Pages

Thursday, September 30, 2010

வங்க கரையோரம்...

"எலே..ஜோசப்பு.. அந்தோணி அண்ணன எங்கல.. நேரமாயிக்கிட்டு இருக்கு.. கட‌லுக்கு போவணுமில்லயா.." என்று ஆரோக்கியம் தன் இளைய மகனிடம் கேட்டபடி மீன்களை வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தாள். "எம்மா.. அவனோட சேக்காளி பிச்சைக்கூட வெளியில போயிருக்காம்மா" என்றான் ஜோசப்.

"ஆமா.. எப்பப்பாரு அவன்கூடயே சுத்திக்கிட்டு அலையுதான். அவனும் சரியில்ல., அவனோட சேருமானமும் சரியில்ல..வெறுவாக்கட்டவன்.
மேரி மாதா தான் அவனுக்கு நல்ல புத்திய கொடுக்கணும். வரட்டும் அந்தோணி. ரெண்டு டோஸ் விட்டாத்தான் சரியா வருவான். வட்டிக்காரன் வேற வருவான்., பணம் கொடுக்கணும்" என்றாள் ஆரோக்கியம்.

"சரில ஜோசப்பு.. அண்ண வந்தா அந்த போட்டுல மோட்டாரெல்லாம் நல்லாருக்கா.,வலைய சரிப்பாக்கச் சொல்லு.. நா இந்த மீனுகள வித்துட்டு செத்த தேரத்துல வந்துருவேன். நீ செல்வியக்கா வீட்டுக்கு போயி அம்மா ரூவா கேட்டாகன்னு சொல்லி பணம் வாங்க ஒரு எட்டுபோயிட்டு வா என்ன.. நா கிளம்புறேம்முல.. வீட்ட பாத்துக்கோ" என்று சொல்லியபடி ஆரோக்கியம் மீன்கூடையை தலையில் சுமந்தபடி சென்றாள்.

**********************

"மீன் வாங்கலியோ.. மீன் மீன்னு.. யம்மோய் மீன்னு வாங்கலியோ.."

"ஏய் எலா சாச்சி.. என்ன மீனெல்லாம் வச்சிருக்கே.."

"பாறை, மத்தி, வஞ்சிரம், வாவல், சூர, கெழுத்தி எல்லா மீனும் வச்சிருக்கேன்லா சாச்சி"

"எல்லாம் பழசுமாதிரி இருக்கு.."

"பழசுல்லாம் கிடையாது சாச்சி.,எம்புள்ள ராத்திரிதான் கொண்டு வந்தான். இத்தன வருசமா வாங்குற., உனக்குபோயி பழசு தருவேனா சாச்சி."

"சரி சரி சும்மா கேட்டேன். ஆமா சாச்சா போனதுக்கு அப்புறம் அந்தோணிதான் கடலுக்கு போறானாலா சாச்சி. பாவம் கொஞ்சவயசுலே சாச்சா போயி சேந்துட்டாரே.. பாவம் நீயும் ரெண்டு புள்ளகள வச்சிக்கிட்டு கஷ்டப்படுதே.. கடவுள் உனக்கு வழி காட்டுவாரு.. கவலபடாதேலா சரியா"

"ம்ம்.. என்ன செய்ய.. அவரு சேருமானம் சரியில்லாத சேக்காளிக்கூட சேந்து போயி சேந்துட்டாரு. சரி சரி நா நாலுத் தெருவுக்கு போவணும் வாரேன்லா சாச்சி."

"மீன் வாங்கலியோ.. மீன் மீன்னு.. மீன்னு வாங்கலியோ.."

"ஏய்ய்.. ஏய்.. எலே அந்தோணி.. கூப்பிடறது காதுல விழலியோ..வீட்டுக்கு போலே.. நா செத்த நேரத்துல வருவேன்" என்று தெருவில் போய்க்கொண்டிருந்த அந்தோணியிடம் சொன்னாள் ஆரோக்கியம்.

*************

"எல அந்தோணி.. உம்மனசுல என்ன நினச்சிக்கிட்டு இருக்க., அந்த பிச்சபயக்கூட சுத்திக்கிட்டு அலையுதே., உங்கப்பா போனதுக்கு அப்புறம் உங்க ரெண்டுபேத்தையும் வளக்க எவ்வளவு கஷ்டப்படுதேன். உங்கப்பா எப்படி செத்தாருன்னு தெரிஞ்சிருந்தும் எப்படில உனக்கு இப்படி சுத்துறதுக்கு மனசு வருது. நாங்கல்லாம் உன்னநம்பிதான் இருக்கோம். உனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா எங்களால‌ தாங்கிக்கிக்க முடியுமா.. சொல்லு... ம்ம்ம்..ஹூம்.." சேலை முந்தானையை கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

"அழுவாதம்மா அழுவாத.. சரி சரி நீ சொல்றபடியே இருக்கிறேன். பிச்ச நல்ல பயல்ம்மா... நீ நினைக்கிறமாதிரி கிடையாது. அவன் எனக்கு நிறய உதவி செஞ்சிருக்கான்ம்மா.. நா முதலாளிய பாத்து பேசிருக்கேன்.. பணம்தர்றதா சொல்லிருக்காவ., போட்டுக்கு வாடக கொடுக்கணும். நீ கவலப்படாதே நா இருக்கேன் சரியா" என்றான் அந்தோணி.

"சரிப்பா,, நீ நல்லாருக்கணும் அதான் என்னோட ஆசை" என்றாள் ஆரோக்கியம்.

"அம்மா.. அம்மா.. விளக்கு வைக்கிற நேரமாச்சி.. கருக்கல்லா ஆகிருச்சி.. நா கடலுக்கு போயிட்டு வாரேம்ம்மா.." என்று வலையை தோளில்போட்டுக் கொண்டு அந்தோணி கிளம்பினான்.

"சரிப்பா., இந்த அரிசிய சாப்பிட்டு போ..இந்தாப்பா" என்று அம்மா கொடுத்த அரிசியை வாயில்போட்டு கொறித்துக் கொண்டே சென்றான் அந்தோணி.

கர்த்தாவே.. இன்னக்கி நிறைய மீன் கிடைக்கணும் என்று வேண்டியபடியே போட்டில் ஏறி அமர்ந்தான்.

**********

கடலில் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்ததை சுகமாக அனுபவித்தான் அந்தோணி. இது வழக்கமா இருந்தாலும் இன்று மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. கடலலை அவனை ஒரு அன்னைபோல தாலாட்டிக் கொண்டிருந்தது.

அவனுக்கு அம்மா சொன்னது நினைவலைகளாய் நெஞ்சில் அலைமோதியது. அவனுடைய மனதும் அலைகளோடு பயணித்தது.

எங்கப்பா சூசை, தினமும் கடலுக்கு போயி மீன் பிடிச்சி கொண்டு வருவார். எங்கப்பா ராசிக்கு நிறைய மீன்கள் வலையில விழுமாம். எங்கப்பா பிடிச்சிட்டு வர்ற மீன்கள் நல்ல விலைக்கு போகுமாம். நல்ல வருமானம் வரும். எங்கம்மா இத சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக்குவாங்க. எங்கப்பாவுக்கு எங்க குப்பத்துல‌ நல்ல பேரு. ஆனா அவரோட சேக்காளிக எல்லோரும் எங்கப்பாவ குடிக்க வச்சி அவருக்கிட்டருந்து பணத்த கறந்துருவாங்க. எங்கப்பாவும் குடிபோதைக்கு அடிமையாகி வீட்டுல அம்மாவையும் எங்களையும் அடிப்பாரு.

தினமும் அடிதான். நாளாகநாளாக அப்பா கடலுக்கு போறதே இல்ல.. எப்பாவாச்சும் போவாரு. வீட்டுல ரொம்ப கஷ்டமானதால அம்மா வீடுகளுக்கு போயி பத்துப்பாத்திரம் தேச்சாதான் எங்களுக்கு ஒரு நேர கஞ்சி கிடைக்கும். அம்மாவும் அப்பாவுக்கு எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சி., அப்பா திருந்தவே இல்ல. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கடலுக்கு போனவரு போனவர்தான். திரும்பி வரவே இல்ல.

ம்ம்.. என்ன செய்ய.. எல்லாம் விதி. படிக்கவேண்டிய வயசுலயே கடலுக்கு வந்தாச்சு..

கடல் ஒரு அமுதசுரபி. நீங்க என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம தரும். கடல்தான் எங்களுக்கு எல்லாமே. இங்குள்ளவர்களுக்கு இந்த கடல் ஒரு அன்னை போல. இங்குள்ள எல்லோருக்கும் இந்த கடல் அத்துப்படி. எந்த நேரத்துல என்ன சூழ்நிலை இருக்கும். கடல் எப்போ உள்வாங்கும்;கடல் எப்போ சீறும்; இயற்கை மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை கடலலைகள் சொல்லாமல் சொல்லும். மேலும் சில அறிகுறிகளும் தெரியும். அதைவைத்து யாரும் அன்னக்கி கடலுக்கு போக மாட்டோம்.

கடலுக்கு போறவங்க திரும்பி வர்றது மறுஜென்மம் எடுக்கிறமாதிரி. எங்களுக்கு எப்போ என்ன நடக்குமுன்னு தெரியாது. நாங்க திரும்பி வரும் நேரத்துல‌ எங்க குடும்பத்துல இருக்கிற அம்மா, மனைவி, பிள்ளைங்க என்று எல்லோரும் கரையில் காத்து இருப்பாங்க. நாங்க திரும்பி வர்றத பாக்கிற எங்களுக்கும் அவங்களுக்கும் வருகிற சந்தோசத்துக்கு அளவே இல்ல.

நாங்க போகும்போது அரிசி கொடுத்து வழியனுப்பி வைக்கிறவங்க விளக்கு ஏத்தி அதை அணையாம பாத்துக்கிருவாங்க. அணைந்தால் கடலுக்குள்
போனவங்களுக்கு ஏதோ ஆகிப்போச்சின்னு ஒரு நம்பிக்கை.

இருட்ட ஆரம்பிக்கும்போது கடலுக்கு போகிற நாங்க, நடுசாமம் கழிச்சி விடியிற சமயத்துல மீன் பிடிச்சிட்டு வருவோம். வந்தவுடனே மீன் வியாபாரிங்க மீன பூராவும் ஏலத்துல எடுத்துக்கிருவாங்க.. அவங்க வச்சதுதான் விலை. எதுத்து பேசினா மறுநாளைக்கு மீன் எடுக்க மாட்டாங்க. ஒரு கூடை மீன் இருநூறு முன்னூறு ரூபாய்க்குதான் தர ரேட்டுக்கு போகும். என்ன செய்ய..

சில நேரங்களில் மீன் எதுவும் கிடைக்கலின்னா அன்னக்கி பட்டினிதான்.

இதுதான் எங்களோட வாழ்க்கை.


************

"எலே.. அந்தோணி.. இன்னக்கி மீன் கிடைச்சுதாலே" என்றார் முதலாளி. "ஆமா முதலாளி.. நேற்றைவிட இன்னக்கி கொஞ்சம் கம்மிதான்" என்ற அந்தோணிக்கு "சரி சரி.. மீன வித்து காச வீட்டுல கொடுத்திரு.., நா டவுனு வரைக்கும் போயிட்டு வாரேன்" என்றபடி சென்றார்.

"ஏய்.. அந்தோணி.. உன்னோட மீன ஏலத்துக்கு கொண்டுவா.. சீக்கிரம் நேரமாவுது.." என்று அழைத்தான் மீன் ஏலம் நடத்துபவன்.

"சரிண்ணே.. இந்தா கொண்டு வாரேன்.." என்றபடி அந்தோணி மீனை ஏலத்தில் வைத்தான்.

கர்த்தாவே!.. நல்ல விலைக்கு எடுக்கணுமே என்று மனதில் வேண்டிக்கொண்டான். முதலாளிக்கு பணம் கொடுக்கணும்., போட்டு வாடகை கொடுக்கணும்., கடன்காரங்க‌ளுக்கு கொடுக்கணும்., இதெல்லாம் போகத்தான் அவனுக்கு எதாவது மிஞ்சும்.

ஏலம் முடிந்து கையில் வந்த பணத்தை எண்ணிப்பார்த்தான். நேற்றைவிட குறைவு.

எல்லோருக்கும் கொடுத்ததுபோக மிச்சமிருந்த பணம் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிரித்துக் கொண்டிருந்தது.

மனதில் பாரத்துடன் அவனுடைய கால்கள் சென்றன.. வீட்டை நோக்கி....

,

Post Comment

Thursday, September 23, 2010

இக்பால் - சிறுகதை

தடக் தடக் என்று மும்பை எக்ஸ்பிரஸின் சத்தம் என்னை மேலும் தூங்கவிடாமல் அடிக்கடி இம்சித்தது. பக்கத்தில் இருந்தவர் வேறு என்னை எரிச்சலாக்கிக் கொண்டிருந்தார். ஆமா..தூங்கித்தூங்கி என்மேல் சரிந்து விழுந்துகொண்டிருந்தால் எரிச்சலாக இருக்காதா.. இருந்தாலும் இந்த பயணம் எனக்கு ஒரு சந்தோசத்தைதான் தருகிறது. புது அனுபவம்.

நேற்று மாலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பியது., மும்பைக்கு 36 மணிநேரமா இருந்தாலும் எப்படியும் நாளைக்கு அதிகாலையில் போய்ச்சேரும். சிலநேரம் லேட்டாகிருமோ என்ற பயம். சீக்கிரம் போகணும்.. இல்லைன்னா காரியமே கெட்டுரும். எல்லாம் நல்லபடியாக நான் நினைத்ததெல்லாம் நடக்கணும் ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு மெல்ல என் இமைகள் மூடியது.

உறங்கியும் உறங்காமலும் என்னுடைய‌ நினைவுகளும் பயணித்தது.

கஷ்டப்பட்டு படிக்கவைத்த வாப்பா எத்தனை நாள்தான் என் தேவைகளை நிறைவேற்றுவார்?.. அதற்காக நான் ஊதாரியாகவும் இருக்கவில்லை. படித்துமுடித்து வேலை தேடிக்கிட்டு இருக்கிறேன்.. வேலை என்னுடன் கண்ணாம்ப்பூச்சி ஆடிக்கிட்டு இருக்கு.. எனக்கு அடுத்து 2 தங்கைகளும் ஒரு தம்பியும் என்று அளவான குடும்பம்தான். ஆமா.. எதிலும் அளவுதான். நடுத்தர குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தானே..

"எலே.., உன்னமாதிரிதானே இஸ்மாயிலு படிச்சான்.., அவன் சட்டுபுட்டுன்னு வேலைக்கி போயி ஜம்முன்னு இருக்கான்., நீயும் இருக்கியே, நாலு இடத்துக்கு போயி பாரு.. சும்மா வீட்டிலேயே முடங்கிகிடக்காதலே" என்றார் வாப்பா.

"சும்மா சும்மா என்னையே குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காதீக.. நான் என்ன சும்மாவா இருக்கிறேன்... இஸ்மாயிலு நல்லா இருக்கான்னா அவன் வாப்பா லஞ்சம்கிஞ்சம் கொடுத்து வேல வாங்கிகொடுத்தாரு அவன் வாப்பா. இங்க இருந்தாதேனே கொடுக்கிறதுக்கு..ம்ஹும்" என்று தலையை திருப்பிக்கொண்டே அடுப்படிக்குள் சென்றேன்..

"என்னங்க.. சும்மா அவனை எதாவது ஒண்ணு சொல்ல‌லைன்னா தூக்கமே வராதே.. அவனே இப்பதான் வெளியில போயிட்டு வந்தான்.. இந்தால வாப்பா இந்த தோசைய சாப்பிடு" என்று அம்மா எனக்கு ஊட்டிவிட்டார்.

"அவனுக்கு செல்லம்கொடுத்து கெடுக்கிறதே நீதான், ஆயிஷா, பாத்திமா பசங்கள ஆளக்காணோம் எங்கே" என்று அப்பா அம்மாவை கடிந்தபடியே கேட்டார்.

"ஆயிஷா பக்கத்தூட்டுல பீடி சுத்திக்கிட்டு இருக்கா.. சின்னவ தையக்கிளாசுக்கு போயிருக்கா., பீர் பள்ளிக்கொடம் போயிருக்கான்" என்றார் அம்மா.

வாப்பாவுக்கு தன்மகன் ஒரு நல்லநிலைமைக்கு வரணுன்னு ஆசைதான். என்ன செய்ய.., அவர் பாக்குற வேலைக்கு வீட்டு செலவுக்கே பத்தமாட்டேங்குது. கடனஉடன வாங்கி கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்குகிறவருக்கு தன்மகன் வேலைக்கி போனால் கொஞ்சம் ஒத்தாசையா இருக்குமே. அதான் அவரது ஆற்றாமையை வெளிக்காட்டுகிறார். அவர குத்தம் சொல்லியும் பிரயோஜனம் இல்லை.

லொக்கு.. லொக்கு இருமல் சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்தேன். இப்போது என் பக்கத்தில் தூங்கிதூங்கி சரிந்து விழுந்து கொண்டிருந்தவனை காணவில்லை. வேறொரு வயசானவர் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு என் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கண்மூடி தூக்கத்தை வரவழைத்துக் கொண்டிருந்தேன்.

கண்அசந்த நேரத்தில் யாரோ என் தோள்பட்டையை உலுக்குவது இருந்தது. ரயில்தான் என்னை தாலாட்டுகிறது என்று இமைகள் திறக்க மறுத்தது. மறுபடியும் உலுக்கியதால் கண்திறந்து பார்த்தால் அந்த கிழவர் என் முகத்துக்கு நேராக நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தார். என்ன என்பதுபோல தலையாட்டி கேட்டதுக்கு அவர் பேசியது எதுவும் புரியல.. ஆனா அவர் ஹிந்தியில் நான் அடிக்கடி பான்பீடா போட்டு எச்சி துப்புவேன்.. இருமலா இருக்கு.. எனக்கு அந்த ஜன்னலோர இருக்கையை தா என்று சைகையில் கேட்டது ஓரளவுக்கு புரிந்தது.

தமிழ்நாட்டுக்காரங்களுக்கும் ஹிந்திக்கும் அப்படி என்ன லடாயின்னு தெரியலை.. எப்பவும் எதிரும்புதிரும்தான். அதுக்கு பெரிய வரலாறே இருக்கும்போல., அது எதுக்கு நமக்கு?.. அப்படித்தானே..

இருந்து தொலையும்வே.. சும்மா இடைஞ்சல் பண்ணிக்கிட்டு.. என்று மாறி உக்கார்ந்து மறுபடியும் தூக்கத்தை அழைத்தேன். எனக்கும் தூக்கத்துக்கும் ஒரே போட்டிதான்.

வாப்பாவும் எங்கெங்கோ, யார்ட்டயோ கேட்டுப்பார்த்தார். வேலை கிடைத்தபாடில்லை. சரி இனிமேலும் நாம் சும்மாவே இருந்தா அது வாப்பாவுக்குதான் கஷ்டம் என்று கிடைத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இன்ஷா அல்லாஹ், நமக்கு நல்ல நிலைமையை கண்டிப்பாக இறைவன் தருவான் என்ற நம்பிக்கையில் எங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதே பயணித்துக் கொண்டிருக்கிறது.

நேற்றுக்காலையில் எங்கவாப்பா அந்த செய்தியை சொன்னதும் எனக்கும் எல்லோருக்கும் சந்தோசமாக இருந்தது. "துபாயில் மெடிக்கல் பார்மஸி கம்பெனியில் வேலைக்கு ஆள் தேவை, நல்ல சம்பளம்" என்று வாப்பாவின் நண்பர் சொல்லி உன்பையனை அனுப்பி வை. இதுக்கு இன்டர்வியூ மும்பையில இருக்கு.. என்னோட சொந்தக்காரர்தான் இன்டர்வியூ பண்றார். ஒரு லட்டர் தாரேன். கொடுத்தா போதும். இன்னக்கி புதன், மும்பைக்கு ரயில் இருக்கு., இந்த ரயிலை விட்டா இனி சனிக்கிழமைதான். உடனே போகச்சொல்லு என்று சொன்னதும் ரொம்ப சந்தோசம் வாப்பாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்.

தடக் தடக் என்று ரயிலின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது. என் தூக்கமும் எக்ஸ்பிரஸ்ஸானது.

அதிகாலை, இருள் மெல்லமெல்ல விலகி சூரியன் தலைகாட்ட ஆரம்பித்திருந்தான்.

ர‌யில் இன்னும் சில நிமிடங்களில் மும்பையை நெருங்கி விடும்போல.. ரொம்ப வேகம்தான். நல்லவேளை எந்தவித தட‌ங்கலும் இல்லாமல் மும்பைக்கு வந்து சேர்ந்தேன். முகம் கழுவி பேக்கை கையில் எடுத்து ரயில் நிலையத்தில் இறங்க ரெடியாக இருந்தேன்.

காலை நேரம் இளம்வெயில் இதமாக இருந்தது. மும்பை வீதிகள் எல்லாமே புதிதாய் தெரிந்தன.

வாப்பாவின் நண்பர் காசிம் மரைக்காயர் கொடுத்த அட்ரஸை பார்த்து ஒரு டாக்ஸிக்காரரிடம் எனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் அட்ரசை கேட்டுக்கொண்டிருக்கும்போது யாரோ ஒருவன் என்மேல் வேகமாக வந்து மோதினான். மோதிய வேகத்தில் நான் நிலைகுலைந்து குப்புற விழுந்தேன். கை காலில் நல்ல அடி.. நான் எழுந்து சுதாரிப்பதற்குள் என் பேக்கை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான்.

"அய்யய்யோ.. நா என்ன செய்வேன். ஏய் நில்லுடா நில்லுடா என் பேக்கை கொடுத்திட்டுபோடா.. டேய் நாயே நில்லுடா.. " என்று கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். அவன் சந்துபொந்து எல்லாம் ஓடினான். நானும் விடலை. துரத்திகொண்டிருந்தேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் அவனை பிடிக்க முயற்சிக்கவில்லை. ஒருவேளை என் அரைகுறை ஹிந்தி புரியலியோ என்னவோ.. அவன் விடாக்கண்டனா இருப்பான்போல.. ஓடி மறைந்துவிட்டான்.

என் கால்கள் ஓடிஓடி களைத்துவிட்டது. "அய்யோ!!.. நான் இப்போ என்ன செய்வேன்.. போச்சே எல்லாம் போச்சி., யா அல்லாஹ்! இது என்ன சோதனை.. என் வாழ்க்கை போச்சி, படிப்பு போச்சி, சர்ட்டிபிகேட் போச்சி, பாஸ்போர்ட் போச்சி, காசிம் மரைக்காயர் கொடுத்த லட்டர் போச்சி, எல்லாம் ஒரு நிமிசத்துல போச்சி, எங்கவாப்பா என்மேல வச்சிருந்த நம்பிக்கை போச்சி, போச்சி, இனி நான் யார் முகத்துல முழிப்பேன்" என்று ரொம்ப வருத்தத்துடன் சிறுபிள்ளை போல நடுரோட்டில் அழுது கொண்டிருந்தேன்.

பின்னர் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்டர்வியூ நடக்கும் ஆபீஸ்க்கு போய் நம்ம நிலைமையை எடுத்துச் சொல்லுவோம். அல்லாஹ்வின்மேல் பாரத்தை போட்டு அந்த ஆபிஸுக்கு சென்றேன்.

நான் உள்ளே சென்று என்நிலையை எடுத்து விளக்கினேன். "மிஸ்டர் முகம்மது இக்பால், உங்க நிலைமையை நினைச்சா எங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு கேர்லஸ்ஸாக இருந்திருக்கீங்க, பாஸ்போர்ட், டாக்குமென்ட்ஸ் இல்லாம எங்களால ஒண்ணும் செய்யமுடியாது. சாரி, எங்களால் உங்களுக்கு உதவமுடியாது. நீங்க போயிட்டு வாங்க" என்றதும் மனதை தொலைத்துவிட்டு நடந்தேன்.

என்கால்கள் எங்கு செல்கின்றன என்று எனக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்தேன் ஒரு நடை பிணம்போல.. என்னை எல்லோரும் ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டே சென்றார்கள். அப்போது ஒரு கார் என்முன்னால் கீரிச் என்ற சத்தத்துடன் நின்றது. "ஏய் சாவுக்கிராக்கி, சாவுறதுக்கு என் வண்டித்தான் கிடைச்சதா" என்று அவன் வாய்க்கு வந்தபடி ஹிந்தியில் திட்டிவிட்டு சென்றான்.

பசிமயக்கம், தலை சுற்றியது, நிலை தடுமாறி கீழே விழுந்தேன். சுதாரித்து எழும்புவதற்குள் ஒரு கூட்டமே என்னை சூழ்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தது. அப்போது ஒருவர் கூட்டத்தை விலக்கி என்னருகே வந்தார். "என்னயிது! எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க.." காக்கி ட்ரஸ் போட்டிருந்த அவர் "போங்க போங்க" என்று எல்லோரையும் விலக்கிவிட்டார்.

என்முகத்தை உற்று நோக்கியவர் "உன் பெயரென்ன" என்றார். நான் "முகம்மது இக்பால்" என்றேன். "வா என்னோடு" என்று எங்கோ அழைத்து செல்கிறார்.

என் நிலையை அறிந்து அவர் எனக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்தார். "நீ மதராஸியா," என்று என்னிடம் விபரங்களை கேட்டறிந்தார். "உன் பாஸ்போர்ட் நம்பர் என்ன?.." என்றதுக்கு நான் சொன்னேன். உடனே அவர் "இந்தா உன் பேக், நான் ரவுண்ட்ஸ் வரும்போது ஒருத்தன் கையில் இந்த பேக்கை வைத்துக்கொண்டு திருதிருவென முழித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான். நான் அவனை மடக்கி விசாரித்து பேக்கை கைப்பற்றினேன். இந்தா பிடி உன்பேக்கை.. எல்லாம் சரியாயிருக்கான்னு பாத்துக்கோ" என்றதும் எங்கிருந்துதான் அந்த நீர் வந்ததோ கண்களிலிருந்து..

யா அல்லாஹ்! உனக்கே எல்லாப்புகழும்...

"சார், நீங்க ரொம்ப நல்லாருக்கணும்............................." மகிழ்ச்சியில் என்ன பேசினேன் என்றே தெரியல.. திக்குமுக்காடிப் போயிட்டேன். "பரவாயில்ல தம்பி.. எப்போதும் கவனமாக இரு.. உன் இறைவன் உன்னோடு இருக்கிறார். கவலை வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

25 நாட்களில் துபாய் செல்ல டிக்கெட்டும் விசாவும் வந்தது. காசிம் மரைக்காயர் பணம் கொடுத்து உதவினார்.

பிளைட்டில் ஏறி உக்கார்ந்ததும் இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்; கூூடவே என் வாழ்வும்....

  

Post Comment

Sunday, September 19, 2010

உம்ரா - ஒரு இனிய பயணம் 2

உம்ரா - ஒரு இனிய பயணம் முதல் பகுதியை படிக்க..

மக்கா நகரத்தின் க‌ஃபா பள்ளிக்குள் நுழையும்போது எங்கள் செருப்புகளை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். அங்கே வைக்கப்பட்டிருந்த செஃல்புகளில் செருப்பை வைத்து செஃல்பின் நம்பரை குறித்து வைத்துக்கொள்ளலாம். சிலர் செருப்பை கையிலே வைத்திருந்தபடியே கஃபாவை வலம் வந்தார்கள். அவர்களுக்கு அருவெருப்பாக தோன்றவில்லைபோலும். எங்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.. என்ன செய்ய இவர்களை..

க‌ஃபா ஹரமை கண்களால் பார்த்ததும் நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது.. உலகம்பூராவும் எந்த எந்த தேசத்திலிருந்து வந்திருந்த மக்களுடன் எங்களையும் கஃபாவை வலம் வரச்செய்த இறைவன் கிருபை எண்ணி எண்ணி பேருவுகை அடைந்தேன்.

உலகத்தில் உள்ள அனைவர்களும் இறைவனின் இல்லமான கஃபாவை தவாப் செய்யும், காணும் பாக்கியத்தை தந்தருள்வாய் எங்கள் இறைவா.. ஆமீன்.

உம்ரா செய்வதற்கு கஃபாவை ஏழுமுறை சுற்றி வலம்வர வேண்டும். கஃபாவை சுற்றி வலம்வர ஆரம்பிப்பதற்கு ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் முனையிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இந்த இடத்தில் பச்சை விளக்கு (ட்யூப் லைட்) எரியும். இங்கிருந்து "பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்" என்று சொல்லி தவாஃபை ஆரம்பிக்க வேண்டும்.

ஹஜருல் அஸ்வத் கல் என்பது ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்ராஹிம் நபி (அலை)வாழ்ந்த காலத்தில் இறைவனின் ஆணைப்படி இப்ராஹிம் நபி (அலை) முதன்முதலில் கஃபா ஆலயத்தை கட்டும்போது அவர்கள் கையால் எடுத்து வைத்த புனிதகல். உம்ரா செய்யும் அனைவரும் அந்தகல்லை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும். முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிடவேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தூரத்திலிருந்து சைகையால் முத்தமிட்டுக்கொள்ளலாம்.




இந்த ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் முனையில் ஏகப்பட்ட கூட்டம் அலைமோதும். ஒருவரை ஒருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு கூட்டமாய் இருப்பார்கள். மூச்சுமுட்டும். சிலர் அந்த கல் இருக்கும் இடத்தில் தங்களது தலையை நுழைப்பார்கள். இதற்கு ரொம்ப போட்டாபோட்டி இருக்கும். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்கள், கூட்டத்தை கன்ட்ரோல் செய்யமுடியாமல் திணறுவர். ‌அந்த கூட்டத்தில் நம்மால் அந்த கல்லை முத்தமிட முடியாது. அதனால் சுற்றிவரும்போது கையால் சைகையால் முத்தமிட்டுக் கொள்ளலாம்.



முதல் மூன்று சுற்றுகளில் கொஞ்சம் விரைவாக சுற்றி நடக்கவேண்டும். நடக்கும்போது வெயிலில் கால்சுடாத அளவுக்கு அதிக வெப்பத்தை உள்ளிழுத்து குளிரை வெளிப்படுத்தும் தன்மையுள்ள உயர்தர கிரானைட் கற்களை கஃபா ஆலயம் முழுவதும் பதித்துள்ளார்கள். ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்துவரும்போது கெட்ட எண்ணங்கள் தலைதூக்காது.

அல்லாஹ்
சைத்தானை விட்டும் நம்மை பாதுகாப்பானாக.,, ஆமீன்.

க‌ஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி மூலையையும் தொடுவது நபிவழியாகும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே "ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி ஹஸனதன் வகினா அதாபன்னார்" என்று ஓதிக்கொள்ளலாம்.

ஃபா ஆலயத்துக்கு அருகில் (ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் முனைக்கு அருகில்) இப்ராஹிம் நபியவர்களின் பாதங்கள் பதிந்த கல் ஒரு கூண்டுக்குள் இருக்கும். இந்த இடத்துக்கு மகாமு இப்ராஹிம் என்று பெயர்.



க‌ஃபாவை வலம் வரும்போது துஆ செய்தபடியே வலம்வரலாம். ஏழுமுறை கஃபாவை சுற்றி வலம்வந்தபின் அங்கே இரண்டு ரக்அத் நபில் தொழுகை தொழுது துஆ செய்து கொள்ளலாம்., தவாஃபை நிறைவேற்றிவிட்டோம் என்று. உற்றார், உறவினர், உலகத்தில் உள்ள அனைவரின் நலனுக்கும் நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் துஆ செய்து கொள்ளலாம்.

பின்னர் ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்ய வேண்டும். ஸஃயீ என்றால் ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும்
மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்" என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள்.
கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்)"பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137.

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137.

இப்போது கஃபா ஹரம்ஷரீபில் ஸ‌ஃபா மர்வாவுக்கு இடையே நடந்து செல்வதற்கு உயர்தர கிரானைட் கற்கள் பதித்துள்ளனர். ஸஃபாவிலும், மர்வாவிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் பச்சை விளக்கு எரியும். அந்த இடத்துக்கு வரும்போது ஓடவேண்டும். மற்ற இடங்களில் நடந்து வரலாம். இப்படியே ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.

(ஸ‌ஃபா, மர்வா மலைகள் இருக்கும் இடத்துக்கு வெளியே வராந்தாவில் நானும் அக்பர் தம்பியும். எங்கள் பிண்ணனியில் இருக்கும் கட்டடம் ஸஃபா மர்வா செல்லும் இடம்.)



ஸ‌ஃபா, மர்வாவை ஏழுதடவை சுற்றி முடித்ததும் வெளியே சென்று அங்கே சலூன் கடைகள் உண்டு. அங்கே முடி நீக்கி மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும். முதல் தடவை உம்ரா செய்கிறவர்கள் கண்டிப்பாக மொட்டையடிக்க வேண்டும். மறுதடவைகள் வருபவர்கள் வேன்டுமென்றால் மொட்டை அடிக்கலாம். இல்லையெனில் முடி வெட்டிக் கொள்ளலாம். பெண்களுக்கு லேசாமுடி மட்டும் வெட்டிக்கொண்டால் போதுமானது.

"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்கு கிடையாது. சிறிதளவு மயிரை குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் 1694.

இத்துடன் உம்ரா செய்வது நிறைவேறுகின்றது.

உம்ரா முடித்தவுடன் குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு ஜியாரத் செய்ய (வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்க்க) கிளம்பினோம். அன்று முழுவதும் மக்காவில் இருந்துவிட்டு அன்று இரவு மதீனாவுக்கு கிளம்பினோம். மதீனாவில் 2 நாட்கள் தங்கியிருந்து ஜியாரத் (வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்த்து) செய்தோம்.

எல்லா இடங்களையும் கண்டு மனதில் சந்தோசத்துடன் அல்ஹசா வந்து சேர்ந்தோம்.

எங்களுடைய உம்ரா பயணத்தை சிறப்பாக்கி தந்த இறைவனுக்கு எல்லாப்புகழும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

,

Post Comment

Friday, September 17, 2010

உம்ரா - ஒரு இனிய பயணம்

ஒவ்வொரு வருடமும் அந்த நாள் எப்போ வரும் காத்திருத்தல் எவ்வளவு சுகம். நோன்பு பெருநாள் பண்டிகை வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு போய் தொழுதுவிட்டு வரும்போது மனதுக்கு ரொம்ப‌ சந்தோசமாக இருக்கும். எல்லோரும் அன்போடு வாழ்த்துச் சொல்லி மகிழ்தல், சகோதரத்துவத்துக்கு ஒரு நல்ல அடையாளம். பெருநாளுக்கு எல்லோரும் அன்போடு தரும் காசுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாம், பலூன் வாங்கலாம், ப்ளாஸ்டிக் வாட்ச், கண்ணாடி வாங்கி போட்டுக்கிட்டு ஜாலியா ப்ரண்ட்ஸோட சுத்தி வரும் நாட்களை நம்மால் எப்போதும் மறக்க இயலாது.

பெரியவனா வளர்ந்த பின் இந்த சந்தோசங்களோடு பொறுப்புகளும் சேர்ந்து கொண்டது. பிற‌ந்ததிலிருந்து விளையாட்டு, ‌படிப்பு, வாலிபம், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் இப்படி ஒவ்வொரு நிலையை எட்டும்போது பொறுப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது.

இங்கே சவூதி வந்தபின்னும் அதே சந்தோசங்கள் தொடரத்தான் செய்கின்றன.. என்ன ஒன்று., நம் குடும்பம் நம்மோடு இல்லையே என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது. ஆனால் இங்கே, நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுடன் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளும்போது அந்த வருத்தங்கள் காணாமல் போவது உண்மைதான்..


பொதுவாக எனக்கு எங்காவது பயணம் செய்யும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கும். புதுபுது இடங்களை காணும்போது நம்முடைய கவலைகள், சோகங்கள் காற்றோடு காற்றாக கரைந்துவிடுகிறது.



நானும் அக்பரும் ஒவ்வொரு வருடமும் பெருநாள் லீவுக்கு ஜாலியா சுற்றுலா கிளம்பிவிடுவோம். அந்த பயணத்தில் மக்காவுக்கு உம்ரா செய்யும் பயணமும் ஒன்று. அப்படித்தான் சென்றமுறை 2008ல் மக்காவுக்கு பயணம் மேற்கொண்டோம். மனதுக்கு சந்தோசமாக இருந்தது. நானும், அக்பரும், அக்பர் தம்பிகளும், அக்பர் மச்சினன், நண்பர் ஒருவருமாக ஆறுபேர் கொண்ட ஒரு குழு இந்த வருடமும் மக்காவுக்கு செல்வதென தீர்மானித்து தனியார் பஸ் ட்ராவல்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.

இங்கிருந்து மெக்காவுக்கு 1200 கி.மீ தூரம் 12 மணிநேரம் பயணிக்க வேண்டும். பெருநாளுக்கு மறுநாள் மதியம் 4 மணிக்கு பஸ் கிளம்புவதாக ட்ராவல்ஸில் தெரிவித்திருந்தார்கள். நிறைய ஆட்கள் புக் செய்திருப்பார்கள்.. கூட்டம் அலைமோதியது.. எல்லோரும் முண்டியடிக்க நாங்கள் காத்திருந்தோம். ஆட்கள் ஏறஏற பஸ்களும் வந்து கொண்டிருந்தன.. நாங்கள் ஒரு பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். எங்கள் பயணம் தொடர்ந்தது.

இடையில் சாப்பாட்டுக்கும் இரவுநேர தொழுகைக்கும் பஸ்ஸை நிறுத்தினார்கள்..

மக்கா நகரத்துக்கு 100 கி.மீக்கு முன்னால் உள்ள தாயிப் நகரத்தில் இஹ்ராம் கட்டிக்கொள்வதற்கு (இஹ்ராம் என்பது ஹஜ்/உம்ரா செய்வதற்கு வெள்ளை நிறத்தில் உள்ள இரண்டு பெரிய துண்டுகளை உடம்பில் ஆடையாக உடுத்திக்கொள்ள வேண்டும். வேறெந்த ஆடைகளை உடுத்தியிருக்கக் கூடாது.) பஸ்ஸை ட்ரைவர் நிறுத்தினார்.

தாயிப் நகரம் மலைகளால் சூழ்ந்த ஒரு அமைதியான நகரம்., பார்க்க ரொம்ப நல்லாருந்தது. நாங்கள் குளித்து இஹ்ராம் கட்டிக்கொண்டு 2 ரக்அத் நபில் தொழுகை தொழுது உம்ரா செய்வதற்கு நிய்யத் வைத்துக்கொண்டோம்.

இஹ்ராம் கட்டியதும் மனதில் ஒரு சந்தோசமும் இறைஅச்சமும் குடிகொண்டது. பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தபின் பயணிக்கும்போது இறைவனை நினைத்தபடி இறைஅச்சத்துடன் தலபிய்யா சொல்லிக்கொண்டே சென்றோம்.

மக்கா நகரத்தினுள் முஸ்லிம் அல்லாதோர் உள்ளே நுழையமுடியாது. மக்காவுக்கு 20 கி.மீ தொலைவில் செக்போஸ்ட் ஒன்று உண்டு. அங்கே கண்காணித்துதான் மக்காவுக்குள் நுழைய அனுமதிப்பார்கள்.

மக்கா நகரத்தில் நுழைந்ததும் ரொம்ப பரவசமாக இருந்தது. இறைவனின் இல்லமான கஃபாவை காணும்போது நம்மையறியாமலே கண்களில் நீர்க்கோர்க்கிறது. உலக பிரசித்திப்பெற்ற கஃபாவுக்கு பயணம் செய்யவைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தியவாரே உள்ளே நுழைந்தோம்.

அங்கே லாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்) உண்டு. அங்கே நமது பொருட்களை வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட மணிநேரத்துக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் நமது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். சென்றமுறை சென்றபோது 1 மணிநேரத்துக்கு 5 ரியால் கட்டண‌மாக வாங்கினார்கள். ஆனால் இப்போது 5 மணிநேரத்துக்கு 5 ரியால் வாங்கியது ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சம் பெரிய பாதுகாப்பு அறையென்றால் 10 ரியால். நாங்கள் கொண்டுவந்த பொருட்களை 10 ரியால் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு கஃபா பள்ளிக்குள் நுழைந்தோம்.


தொடரும்.....

,

Post Comment

Friday, September 10, 2010

ஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துகள்

அன்புள்ள நண்பர்களே!! ரமலான் மாதத்தில் முப்பது நாளும் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர். இங்கு சவுதி அரேபியாவில் நாளை ரமலான் பண்டிகை என்று அறிவித்திருக்கிறார்கள்.



இந்தியாவிலும் நாளை பெருநாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள். நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்..

உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்..

இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக..

எல்லோரும் சந்தோசமாக கொண்டாட என்னுடைய வாழ்த்துகள்..


நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..



* நன்றி ஸாதிகா அக்கா..

Post Comment

Sunday, September 5, 2010

கற்க கசடற


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

கற்க வேண்டியவற்றை முழுவதையும் சந்தேகமில்லாமல் கற்கவேண்டும். நாம் கற்றுக்கொண்டதுக்கு ஏற்ப அதன்படி வாழவேண்டும்.

மணல் உள்ள கிணற்றில் (ஊற்றில்) தோண்டத் தோண்ட தண்ணீர் வந்துகொண்டிருக்கும். அதாவது ஊற்றில் எந்த அளவுக்கு தோண்டுகிறோமோ அந்தஅளவுக்கு தண்ணீர் ஊறும். அதுபோல எந்த‌அளவுக்கு கல்வி கற்கிறோமோ அந்தளவுக்கு நமது அறிவு வளர்ச்சி பெறும்.

******************

கல்வி ஒருவனுக்கு வாழ்க்கையில் இன்றியமையான ஒன்று. அவனுக்கு வாழ்க்கையில் நேரான பாதை எது., தவறான பாதை என்பதை சுட்டிக்காட்டி அதன்படி நடக்க உறுதுணையாக இருக்கிறது. பிறந்ததிலிருந்து உலகமே என்னன்னு தெரியாமல் இருக்கும் நமக்கு, கல்வி ஒரு திருப்புமுனையை அமைத்துக்கொடுக்கிறது.

கல்வி கற்க, பள்ளிக்கூடம் நுழைவாயிலாக இருக்கிறது. அங்கே நுழைந்தவுடன் புது உலகம். அதுவரைக்கும் அம்மா அப்பாவின் அரவணைப்பில் இருக்கும் நாம் ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைக்கும்போது புதுபுது உறவுகள் நம்மை அதிசயிக்க வைக்கும். அதில் கிடைக்கும் சந்தோசம் எல்லையில்லாதது. நல்ல நண்பர்களை பள்ளிக்கூடம் சேர்த்து வைக்கிறது. சிலபேருக்கு சின்ன வயசுல ஒண்ணாம்வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்த நண்பர்கள் இணைபிரியாமல் சாகும்வரை நண்பர்களாக இருப்பார்கள்.

பள்ளிக்கு ஆசிரியர்கள்தான் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரம் சரியில்லை என்றால் அந்த கட்டடமே செயலற்றுதான் இருக்கும். பள்ளிக்கு உயிர் கொடுப்பது ஆசிரியர்கள்தான். ஒரு இருட்டறையில் உள்ள ஒரு ஒற்றை மெழுகுவர்த்தி அந்த அறை முழுவதுக்கும் தன்னுடைய வெளிச்சத்தை பரப்பி அந்த அறைக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது. அதுபோல ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் தன்னுடைய திறமையின்மூலம் மாணவர்களுக்கு அறிவை போதிக்கின்றனர்.

எந்த மாணவர்கள் நல்லா படிப்பார்கள்.., யாரிடம் என்னனென்ன திறமைகள் உள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய திறமைகளை வளர்த்து இந்த சமுதாயத்துக்கு ஒரு ஒழுக்கமான நல்ல மனிதர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் தான் பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்மோடு அதிக நேரம் செலவிடுவது. அந்த சூழ்நிலை ஒரு பையனுக்கு/பொண்ணுக்கு வாழ்க்கை நியதியை கற்றுக்கொடுக்கிறது.

மாதா பிதா குரு தெய்வம். மூன்றாவது வரும் தெய்வம்தான் நமக்கு இதுதான் நேரான வழியென்று சொல்லி அந்த பாதையில் அழைத்து செல்கிறது. ஆனால் சிலர் அந்த ஆசிரியர்களை கேலிப்பொருளாக பார்க்கிறார்கள். கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை கொடுக்கவேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்புடன் இல்லாமல் இருந்தால் நாம் அவரை ஏச்சி தண்ணி குடித்திடுவோமா இல்லையா அதான் அவர்கள் சிறிது கண்டிப்புடன் இருப்பார்கள். பள்ளிக்கூடம் வரைதான் அந்த கண்டிப்பு. ஆசிரியர்களை நாம் கண்டால் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கவேண்டும். அதுதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும். ‌அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது அவர்கள் காட்டும் அன்பே தனிதான்.


**************


நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் எட்டுவரை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தேன். சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அரசு பள்ளியில்தான் பனிரெண்டாம் வகுப்புவரை படித்தேன். ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த நேரம் மதிய உணவு இடைவேளை முடிந்து முதல் பாடம் கணக்கு. அந்த சார், கொஞ்சம் கோபக்கார ஆள்.

எனக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் கிளாஸ் லீடரிடம், "எலேய் மகேசு, எனக்கு தண்ணீர் தாகம் எடுக்குது., தண்ணீர் குடித்துவிட்டு வாரேன்" என்று சொன்னேன். அவனும் "எலேய், சீக்கிரமா வந்திரு.. சார் சத்தம் போடுவார்" என்றான். நான் தண்ணீர் குடித்துவிட்டு வருவதற்குள் கணக்கு சார் வந்துட்டார். நானும் விருவிருவென சாரிடம் உள்ளே வரலாமா என்று கேட்காமல் நுழைந்து விட்டேன். அப்போது, அவருக்கு சரியான கோபம்.

"எலே., இங்கவா.. வெளிய போடா ராஸ்கல்.. படுவா.., உம்பாட்டுக்கு உள்ளவாரே.. இனிமே என் கிளாஸ்யெல்லாம் வெளியத்தான் நிக்கணும்.. வரக்கூடாது" என்று கோபமாக கத்தி வெளியேற்றி விட்டார். உடனே மகேஷ்., "சார்.. சார் அவன் நியூ அட்மிசன் சார்.. அவனுக்கு தெரியாது சார்" என்று சொன்னான். உடனே அவர் கோபம் தணிந்து, "ஒஹோ அந்த பயலா நீ.. இனிமே எங்கபோனாலும் கேட்டுட்டுதான் உள்ளே வரணும்.. அதான் நல்ல பழக்கம். சரிசரி உள்ளவா" என்றார்.


*************

அதுபோல இன்னோரு சம்பவம்..

அதே ஒன்பதாம் வகுப்பில் தமிழ் பாடம்.. அந்த சார்தான் எங்க கிளாஸ்சார். அவர் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபு, ரம்பா நடித்த உழவன் படம். நாங்க படிக்கும்போதுதான் அந்தபட சூட்டிங் போயிட்டு வந்தார். சூட்டிங்கில் எடுத்த படங்களை எங்களிடம் காட்டியதில் எங்களுக்கு பெருமையாக இருந்தது. தமிழ்ப் புலவர் பட்டம் வாங்கியிருக்கிறார். நல்ல மனிதர்.

அவர் ஒருநாள்.., முதல்நாள் நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்டார். அப்போது விடைத் தெரியாத எல்லா பயலுகளும் எழுந்து நின்றார்கள். விடை தெரிந்த நானும் ஒரு சிலரும்தான் உக்கார்ந்து கொண்டோம். அப்போது அவர், "என்னை சுட்டிக்காட்டி.., பாத்தீகளால.. இவன் நம்ம ஸ்கூலுக்கு புதுப்பையன்.. படிப்புல என்னா ஆர்வமா இருக்கான். இவனைமாதிரி நல்லா படிங்கலே..." என்று பாராட்டி., "ஏய் ராசா.. நீ சொல்லு அந்த கேள்விக்கு பதிலு.." என்றார்.

நான் அந்த கேள்விக்கு பதில் பாதிவரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கும்போது பதில் மறந்து போய்விட்டது. உடனே தெரியாமல் பே பேன்னு முழிச்சேன். உடனே அவர், "எலேய்.. நல்லா ஆளுதான் ஓய்.. உன்னய நல்லபயல்லென்னு நினைச்சேன். பொய்யால சொல்லுறே.."என்று கோபமாக திட்டி அடிபின்னிட்டார். முட்டிக்கால் போடவைத்துவிட்டார். "எலேய்.. இந்த வருசம் பெயிலுதாம்லே நீ.. ராஸ்கல்.. இரு இரு உங்கப்பாட்ட சொல்லிக்கொடுக்கிறேன்" என்று திட்டிவிட்டார்.

எனக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது. அழுகையானது. உடனே என்நண்பன் முருகராஜன்.. "எலே இதுக்குபோயா அழுவுறே.. உடுஉடு.." என்று தேற்றினான். அதற்கு.. "எல., எனக்கு அவர் திட்டினதுகூட வருத்தமில்ல..ஆனா அவர் உன்ன பெயிலாக்கிருவேன்னு சொன்னார்பாரு.. அதான்" என்றேன்.

"பூ.. இதானா.. அவர் சும்மாதான் சொல்வார். பெயிலாக்கமாட்டார். கவலைப்படாதே.." என்று ஆறுதல் சொன்னான்.

அன்றிலிருந்து நான் அவருக்கு பிடித்தமான மாணவனாக நடந்துகொண்டேன்.

"எலேய்.., நல்லா படிச்சி உங்கப்பா அம்மாவுக்கு பேர் வாங்கிக் கொடுக்கணும். அவங்க நீங்க‌ பெரிய ஆளா உயர்ந்து நிற்கும்போது அவங்க படுகிற சந்தோசத்துக்கு அளவே இல்லை" என்று சொல்வார்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மகனை அறிஞன் என எல்லோரும் போற்றுதலை கேட்கும்போது அவனுடைய தாய் அவனை பெற்றெடுக்கும்போது எவ்வளவு சந்தோசப்படுவாளோ அதைவிட அதிகமாக சந்தோசப்படுவாள்.

இதுமாதிரி நிறைய வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள்.. பாட சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் என்று நிறைய சொல்லிக்கொடுப்பார். அவருடைய மனைவியும் ஆசிரியர்தான். அவர்களிடம் நான் ட்யூசனுக்கு 6 கிலோமீட்டர் நடந்து சென்று படிப்பேன். சில நேரம் மகேஷ்ன் சைக்கிளில் செல்வதுண்டு.

**********

விளையாட்டு, பழக்கவழக்கங்கள், போட்டி, படிப்பில் ஆர்வம் இந்த செயல்கள் மூலம் நமக்கு நண்பர்களை உருவாக்கும். சிலபேருடைய அறிமுகமே சண்டையில்தான் ஆரம்பிக்கும். அதுபோக, போட்டி இருக்கும்.., ஒருதடவை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நாந்தான் எப்போதும் முதல்ராங் வாங்குவேன். என்னோடு படிக்கும் மாணவிகளும் மாண‌வர்களும் முதல் மதிப்பெண் வாங்க என்னோடு போட்டி போடுவார்கள்.

அப்போது என் நண்பன் "எப்பப்பார்த்தாலும் நீதான் முதல்ராங் வாங்குறியே.. இந்த தடவ நீ முதல் ராங் வாங்கிறீயா,, இல்ல, நான் வாங்குறேனா பாப்போமாலே" என்ற போட்டி. அந்த மாதத்தேர்வில் நானும் நல்லா எழுதியிருந்தேன். ஆனால் ஆங்கிலப்பாடத்தில் மார்க் குறைந்ததால் என்னால் முதல்ராங் எடுக்கமுடியவில்லையே என வருத்தப்பட்டேன். அவனுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

"ஹேய் நாந்தான் இந்த தடவ முதல்ராங்" என்றான். எனக்கு என்னடா இப்படி ஆகிருச்சே என்ற வருத்தம். நான் உடனே என்னுடைய மார்க் அனைத்தையும் மறுபடி கூட்டினேன். அப்போது 9 மார்க்கை டீச்சர் கவனிக்காமல் கூட்டிவிட்டார். நான் உடனே டீச்சரிடம் சென்று, "டீச்சர் இந்த 9 மார்க்கை கூட்டாமல் விட்டுட்டீங்க என்றேன். உடனே டீச்சர் மறுபடியும் கூட்டி சாரிப்பா ஷேக், கவனிக்கல" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அப்போது நாந்தான் முதல்ராங்.

************

இது ஆரோக்கியமான போட்டி. இதில் பொறாமை கிடையாது. ஆசிரியர் இந்தப் போட்டியை ஊக்குவிப்பார். நன்கு பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து திறமைகளை வளர்ப்பார்கள்.

அது நமது வெற்றிக்கு அடிகோலும்..

நமக்கு சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசியர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூர்தல் சாலச்சிறந்தது. அதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

,

Post Comment

Friday, September 3, 2010

நான் கோவலன் அல்ல..

என் விரல்களுக்குள்
ஒரு யுத்தமே நடந்தேறியது
உன்னை முதலில் யார்
தொடுவது என..

உன்னோடு வாழ்ந்த நாட்க‌ளும்
உன்னுடன் உறங்கிய
நாட்களும் என்னில்
வந்துவந்து இமை
மூடவிடாமல் இம்சிக்கின்றன..

முதல்நாள் சந்திப்பில்
என் கண்களுக்கு
புதிதாய் உன்முகம்
மறுநாளிலிருந்து
லப்டப் என‌ என்ஓசை
கேட்கும் அறையில்
உன்னை காண்கின்றேன்..

ஜனனம் முதல் மயானம்வரை
தொடரும் உறவுகளைப்போல‌
நானும் உந்தன் உறவானேன்..
அது நம்நட்பையும் தாண்டியதோ...

மாணிக்கப் பரல்களும்
முத்துப் பரல்களும்
கொஞ்சி விளையாடிய‌
முத்தமிழும் சங்கமித்த‌
நீ இருக்கும் நகருக்குள்
என்பாதம் படும் நேரத்தில்

வாராய் வாராய் என‌
கொடிகள் அசைந்து
நகருக்குள் வரவேண்டாம் என
மறுப்பு தெரிவிக்கவில்லை

ஏன்னென்றால் நான் கோவலனும் அல்ல‌
என்கையில் சிலம்பும் இல்லை..

மாறாக, மாறாத புன்னகையுடன்
வரவேற்க ஆவலுடன் நீ..

'கோ'வென்ற அரசனும் நீயில்லை
'பி'என்ற புலவனும் நானில்லை
காணாமல் நாமும் இருக்கவில்லை

இப்போதும் காண்கிறேன்
உன்னை என்மடியில்
திரையில் நிழல்படமாய்...

நண்பா என் நண்பா...

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்