"மாமா... ரெண்டுநாளா போனே ஒர்க் ஆகல. காலையில ராயபுரம் போய் டெலிபோன் எக்சேஞ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திருங்க. அப்புறம் அந்த ரோட்டிலே கிழக்கால இருக்கிற கேஸ் கம்பெனியோட ஆபீஸ்ல புக் பண்ணி பத்து நாளாச்சே கேஸ் என்னாச்சின்னு கேளுங்க, சரியா மாமா," என்று என் மருமகள் மல்லிகா சொன்னாள்.
"சரிம்மா," என்றபடி தலையாட்டினேன்.
"அப்புறம் சொல்லமறந்திட்டேன் மாமா, மத்தியானம் உங்க பேரன் பேத்தியை ஸ்கூல்லருந்து கூட்டியாந்து சாப்பாடு கொடுத்திட்டு மறுபடியும் ஸ்கூல்ல விட்டுருங்க மாமா. சாயங்காலம் சும்மா இருக்கிற நேரத்துல அந்த பைனான்ஸ் கம்பெனியில சீட்டு போட்டிருந்தோமே, அங்கபோய் சீட்டு ஏலம் என்னாச்சின்னு கேட்டுட்டு வரும்போது வீட்டுக்கு தேவையான சாமான்ல்லாம் வாங்கியாந்துருங்க மாமா."
"நான் நைட்டுவந்து சமைக்கணும்.. உங்களை அனுப்புறதுக்கு வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்ய..? நானும் உங்க பிள்ளையும் வேலைக்குப் போனா வர்றதுக்கு நைட்டு ஆகிறது, என்ன செய்யன்னு தெரியல மாமா..." என்றபடி மல்லிகா தன் அறைக்குச் சென்றாள்.
"சரிம்மா சரிம்மா," என்று வார்த்தைகள் தான் பேசியதே தவிர உள்ளம் ஒட்டவில்லை. என் படுக்கையை விரித்துக் கொண்டிருந்தபோது அருகில் என் செல்லக்குட்டிகள் பேரன் கார்த்திக்கும் மலரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
கார்த்திக்கின் காலில் கடித்த கொசுவைத் தட்டிவிட்டுக் கொண்டு போர்வையை எடுத்து போர்த்திவிட்டேன். இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஃபேனை அவர்கள் பக்கம் திருப்பி என் உடலை படுக்கையில் சாய்த்தேன்.
மனம் பலவற்றை அசைப்போட்டபடி இருந்ததால் என்னால் உறங்க முடியவில்லை. எப்போ உறங்கினேன் என்று தெரியாது.
*****
"தாத்தா தாத்தா இந்த ஜட்டிய போட்டுவிடு," என்றபடி வந்த கார்த்திக்கின் குரல் கேட்டு விழித்துப் பார்த்தேன். ஆஹா இன்னக்கி ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல. கண்ணெல்லாம் அழுத்தியது.
"டேய் கார்த்திக், தாத்தாவோட கண்ணாடிய எடுத்துத்தாப்பா," என்ற என் குரல் அவனுடைய விளையாட்டில் கரைந்து போனது. தட்டுத் தடுமாறி கண்ணாடி அணிந்தேன்.
"ம்ம்.. ம்ம்.. தாத்தா இங்கப் பாரு என்னோட பென்சில் முனையை கார்த்திக் உடைச்சிட்டான்; நா எப்படி எழுதுவேன்," என்று கண்ணை கசக்கிய மலருக்கு, "ஓகே ஒகே இதுக்கெல்லாமா அழுவாங்க என்ன பொண்ணு... நா உனக்கு பென்சில் சீவித் தாரேன், அழக்கூடாது என்ன? இந்தாப் பாரு பென்சில் சீவுனதுக்கு அப்புறம் எப்படி அழகா இருக்குபாரேன்," என்று பென்சிலைக் கொடுத்தேன்.
"தாத்தா, எங்க மிஸ் பேரன்ட்ஸ கூட்டிட்டு வரச் சொன்னாங்க. மம்மிட்ட சொன்னா தாத்தாவ கூட்டிட்டு போன்னு சொல்றாங்க. ஏன் தாத்தா, மம்மியும் டாடியும் வரமாட்டேங்கிறாங்க?"
"அவங்களுக்கு நிறைய வேலையிருக்கும், அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது. நான் வாரேன்... சரியா?" என்று மலரின் தலையை தடவிகொடுத்தேன்.
இருவரையும் ஸ்கூலில் விட்டுட்டு ராயபுரம் செல்வதற்கு பஸ் ஏற காத்திருந்தேன். வந்த இரண்டு பஸ்ஸிலும் வாசலில் தொங்கியபடி நின்றனர். அடுத்த பஸ்ஸில் ஏறினால்தான் சீக்கிரமாக ராயபுரம் போய்விட்டு, கார்த்திக்கும் மலருக்கும் சாப்பாடு கொடுக்க போக முடியும். வந்த பஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன்.
பஸ்ஸில் ஒரே கூட்டம். நிற்ககூட இடமில்லாமல் ஒருவருக்கொருவர் இடித்துகொண்டு நின்றனர். எனக்கு கிடைத்த குறுகிய இடத்தில் ஓடுங்கி நின்றேன். பஸ் கூரையில் மேலுள்ள கம்பியை பிடித்தபடி எவ்வளவு நேரந்தான் நிற்பது? பேலன்ஸ் கிடைக்காமல் அங்குமிங்கும் தள்ளாடினேன். வயசானாலே இப்படித் தானோ?
"இந்தா பெருசு ரொம்ப நேரமா சரக்கடிச்சவன் மாதிரி தள்ளாடிக்கிட்டே இருக்கே... இப்படிக்கா குந்து," என்ற இளைஞனை நன்றியுடன் பார்த்தபடி சீட்டில் அமர்ந்தேன்.
பேப்பரில் அக்னி நடசத்திரம் தொடர்கிறது என்று படித்த ஞாபகம். தாகம் தொண்டையை அடைத்தது. டெலிபோனுக்கு கம்ப்ளைண்ட் கொடுத்திட்டு கேஸ்ஸுக்கு சொல்லிட்டு வெளியே வர்றதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சு.
*****
ஆஹா மணி பன்னிரெண்டாகிருச்சே... கார்த்திக்கு ஸ்கூல் விட்டிருக்குமே! அரக்கபரக்க பஸ் பிடித்து ஸ்கூலிலிருந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
இருவருக்கும் சாப்பாடு கொடுத்து ஸ்கூலில் விட்டுவிட்டு வர்றதுக்குள் மணி ரெண்டாகிவிட்டது. தட்டில் உள்ள சாதம் வயிற்றில் செல்ல முடியாமல் திரும்பியது. எதிரே செண்பகம் சிரித்துக் கொண்டிருந்தாள் மாலையுடன். 'ஆமா உனக்கென்ன கவலையில்லாமல் போய் சேந்திட்டே. இங்கே நான் படுகிற அவஸ்தையை யார்ட்ட போய் சொல்லுவேன்? நீயும் போய்ச் சேர்ந்திட்டே... சே... என்ன வாழ்க்கையிது?' மனம் ஒரு நிலையில் இல்லை. கண் மூடினேன்.
நான்கு மணிக்கு ஸ்கூல் விட்டதும் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
"ஏய் மலர் தம்பிய பாத்துக்கிறணும் என்ன..? தாத்தா வெளிய போயிட்டு வாரேன். நல்லபடியா இருக்கணும்; சேட்டைகள் எதுவும் செய்யாம சமர்த்தா இருக்கணும் என்ன சரியா," என்றேன்.
"தாத்தா எப்போ வருவ?"
"வருவேன்," என்று அவர்களிடம் விடைபெற்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். ஜன்னலோர இருக்கையில் மாலை நேரத்து இளம்வெயில் என்னை வரவேற்றது. மனம் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல கனமானது. மனம் பல நினைவுகளை அசைபோட்டபடி என்னோடு பயணித்தது.
'கிராமத்துல விவசாயம் பண்ணிக்கிட்டிருந்த எங்க அப்பாரு ஏதோ அவருடைய சக்திக்கு ஏத்த மாதிரி படிக்க வைத்தார். படிப்புக்கான வேலையை விட வயித்து பசிக்கான வேலையில்தான் ஐக்கியமாக முடிந்தது. கல்யாணமான புதிதில் செண்பகத்தோடு இந்த சென்னை மாநகரத்துக்கு வந்து கிட்டதட்ட 30 வருசமாச்சி.
எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளமாய் பாஸ்கரும் முத்துவும் பிறந்தார்கள். ஆஹா ஓஹோன்னு இருக்காவிட்டாலும் அப்படி இப்படின்னு உருண்டு பிரண்டு இருவரையும் நன்றாக படிக்க வைத்தேன். அவர்களும் என் பெயரைக் காப்பாத்தி இன்று இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். எங்க பக்கம் வீசிய காற்று, எப்போ இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ அப்பவே திசைமாறியது.
இருவரும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால் நானும் செண்பகமும் அன்னியமானோம். என்ன செய்ய..? எல்லாம் நேரந்தான். செண்பகமும் கவலைப்பட்டு கவலைப்பட்டு அந்த கவலையிலே போய் சேர்ந்திட்டாள்.
டேய் உனக்கும் சேர்த்து வைச்சிக்கோடா என்ற என் நண்பனின் வார்த்தை என் மகன்களின் செயலில் காணாமல் போனது.'
ஆஹா.. என்ன இது? காற்று இதமா வீசுகிறதே... சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. அடடா... மனம்போன போக்குல மெரீனா பீச்சுக்கு வந்திட்டேன் போல. அதுவும் நல்லதுக்குதான் என்று என் மனம் சொல்லியது. கடல் அலை என்னை வா வா என்றழைத்ததற்கு ஏற்ப என் கால்கள் வீறுநடை போட்டன.
"சார் சார் கடலை வாங்கிக்கோங்க சார்..." என்ற குரல் வந்த திசையில் பார்த்தேன். என் வயதை ஒத்த ஒருவர் அங்கே கடலை வித்துக் கொண்டிருந்தார். அந்த தள்ளாத வயதிலும் யாருக்கும் பாரமாக இருக்காமல் உழைக்கும் அவரது எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே... இங்கே தன்னம்பிக்கையுடன் உழைக்கும் எத்தனை எத்தனை கரங்கள்? வா வா என்று ஆர்ப்பரித்த கடலலை அமைதியாக உறங்கியது என் மனதினிலே...
ஆங்.. ஆங்.. தப்பு பண்ணிட்டேனே..! மகனையும் மருமகளையும் நம்பிய நான் என்னை நம்பாமல் போய்விட்டேனே.. கண்முன் என் மகனுக்கு எழுதிய கடிதம் நிழலாடியது...
அன்புள்ள பாஸ்கருக்கும் முத்துவுக்கும்,
உங்கள் வாழ்க்கைத் திரியை ஏற்றிவிட்ட மெழுகுவர்த்தியின் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் முன்னுக்கு வர நான் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறீர்கள். சந்தோசம் அதுதான் தேவை; நீங்க நல்லாயிருந்தா சந்தோசப்படும் நபர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்ளலாமா... மன்னிக்கவும் உங்களை பெற்றெடுத்தவன் என்ற முறையில் சொல்லிட்டேன்.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வார்கள். ஆம்! உங்கள் திருமணம் எனக்கு திருப்புமுனைதான்.
மனைவி என்பவள் நம் வாழ்க்கையில் சரிபாதி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் உங்களுக்கு மனைவிதான் வாழ்க்கையானதால் நானும் என் மனைவியும் தனிமைபடுத்தப்பட்டோம். இந்த உண்மைத் தெரிந்த அவளும் சீக்கிரமே போய்விட்டாள். அவள் என்னை பிரியமனமில்லாமல் அடிக்கடி வாங்கவாங்க என அழைக்கிறாள்.
உங்களுக்கு மனைவி சொல்லே மந்திரம் ஆனது போல எனக்கும்தான். நானும் அவள் வழியிலே செல்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு அப்பா.
*****
ஆங்.. ஆங்.. தப்பு பண்ணிட்டேனே.. மகனையும் மருமகளையும் நம்பிய நான் என்னை நம்பாமல் போய்விட்டேனே... மனதில் புதிய தெம்பு கிடைத்தது. என் கால்கள் தானாக பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைந்தது.
ஆ!! இந்நேரம் என் மருமகள் வந்திருப்பாளே.. அவள் கண்ணில் கடிதம் பட்டிருக்குமோ... தெரியலியே.
அட சே!!... பஸ் ஊர்வலத்தோடு ஊர்வலமாக ஊர்ந்தது.
"தாத்தா... கார்த்திக் தண்ணீரில் விளையாடிக்கிட்டே இருக்கான். ரொம்ப சேட்டை பண்ணுறான்," என்ற மலரின் சொல்லைத் தாண்டி என் அறைக்கு சென்றேன்.
அவனுடைய விளையாட்டில் என் கடிதமும் கப்பலாய் மாறியிருந்தது.
*****
அன்புள்ள நண்பர்களே!! இந்த கறுப்பு வெள்ளை சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறுகதையை தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
,
Post Comment