Pages

Saturday, December 31, 2011

2011ல் கடந்த பாதைகள்

உணவு உலகம் சங்கரலிங்கம் சார் அழைப்பின் பெயரில் இந்த இடுகை.

இப்போதுதான் ஜனவரிக்கு ஊருக்கு சென்றதுபோல இருந்தது. அதற்குள் ஒரு வருடம் முடியப்போகிறது. அந்த பசுமையான நினைவுகள் இன்னும் மாறாமல் உள்ளது. இங்கே இரண்டுபேருக்கு வேலையில்லாத காரணத்தால் நான் கட்டாயமாக ஊருக்கு போகவேண்டிய சூழ்நிலை. 2 வருடம் கழித்து மனைவியையும் பெற்றோர்களையும் தம்பி தங்கைகளையும் உறவினர்களையும் ஆனந்த கண்ணீருடன் காணும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

மகிழ்ச்சியில் கரைந்து போன மூன்று மாதங்களிலும் புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஆனாலும் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்த மனைவிக்கும் பெற்றோருக்கும் நன்றிகள் பல சொன்னாலும் தகாது. இந்த நிலையில் மதுரையில் உள்ள நண்பர் பேராசிரியர் ஷேக் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்.

நான் கல்லூரியில் படிக்கும்போதே அறிமுகமானதில், அவங்க வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஷேக்கின் பாவா(அப்பா). மனிதர் ரொம்ப சுறுசுறுப்பானவர்; யாரையும் எதிர்பாராமல் தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்பவர். அவரது அருகில் நாம் இருந்தால் நமக்கும் அவரது சுறுசுறுப்பு தானாகவே தொற்றிக்கொள்ளும். அவரது சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, தைரியம் தன் பிள்ளைகளுக்கும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதற்காக பிள்ளைகளிடம் தீவிர கண்டிப்பு காட்டாமல் ரொம்ப சக‌ஜமாக தோழமையுடன் பழகுவார். நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் என்னிடமும் அப்படித்தான் பழகுவார். நாங்கள் அங்கு சென்றது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாகவும், எங்களுக்கு, எங்க குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு. மறக்கமுடியாத சந்திப்பு.

****

ஜூன் மாதம் நெல்லையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு மற‌க்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. எழுத்தின் மூலமாக சந்தித்த உறவுகளை நேரில் சந்திக்கும்போது மகிழ்ச்சியில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இனிமையான அந்த சந்திப்பில் பங்கேற்ற அத்தனை பதிவர்களை பற்றியும் அறிந்து கொள்ளமுடிந்தது. சங்கரலிங்கம் சார், சீனா அய்யா, சித்ரா, கௌசல்யா, நாஞ்சில் மனோ, இம்சையரசன் பாபு, ஷர்புதீன், மணிஜி, பலாபட்டறை சங்கர், சிபி, செல்வா, ரத்னவேல் அய்யா தம்பதியினர், பெசொவி, டாக்டர் கந்தசாமி, ரூபினா அக்கா, கல்பனா, ஜோசபின், வெடிவேல் சகாதேவன் மற்றும் பலர் சந்திப்பில் கலந்துகொண்டோம். எல்லோரிடமும் நாந்தான் ஸ்டார்ஜன் என்று என்னை அறிமுகப்படுத்தியதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இந்த இனிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார், சித்ராவுக்கு நன்றிகள் பல சொன்னாலும் தகாது.

****

சித்ராவுடனான இனிய சந்திப்பு

ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்த பதிவர் சித்ரா, ஒருநாள் எங்கவீட்டுக்கு வந்தது மறக்கமுடியாத இனிய தருணங்கள். சித்ராவை பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்லி வைத்திருந்தேன். அமெரிக்காவிலிருந்து சித்ராவும் எங்க‌வீட்டில் எல்லோரிடமும் பேசியிருந்தார். சித்ராவிடம், ஊருக்கு வந்தபின், ஒருநாளாவது எங்கவீட்டுக்கு வரணும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க வீட்டுக்கு வந்திருந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஊருக்கு செல்லும் அன்று பிசியான நேரத்திலும் சித்ரா எங்க‌வீட்டுக்கு வந்திருந்தார். சித்ராவின் கலகலப்பான யதார்த்தமான நகைச்சுவை கலந்த பேச்சினில் நேரம் போனதே தெரியலை. அவரது அப்பா பற்றியும் அப்பாவின் பட்டிமன்ற பேச்சுகள் குறித்தும் கலந்துரையாடினோம்.

****

வேலைக்கு நானும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் சவுதிக்கு செல்ல அக்பரும் அக்பரின் தம்பியும் எனக்காக விசா பார்த்துக்கொண்டிருந்தனர்.

****

மறுமாதம் ஜூலை, மாமனாருக்கு ஆக்ஸிடென்ட் ஆனது மிகுந்த வேதனையை அளித்தது. கஷ்டமான சூழ்நிலையில் இப்படி எதிர்பாராத விபத்து ஏற்பட்டது மனைவியின் குடும்பத்தினரை பாதித்தது. நான் அவர்களுக்கு ஆறுதல்கள் சொன்னேன். ரமலான் நெருங்கி வருவதால் புதுத்துணி எடுக்க ஏரலுக்கு கிளம்பும் முதல்நாள் விபத்தானது மாமாவுக்கு வருத்தம். ஆஸ்பத்திரியில் நான், கூடவே இருந்து பார்த்துக்கொண்டது அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாய் அமைந்தது. இப்போது கால் குணமாகிவருகிறது.

இன்னும் இரண்டு மாதங்களில் காலூன்றி நடந்துவிடலாம் என்று டாக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாரத்துக்கு ஒருமுறையும் பின்னர் இரண்டு வாரத்துக்கு ஒருமுறையும் தூத்துக்குடிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம். சவுதிக்கு கிளம்பும் 2 நாளுக்கு முன்னர் வழிசொல்ல சென்றிருந்தபோது மாமாவும் மாமியும் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் நெஞ்சினில் பசுமையாக உள்ளது.

விபத்து குறித்து பதிவுலக நண்பர்கள் போன்மூலமாகவும் மெயில் மூலமாகவும் ஆறுதல் சொன்னது மகிழ்ச்சியானது. ஆறுதல் சொன்ன அனைவருக்கும் எங்கள் நன்றிகள். குறிப்பாக சகோதரி கௌசல்யா தொடர்பு கொண்டு பணஉதவி எதுவும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்க என்று சொன்னது மாமாவுக்கும் எனக்கும் சந்தோசமாக இருந்தது.

****

சவுதிக்கு செல்ல விசாவுக்காக அக்பரின் தம்பி உதவி செய்ததை மறக்கமுடியாது. மீண்டும் என்னுடைய சவுதி பயணத்தில் இவர்கள் பங்கு முக்கியமானது.

சவுதிக்கு செல்ல எல்லோரிடமும் வழிசொல்லி விடைபெற்றேன். சகோதரி கௌசல்யாவும் அவரது கணவரும் நெல்லை ரயில்நிலையத்திற்கே வந்து வழியனுப்பி வைத்தனர்.

இப்போது இங்கே வந்து மூன்றுமாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவ்வப்போது ஊர்நினைவுகள் வந்து எட்டிப்பார்க்கின்றன. வேலை பிசியினால் எழுதமுடியாவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு எழுதிவருகின்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத முயற்சிக்கிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.

****
வரும் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று சந்தோசமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.




அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்