை மறந்த குடிபோதை, அவனை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்த சுற்றத்தாரையும் பாதிப்பதை அவன் கொஞ்சம் சிந்தித்து பார்த்து திருந்தட்டும்.

,



Post Comment

Sunday, June 12, 2011

எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி


ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த இடுகை. ஒவ்வொரு நண்பர்களின் ஊர்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது. நன்றி ஸாதிகா அக்கா.

திருநெல்வேலி என்று சொன்னாலே உங்களுக்கு அல்வா என்றுதான் ஞாபகத்தில் வரும். இங்கு தயாரிக்கப்படும்அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் நெல்லை டவுணில் உள்ளஇருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும்
ருசியே தனிதான். அந்த கடையில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என்ற பெயர். கூட்டம் அலைமோதும் அந்த கடையில் வியாபாரம் ஓஹோ. திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கே அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.

திருநெல்வேலிக்கு பெயர்க்காரணம் இந்துமத நம்பிக்கையின்படி, ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றான தாமிரபரணி வளம்கொழிக்கும் நெல்லைக்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. நம்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பல வீரர்களை வித்திட்டபூமின்னு சொல்லலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கான்சாகிப், வாஞ்சிநாதன், ..சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஊமைத்துரை மற்றும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாதவர்களும் வாழ்ந்த ஊர்ன்னு சொல்லலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பேசப்படும் வட்டாரமொழிகளில் நெல்லைத்தமிழும் பிரசித்தி பெற்றது. நெல்லையும் தூத்துக்குடியும் பிரிக்கப்பட்டாலும் இன்னும் இங்குள்ள மக்களின் சகோதரத்துவமும் பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறன்றன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, கடையந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பை (அம்பாசமுத்திரம்), சேரன்மகாதேவி, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய நகரங்கள் உண்டு.

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவனங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.

நெல்லை ஜங்சனில் ஆசியாவில் முதல் ஈரடுக்கு மேம்பாலம் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் காக்கிறது.

இங்குள்ள மக்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்களும் பெருமளவில் இந்து சமுதாயத்தவரும் நிறைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலபகுதி மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இங்கு உண்டு. ‌பேட்டை, மேலப்பாளையம் மற்றும் சில ஊர்களில் உள்ள பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கு பெற்றோர் தயவை எதிர்பார்க்காமல் தம்மால் இயன்றளவுக்கு பொருளீட்டி சம்பாதிக்கின்றனர்.

நெல்லையில் சுற்றிப்பார்க்க நெல்லையப்பர் கோவில், அறிவியல் மையம், ஜூன் ஜூலை மாதங்களில் அரசு சார்பிலும் தனியாரும் பொருட்காட்சி நடத்துவார்கள். சில சமயங்களில் சர்க்கஸ்ம் நடத்துவார்கள். மக்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். தங்களுடைய ஓய்வு நேரங்களில் இதுமாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள ஜங்சன் பகுதி, கோபாலசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆற்றுக்கு குடும்பத்தினரோடு சென்று பொழுதை கழிப்பார்கள்.

இதுபோக பாபநாசம், குற்றாலம் அருவிகளுக்கும் மற்றைய சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.

இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அதெல்லாம் அப்போ... என்று சொல்லுமளவுக்கு இன்று எங்கும் விளைநிலங்கள் மனைகளாகவும் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது வேதனைக்குரியது. எங்கு பார்த்தாலும் அங்கே இத்தன சென்ட் நிலம் குறைவான தொகை, இங்கே இவ்வளவு தொகை என்று கூவிகூவி மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் விளம்பரம். காண சகிக்கலை.

இது நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும்தான்.

***************


அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!

நெல்லையில் வருகிற 17ம்தேதி வெள்ளிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு பதிவர் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளார்கள்.

வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி.

ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.

பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு உங்களுடைய அனுபவங்களையும் பகிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!..

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, April 12, 2011

பாலைவனத்துச் சுடர்

அரேபியர்களின் அறியாமைக் கால அநியாயங்களுக்கு முடிவுகட்டும் வகையில் உலக வரலாற்றுப் பொன்னேடு சந்தித்திராத ஒப்பற்ற ஒரு சகாப்தம் மலர்ந்தது. அந்த ஒளிமயமான சகாப்தத்தின் முதல் குரலாக "இறைவன் ஒருவன்! அவன் இணையில்லாதவன்! துணையில்லாதவன்! எங்கும் நிறைந்தவன்! எல்லாம் தெரிந்தவன்! என்ற ஏகத்துவம் பிறந்தது.

ஏகத்துவக்குரல் தந்த மனிதகுல மாணிக்கம் தாம் முஹம்மது (ஸல்) அவர்கள்!
அவர்களின் ஏகத்துவக் குரல் ஓங்காரமாக ஒலித்தபோது சிலிர்த்தெழும் சிங்கமெனச் சினந்தெழுந்தது அரபு சமுதாயம். கனலாகத் தாக்கும் பாலை நிலத்தைப் போல அனலாக தாக்கியது அரபு சமுதாயத்தின் எதிர்ப்புக் கணை. அனலாகப் பாய்ந்த அரபு சமுதாயத்தின் எதிர்ப்பினைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குளிர் புனலாக கருத்துக்களை கொட்டினார்கள்.

அடங்கவில்லை அரபுச் சமுதாயம்! ஆர்ப்பரித்தது ஆழ்கடல் அலையாக! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருக்கே விலை பேசினார்கள். எனவே

பிறந்த மண்ணை (மக்கா) மறந்து, நெஞ்சைக் கவர்ந்த மண்ணான மதீனமா நகருக்கு இரவோடு இரவாகப் பயணமானார்கள். மதீனா நகர் அடைந்த மன்னர் மாநபி (ஸல்) அவர்களை மலர்த்தூவி வரவேற்றார்கள் அந்நகரத்து மக்கள்.

நாட்கள் நகர்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலான இலட்சியமும் வளர்ந்தது. செம்மல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பாதையிலே நலம் நாடும் நல்லவர்கள் பலர் வந்து மாநபியின் போதனையை உளமேற்றார்கள். மாநபியின் மேலான போதனையில் பற்றுக்கொண்ட மக்கா வாழ் மக்களுள் சிலரும் மதீனா வந்து சேர்ந்தார்கள். நாடு கடந்து சென்று, பீடு நடை போடுகின்ற ஈடுகாணமுடியாத ஏகத்துவத்தின் வளர்ச்சியைப் பற்றி செவியேற்ற மக்கத்துக் குறைஷியர்கள், மதீனா நகர் நோக்கிக் கடல் அலைகள் எனப் படைநடத்தி வந்தார்கள்.

வம்பிழுக்க வரும் பகையை வாழவிடுவது கோழைத்தனத்தின் அடையாளமல்லவா?.. எனவே, மனிதகுல மாணிக்கம் நாயகம் (ஸல்) அவர்கள் தீன் வழி சார்ந்த தோழர்களைக் கூட்டிப் பேரணி ஒன்றைத் திரட்டிப் பத்ரு என்னும் போர்க்களம் நோக்கி விரைந்தார்கள். அந்த போர்க்களத்தில் கூட, வீட்டிற்குத் தீ வைத்தல், பெண்களுக்கு இடர் செய்தல், குழந்தைகளைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல் போன்ற மறநெறியைச் செய்திடக் கூடாது என்று தர்ம நெறியோடு போரிடச் சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள், தாக்கவந்த மக்கத்து குறைஷியர்களையெல்லாம் புறங்கால் பிடரிபடத் திரும்பியோடச் செய்தார்கள்.
பத்ரு போர்க்களத்தில் இறைவன் தந்த வெற்றி ஏகத்துவத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமைந்தது.

வளர்ச்சிப் பெற்ற சமுதாயமாக இஸ்லாம் திகழத் துவங்கிய இந்த நேரத்தில் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் சமுதாயச் சீர்திருத்தத்தில் நாட்டம் கொண்டு இறைவனுடைய மார்க்கமான இஸ்லாத்தில் எல்லோரும் சகோதரர்கள், இதில் ஏற்றத்தாழ்வு பேசுவது இறை நம்பிக்கை உடைய மனிதனுக்கு இழுக்காகும் என்று கூறி சமுதாயத்தைப் பற்றி நின்ற மக்களிடம் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பேதத்தை நீக்கினார்கள்.

ஆணுக்குரிய உரிமை பெண்ணுக்கும் உண்டு என்று சட்டம் செய்தார்கள். பின்தங்கிய மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்த வட்டித் தொழிலை உடைத்தெறிந்து சமுதாயத்தில் புனிதமான ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

தேடிய பொருளில் மிஞ்சுவதில் நாற்பதில் ஒரு பங்கை எளியவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறிச் சமுதாயத்தில் மலிந்திருந்த வறுமையை நீக்கிப் பொருளாதாரத்தில் புதிய ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

குற்றமற்ற ஒருவனைக் கண்ஜாடை காட்டிக் காட்டிப் பேசுவது கூடக் குற்றமாகும் என்று கூறி, நற்செயல் பெருகிடுவதற்காகப் பாதையை வகுத்தார்கள். உங்கள் மனைவியருக்கு நீங்கள் செய்திட வேண்டிய கடமைகள் சில உண்டு என்று கூறிப் பிற மங்கைகளை நெருங்கும் விபச்சாரத்தின் தீமையை வேருடன் களைந்தார்கள். விதவைகளின் மறுமணத்தைச் சிறப்பாக்கி வைத்து, உலக அரங்கில் ஒரு பெரிய மாறுதலையே உண்டாக்கினார்கள்.

மனதை மயக்கி ஆட்டி வைக்கும் மதுவை நினைத்தும் பார்த்திடாத வகையில் மதுவிலக்குச் சட்டத்தை நிரந்தரமாக்கினார்கள்.

இவற்றைப் போன்ற எண்ணற்ற சமூக சீர்திருத்தங்களைச் செய்த அண்ணல் மாநபியை எதிர்த்துப் போராடிய அரபியர்களின் குரலில் இப்பொழுது புது விதமான ராகம் பிறந்தது.

" எங்களிடம் நபி உண்டு. அவர் பெயர் முஹம்மதாகும் (ஸல்). அவர்களுக்கு நிகர் அவனியில் உண்டோ?.."" என்று உலகத்து மக்களிடம் பெருமிதத்தோடு ஒரு கேள்வியைக் கேட்டார்கள் அராபியர்கள். அதோடு எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் மற்றும் படைப்பினங்கள் அனைத்துக்குமே அருட்கொடையாக வந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்), என உலகினருக்கு எடுத்தோதி விளக்கினார்கள்.

சரித்திரம் அறியாத சாதனை புரிந்த செம்மல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையில் வாழ்வதற்கு உறுதி கொள்வோமாக! ஆமீன்.

***********

டிஸ்கி:


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை எங்க ஹஜ்ரத்து அவர்களின் வழிகாட்டலின் படி எழுதிய கட்டுரை. இந்த கட்டுரை நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.

***********

Post Comment

Sunday, January 16, 2011

ஊருக்கு செல்கிறேன்..


அன்புள்ள நண்பர்களே! எல்லோரும் நல்லாருக்கீங்களா..

ஒரு சந்தோசமான செய்தி.. நான் ஊருக்கு கிளம்பி வருகிறேன். இரண்டு வருடம் மனைவியையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து வனவாசம் போல இருந்த சவூதி வாழ்க்கை முடியப்போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஊரில் இருந்துவரும்போது பலவித சோகங்களுடன் வந்த எனக்கு இந்த பதிவுலகம் ஒரு புத்துணர்ச்சியை தந்தது. ஆம்! இன்று எனக்கு அண்ணன்மார்கள், அக்காமார்கள், மதனி, தங்கைகள், மாமா, டீச்சர், பங்காளிகள், நண்பர்கள் என ஒரு குடும்பம் போல உறவுகளை பெற்றுத்தந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஐந்து மாதம் விடுமுறையில் செல்கிறேன். நான், நாளை இரவு 11 மணிக்கு தம்மாம் டூ திருவன‌ந்தபுரம் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் செவ்வாய் காலை திருவனந்தபுரம் வந்து எங்க ஊருக்கு செல்கிறேன். ஊரில் இருக்கும்போது அடிக்கடி பதிவுபக்கம் வரமுடியாத சூழ்நிலை இருக்கும்.

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

,

Post Comment

Tuesday, January 11, 2011

தண்ணி விட்டா வளர்த்தோம்?..

சின்ன வயசுல எனக்கும் என் தங்கைக்கும் பக்கத்து வீடுகள்ல செடி கொடிகள், பூந்தொட்டிலாம் பார்க்கும்போது கொள்ளை ஆசையா இருக்கும். அதுமாதிரி நம்ம வீட்டுலயும் வைக்கலான்னு பார்த்தா, எங்க பெரியத்தா, "என்னல.. செடி, கிடி வளக்கணும் சொல்லுறே. ஆங்.. படிக்கிற வழியப்பாருடா" என்று கம்பைத் தூக்கிட்டு வந்துருவாக. அதேமாதிரி கோழி வளர்க்கணுமென்று ஆசையா இருந்தாலும் வீட்டில் அதற்கான இடவசதியும் சூழ்நிலையும் நமக்கு ஒத்துவராது. பெரியத்தாவுக்கு பயந்தே, சரி நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு மனச தேத்திக்கிருவோம்.

அத்தாவும் அம்மாவும் சத்தம் போடுவாக. வீட்டுல கஷ்டம். ஆனாலும் எங்களுக்கு செடி, கோழி வளர்க்கணும் என்ற ஆசை மட்டும் மாற‌வே இல்ல. எப்பவாவது எங்கத்தா கோழி வாங்கிட்டு வந்தாலும் அதை வீட்டுல கட்டிப்போட்டிருப்போம். கோழிய பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கும். பள்ளிக்கூடத்து பசங்ககிட்ட சொல்லி சந்தோசப்பட்டுக்கிருவேன். ஆனா மறுநாள் அந்த கோழி கழுத்துக்கு கத்தி வந்திரும். வீட்டுல கோழி பீ பேன்டு அசிங்கப்படுத்துன்னு பெரியம்மா சொல்லி பெரியத்தா கோழி கழுத்துல கத்தி வைச்சிருவாக. இதுல கொடுமை என்னன்னா அந்த கோழிய பிடித்துக் கொள்வது நான்தான். வருத்தமா இருந்தாலும் வெளிய காட்ட முடியாது. ஏன்னா அடி விழுகும்.


இப்படித்தான் ஒவ்வொரு கோழி வாங்கிட்டு வரும்போதெல்லாம் அந்த கோழிக்கு இதே கதிதான்.

எங்க செய்யது அப்பா காலமான பின்னர் நாங்கள் தனிக்குடித்தனம் சென்றோம். புதுவீட்டுக்கு சென்றபின்னாடியும் அந்தவீட்டில் செடி, கோழி வளர்க்க இடமில்லாததால் அந்த ஆசை நிராசையாகியது. "ஒருநாள் எங்கிட்ட மாட்டவா மாட்டேன்னு" ஒரு வைராக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்தவீட்டிலிருந்து காலிபண்ணி வேறவீட்டுக்கு குடியேறினோம். அங்கு சென்ற எங்களுக்கு சந்தோசமுன்னா அப்படியொரு சந்தோசம்தான் போங்க.. அங்கே வீட்டுக்கு பின்னாடி வள‌வுல ஒரு ரெண்டு மீட்டர் அள‌வுக்கு மண் தரையுடன் கூடிய இடம் இருந்தது.

உடனே எங்களுடைய செடி, கோழி வளர்க்கிற ஆசை மறுபடியும் முழிச்சிருச்சி..

"கோழிக்குஞ்சு, கரண்டு குஞ்சி 2ரூபாய்க்கு 1" என்று கூவிக்கிட்டே செல்லும் கோழிக்காரர் வியாபாரம் சூடுபிடிக்கும். நான் 5 ரூபாய்க்கு 3 வாங்கிட்டு வருவேன். "மறுபடியும் போய் ஐந்து ரூபாய்க்கு வாங்கிட்டுவா" என்று என் தங்கை அனுப்பிவைப்பாள். சிலசமயங்களில் பிரைஸில் வேறு கோழிக்குஞ்சு கிடைக்கும். வாங்கிட்டு வந்த கோழிக்குஞ்சுகள் அழகழகா கலர்கலரா பார்க்க பார்க்க ஆசையா இருக்கும். கோழிக்குஞ்சுகளுக்கு ஏற்ப கடையிலிருந்து வாங்கிய அட்டைப்பெட்டியில் வீடு தயார் செய்து கொடுப்பேன். கடைகளில் கஷ்டப்பட்டு கம்மம்புல் வாங்கிவந்து கோழிக்குஞ்சுகளுக்கு கொடுப்போம். என் தம்பிகள் ஆசையோடு கோழிக்குஞ்சுகளை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிருவாங்க.

ஆனால் நம் கண்காணிப்பை மீறியும் கோழிக்குஞ்சுகள் அங்கே நடமாடும் பூனைகளுக்கு விருந்தாகிவிடும் சோகம் தாங்கமுடியாது. மிஞ்சி இருக்கும் கோழிக்குஞ்சுகளை பத்திரமாக பார்த்துக்கொள்வோம். சில நோய்வந்தும் சில பூனைகளுக்கு விருந்தாகவும் ஆகி கடைசியில் ஒரே ஒரு கோழிக்குஞ்சு பெருசா வளர்ந்து சேவலாகியதை பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது. எங்க தெருவில் அது கம்பீரமாக பெட்டைக்கோழிகளுடன் உலா வரும். சில சமயங்களில் நான் கடைக்கு பஜாருக்கு செல்லும்போது என்பின்னாலே குடுகுடுவென ஓடிவரும். நான் அதை "வீட்டுக்கு போ" என்று சொன்னதும் போய்விடும்.


வளவில் உள்ள 2 மீட்டர் இடத்தில் எங்கத்தா முருங்கை மரத்தண்டை ஊன்றிவைத்தார். முருங்கை மரத்தண்டு நாளடைவில் தளிர்க்க தொடங்கியது. ஒரே மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மரமாக வளர ஆரம்பித்தது. சிலவிதைகளை முருங்கை மரத்தடியில் போட்டு வைப்போம். அப்படி போடப்பட்ட அவரை விதைதான் வேரூன்றி விருட்சமாகி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் முருங்கை மரத்தை ஒட்டி வள‌ர்ந்த அவரைச்செடி நாளடைவில் கொடியாக மாறியது. வளர்ந்த கொடிக்கு பந்தல்போட்டும் அதையும் மீறி வளர்ந்ததால் முருங்கை மரத்தோடு சுற்றிவிட்டோம். முருங்கை மரத்தில் முருங்கைக்காயும் காய்த்தது. அவரைக்கொடியும் பூத்து காய்க்கத் தொடங்கியது. எங்கம்மாவுக்கு சந்தோசம். முருங்கைக்காயும் கிடைக்குது; அவரக்காயும் கிடைக்கிறதென்றால் சும்மாவா.. வீட்டில் உணவில் முருங்கையும் அவரைக்காயும் போட்டி போட்டன.

எங்க தெருவில் உள்ளவங்களுக்கு வியப்போ வியப்பு. ஆச்சர்யம். எல்லோருடைய பேச்சில் எங்கவீட்டு முருங்கையும் அவரையும் தான் நிறைந்திருந்தது.

நாங்கள் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு காய்களை கொடுத்தோம். இப்படியே கொஞ்சநாள் போனது. அவரைக்கொடியில் நசுக்கோட்டான் பூச்சி உலாவரத் தொடங்கியது. முருங்கை என்றாலே நசுக்கோட்டானுக்கு கொண்ட்டாட்டம் அதிலும் அவரை என்றால் கேட்கவா வேணும். இப்படியே நிறைய பூச்சிகள் வரத்தொடங்கின. மருந்துகள் அடித்தாலும் பிரயோசனமில்லை என்பதால் அவரைக்கொடியை முருங்கைமரத்தோடு சேர்த்து வெட்டிவிட்டோம்.

பின்னர் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று எல்லோருக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய் அவரைக்காய் கொடுத்தது போக மீதமும் இருந்தது.

எங்க வீட்டில் பூத்துகாய்த்து விருட்சமாக வளர்ந்த எங்க செல்லம் அவரைக்கொடியை இப்போது நினைத்தாலும் சந்தோசமும் பெருமிதமும் குடிகொள்ளும்.

,

Post Comment

Saturday, January 8, 2011

சாலை விபத்துகளினால் இழந்தது என்ன?..

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம் என அறிவித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சாலையை கடக்கும்போதும் வாகனங்களில் செல்லும் போதெல்லாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய அவசியமாக இருக்கிறது. எப்போ என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. வெளியில் சென்றவர்கள் வீடு திரும்புவதற்கு போதும்போதும் என்றாகிவிடுகிறது. என்ன செய்ய?.. இந்த அவசரமான யுகத்தில் எல்லோரும் அவரவர் தேவைகளுக்காக அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார்மீதும் குற்றம் சுமத்தமுடியாது. விபத்து நடந்தபின்தான் அதைபற்றி யோசிக்கிறோம்.

அரசு பலவித சட்டதிட்டங்களை கொண்டு வந்தாலும் மக்கள் தங்களின் அலட்சியங்களினால் அதை மீறவேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியது. தலைக்கவசத்தின் விற்பனை அதிகரித்து போட்டாப்போட்டியான கதை நடந்தேறியதை நாம் அறிவோம். ஆனால் அதை யார் இப்போது பின்பற்றுகிறார்கள்?. இப்படி ஒவ்வொரு சட்டங்கள் கொண்டுவந்தாலும் வந்த புதிதில் ஆஹா ஓஹோன்னு இருக்கும். பின்காலப்போக்கில் வந்த சுவடே இல்லாமல் ஆகும். யாரும் முறையாக பின்பற்றுவதே கிடையாது.

அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு நாம் மதிப்பு கொடுத்து பின்பற்ற வேண்டும். டிமிக்கி கொடுக்கும் மக்களுக்கு அரசு கடுமையான விதிகளை ஏற்படுத்தி மக்களை பின்பற்ற செய்யலாம்.

இங்கே சவுதி அரேபியாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக இருக்கும். சாலைவிதிகளை எல்லோரும் பின்பற்றியே ஆகவேண்டும். மீறுவோர் மீது கடுமையான சட்டங்கள் பாயும். சாலையில் வேகமாக சென்றால் கண்காணிக்க ரேடார் பொருத்தப்பட்ட போலீஸ் கார்கள் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தவறு செய்யும் நபர்களை அடையாளம்கண்டு தண்டனை கொடுப்பார்கள். விபத்துக்கு காரணமானவர்கள் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்தே ஆகவேண்டும். இப்படி கடுமையான சாலைவிதிகளை வைத்திருந்தாலும் நம்மக்கள் அதை மீறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நம்மூரில் எல்லோரும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதைப் போல இங்குள்ளவர்கள் அனைவரும் கார் வைத்திருப்ப்பார்கள்.

இன்று மதியம் சாமான்கள் வாங்க பர்சேசிங் சென்றிருந்தோம். அப்போது சாப்பிடுவதற்காக தமிழ்நாட்டுக்காரங்க ஓட்டலுக்கு சென்றோம். அங்கே வேலை செய்யும் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நாங்களும் எங்களை அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களது பேச்சினில் சவுதி வாழ்க்கை குறித்தும், இந்திய வாழ்க்கை குறித்தும் இங்கு நாம் படும் கஷ்டங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சின்னவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

இவ்வாறாக பேசிக் கொண்டிருக்கும்போது அவரது காலைப் பார்த்ததும் அதிர்ச்சியானோம். பார்த்தால் செயற்க்கை கால்!. என்னஏது? என்று விசாரிக்கும்போது அவருக்கு ஒரு விபத்தில் கால் போய்விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். எப்படி என்று வினவியதில் அவர் சொன்னது..

"நான் 15 வருடங்களுக்கு முன் ஜித்தாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் நான் சாலையோரமாக உள்ள நடைப்பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சவுதி, காரில் சென்று கொண்டிருந்தவன் திடீரென நடைப்பாதையில் காரை செலுத்தி என் கால்மீது மோதிவிட்டான். எனது இடது கால் முறிந்து மிகவும் கஷ்டப்பட்டபோது என் கஃபில் (முதலாளி) என்னால் உனக்கு செலவழிக்கமுடியாது என்று சொல்லி 1000 ரியால்மட்டும் கொடுத்தான். அதை அவனிடமே கொடுத்து விட்டேன். மோதியவனும் கைவிட்டான். பின்னர் நான் இன்ஸூரன்ஸ் செய்திருந்ததில் அவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்."

இதே கேட்டதும் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

சென்ற வருடம் என்று நினைக்கிறேன். ஹசா டூ தம்மாம் நெடுஞ்சாலையில் ஊருக்கு செல்லும் பயணிகள் அடங்கிய டிராவல்ஸ் வேன்மீது ஒரு கார்மோதி 8 பேர் உயிரிழந்தனர். எதிர் முனையில் வேகமாக காரை ஓட்டிச் சென்ற சவுதி கட்டுப்பாட்டை இழந்து டிராக் மாறி தடுப்புகளையும் மீறி டிராவல்ஸ் வேனில் மோதியதில் வேன் கவிழ்ந்தது. எவ்வளவு வேகமாக வந்திருந்தால் அப்படிபோய் மோதியிருப்பான் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

**********

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஊரில் இருக்கும்போது டிவிஎஸ் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலக வேலையாக தூத்துக்குடிக்கு அடிக்கடி செல்வேன். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் பெரும்பாலும் ஃபுல்லாகித்தான் செல்லும். வண்ணார்ப்பேட்டை ரவுண்டானாவிலிருந்து ஏறும்போது உக்கார்ந்து செல்ல முடியாததால் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் செல்லமுடியும்.

ஒருநாள் மதியம், தூத்துக்குடி செல்வதற்காக வண்ணார்பேட்டையிலிருந்து பஸ் ஏறி சென்றேன். பஸ் எங்கும் நிற்காததால் பயணம் சுகமாகவே சென்றது. பஸ் வாகைக்குளத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு டாட்டா சுமோ வேகமாக எங்களது பஸ்ஸை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. டாட்டா சுமோவில் இருப்பவர்கள் எங்கள் பஸ்ஸை முந்துவதற்கு முயற்சித்தார்கள். அப்போது எதிரில் ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென டாட்டா சுமோக்காரர் எங்கள் பஸ்ஸை வேகமாக வந்து கட் அடித்து முந்தினார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் எங்கள் பஸ் டிரைவரும் எதிரே வந்த பஸ்டிரைவரும் சமயோசிதமாக பிரேக் அடித்து விபத்திலிருந்து காப்பாற்றினார்கள். இதனால் எல்லோரும் திகைத்தோம்.

இம்மியளவில் ஒரு விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து எல்லோரும் டிரைவரை பாராட்டினோம். சிறிது நேரத்தில் பஸ் தூத்துக்குடியை நெருங்கி அவுட்டரில் உள்ள கோரம்பள்ளம் என்ற இடத்தை அடைந்தது. அப்போது கோரம்பள்ளத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று விசாரித்ததில் ஒரு டாட்டா சுமோவும் பஸ்ஸும் விபத்துக்குள்ளானது என்று தெரிவித்தார்கள். அடடா.. சே..! டாட்டா சுமோவைப் பார்த்தால் அது எங்களை முந்திச் சென்ற டாட்டா சுமோ. ரொம்ப வருத்தமாக இருந்தது.

டாட்டா சுமோக்காரர் எதிரே வந்த அரசு டவுண் பஸ்ஸில் மோதி அந்த இடத்திலேயே இறந்து போனார். அவர் கூட வந்தவருக்கு பலத்த அடி. டவுண் பஸ் டிரைவருக்கும் பலத்த அடி. பஸ்ஸில் முன்பக்கம் இருந்த பெண்களுக்கும் தலை, முகம், கைக்கால்கள் எல்லாம் நல்ல அடி. பார்க்க ரொம்ப வருத்தமாக இருந்தது. சே..! ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் நாம் பார்த்த ஆள் இப்போது பிணமாகி விட்டாரே என்று எல்லோருக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.

இறந்தவரை பற்றி விசாரித்ததில் அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வடமாவட்டத்தில் (அவருடைய பெயரும், வேலைப்பார்த்த மாவட்டம் பெயரும் நினைவில்லை) ஒரு ஊரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர், பொங்கல் லீவுக்காக தன்னுடைய குடும்பத்தை காண தூத்துக்குடிக்கு வரும்போது இந்த துயர சம்பவத்தால் உயிரிழக்க நேர்ந்தது. இப்படியொரு சம்பவத்தால் அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை.

கொஞ்ச நேரம் பொறுமையாக வந்திருந்தால் இப்படி உயிரிழந்திருக்க வேண்டாமே!. சே..! எல்லாம் அவசரம். பொறுமையாக இருந்ததிருந்ததால் இப்படி நடந்திருக்குமா..!. சாலையில் வாகனத்தில் செல்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் கண்டிப்பாக தேவை. இதுதான் அடிப்படையாக இருக்கமுடியும். இதனை கவனத்தில் கொண்டால் விபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாமே.

,

Post Comment

Thursday, January 6, 2011

கும்மியடி பெண்ணே ! கும்மியடி..

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும்மா"

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி"

பாரதியாரின் இந்த பாடல் வரிகளை படிக்கும்போது அதற்கான உண்மையும் ஒளிந்திருக்கிறதை காணலாம். ஆம்! இந்த நூற்றாண்டில் பெண்கள் செய்துவரும் சாதனைகளை பட்டியலிட்டு காட்டலாம். அந்தளவுக்கு பெண்கள் முன்னேறிவருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?.. என்று சொன்ன காலமெல்லாம் மலையேறி விண்ணுக்கு சென்று சாதனைகள் ஆற்றிவரும் பெண்களை இன்று கண்கூடாக பார்த்து வருகிறோம்.

பெண்கள் நாட்டின் கண்கள். ஒரு சமுதாயம் முன்னேறுகிறது என்றால் அதில் கண்டிப்பாக பெண்களின் பங்கு இன்றைய சூழலில் இன்றியமையாததாகிறது. பெண்களுக்கு ஆண்டவன் நிறைய ஆற்றல்களை கொடுத்துள்ளான். பெண்கள் பலவித கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து வெற்றிநடை போடுகின்றனர். ஆண்களைவிட பெண்களுக்கு அறிவு அதிகம். வீட்டு நிர்வாகத்திலிருந்து நாட்டு நிர்வாகம்வரை திறம்பட செய்கிறார்கள். பெண்களுக்குதான் சந்ததிகளை உருவாக்குவதில் பெரும்பங்கு உண்டு.


குழந்தைகளை பத்துமாசம் சுமந்து பெற்று அவர்கள் பெரியவர்களாகும்வரை பேணிப்பாதுகாத்து வளர்ப்பது, அவர்களுக்கு தாய்ப்பாலுடன் அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்து, உலக அறிவை கற்றுக்கொடுத்து சமுதாயத்தில் நல்ல நிலமைக்கு கொண்டு வருவதுவரை பெண்களின் பாடு இருக்கிறதே அதனை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அத்தகைய பெண்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

இதேமாதிரி பொறுப்புகள் ஆண்களுக்கு கிடையாது எனலாம். பெண்களுக்குதான் நிறைய கஷ்டங்கள். சாகும்வரை அவர்களது பணி மகத்தானது. இப்படியெல்லாம் பெண்களை பற்றி பெருமைகளை சொல்லிக் கொண்டிருக்கும் நாம், அவர்கள் படும் கஷ்டங்களையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆணாதிக்கவாதிகளால் கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரத்துப் பெண்களும் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அந்த காலத்திலிருந்து சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவு மறுத்தல், ஈவ் டீசிங், பாலியல் தொந்தரவுகள், உரிமைகள் பறிக்கப்படுதல், கணவனால் கொடுமைகளுக்கு ஆளாவது இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்று மதியம் ஒரு முண்ணனி தொலைக்காட்சியில் பெண்களின் பிரச்சனைகளை அலசும் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது. அதில் குடும்பநலம், உளவியல், மனநலம் சிறப்பு பெண்மருத்துவர் கலந்து கொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளை சொல்லி, மருத்துவரிடம் அதற்கு தீர்வுகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் கேள்வி கேட்டார்கள். அவர்களில் சில பெண்களின் பிரச்சனைகள்...

* மேடம், என் கணவர் சில நாட்களாக என்னிடம் முகம்கொடுத்து சரியாகவே பேசமாட்டேங்கிறார். என் கணவர் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். எங்களுக்கு கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. கணவர் திருமணமான புதிதில் என்னிடம் அன்யோனியமாக பேசி கலகலப்பாக இருந்தவர் கடந்த 2 வருசமாக என்னை ஒதுக்குவதுபோல வேண்டாவெறுப்பாக நடந்து வருகிறார். நானும் அவரிடம் என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால் அவரோ, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை

* மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒரு பெண்.,

மேடம், என கணவர் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு 2 பையன்கள் இருக்கிறார்கள். அவருக்கு இத்தனை வருடங்களாலான பின்னும் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணுடன்தான் சுற்றுகிறார். அவளுடன் மணிக்கணக்கில் பேசுகிறார். எங்களிடம் எப்போதும் எரிந்துவிழுகிறார். என்னையும் என் பையன்களையும் அடிக்கிறார். நானும் பையன்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி பார்த்துவிட்டோம். திருந்தவே மாட்டேங்கிறார். ரொம்ப கஷ்டமா இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

* மேடம், நானும் என்கணவரும் ரொம்ப சந்தோசமாக குடும்பம் நடத்தினோம். எனக்கு தமிழ்நாடு, அவருக்கு கேரளா. நான் குழந்தை பெறுவதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். திரும்பி வந்து பார்க்கும்போது அக்கம்பக்கத்தினர் உன் கணவர் வேறொரு பெண்ணுடன் சுற்றுகிறார். நான் முதலில் நம்பவில்லை. பின்னர் அவரின் நடவடிக்கைகள் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எனக்கு அவர்மேல் கொள்ளை ஆசை. ஆனால் அவர் இப்படி செய்வது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதாவது வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள்.

இந்த பெண்கள் கண்ணீருடன் தங்களின் பிரச்சனைகளை சொன்னபோது எனக்கும் ரொம்ப பீலிங்கா இருந்தது.

மருத்துவர் அவர்களின் பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.

இதையெல்லாம் கேட்கும்போது சே..! ஏன் இப்படி இருக்கிறார்கள்?. நம்மை நம்பிவந்த பெண்ணுக்கு இப்படியெல்லாம் துரோகம் செய்கிறோமே என்று தோன்றவில்லையே.. பெண்கள் எத்தனை பிரச்சனைகள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று நினைத்துப் பார்த்ததுண்டா..?.

இதுமாதிரிதான் சில பெண்களும் தங்கள் கணவர்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள்..

குடும்பம் என்பது கணவன் மனைவி என்ற இரண்டு தூண்களால் ஆனது. இதில் ஒன்று சரிந்தாலும் அது நம் சந்ததியினரை பாதிக்கக்கூடும். இரண்டு மனங்கள் ஒருமித்து வாழ்க்கையின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும்போது மனதுக்கு இதமாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்போது வாழ்க்கையில் ஒருபிடிப்பு, சந்தோச தருணங்கள் இவையெல்லாம் நம்மையறியாமலே வழிநடத்திச் செல்லும்.

பெண்கள் வீட்டிலே இருப்பதால் எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பல்வித சிக்கல்களை சமாளிக்கிறார்கள். நம்நாட்டில் உள்ள பெண்களுக்காவது அக்கம்பக்கத்தினர் பேச்சுத்துணைக்கு ஒரு உதவி செய்வதற்கு முன்வருவார்கள். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் குடும்பத்தோடு வசிக்கும் பெண்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் வீட்டினுள்ளேதான் இருக்க வேண்டும். பெண்களுக்கும், அவர்களின் கணவர், குழ்ந்தைகளுக்கும் என்று ஆளுக்கொரு சாவி வைத்துக் கொள்வார்கள். வீடுகள் எப்போதும் பூட்டியேதான் இருக்கும். வெளி இடங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடியாது. லீவு நாட்களில்தான் வெளியில் செல்ல முடியும். நினைத்தவுடனே ஊருக்கும் சென்றுவிடமுடியாது. ரொம்ப கஷ்டம்தான்.

நீங்கள் அனைவரும், சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சினேகா, கூட்டுக்குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த பெண் தனிக்குடித்தனம் சென்றவுடன் அவர் தனிமையினால் இறுக்கமான சூழ்நிலையை சந்தித்து மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அந்தமாதிரிதான் தனிமையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் நிலைமையும்.

பெண்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டால் குடும்பத்தில் எந்தவித குழப்பமும் வராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள். பிரச்சனைகளை மேலும் பெரிதாக்காமல் விட்டுகொடுத்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பெண்ணுக்கு பிடித்தவற்றை வாங்கிக்கொடுத்தோ அல்லது அவர்களின் வேலைகளில் பங்கெடுத்தோ பாருங்கள். ஒன்றும் வேண்டாம்., "நீ இன்னக்கி ரொம்ப அழகா இருக்கே..! நீ செய்த சமையல் ரொம்ப நல்லாருக்கு..!" இப்படி தினமும் பாராட்டுங்கள். உங்கள் மனைவி உங்களைவிட்டு செல்லமாட்டார்.

அதேமாதிரி கணவருக்கு பிடித்தவற்றை உணர்ந்து அதன்படி குடும்பம் நடத்தும் பெண்கள் வெற்றி காண்கிறார்கள். கணவரோ மனம்விட்டு பேசுங்கள். அதன்மூலமும் கணவர் திருந்தவில்லையென்றால் இருவரும் குடும்பநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்லுங்கள்.

கணவர் திருந்துவது அவர் கையில்தான் இருக்கிறது. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்மால் ஆறுதல் சொல்லத்தான் முடியும்.

*********

தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான இறுதி சுற்று முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. விருதுக்கு நான் பரிந்துரைத்த 3 இடுகைகளும் தேர்வாகியிருப்பது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.

எனது இடுகைகளையும் தேர்வு செய்த நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தினருக்கும் என் நன்றிகள்.

,

Post Comment

Saturday, January 1, 2011

புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்

அன்புள்ள நண்பர்களே.. இன்னும் சில மணித்துளிகளில் 2010ம் ஆண்டு நம்மைவிட்டு மறையப்போகிறது. சிலருக்கு 2010ம் ஆண்டு சோதனையாகவும் வேதனையான மறக்க முடியாத சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கக்கூடும். சிலருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்திருக்கக்கூடும். வரப்போகும் 2011ம் ஆண்டு எப்படி எந்தமாதிரியான சூழ்நிலைகளை தரக்கூடியதாக அமையப்போகிறதோ.... தெரியவில்லை.

எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்க நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே 2011ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.



நான் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போது மன‌தில் வேண்டிக்கொள்வேன்.

* இறைவா... இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கவேண்டும்.

* மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டும். சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள்க்கூடிய வழிமுறைகளை நீதான் எங்களுக்கு காண்பிக்க வேண்டும்.


* தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் எங்களுக்கு தந்தருள்வாய்..


* எல்லா மக்களும் இன்புற்று அவர்கள் வாழ்க்கையை ஒளிவீசிடச் செய்திடுவாய்..


* நோய்நொடி, தீயசக்திகளிடமிருந்து மக்களை நீயே பாதுகாப்பாயே..


* சோதனைகள் வந்தாலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத சோதனைகளை தந்துவிடாதே..


* கஷ்டப்படும் ஏழைஎளியவர்களுக்கு உதவக்கூடிய மன‌தினை எங்களுக்கு தந்தருள்வாயே...


* விலைவாசி, பொருளாதார வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், எல்லாம் குறைந்து நாடு முன்னேற வேண்டும்.


* எல்லா மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்.


* நாட்டில் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருவாயே..


* கடந்த ஆண்டு விட்டுபோன நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற வேண்டும்.


* நம்முடைய வேண்டுதல்கள் யாவும் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திப்போம்.....


*********

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். ஹைய்யா புதுவருசம் பிறந்திருக்கு.. ஜாலிதான் என்று மனதில் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறையும்.

தினத்தந்தியில் ஒவ்வொரு புத்தாண்டும் ஜனவரி முதல்நாள் அன்று முகப்பில் ஒரு கருத்துப்படம் வெளியிடுவார்கள். அதில் என்னவென்றால் ஒரு வீட்டில் இருந்து கிழவர் ஓடுவார். ஒரு சிறுவன் அந்த வீட்டின் வாசலிலிருந்து அதை ரசித்துக்கொண்டிருப்பான். அந்த கிழவர் நடந்துமுடிந்த‌ ஆண்டு. அந்த சிறுவன் பிறந்த‌ புத்தாண்டு.

தினத்தந்தி வாசிப்பவர்கள் இதை கவனித்து இருப்பார்கள். நானும் அதனை ரசித்துப்பார்ப்பேன்.

*********

மேற்கத்திய கலாச்சாரங்களை மக்கள் பின்பற்றி வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரியங்கள் மிக வருந்தத்தக்கதாக இருக்கிறது. இதனை பற்றி பதிவர் ஸாதிகா அக்கா சிறப்பான இடுகை வெளியிட்டுள்ளார். எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

*********

2011ம் ஆண்டை எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகள்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்