Pages

Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..?!

நடிகர் கமலஹாசன் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்து பெரும்பாலான இடங்களில் வெளிவந்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அது வெளியானால் பல சமூக சீரழிவை ஏற்படுத்தும் எனக்கருதி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையின் காரணமாக தமிழக அரசு இந்த படத்தை 15 நாட்களுக்கு தடை செய்துள்ளது.

நமது கருத்துக்கள் மற்றவர்களை சென்றடைய ஊடகம் கண்டிப்பாக தேவை. அது எந்தத்துறையாகவும் இருக்கலாம். இதில் திரைத்துறை என்பது எல்லாவற்றையும்விட அதிவிரைவாக மக்கள் மனதில் சென்றடையும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இந்த சினிமாவின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள்.

அப்படி மக்கள் மனதோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களில், இஸ்லாமிய சமூகங்களை பற்றி திரைப்படங்களில் காட்டும்போது கொச்சையாக தமிழ்பேசுபவராகவும், சாம்ப்ராணி போடுபவராகவும், கைலி, பச்சை தலைப்பாகை அணிந்தவராகவும், அரேபிய ஷேக்குகள் போன்றும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர் இந்தமாதிரி படங்களை எடுப்பவர்கள். இவர்களது குறிக்கோள் முஸ்லிம்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கோடு படங்களில் காட்டுவது வேதனைக்குரிய விசயம்.

உதாரணமாக, இப்போது வந்த அனைத்து திரைப்படங்களும் இஸ்லாமியர்களை திவிரவாதிகளை போன்றும், இன்றைய மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து படமெடுத்து வருகின்றனர். இந்த விஷமங்களை விதைக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கண்டித்தக்கவர்கள்.

முஸ்லிம்களும் மாற்றுமதச் சகோதரர்களும் அண்ணன்- தம்பி என்று ஒரே குடும்பம் போல பழகிவருகிறார்கள். இது நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தமாதிரி கருத்துக்களை விஷம்தான் என்றறிந்த இன்றைய மாற்றுமதச் சகோதரர்கள் இதனை பெரிய விசயமாக கருதாமல் முஸ்லிம்களோடு நல்லிணக்கத்தோடு பழகி வருகிறார்கள். இப்படியான சினிமாக்கள் தொடர்ந்து வந்து கீழ்தரமான எண்ணங்களை விதைத்துச் சென்றால் மாற்றுமதச் சகோதரர்கள் இது உண்மைதான் என்று முஸ்லிம்களை கேவலமாக பார்ப்பார்கள்.

ஆனால் நாளைய சமுதாயம் எப்படி தாங்கிக்கொள்ளும்; எப்படி எடுத்துக் கொள்வார்கள்?.. இந்த படங்களை பார்க்கும் வளர்ந்து வரும் சிறுபிள்ளைகள் நெஞ்சில் என்னமாதிரியான எண்ணங்களை உருவாக்கும் என்பதனை நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்க  கடமைப்பட்டுள்ளோம்.


சமுதாய பொறுப்புணர்வோட செயல்படவேண்டிய தணிக்கைத் துறை இந்தமாதிரி திரைப்படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி மேலும் இவர்களை ஊக்கப்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் மத நல்லிணக்கத்தோடு சமுதாய பொறுப்புணர்வோடு செயல்பட்டு இந்த படத்தை தடைசெய்ய உத்தரவிட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்தவிஷயத்தில் நீதிமன்றமும் தங்களுடைய பங்களிப்பை ஆற்றும் என்பது விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தீர்ப்பினை தள்ளிவைத்ததிலிருந்து தெரிகிறது. இப்படம் நிரந்தரமாக தடைசெய்ய ஏதேனும் வழிவகைகள் உண்டா என்று அறிந்து நல்லதொரு தீர்ப்பினை வழங்க அனைத்து தரப்பு மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கின்றோம்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் மனதை புண்படுத்தும்படி மதநல்லிணக்கத்தை குழிதோண்டி புதைக்கும்  திரைப்படங்களுக்கு எதிராகவும் நாம் அனைவரும் போராடவேண்டும். 
அனைத்து தரப்பு மக்களும் இந்தமாதிரி விஷங்களை விதைக்கும் திரைப்படங்களை வேறோடு கிள்ளியெறிய முன்வர வேண்டும்.

பார்க்கலாம்... எல்லாம் இறைவனின் சித்தம்..!

Post Comment

Sunday, January 13, 2013

உன்னோடு ஒரு பயணம்..!


உன்னோடு ஒரு பயணம்..!

ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று
இழுத்து செல்கிறது உன் அருகாமையை தேடி..!
பயணத்தில் தேடித்தேடி
அலுத்துப்போகின்றேன்
மறுபடியும் மறுபடியும் இம்சிக்கிறாய்..!

விழிகளுக்குள் காட்சிகள் விரிய
உன்னோடு பயணித்தது ஒளியும் ஒலியுமாய்..!
மீண்டும் சந்திக்கும் தருணத்தை
விழா எடுக்க முயற்சிக்கிறேன்
என் நினைவுகளும்
விரைந்தோடும் காலமும்
உனக்காக வீற்றிருக்கும் அன்பே..!

என் கைக்கோர்த்தபடி நீ
சுற்றிவரும்போது வியந்து வியந்து
ஒவ்வொன்றையும் நீ கேட்கும்போது
நான் விளக்கும் அழகினை
மெய்மறந்து ரசித்தது
இன்னும் மறையவில்லையடி அன்பே..!

உன் செல்ல பொய்க்கோபங்களை
காணாது அங்குமிங்கும் தேடுகின்றேன்

விண்ணில் தெரியும் நட்சத்திரங்கள்
மினுமினுக்கின்றன
உன் அழகிய முகமும்
மின்னுகின்றதா என
மெய்மறந்து நிற்கின்றேன்
கடும்குளிரையும் பொருட்படுத்தாது..!

Post Comment

Monday, January 7, 2013

முஸ்லிம்கள் என்றால்???.சில ஆண்டுகளுக்கு முன்னர், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் தினமும் பஸ்ஸில் தான் செல்வேன். பஸ்பாஸ் இருந்தால் செலவை சிக்கனப்படுத்தலாமே என்று நெல்லை பஸ் டிப்போவில் பஸ்பாஸ் வாங்கி பயணம் செய்வேன். மாதாமாதம் அதை புதுப்பிக்க டிப்போவுக்கு செல்வதுண்டு. அங்கு அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்க்கும் பெண் எங்க ஊரை சேர்ந்தவர்; நன்கு பழக்கமானவர். அந்த அக்கா பெயர் ஞாபகமில்லை. இதனால் அங்குள்ள மேலாளார் என்னிடம் நன்கு பழகிவிட்டார்.

ஒருநாள் காலையில், பாஸை புதுப்பிக்க டிப்போ அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது மேனேஜரிடம் கையெழுத்து வாங்கும்போது, ”தம்பி உன்னப்பார்த்தா எனக்கு பயமிருக்குப்பா” என்றார். நான் திடுக்கிட்டு, ”என்ன சார்! என் தலையில் கொம்பு முளைத்து அகோரமாவா இருக்கேன்” என்றேன் சிரித்துக் கொண்டே. அதற்கு அவர், ”அதுல்லப்பா, முஸ்லிம்கள் என்றால் தாடிவைத்துக் கொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு தீவிரவாதி போல இருப்பாங்களாம். அவங்க எங்க குண்டு வைப்பாங்கன்னே தெரியாது. அதமாதிரி நீயும் எதாவது வச்சிருக்கியா” என்றார் சிரித்தபடி. நானும் சிரித்துக்கொண்டே, ”யார் சார் சொன்னா உங்களுக்கு முஸ்லிம் என்றால் தீவிரவாதின்னு??..” என்றேன். அவர் உடனே, ”அதான் டிவியில சினிமாவுல காட்டுறானேடே. முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டுக்குள்ள ஊடுவிருயிருக்காங்க.. ஆங்காங்கே குண்டு வைக்கிறாங்கன்னு படத்துல காட்டுறாங்களே., அதற்கு என்னப்பா சொல்றே” என்றார்.

சார், முதல்ல ஒண்ணு புரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம் என்றால் அமைதியானவன் என்று அர்த்தம். நாட்டுல இருக்கிற முஸ்லிம்கள் இருபது சதவீதம் பேரும் கையில் துப்பாக்கியும் குண்டும் வைத்துக் கொண்டு இருந்தால் நீங்களும் நானும் நிம்மதியா வாழ முடியுமா.. அதுபோக இந்த நாட்டில் முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் என்று ஒரு குடும்பம் போல பழகிக்கிட்டு இருக்கோம். இது இன்னக்கி நேற்றல்ல.. காலம் காலமா இப்படித்தானே வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம். சினிமா என்பது ஒரு நிழல். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை” என்றேன். மேலும் நான், ”சார்! எங்கோ ஒருவன் மதவெறி பிடித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்றீங்களே இது சரியா??.. தீவிரவாத செயல்கள்ல ஈடுபடுகிறவங்களுக்கு ஏன் மத அடையாளப்படுத்துறீங்க??.. அவன் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்டியனோ.. தண்டிக்கப்பட வேண்டியவன். மற்ற மதத்தினர் செய்யும் இதுபோன்ற தீவிரவாத செயலுக்கு மத அடையாளம் பொருத்தாத மீடியாக்கள் அவன் முஸ்லிமாக இருந்தால் உடனே எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க சார்??” என்றேன்.

உடனே அந்த மேனேஜர் ”ஆமா தம்பி! எல்லோரையும் குற்றம் சொல்வது கூடாது. எனக்கு தெரியும்.. முஸ்லிம்கள் என்றால் ரொம்ப நல்லவங்கன்னு.. இல்லன்னா கொடுக்கல் வாங்கல் வச்சிருப்போமா சொல்லு., ஆனா இதுபோன்ற கருத்துக்களை மீடியாக்கள் பரப்பும்போது இதனைப் படிக்கும் அல்லது அந்தமாதிரி படங்களை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?! நம் அருகில் உள்ளவர்கள் இப்படியாப்பட்டவங்களான்னு நம்மிடையே முஸ்லிம்கள் தீய எண்ணத்தோடே பழகுறாங்கபோலன்னு நினைப்பாங்களே.. இது நெஞ்சில விஷத்தை விதைத்ததுக்கு சமம். சே! என்ன மாதிரியான உலகம்டா இது!! என்று நொந்து கொண்டார்.


தம்பி அருமையா சொன்னேப்பா.. நல்ல தெளிவான சிந்தனை. நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய்” என வாழ்த்தியனுப்பினார். பின்னர் எங்க ஊர் அக்காவும், நல்லா சொன்னேடா தம்பி என்றார்.

எல்லாம் இறைவனின் சித்தம். சரி சார் எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது நான் வருகிறேன்” என்றபடி இருவரிடமும் விடைப்பெற்று கிளம்பிய எனக்கு கல்லூரியில் நுழைந்ததும் ஆசிரியரிடம், ”ஏண்டா இவ்வளவு லேட்டு!” என்று திட்டு விழுந்தது.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்