Pages

Saturday, November 27, 2010

வெளிநாட்டு அப்பா

"என்ன‌ங்க நம்ம பையன் இப்ப நல்லா நடக்கிறாங்க.. அப்பா அம்மா என்று நல்லா பேசுறான்ங்க.. பல்லெல்லாம் முளைச்சிருக்கு" என்ற என் மனைவியிடம் "அப்படியா.. பேசுறானா.. பல் முளச்சிருக்கா.. முன்னாடி தவண்டுக்கிட்டுதானே இருந்தான். இப்ப நடக்கிறானா., கொடுப்பா அவன்ட்ட போனை" என்றேன்.

"டேய் கண்ணா.. எப்படிடா இருக்கே.. என் செல்லம்., புச்சிக்குட்டி., ச்ச்சூ ச்சூ.. தங்கக்கட்டி, அம்மா என்ன சொல்றாங்க., என் கண்ணுல்ல., என் செல்லம்" என்று என் கண்ணனிடம் கொஞ்சினேன். "அப்..பா, அப்ப்..பா, அப்ப்..பா அம்ம்ம்..மா அம்மா......" என்ற குரலைக் கேட்டு கொஞ்ச நேரம் என்னை நான் மறந்தேன். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல..

"கண்ணா, உனக்கு என்னல்லாம் வேணும், சொல்லுடா என் தங்கம். அப்பா வாங்கித்தருவேனா என்ன" என்றேன் கண்ணனிடம்.

"அப்..பா நெனக்கு கா..ருரு பொம்ம.. சாக்குலேட்டு., குச்சிமுட்டாயி அம்ம்ப்பூட்டும்" என்றான் கண்ணன். "சரிடா செல்லம் அப்பா உனக்கு அம்ம்ப்பூட்டும் வாங்கி அனுப்புறேன் என்ன சமத்தா இருக்கணும் என்ன" என்றதுக்கு "என்னங்க.. எப்படி பேசுறான் பாத்தீங்களா., அங்க ஓடுறான் இங்க ஓடுறான்., சுட்டி சரியான சுட்டி.. எல்லாம் உங்களே மாதிரியேன்னு உங்கம்மா அடிக்கடி சொல்வாக‌.. அவன பாக்கும்போதெல்லாம் உங்க ஞாபகந்தான் வருது.. நீங்கதான் அங்க இருந்துக்கிட்டு., சே.. எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?.. உங்கள பிரிஞ்சி இத்தன வருசம் இருந்தாச்சி.. சீக்கிரம் வாங்க" என்றாள் என் மனைவி.

"சரிடா செல்லம்., உன்னோட பீலிங்ஸ்தான் எனக்கும்.. நானும் என்ன செய்ய., நா இங்கவந்து கஷ்டப்பட்டாதான் நாலுகாசு சம்பாரிக்க முடியும். நாமும் வாழ்க்கையில் உசரணுமில்லயா. கவலைப்படாதே கூடிய சீக்கிரம் வந்துருவேன். ஒரு நாலுமாசம் பொறுத்துக்கோ., அய்யா வந்துருவேன், சரியாடா செல்லம்" என்று என்னவளுக்கு ஆறுதல் சொன்னேன்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்து இந்த வருசத்தோட 7 வருசம் முடியப்போகுது. முதல் தரம் ஊருக்கு போகும்போது தங்கச்சிய கல்யாணம் செய்துவைத்து அந்த கடனுக்காக திரும்பவும் கஷ்டப்பட்டு வேலைசெய்து இன்னும் கடன் அடைத்துக்கொண்டிருக்கிறேன். பின்னர் லட்சுமியை பெண்பார்த்ததும் கல்யாணத்துக்காக திரும்பவும் ஒருவருடத்தில் ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.

முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கிய 4 மாதம் லீவு நாலே நாளானது. கண்ணீர் மல்க என்னவளிடம் விடைபெற்ற காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு. பின்னர் கண்ணன் பிறந்ததும் அவனை பார்க்கும் ஆவல் கூடிக்கொண்டே போனது. முதலாளியிடம் லீவு கேட்டதும் தாமதம்.. அவன் உடனே "நீ அப்படியே ஊர்ல இருந்துக்கோ.. நா வேற ஆளை பாத்துக்கிருவேன். என்ன? ஒரே லீவு.. லீவு... அதெல்லாம் முடியாது" என்று பொரிந்து தள்ளிட்டான். கண்ணீர் மல்க அவனை கெஞ்சியதில் ஒரு மாத லீவில் கைக்குழந்தையா இருந்த என் கண்ணனை பார்க்க போனது. இப்ப அவனுக்கு 3 வயசு ஆகப்போகுது. இப்ப எப்படி இருக்கானோ என் செல்லம்.

கண்ணா.. நீ எப்படிடா இருக்கே.. என் செல்லம். ‌டேய் கண்ணா.,உன் இனிமையான மழலை குரலுக்கு எத்தனை தவங்கள் செய்திருப்போம் நானும் என்னவளும். உன் மொழியின் அர்த்தம் எந்த அகராதியிலும் இல்லையடா., உன்னிடம் பேசும்நேரம் விலை மதிக்கமுடியாது. உன்னை நினைக்கும்போது கவிதைகளாய் ஆனேன். உன்னை மடியில் வைத்து தாலாட்ட ஆசை. உன்னை என் மார்பினில் தூங்கவைக்க ஆசை. நீ பெய்யும் சிறுநீருக்காக என் ஆடைகளெல்லாம் ஏங்குதடா. உன்னை கடைவீதிக்கு அழைத்து செல்ல ஆசையடா என் தங்கக்குட்டி. உன்னால் உறக்கம் எனக்கு தூரமாகிவிட்டதடா. இன்னும் எத்தனை ஆசைகள் என்னுள் புதைந்திருக்கிறதோ எனக்கே தெரியவில்லையடா. ஏங்கித் தவிக்குதடா என் உள்ளம்.. என் செல்லம்.

"வாப்பா.. எப்படி இருக்கே.. உடம்பெல்லாம் நல்லாருக்கா.. உன்ன பார்த்து எத்தன வருசமாச்சி.." என்ற‌ அப்பா, அம்மாவின் ஆனந்த கண்ணீரில் என்னை மறந்தேன். "வாங்க வாங்க" என்ற தங்கை, தம்பிகள் மற்றும் உறவினர்களின் வரவேற்பு மழையில் நனைந்தேன். "வாங்க வாங்க... என்னங்க... என்னங்க... எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா" என்று லட்சுமியின் உதடுகளில் புன்னகையும் கண்களில் நீருமாய் என்னை வரவேற்றாள். "லட்சுமி.. லட்சுமி.. நா நல்லாருக்கேன்டா.. நீ எப்படிடா இருக்கே.." என்றபடி அவளை ஆரத்தழுவி முத்தமிட்டேன்.

"லட்சுமி.. கண்ணனை எங்கப்பா.. எங்கேருக்கிறான். அவன பாக்கலியே" என்று லட்சுமியிடம் கேட்டேன். "ஆமாங்க.. உங்கள பாத்த சந்தோசத்துல.. அவன் இங்கதானே விளையாடிக்கிட்டு இருந்தான். கண்ணா டேய் கண்ணா.. நீ இங்கருக்கியா.. அப்பா வந்துருக்காரு வா" என்று லட்சுமி கண்ணனை அழைத்து வந்தாள்.

அவன் என்னை பார்த்ததும் அவன் கண்களுக்குள் ஒரு மிரட்சி. "வா வா என் செல்லம்.. அப்பா வந்துருக்கேன்டா செல்லம்" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கரம் நீட்டி அழைக்கிறேன். நான் உடனே அவனை கைகளில் தூக்குகிறேன். அவன் என் முகத்தை பார்த்ததும் கண்களில் நீருடன் "அம்மா... அம்மா.. ம்ம்ம்ம்.." என்ற அழுகையுடன் தூக்கி வைத்திருந்த என்னிலிருந்து பொலபொலவென இறங்கி அவன் அம்மாவை நோக்கி ஓடினான். "கண்ணா... அப்பா வந்துருக்காடா.. அப்பாட்ட போடா.. ஆசையா கூப்பிடுதாருல்ல.. போம்மா செல்லம்" என்று லட்சுமி கண்ணனிடம் சொன்னாள்.

நான் அருகே செல்லும்போது அவன் வீல்லென்று அழத் தொடங்கினான். எனக்கு ஒரு மாதிரி ஆனது. அம்மாவின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான். "கண்ணா.. அப்பா உனக்கு பொம்ம.. காரூரு.. சாக்குலேட்டு எல்லாம் வாங்கி வந்துருக்காக.." - லட்சுமி. "அப்பா உனக்கு நிறைய சாமான்லாம் வாங்கி வந்துருக்கேன்.. வாம்ம்மா.. செல்லம்" என்று கண்ணனை அழைத்தேன்.

"அப்பா.. அப்பா.. போன்ல நீ பேசுவில்ல.. அப்பா பேசுவியே.. அப்பா" என்று லட்சுமி கண்ணனுக்கு எடுத்துச் சொன்னாள். அவன் உடனே குடுகுடுவென வெளியில் ஓடிச் சென்று எதையோ எடுத்து வந்தான்.

"அப்ப்..பா அப்ப்ப்...பா அப்பா., ம்ம்ம்ம்..." என்று அவன் கையில் வைத்திருந்த என் மனைவியின் செல்போனை காதில் வைத்துக் கொண்டு பேசினான். உடனே அவன் எங்களை பார்த்து "அப்ப்..பா.. ஈ ஈ.." என்று செல்போனை சுட்டிக்காட்டியதும் நானும் என்னவளும் திக்கித்து நின்றோம்.

,

Post Comment

24 comments:

  1. வெளிநாட்டு வாழ்வின் தவிர்க்கமுடியாத சோகம்

    ReplyDelete
  2. // "அப்ப்..பா.. ஈ ஈ.." என்று செல்போனை சுட்டிக்காட்டியதும் நானும் என்னவளும் திக்கித்து நின்றோம். //

    வளைகுடா வாழ்க்கையில் பெற்றுக்கொண்டு போவதை விட, இழந்தது நிறைய!!

    ReplyDelete
  3. வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சங்கடங்களை அழகா சொன்னீங்க

    ReplyDelete
  4. இது கதையல்ல நிஜம்!

    வெளி நாட்டில் வாழும் பெரும்பாலோர் சந்திக்கும் பிரச்சனை.

    அந்த வேதனையை அருமையாக எழுத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. ஒன்றைப் பெற ஒன்றை இழக்கும் வாழ்வின் நியதியை.. சோகத்தை.. அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. இது போல் முன்பு ஒரு கதை படித்த ஞாபகம்.... இதே போல் ஊருக்கு செல்லும் ஒருவனிடம் முதலில் வர மறுக்கும் குழந்தை அவனுடன் பழக ஆரம்பிக்கும் போது விடுமுறை முடிந்து திரும்ப வேண்டிய நாள் வந்துவிடும்....

    உங்கள் கதையில் அப்பா என்றால் செல்போனில் பேசுவார் என்பது மட்டுமே அறிந்த குழந்தை... வெளிநாட்டு வாழ்க்கையில் தொலைத்தவைகளை ஞாபகத்தில் மீட்டுச் செல்கிறது.

    ReplyDelete
  7. அருமை. வெளிநாட்டு அப்பா கதை கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது.உணர்ந்து எழுதிய கதை.

    ReplyDelete
  8. நிதர்சனத்தை உணர்த்தியுள்ளீர்கள்.

    உயிரைப்பிரிந்து உடல் வாழும் நரக வாழ்க்கை.

    என்ன செய்வது?

    அந்த நோட்டுக்கற்றை வைத்து அன்பை வாங்க முடிவதில்லையே என் செய்வது!?

    ReplyDelete
  9. தவிர்க்கமுடியா சூழ்நிலைகளில் பல சமயம் மனம்படும்பாடு.

    நல்ல பதிவு ஷேக்

    ReplyDelete
  10. நானும் திடுக்கிட்டேன்......

    ReplyDelete
  11. தவிர்க்க முடியாத இழப்புகள்.
    எத்தனை வலிகள்....
    :-((

    ReplyDelete
  12. குழந்தைதானே.. புரிந்து மாறிவிடுவான். வருத்தம் வேண்டாம்.

    ReplyDelete
  13. வெளிநாடுகளில் வாழ்பவர்களின் உணர்வுகளை வடித்துள்ளீர்கள். நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  14. வருகைதந்து பாராட்டுக்களையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  15. தம்பி கோடாலித்தைலம் வாங்கிட்டு வந்தியாப்பா

    ReplyDelete
  16. தல உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!! மறுக்காமல் அவசியம் தொடரனும்!!

    http://mabdulkhader.blogspot.com/2010/11/blog-post_29.html

    ReplyDelete
  17. ஒவ்வொரு வெளிநாட்டு அப்பாவிற்கும் இது போன்ற ஏதேனும் பல மறக்க முடியாத நினைவுகள் இன்னும் இதயத்தில் எங்கேனும் தேங்கி கிடக்கும் என்பது மட்டும் திண்ணம் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்