Pages

Saturday, November 27, 2010

வெளிநாட்டு அப்பா

"என்ன‌ங்க நம்ம பையன் இப்ப நல்லா நடக்கிறாங்க.. அப்பா அம்மா என்று நல்லா பேசுறான்ங்க.. பல்லெல்லாம் முளைச்சிருக்கு" என்ற என் மனைவியிடம் "அப்படியா.. பேசுறானா.. பல் முளச்சிருக்கா.. முன்னாடி தவண்டுக்கிட்டுதானே இருந்தான். இப்ப நடக்கிறானா., கொடுப்பா அவன்ட்ட போனை" என்றேன்.

"டேய் கண்ணா.. எப்படிடா இருக்கே.. என் செல்லம்., புச்சிக்குட்டி., ச்ச்சூ ச்சூ.. தங்கக்கட்டி, அம்மா என்ன சொல்றாங்க., என் கண்ணுல்ல., என் செல்லம்" என்று என் கண்ணனிடம் கொஞ்சினேன். "அப்..பா, அப்ப்..பா, அப்ப்..பா அம்ம்ம்..மா அம்மா......" என்ற குரலைக் கேட்டு கொஞ்ச நேரம் என்னை நான் மறந்தேன். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல..

"கண்ணா, உனக்கு என்னல்லாம் வேணும், சொல்லுடா என் தங்கம். அப்பா வாங்கித்தருவேனா என்ன" என்றேன் கண்ணனிடம்.

"அப்..பா நெனக்கு கா..ருரு பொம்ம.. சாக்குலேட்டு., குச்சிமுட்டாயி அம்ம்ப்பூட்டும்" என்றான் கண்ணன். "சரிடா செல்லம் அப்பா உனக்கு அம்ம்ப்பூட்டும் வாங்கி அனுப்புறேன் என்ன சமத்தா இருக்கணும் என்ன" என்றதுக்கு "என்னங்க.. எப்படி பேசுறான் பாத்தீங்களா., அங்க ஓடுறான் இங்க ஓடுறான்., சுட்டி சரியான சுட்டி.. எல்லாம் உங்களே மாதிரியேன்னு உங்கம்மா அடிக்கடி சொல்வாக‌.. அவன பாக்கும்போதெல்லாம் உங்க ஞாபகந்தான் வருது.. நீங்கதான் அங்க இருந்துக்கிட்டு., சே.. எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?.. உங்கள பிரிஞ்சி இத்தன வருசம் இருந்தாச்சி.. சீக்கிரம் வாங்க" என்றாள் என் மனைவி.

"சரிடா செல்லம்., உன்னோட பீலிங்ஸ்தான் எனக்கும்.. நானும் என்ன செய்ய., நா இங்கவந்து கஷ்டப்பட்டாதான் நாலுகாசு சம்பாரிக்க முடியும். நாமும் வாழ்க்கையில் உசரணுமில்லயா. கவலைப்படாதே கூடிய சீக்கிரம் வந்துருவேன். ஒரு நாலுமாசம் பொறுத்துக்கோ., அய்யா வந்துருவேன், சரியாடா செல்லம்" என்று என்னவளுக்கு ஆறுதல் சொன்னேன்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்து இந்த வருசத்தோட 7 வருசம் முடியப்போகுது. முதல் தரம் ஊருக்கு போகும்போது தங்கச்சிய கல்யாணம் செய்துவைத்து அந்த கடனுக்காக திரும்பவும் கஷ்டப்பட்டு வேலைசெய்து இன்னும் கடன் அடைத்துக்கொண்டிருக்கிறேன். பின்னர் லட்சுமியை பெண்பார்த்ததும் கல்யாணத்துக்காக திரும்பவும் ஒருவருடத்தில் ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.

முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கிய 4 மாதம் லீவு நாலே நாளானது. கண்ணீர் மல்க என்னவளிடம் விடைபெற்ற காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு. பின்னர் கண்ணன் பிறந்ததும் அவனை பார்க்கும் ஆவல் கூடிக்கொண்டே போனது. முதலாளியிடம் லீவு கேட்டதும் தாமதம்.. அவன் உடனே "நீ அப்படியே ஊர்ல இருந்துக்கோ.. நா வேற ஆளை பாத்துக்கிருவேன். என்ன? ஒரே லீவு.. லீவு... அதெல்லாம் முடியாது" என்று பொரிந்து தள்ளிட்டான். கண்ணீர் மல்க அவனை கெஞ்சியதில் ஒரு மாத லீவில் கைக்குழந்தையா இருந்த என் கண்ணனை பார்க்க போனது. இப்ப அவனுக்கு 3 வயசு ஆகப்போகுது. இப்ப எப்படி இருக்கானோ என் செல்லம்.

கண்ணா.. நீ எப்படிடா இருக்கே.. என் செல்லம். ‌டேய் கண்ணா.,உன் இனிமையான மழலை குரலுக்கு எத்தனை தவங்கள் செய்திருப்போம் நானும் என்னவளும். உன் மொழியின் அர்த்தம் எந்த அகராதியிலும் இல்லையடா., உன்னிடம் பேசும்நேரம் விலை மதிக்கமுடியாது. உன்னை நினைக்கும்போது கவிதைகளாய் ஆனேன். உன்னை மடியில் வைத்து தாலாட்ட ஆசை. உன்னை என் மார்பினில் தூங்கவைக்க ஆசை. நீ பெய்யும் சிறுநீருக்காக என் ஆடைகளெல்லாம் ஏங்குதடா. உன்னை கடைவீதிக்கு அழைத்து செல்ல ஆசையடா என் தங்கக்குட்டி. உன்னால் உறக்கம் எனக்கு தூரமாகிவிட்டதடா. இன்னும் எத்தனை ஆசைகள் என்னுள் புதைந்திருக்கிறதோ எனக்கே தெரியவில்லையடா. ஏங்கித் தவிக்குதடா என் உள்ளம்.. என் செல்லம்.

"வாப்பா.. எப்படி இருக்கே.. உடம்பெல்லாம் நல்லாருக்கா.. உன்ன பார்த்து எத்தன வருசமாச்சி.." என்ற‌ அப்பா, அம்மாவின் ஆனந்த கண்ணீரில் என்னை மறந்தேன். "வாங்க வாங்க" என்ற தங்கை, தம்பிகள் மற்றும் உறவினர்களின் வரவேற்பு மழையில் நனைந்தேன். "வாங்க வாங்க... என்னங்க... என்னங்க... எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா" என்று லட்சுமியின் உதடுகளில் புன்னகையும் கண்களில் நீருமாய் என்னை வரவேற்றாள். "லட்சுமி.. லட்சுமி.. நா நல்லாருக்கேன்டா.. நீ எப்படிடா இருக்கே.." என்றபடி அவளை ஆரத்தழுவி முத்தமிட்டேன்.

"லட்சுமி.. கண்ணனை எங்கப்பா.. எங்கேருக்கிறான். அவன பாக்கலியே" என்று லட்சுமியிடம் கேட்டேன். "ஆமாங்க.. உங்கள பாத்த சந்தோசத்துல.. அவன் இங்கதானே விளையாடிக்கிட்டு இருந்தான். கண்ணா டேய் கண்ணா.. நீ இங்கருக்கியா.. அப்பா வந்துருக்காரு வா" என்று லட்சுமி கண்ணனை அழைத்து வந்தாள்.

அவன் என்னை பார்த்ததும் அவன் கண்களுக்குள் ஒரு மிரட்சி. "வா வா என் செல்லம்.. அப்பா வந்துருக்கேன்டா செல்லம்" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கரம் நீட்டி அழைக்கிறேன். நான் உடனே அவனை கைகளில் தூக்குகிறேன். அவன் என் முகத்தை பார்த்ததும் கண்களில் நீருடன் "அம்மா... அம்மா.. ம்ம்ம்ம்.." என்ற அழுகையுடன் தூக்கி வைத்திருந்த என்னிலிருந்து பொலபொலவென இறங்கி அவன் அம்மாவை நோக்கி ஓடினான். "கண்ணா... அப்பா வந்துருக்காடா.. அப்பாட்ட போடா.. ஆசையா கூப்பிடுதாருல்ல.. போம்மா செல்லம்" என்று லட்சுமி கண்ணனிடம் சொன்னாள்.

நான் அருகே செல்லும்போது அவன் வீல்லென்று அழத் தொடங்கினான். எனக்கு ஒரு மாதிரி ஆனது. அம்மாவின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான். "கண்ணா.. அப்பா உனக்கு பொம்ம.. காரூரு.. சாக்குலேட்டு எல்லாம் வாங்கி வந்துருக்காக.." - லட்சுமி. "அப்பா உனக்கு நிறைய சாமான்லாம் வாங்கி வந்துருக்கேன்.. வாம்ம்மா.. செல்லம்" என்று கண்ணனை அழைத்தேன்.

"அப்பா.. அப்பா.. போன்ல நீ பேசுவில்ல.. அப்பா பேசுவியே.. அப்பா" என்று லட்சுமி கண்ணனுக்கு எடுத்துச் சொன்னாள். அவன் உடனே குடுகுடுவென வெளியில் ஓடிச் சென்று எதையோ எடுத்து வந்தான்.

"அப்ப்..பா அப்ப்ப்...பா அப்பா., ம்ம்ம்ம்..." என்று அவன் கையில் வைத்திருந்த என் மனைவியின் செல்போனை காதில் வைத்துக் கொண்டு பேசினான். உடனே அவன் எங்களை பார்த்து "அப்ப்..பா.. ஈ ஈ.." என்று செல்போனை சுட்டிக்காட்டியதும் நானும் என்னவளும் திக்கித்து நின்றோம்.

,

Post Comment

Monday, November 22, 2010

கரகர மொறுமொறு - 22/11/2010

நான் இன்று மதியம் ஒரு முண்ணனி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு நேர்காணல் (நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு கல்லூரி பேராசிரியர், மாணவர்களுக்கு என்னென்ன மேற்படிப்புகள் படிக்கலாம்?.. என்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஆண் தொகுப்பாளர், கேள்விகள் கேட்பவர்களிடம் கேள்விகளை பெற்று அந்த கேள்விகளுக்கு பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியை நான் சுவாரசிய‌மாக பார்த்துக் கொண்டிருந்தேன். கேள்வி நேரத்தின்போது அந்த பேராசிரியர் மாணவர்களுக்கு தேவையான சில‌ பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அந்த தொகுப்பாளர் மாணவர்களுக்கு "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டார். பேராசிரியர் அந்த கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையிடையே அழைப்புகள் வந்ததினால் தொகுப்பாளர் அழைத்தவர்களின் கேள்விகளை பற்றி பேராசிரியரிடம் விளக்கங்கள் கேட்டுக் கொண்டார். ஆனால் பேராசிரியர் "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றி 2 வரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து அழைப்புகள் வந்ததினால் "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றிய கருத்துக்களை சொல்ல முடியவில்லை.

நானும் பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி இப்போ சொல்லுவார் அப்போ சொல்லுவார் என்று பார்த்தால், கடைசியில் தொகுப்பாளர் மீண்டும் நாளை இதே நேரம் மற்றொரு நேர்காணலில் சந்திப்போம் என்று நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

சே.. என்னடா இது.. பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் ஒன்னுமே சொல்லாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களே என்று வருத்தமாக இருந்தது. ஒண்ணு இந்த கேள்விக்கான விளக்கத்தை அந்த தொகுப்பாளர் கேட்டிருக்க கூடாது. இல்லையென்றால் இந்த விளக்கத்தை கேட்டபின்னர் நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இரண்டும் இல்லாமல் அழைப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டே பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி சொல்லுங்க சொல்லுங்க என்று தொகுப்பாளர் கேட்டதை நினைக்கும்போது வருத்தம்தான் மிஞ்சுகிறது.

அந்த பேராசிரியரை பார்க்கும்போது எனக்கு பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

இதிலிருந்து ஒண்ணு தெரியுது.. இந்த ஏமாற்றத்தைகூட பாஸிட்டிவ்வா எடுத்து கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி சொல்லாமல் சொல்லியது.

*************

நெல்லையில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறதாம். 2 நாட்களாக சரியான மழை. நேற்று இரவு ஊரிலிருந்து வந்த அக்பர் சொன்னபோது மழையில் நனைய கொள்ளை ஆசையா இருக்கு. ஆண்டுக்கு எப்போதாவது மழைபெய்யும் சவுதி அரேபியாவில் மழையை காண‌வே முடியாது. மழை பெய்தாலும் சிறுசிறு சாரல்தான். நான் சவுதிக்கு வந்த இந்த 5 வருடங்களில் 2 முறை மட்டுமே நல்ல மழை பெய்தது.

************

ஆம்! அக்பர் ஊரிலிருந்து வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறது.

************

அடம் பிடிக்கும் முதல்வர்

அரசாங்க நிலத்தை தன் உறவினர்களின் பெயருக்கு கையகப்படுத்திய கர்நாடக முதல் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எதிர்க்கட்சிகள் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இதனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவை பதவி விலக சொல்லியும் அடம்பிடிக்கிறாராம்.

"கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, டில்லிக்கு யாரும் செல்லவேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110ல் இருந்து, 120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என கேட்கின்றனர். எனக்கு பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை" இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடிப்பதால், பா.ஜ., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக பா.ஜ.,வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ., தலைவர்கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன கொடுமை இது!!...

நன்றி தினமலர் செய்திகள்.

***********

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ராஜா ராஜினாமா விவகாரம் மேலும் வலுவடைந்துள்ளது. ராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தபின்னரும் பார்லிமென்டில் குழப்பங்கள் நீடித்து வருகின்றது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பாலி., கூட்டு விசாரணை நடத்த உத்தரவிடும்வரை பார்லி.,யை நடத்த விட மாட்டோம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் பார்லி.,யில் விவாதிக்க தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்த பின்னரும் இதனை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்திய சமரச பேச்சுவாரத்தையும் தோல்வியடைந்தது.

இதனால் தொடர்ந்து அவைகள் முடங்கி வருவதால் அரசு என்ன செய்வதென்று சிக்கலில் தவிக்கிறது. பார்லிமென்ட்டில் இதே நி‌லை தொடருமானால் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவு்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பிரச்சனை பெரிதாகும்போல..

நன்றி தினமலர் செய்திகள்.

*************

இப்படியே ஊழல்கள் பெருகிக் கொண்டே வருகிறது. ஊழல் புகாரில் சிக்கியவரே லஞ்ச தடுப்பு கண்காணிப்பு ஆணையாராக மத்திய அரசு நியமித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையாளராக கேரளாவைச் சேர்ந்த பி.ஜெ.தாமஸ் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் மேல் பல ஊழல் குற்றச்சாட்டுகளினால் எழுந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் போது இவர் எவ்வாறு இந்த உயர் பதவியில் நியமிக்கப்பட்டார். குற்றம் புரிந்தது நிலுவையில் இருக்கும் போது இவர் எவ்வாறு நியாயமாக செயல்பட முடியும் என்றும் கேட்டுள்ளது.

கோழிக் குஞ்சுகளுக்கு காவலாக பூனை இருந்த கதையா இருக்கு..

*********

Post Comment

Saturday, November 13, 2010

முதல் போணி..

அதிகாலை பனிவிழும் நேரம்
அழகான மனைவியின்
அன்பினால் உருவான‌
சூடான முத்தமும் காபியும்
கிளர்ந்தெழச் செய்தனவே..

உசும்பிய மகனை
"தூங்குடா செல்லம்"
என தட்டிக் கொடுத்த‌
கைகள், மனைவியிடம்
கொஞ்சலில் கெஞ்சியது..

"போதும் போதும்...
பையன் முழித்துவிடுவான்
வேலைக்கு போங்க..."
என்ற மனைவியின்
செல்ல சிணுங்கல்களை
கேளாமலும் இருந்தனவே காதுகள்.

காலையின் இனிமையை
ரசித்தபடியே விருவிருவென
கால்கள் முன்னேறின
கடையை நோக்கி..

முதலாய் வந்த ஆள்
கொடுத்த பணத்தை
கண்களில் ஒற்றியபடி
மனமோ வேண்டியது
"இன்று வருமானம்
நல்லாயிருக்க வேண்டும்" என்று!!..‌

,

Post Comment

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

அன்புள்ள நண்பர்களே!!.. எல்லோரும் சுகமா.. நலம் நலமறிய ஆவல்.

அறிவியல் முன்னேற்றங்களினால் நம்நாடு பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது. உதாரணத்துக்கு போக்குவரத்து துறை, இதில் எண்ணற்ற வளர்ச்சி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக இன்றியமையாததாகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். பணி நிமித்தமாகவும் சொந்தக் காரியங்களுக்காவும் பயணம் அத்தியாவசியமாகிறது. போக்குவரத்து ஊடகங்களான‌ வான்வழி,
நீர்வழி
போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து என்று மக்களின் பயன்பாட்டில் பெரிதும் உதவுகின்றன.

அந்த காலத்தில் மக்கள் பயணப்படுவது என்பது மிகுந்த சிரமமான விசயமாகும். இன்று நமக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளினால் பயணம் இனிமையானதாகிறது. இப்போது பயணப்ப‌டவேண்டிய இடத்தை குறைவான நேரத்தில் சுகமான பயணத்தில் அடைந்து விடுகிறோம். தரைவழி போக்குவரத்தில் பேருந்து மற்றும் ரயில்வே துறைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. நம்நாட்டில் போக்குவரத்துக்கு பல நல்ல திட்டங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த இருபதாண்டில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க நமது அரசு பல தரமான சாலைகளும் பாலங்களும் கட்டிவருகிறது. ரயில்வே துறையிலும் பல முன்னேற்றங்கள். நாட்டின் எந்த இடத்துக்கும் செல்ல ரயில் மற்றும் பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இங்கே சவுதி அரேபியாவில் ரயில் போக்குவரத்து என்றால் ஒரே ஒரு வழித்தடம்தான் உண்டு. அது தமாம் - ரியாத் இடையேயான ரயில் பாதை மட்டுமே உள்ளது. மற்ற தொலைதூர இடங்களுக்கு செல்ல உயர்தர சொகுசு வால்வோ பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. சாலைகளும் பாலங்களும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் தினந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் வாகனங்கள் புதிதாக சாலைகளில் ஓடத் துவங்குகின்றன. சென்னையில் சுமார் 31 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் மொபெட், பைக், கார், லாரி, பஸ் போன்ற அனைத்து வகை வாகனங்களும் அடங்கும்.

காலை மற்றும் மாலைகளின் உச்சி நேரங்களில் பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் சாலைகளில் வாகன நெரிசல் கடுமையாக இருந்துவிடுகிறது. பல மணி நேரங்களுக்கு சாலைகள் உறைந்துவிடுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்போது நம்நாட்டில் எல்லா சாலைகளும் செப்பனிட்டு அழகான பாலங்கள் கட்டப்படு வருகின்றன.

நம்நாட்டில் உள்ள பாலங்களை பார்த்திருப்பீர்கள். சர்வதேச நாடுகளில் உள்ள சில அதிசயமான பாலங்களை பற்றிய படங்களை சில‌ நண்பர்கள் தங்களது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்கள். அதுபோன்ற அழகான பாலங்களின் படங்களை அதன் குறிப்புகளுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த படங்க‌ளை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிகள்.

1. பெடஸ்டிரியன் பாலம் டெக்ஸாஸ். Pedestrian Bridge, Texas .


இந்த அழகான ஆர்ச் வடிவிலான பாலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் ஏரியில் அமைந்துள்ளது. இதை மிரோ ரிவெர்ரா தலைமையிலான திறமைவாய்ந்த கட்டடக்கலை நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த பாலம் முக்கிய விருந்தினர் மாளிகையிலிருந்து ஏரியின் மறுகரையில் உள்ள அரசாங்க அதிகாரியின் மாளிகையை இணைக்கிறது. இதனை சுற்றிலும் அழகழகான இயற்கை காட்சிகளினால் இந்த பாலம் பார்ப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கிறது.

2. கின்டெய்க்யோ ல்வ்குனி - ஜப்பான். Kintaikyo, Iwakuni, Japan


இந்த பாலம் மிகவும் பழ‌மை வாய்ந்தது. இந்த கின்டெய்க் பாலம் 1673ல் கட்டப்பட்டது. ஆனால் உலகப்போரின் பாதிப்புக்குள்ளனான இந்த பாலத்தை 1950ல் மீண்டும் செப்பனிட்டு கட்டியுள்ளனர். நிஷிகி நதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் மிகப்பெரிய ஐந்து வளைவுகள் உண்டு. இவை அனைத்தும் மரங்களினால் கட்டப்பட்டவைகளாகும். இது உயர்தர வயர்களும் கிளாம்புகளினாலும் பிணைக்கப்பட்டுள்ளது.

3. ஜஸ்சிலினோ குபிட்செக் பாலம் - பிரேசிலியா ப்ரேசில். Juscelino Kubitschek Bridge, Brasilia, பிரேசில்


கட்டுமானத் துறையின் புதிய தொழிற்நுட்ப முறையினால் கட்டப்பட்ட இந்த பாலம் ப்ரேசில் நாட்டில் ப்ரேசிலியா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ஜேகே ப்ரிட்ஜ் (JK Bridgஎ ) என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய மூன்று வளைவுகளை இந்த பாலத்தை பார்க்கும்போது வியப்பில் ஆழ்த்துகிறது.

4. ரோலிங் பாலம் _ லண்டன் யூகே. Rolling Bridge, London, UK


பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கக்கூடிய லண்டனில் உள்ள இந்த பாலம் சுருள்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோலிங் பாலம் தாமஸ் ஹீதர்விக்ஸ் விருதினை கட்டுமானத்துறையின் புதிய தொழில்நுட்பமான கேனலுக்காக‌ பெற்றுள்ளது.

இதனை ஹைட்ராலிக் ஜாக் மூலம் கப்பலில் எடுத்துச் செல்லலாம்.

5. பெய்பாஞியங் ரயில்வே பாலம் _ ஹூச்கோ - சீனா. Beipanjiang River Railroad Bridge, Guizhou, சீனா


சீனாவில் பெய்பாஞியங் ரிவர் ரயில்வே பாலம் ஹூச்கோ என்ற இடத்தில் இரண்டு மலைகளை இணைக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் சீனாவில் உள்ள வறுமையில் வாடுபவர்கள் வசிக்கும் இடங்களை இணைக்கிறது.

இதன் உயரம் தரையிலிருந்து 918 அடியாகும். இது உயரமான பகுதியாகும்.

6. ஹென்டர்சன் வேவ்ஸ், சதன் ரிட்ஜெஸ் - சிங்கப்பூர். Henderson Waves, Southern Ridges, Singapore .


சிங்கப்பூரில் உள்ள இந்த பாலம் மிக உயரமான பெடரஸ்டியன் பாலம் சதன் ரிட்ஜெஸ் பகுதியில் அமைந்துள்ளது. 9 கி.மீ நீளமான இந்த பாலத்தை சுற்றிலும் அழகழகான மரங்களும் பார்க்குகளும் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பாலோவ் வகையான ஆயிரக்கணக்கான மரப்பலகைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி மேலும் தகவல்களை சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்கள் சொல்வார்கள்.

7. பான்ட் கஸ்டேவ் ஃப்லோபர்ட், ருவ்ன், ஃப்ரான்ஸ். Pont Gustave Flaubert, Rouen, பிரான்ஸ்


ப்ரான்ஸில் ரூவ்ன் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1200 டன் எடையை கொண்டுள்ளது. செங்குத்தான இரு உருளைகளான தூண்களை தாங்கிய இந்த பாலம் பார்க்க மிக அழகாக உள்ளது. இதன் ஒவ்வொரு பகுதியும் 180 அடி உயரமும் 405 டன் எடையையும் கொண்டுள்ளது.

8. மில்லொவ் வியடக்ட் - ப்ரான்ஸ். The Millau Viaduct –.


ஃப்ரான்ஸில் உள்ள இந்த பாலம் உலகின் அதிக உயரமான பாலம். The Millau Viaduct –ங்குற பாலம்தான். இதனோட நீளம் மட்டும் 2,460 m (8,071 ft), அகலம் 32 m (105 ft) னா பாத்துக்குங்க…

9. ஜெஜ்ஜியோ ஜார்ஜ் பாலம் ‍_ Hegigio Gorge Pipeline Bridge, Southern Highlands Province, Papua New Guinea .



அதிசயமான இந்த பாலத்தை இரண்டு பைப்லைன் குழாய்கள் தாங்குகின்றன என்றால் வியப்பாக இருக்கிற‌தல்லவா... ஒரு பைப்லைனில் கேஸ்ஸும் இன்னொன்றில் ஆயிலும் கொண்டது. இது பப்புஅ என்ற பகுதியில் உள்ளது.

தரைமட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் பைப்லைன்களை மட்டுமே கொண்டுள்ள இந்த பாலத்தின் உயரம் 1290 அடியாகும்.

மேலும் இந்த பாலங்களை பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள நண்பர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

படங்களை பெரிதாக்கி (டபுள் கிளிக் செய்து) காணுங்கள்.

இந்த தகவல்களுடன் படங்களை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிகள்.

நன்றியுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, November 9, 2010

சூப்பர்ஸ்டாரின் குட்டிக் கதையும் 3ம் ஆண்டு வெற்றிவிழாவும்

அன்புள்ள நண்பர்களே!!.. எல்லோரும் நல்லாருக்கீங்களா.. நலம் நலமறிய ஆவல்.

என்னுடைய வலைப்பூவில் இடுகை வெளியிட்டு ரொம்ப நாளாச்சி.. அக்பர் ஊருக்கு சென்றதிலிருந்து நான் ஒருவன் மட்டுமே நிர்வகிப்பதால் என்னால் பதிவு எழுத முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக சரியாகவே எழுதவில்லை. நேரம் சரியாகிவிடும். என் மனைவி இரண்டு கட்டுரைகள் எழுதி தந்தார்.

என்னால் மற்றவர்கள் இடுகைகளை படிக்க நேரம் கிடைக்காமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனாலும் என்னுடைய வலைப்பூவுக்கு தினமும் வருகைதந்து அக்கறையுடன் மின்னஞ்சலில், "என்னாச்சி எதுவும் எழுதலியா" என்று கேட்கும் நண்பர்களை நினைக்கும்போது வார்த்தைகளில் சொல்லமொழி தெரியவில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எல்லோருக்கும் என்னுடைய மனந்திறந்த நன்றிகள்.

**********



அப்புறம் ஒரு சந்தோசமான செய்தி. நான் பதிவு எழுத வந்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து எழுத்துலகில் மூன்றாமாண்டில் பயணிக்கிறேன். உங்கள் அனைவர்களின் ஆதரவினாலும், படித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊக்கமளிப்பதாலும் என்னால் தங்கு தடையின்றி பயணிக்க முடிகிறது.

ஆம்! நவம்பர் 10, என்னுடைய வலைப்பூவான நாளையராஜாவில் எழுத தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆரம்பத்தில் எப்படி எழுதணும் என்றே தெரியாது. தமிழில் எப்படி எழுதுவது, மற்ற ப்ளாக்கில் கமாண்ட் எப்படி போடுவது, ப்ளாக் விட்ஜெட் எப்படி சேர்ப்பது, தமிழ்மணத்தில் எப்படி இணைப்பது, இப்படி சில குறிப்புகளை நண்பர்கள் சிலர் எனக்கு சொல்லித் தந்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் என் எழுத்துக்களின் மூலம் எண்ணற்ற நண்பர்களையும், அவர்கள் குடும்பங்களில் ஒருவனாக நினைக்கும்படி பெயர் சம்பாதித்துள்ளது ரொம்ப பெருமையாக உள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் இரண்டுமுறை ஆசிரியராகவும், தமிழ்மண நட்சத்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது உங்கள் பாராட்டுக்களின் மூலம் அறிந்து கொண்டேன். சீனா அய்யா அவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

***********

நவம்பர் என்றதும் எனக்கு சென்றமுறை 2008ல் ஊருக்கு சென்றது ஞாபகத்துக்கு வருகிறது. ஆம்.. இந்தமுறையும் ஊருக்கு செல்ல வேண்டும். டிசம்பரில் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஊரில் என் மனைவி, இப்பவே நான் வரக்கூடிய நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்.

************

சமீபத்தில் சன்டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அந்த பேட்டியினை காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். விஜயசாரதியின் கேள்விகளுக்கு சூப்பர்ஸ்டாரின் அலட்டல் இல்லாத பதில்கள் என்னை மிகவும் கவர்ந்தது. தான் ஒரு பெரிய நடிகர் என்று பீத்திக்காமல் எளிமையாக, எந்தஒரு பந்தாவும் இல்லாமல் பதிலளித்தது சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று சொல்லாமல் சொல்லியது.


அவர் அந்த பேட்டியில் ஒரு சிறிய கதை ஒன்று சொல்லியிருந்தார். நீங்களும் கேட்டும், டிவியில் பார்த்தும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த கதையை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு ஊர்ல ஒரு தேசம். அங்கே ஆளும் ராஜாக்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒவ்வொரு ஆள் ராஜாவாக இருப்பார். ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்ததும் அந்த ராஜாவை பயங்கரமான காட்டு மிருகங்கள் வசிக்கும்ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு விட்டுவிடுவார்கள். கொண்டு விடப்பட்ட ராஜாவை காட்டு மிருகங்களுக்கு இரையாக்கி விடுவார்கள். இதுதான் அந்த ஊர் வழக்கம்.

இப்படி ஒவ்வொரு 5 ஆண்டும் ஒவ்வொரு ராஜாவுக்கும் இதே கதிதான். ஆட்சிக்கு வருபவர்கள் 5 ஆண்டு முழுமையாக ஆட்சி செய்ய மாட்டார்கள். இந்த கதி தமக்கும் வரும் என்றெண்ணி பயத்தில் ஒரு ஆண்டோ இரண்டாண்டிலோ பயத்தில் இறந்துவிடுவார்கள். யாரும் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.

அப்போது அந்த ஊரில் ஒருவன் தைரியமாக என்னதான் ஆகுது பார்ப்போம் என்று 5 ஆண்டுக்கு ராஜாவாக சம்மதித்தான். 5 ஆண்டும் ரொம்ப சந்தோசமாக கழித்து ரொம்ப ஜாலியாக இருந்தான். 5ம் ஆண்டு முடிவில் எல்லோரும் அவனை கட்டி காட்டினுள் கொண்டுவிட சென்றார்கள். அப்போது இவன் சிரித்துக்கொண்டே எந்த கவலையுமில்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்பதை கண்டு மக்களுக்கு ஆச்சர்யம்.

என்னவென்று விசாரிக்கும்போது அவன் சொன்னானாம். இப்படி ஆகுமென்று எனக்கு முன்பே தெரியும். அதனால் நான் முதலாமாண்டு அந்த காட்டினுள் உள்ள மிருகங்களை அழித்துவிட ஏற்பாடு செய்தேன். பின்னர் இரண்டாமாண்டில் அந்த காட்டினுள் வீடுகளை கட்டி வசதிகள் ஏற்பாடு செய்து மக்கள் வாழுவதற்கு வழிவகைகளை ஏற்பாடு செய்தேன். இப்படி ஒவ்வொரு ஆண்டும் குறைகளை நிவர்த்தி செய்து மக்கள் சந்தோசமாக இருப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அதனால்தான் இப்போது சந்தோசமாக இருக்கிறேன்.

இந்த கதை எத்தனை எத்தனை உண்மைகளை எடுத்துரைக்கிறது. திரு. சூப்பர்ஸ்டார் சொன்னமாதிரி நாம் எப்போதுமே திட்டமிடவேண்டும். பிற்காலத்தில் ஒரு காரியத்தை முடிக்கவேண்டுமெனில் இப்போதே அதற்கு தயாராகி திட்டமிட்டு உழைக்கவேண்டும்.

எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய நீதியுள்ள கதை. தலைவரிலிருந்து தொண்டன்வரைக்கும், அரசியல்வாதியிலிருந்து சாமானியன் வரைக்கும், என்று எல்லோருக்கும் பொருந்தும் உண்மை.

இது வெற்றியின் அடையாளம். நன்றி திரு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே.....

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்