இந்த உலகம் ரொம்ப வேகமாக முன்னேறி வருகிறது. எல்லாம் அறிவியல் வளர்ச்சியினால் மாறிவரும் உலகத்துக்கு தகுந்தாற்போல நாமும் வேகமாக இயங்குகிறோம். இளைப்பாற சிறிதுநேரம் கிடைத்தால் நமக்கு எவ்வளவு சந்தோசம். அந்த சிறு இடைவெளியில் நம்முடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது. அதுவும் சிறுவயது ஞாபகங்கள் என்றென்றும் பசுமைமாறாத நினைவுகள். அதை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தால் நம்முடைய கவலைகள், இடறுகள், மனஅழுத்தம் இதிலிருந்து கொஞ்சம் விடுதலைதான்.
நமக்கு தகுந்தாற்போல நம்முடைய பிள்ளைகளும் இந்த உலகத்துக்கேற்ப மாறி வருகிறார்கள். இன்று அவர்களது உலகத்தில் நிறைய மாற்றங்கள், அவர்களது குழந்தைபருவ விளையாட்டுகளும் மாறிவிட்டன. முன்பெல்லாம் சிறுவர்கள் தெருவில் சென்று கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இன்னும் நிறைய விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. அதையெல்லாம் இப்போது எங்கே என்று தேட வேண்டியுள்ளது.
அதுபோல சிறுமிகளும் பல்லாங்குழி, பாண்டி, தாயம், சிட்டிக்கல் இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவதை இன்று காணமுடிவதில்லை. எங்கே இந்த விளையாட்டுகள் எல்லாம்?.. காலமாற்றத்தினால் குழந்தைகளும் மாறிவிட்டனர். இப்போதைய சிறுவர் சிறுமியர்கள் இந்த விளையாட்டுன்னா என்னஎன்று கேட்கும் சூழல்..
வருடத்தில் 12 மாதங்களில் இந்தவிளையாட்டுகள் சீசன் போல ஒவ்வொன்றும் மாறிமாறி வரும். இந்த சீசன் கோலிக்கா சீசன் என்றால் நாம் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தால் மற்ற சிறுவர்கள் ஹை..ஏய்.. இவனப்பாருலே.. இன்னும் பம்பரம் விளையாடிக்கிட்டிருக்கான் என்று ஏளனமாக பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இந்த விளையாட்டுகள் அப்போதைய சிறுவர்களின் வாழ்க்கையோட பின்னிபிணைந்தே இருந்தன.
கோலி
சிறுவர் விளையாட்டுகளில் கோலி விளையாட்டு முக்கிய பங்கு பெறுகிறது. கோலிக்கா என்றுகூட சொல்வார்கள். விதவிதமான கோலிக்காவை கடையில் வாங்குவதற்கு கடும்போட்டி.., கடையில் உள்ள ஒரு டப்பா கோலிக்கா சீக்கிரம் விற்றுவிடும். கோலிக்கா உருண்டையில் உள்ளே தெரியும் கண்ணை கவரும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் சிறுவர்களை அதிசயக்க வைக்கும். அந்த கோலிக்காவில் ஒரு உலகம் உண்டென்று நம்பி அவர்களை வழிநடத்தி செல்லும் கோலிக்காவை எவராலும் மறக்க இயலாது.
கோலிக்கா விளையாட்டில் மூணுகுழி, பேந்தான், ஒத்தகுழி, வட்டடிஸ், பொட்டல், இரட்டகோடு போன்றவை ரொம்ப இன்ரஸ்டிங்கான விளையாட்டுகள். பள்ளிக்கூடம் முடிந்தஉடனே பைக்கட்டை வீட்டில் போட்டு போறதுதான்., கருக்கலான (இருட்டியபின்) அப்புறம் அம்மா தேடிவரும்வரை கோலிக்கா விளையாட்டுதான். எங்கிருந்தாலும் குறிபார்த்து அடிப்பதில் கில்லாடியாக இருப்பவர்கள் இந்த விளையாட்டில் ஜொலிப்பார்கள்.
பம்பரம்
பம்பரம் விளையாட்டை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விளையாடுவார்கள். அனைவரும் விரும்பும் விளையாட்டு. இதுவும் கோலிக்கா போல கடைகளில் வாங்க போட்டிதான். விதவிதமான கலர்களில் விற்கப்படும் பம்பரங்களை வாங்கிவந்து முதல்வேலையாக அதிலிருக்கும் சின்ன ஆணிய எடுத்துட்டு ஒரு பெரிய ஆணியை சைக்கிள் கடையில் கொடுத்து அடித்து அதில் சுழற்றிவிடும் பம்பரம் ஆடும் அழகு அழகுதான். உள்குத்து, ஆக்கர் போட்டு குத்துவாங்காத பம்பரமே கிடையாது.
கில்லி (குச்சிக்கம்பு, கில்லிதண்டா)
இதுவும் எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப பிரபலமான விளையாட்டு. இது விளையாடும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிரிக்கெட்டின் முன்னோடியான இதில் எதிர்த்து விளையாடுபவனுக்கு கொடுக்கப்படும் மூணு சான்ஸில் அவன் அடிக்காதபோது வரும் குதூகலம் ரொம்ப அருமையாக இருக்கும். அவன் அடிக்க ஆரம்பிக்கபோகும்போது ஒண்ணு காக்கா, இரண்டு குருவி, மூணு கொக்கு என்று சொல்லி அவனது கவனத்தை திசைதிருப்பும்போது அவனால் அடிக்கமுடியாதபோது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.
ஒருதடவை நான் எங்கத்தெரு பையன்கள்கூட குச்சிக்கம்பு விளையாடும்போது ஒருவன் விளையாடும்போது இதேபோல சொன்னதும் அவனால் அடிக்கமுடியாமல் போனதும் அவனுக்கு பயங்கர கோபம். அதன்பின் அவனிடம் டேய் இதெல்லாம் விளையாட்டுடா; அதுக்காக என்னிடம் பேசாம இருக்காதே என்று சொன்னேன்.
காத்தாடி
பருவகாற்று காலத்தில் காத்தாடி விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பனை ஓலையில் காஞ்சரம் முள்ளை சொருகி காத்தாடி காத்தாடி அழகாக சுத்து சுத்து என்று காற்றடிக்கும் திசையில் வைத்து காத்தாடியை சுற்றவைப்பது மகிழ்வான விளையாட்டு.
அதுபோல டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட் அட்டை சேகரித்து விளையாடும் விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இதெல்லாம் அப்போதைய சிறுவர்களின் பொழுதுபோக்கான விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டுகள் உடல் வளர்ச்சிக்கும், அறிவுக்கும் வேலை கொடுப்பதாக அமைந்தது. அவர்களால் பல கோணங்களில் சிந்திக்க உதவியாய் இருந்தன.
இதுமாதிரி சிறுமிகளுக்கு பல்லாங்குழி, தாயம், பாண்டி, சிட்டிக்கல் போன்ற விளையாட்டுகள் இல்லாமல் பொழுதே போகாது.
இந்த விளையாட்டுகள் எல்லாம் எங்கே சென்றுவிட்டன?..
இப்போதைய குழந்தைகளின் பொழுதுபோக்கெல்லாம் வீட்டினுள்ளே கம்பியூட்டர் முன்னே கழிந்துவிட்டது. வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்று சிறுவர்களின் உலகம் மாறிவிட்டது. அவர்களது சந்தோசங்கள் அந்த நாலு சுவற்றுக்குள்ளே அடங்குகிறது என்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.
இதுபோதாதென்று டிவியில் ஜெட்டிக்ஸ், போகோ, சுட்டிடிவி, கார்ட்டூன்ஸ் என்று டிவியிலும் அவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். இதெற்கெல்லாம் அடிமையானதை நினைக்கும்போது வருத்தம்தான்.
எங்கே அந்த குறும்புகள்... மறக்க முடியாத இளவயது குறும்பு சேட்டைகள் உங்களிடமிருந்து காணாமல் போய்விட்டதே. உங்கள் திறமைகளை வெளியே கொண்டுவாருங்கள். இதோடு முடிந்துவிட்டதா.. உங்கள் உலகம்??.. சொல்லுங்க குழந்தைகளே!!.
வெளிய வாங்க குழந்தைகளா.. உங்களின் பரந்த உலகம் இருட்டினில் இல்லை. வெளிச்சத்துக்கு வாங்க.. பாருங்கள் உங்கள் உலகத்தினை.. நாலு
சுவற்றுக்குள் உங்கள் சந்தோசத்தை தொலைத்துவிடாதீகள்.
உங்கள் கனவுகள் வெற்றிப்பாதையில் அழைத்து செல்லட்டும.. வாருங்கள் குழந்தைகளே... வெற்றி உங்களுக்கே..
,