Pages

Saturday, January 28, 2012

பொழுது விடியட்டும் - சிறுகதை



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை



"ஏ.. மாரிமுத்து.! ஏ மாரிமுத்து.. எங்கிட்டு இம்ப்பூட்டு தூரோம்.. அதுவும் இந்த வேகாத வெயில்லுல விரசா போறீய‌.. செத்த நில்லுப்பா" என்ற குரல் வந்த திசையில் கோயில்பிச்சை நின்று கொண்டிருந்தான். "என்ன செய்யுறது பிச்ச!.. இந்த பொங்கலுக்கு மொவ‌ளும் மருமொவ‌னும் ஊருலருந்து 10 மணி பஸ்ஸுக்கு வாரவுகல்ல.. அதான் கூட்டியாற போறேன்.. ஆமா! நீ எங்கல போறே. அதுவும் வெள்ளையும் சொள்ளையுமா?!. சோக்கா இருக்கேலே" என்றேன். "அட நம்ம செல்வி வாராளா.. கட்டிக் கொடுத்ததுக்கப்பறம் பார்க்கவே இல்லயே.. பார்த்து எம்ப்பூட்டு நாளாச்சி.. எதாச்சும் கடிதாசி கிடிதாசி போடுவாளா மாரி?.. கண்ணுக்குள்ளே வளந்த புள்ள!.. ம்ம்ஹும். நா பக்கத்தூரு சந்தைக்கி மாடுவாங்கலான்னு போறேன்.. நீயும் வாறியா மாரி?.." என்றான் பிச்சை.

"இல்லப்பா.. இன்னக்கி மருமொவன் வாராவுல்லா.. நீ போயிட்டு வா"

"ஆமா.. ஆமா மருமொவன் கொஞ்சம் முசுரு புடிச்சவருதான். சரி சரி.. பஸ் வர்ற சத்தங்கேட்குது"

"அப்ப்பா.. எப்புடி இருக்கீய" என்றபடி வந்தாள் செல்வி. "வாங்க மாப்ளே.. எப்டி இருக்கீய.. சொகந்தானா.. வீட்டுல எல்லோரும் சவுக்கியந்தானா?.." என்றதுக்கு "ம்ம்.. நல்லாருக்காங்க.. நல்லாருக்காங்க" என்றார் மாப்பிள்ளை. "மாப்ளே.. எப்படி இருக்கீங்க.. செல்விம்மா எப்படி இருக்கே.. பார்த்து எம்ப்பூட்டு நாளாச்சி" என்று பிச்சை கேட்டதுக்கு "பிச்ச சித்தப்பா.., எப்படி இருக்கீய.. வீட்டுல எல்லோரும் நல்லாருக்காங்களா" என்றாள் செல்வி.

"மாரி!.. புள்ளைகள கூட்டிட்டு வீட்டுக்கு போ.. நா சந்தைக்கி போயிட்டு வாரேன். பஸ்ஸு கிளம்ப போவுது. நா வாரேன்" என்றபடி பிச்சை பஸ்ஸில் ஏறினான்.

"ஏய்ய்ய் ஆறுமொவம்.. இவுகள வீட்டுல கொண்டுபோய் இறக்கிவிட்டுரு.. செல்வி.. ரெண்டுபேரும் வீட்டுக்கு போங்க. நா செத்த பொடிநடையா வாரேன்" என்று வண்டிக்காரனிடம் சொல்லி அவர்களை மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். மனம் பழையவற்றை அசை போட ஆரம்பித்தது.

இந்தா போறானே கோயில்பிச்சை. என்னோட 3 வயசு சின்னவன்தான். ஆனா, சின்ன வயசுலருந்து இவந்தான் எனக்கு எல்லாமே. அப்போம் நாங்கெல்லாம் விளாடாத விளாட்டே இல்லை. பள்ளிக்கொடம் பக்கத்துல நிழலுக்குக்கூட‌போனது கிடையாது. வாத்திக்கும் எனக்கும் சின்ன தகராறாகி சிலேட்ட கொண்டு அவர் மண்டைல போட்டதுக்கு அப்புறம் படிப்ப மூட்டை கட்டுனதுதான். படிப்பு சுத்தமா மண்டைல ஏறல. ஆனா பிச்சை அப்படியில்லை. நல்லா படிப்பான். அதுனால அவனுக்கு விவரமெல்லாம் அத்துப்படி. ஆனா அவனால மேக்கொண்டு படிக்கமுடியல.

எங்கப்பாவுக்கு நஞ்சை, புஞ்சை தோட்டம்துரவுன்னு எக்கசக்கமா உண்டு. சீட்டு, குடி, பந்தயம்முன்னு இருந்த சொத்தை அழிக்க ஆரம்பிச்சார். அம்மாவையும் எங்களையும் அடிப்பாரு. அம்மா பாவம். அப்பாவ நினைச்சி கவலப்பட்டு கவலப்பட்டு நோயில விழுந்துருச்சி. அம்மாவையும் தங்கச்சி, தம்பிகளை காப்பாத்துறக்காக சின்ன வயசுலயே விவசாயத்துல எறங்கியாச்சி. பிச்சையும் என்கூட விவசாயத்துல எறங்கிட்டான்.

அப்பாவுக்கு ஏதோ நோய் வந்திருச்சி.

"நானும் எனக்கு தெரிஞ்ச வைத்தியமுல்லாம் செஞ்சுட்டேன். இனி ஆண்டவன் விட்ட வழி. மாரி உங்கப்பா பொழைக்கிறது கஷ்டம்தான்."
"வைத்தியரே.. டவுண் ஆசுபத்திரிக்கு கொண்டு போலாமுங்களா.."
"ம்ஹூம் தேறுறது கஷ்டந்தேன்."

அப்பா போன‌கவலையிலே அம்மாவும் போய் சேர்ந்திருச்சி. அப்பா விட்டுட்டு போன கொஞ்சநஞ்சத்தை வச்சி தங்கச்சியையும் கரை சேர்த்துப்புட்டேன். தம்பிகளையும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஒருநிலைக்கு கொண்டு வந்தேன்.

செண்பகம் வந்தபின்னாடி எல்லாமே மாறிச்சி.. "ஏலே மாரி! செல்வி பொறந்தபின்னாடி செழிப்பாவுல்ல இருக்கே.. ரொம்ப சந்தோசமா இருக்குடே" என்று பிச்சை சொன்னபோது எனக்கும் சந்தோசமாக இருந்தது.

ஆனா கொஞ்சநாள்ல என் உடம்பெல்லாம் சிறுசிறு கட்டிபோல பொக்களம் பொக்களமா இருந்ததை பார்த்து "ஏன்யா.. என்னைய்யா.. உடம்பெல்லாம் இப்படி இருக்கு. உங் அப்பாருக்கு உள்ள வியாதி தொத்திருச்சா.. என்னஏதுன்னு வைத்தியருக்கிட்ட கேளுய்யா" என்று செம்பவம் சொன்னபோது அதிர்ச்சியா இருந்தது.

வைத்தியரும் ஏதேதோ பச்சயில மருந்தெல்லாம் கொடுத்து சரிபடுத்தினார்.

"ஏலே மாரி! இவுக ‌டவுண்லருந்து வந்துருக்காவ. எதோ கவருமென்ன்ட்டுலருந்து பணம் கொடுக்காங்களாம். எதோ எல்ஐசி யாம். மாசாமாசம் கொஞ்ச ரூவா கொடுத்தா போதுமா., ஒரு பத்து பதினைஞ்சு வருசத்துல ஒரு லட்சமா கொடுப்பாகளாம். நானும் சேந்துட்டேன். நீயும் சேருறியாலே" என்றான் பிச்சை.

"எலே பிச்ச.. நமக்கெல்லாம் எதுக்குலே இதெல்லாம். வயசு போன காலத்துல இதெல்லாம் தேவையா" என்றேன்.

"பின்னாடி உதவுமுல்லே.." என்றான். சரி அவன் சொன்னா சரியாத்தான் இருக்குமுன்னு கைநாட்ட வச்சிப்புட்டேன்.


"செல்வியும் வளர்ந்து பெருசாயிட்டா.. ஒரு நல்ல வரனா பாத்துமுடிங்கன்னு" செம்பவம் அடிக்கடி நச்சரித்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கென்ன தெரியப்போவுது?.. நா படுதபாடு!. இருந்ததையெல்லாம் தங்கச்சிக்கும் தம்பிகளுக்கும் பிரிச்சி கொடுத்து மிச்சமீதி இருந்ததை கொண்டும் கடனஉடன வாங்கி செல்வியோட கல்யாணத்தை செய்யலாமுன்னு நினைச்சேன்.

கல்யாணத்தன்னக்கி மாப்பிள வீட்டுக்காரவுக வரதட்சண பாக்கி அதுஇதுன்னு சொல்லி ரொம்ப கிராக்கி பண்ணிப்புட்டாக. அவுகள சரிக்கட்டி புள்ளைய ஆனந்த கண்ணீரோடு மறுவீட்டுக்கு வழிஅனுப்பினேன்.

அப்ப போன செல்வி இப்பதான் ஊருக்கு வாரா. ம்ம்ம்.. என்ன செய்ய?.. என்று நினைத்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.


"ஏன்யா.. இம்ப்பூட்டு தேரம்..." என்று செம்பவம் கேட்டதற்கு "ஏபுள்ள! வருத வழியில நம்ம செட்டியார் கடையில மளிகை சாமான் சொல்லிட்டு அப்டியே நாம் தாஸ் நல்ல இளசா கிடாக்கறி வச்சிருந்தான்; மாப்புள நல்லா சாப்பிடுவாகல்ல அதான் வாங்கியாந்துட்டேன்., சட்டுபுட்டுன்னு செஞ்சிப்புடு. புள்ளைக பசி தாங்கமாட்டாக, காப்பித்தண்ணி எதாச்சும் கொடுத்தியாப்புல்ல‌" என்றேன். "ம்ம்ஹாம்.. ஆச்சுப்பா., எதுக்குப்பா இதெல்லாம்" என்ற செல்விக்கு "கல்யாணத்தக்கப்பறம் இப்பதான் வந்திருக்கிய.. சும்மாரு புள்ள" என்றபோது எனக்கு கண்களில் நீர் கோர்த்திருந்தது.

பொங்கலன்று, செல்வி புதுத்துணி பட்டு உடுத்தியிருந்ததை பாக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. என் கண்ணே பட்டுரும் போல., அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருந்துச்சி. செம்பவம் திருஷ்டி சுத்திப்போட்டாள். "செல்வி நம்மூரு கொட்டாயில எங்கவீட்டு பிள்ளை படம் போட்டிருக்கான்; போயிட்டு வாங்க" என்று சொல்லி அனுப்பினோம்.

"ஏய்.. செம்பவம், செம்பவம்.. எங்கடி போயிட்டே?., வயக்காட்டுக்கு உரம், பூச்சிமருந்து வாங்கியாந்துட்டு அப்டியே சந்தக்கி போயிட்டு சாமானெல்லாம் வாங்கியாந்துறேன் சரியாபுள்ள" என்றபடி கிளம்பும்போது மாமா என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

"மாமா, நா ஊருக்கு கிளம்புறேன்" என்றார் மாப்ளே. "என்ன மாப்ள.. அதுக்குள்ள கிளம்பிட்டீக.. வந்து ஒருவாரம்தான் ஆச்சி.. இருந்துட்டு போலாம்ல" என்றேன். "இல்ல மாமா., ஊருல சோலி நெறையா இருக்கு. நா கிளம்புறேன்" என்றார். "அப்பஞ்சரி., நல்லபடியா போயிட்டு வாங்க. செல்விய எப்பவந்து கூட்டிட்டு போவீக., அடுத்தவாரம் வருவீயளா" என்றேன் மாப்பிள்ளையிடம். "செல்வி, இனிமே எங்கூட வரமாட்டா. இனிமே இங்கதான் இருக்கப்போறா.."என்றதும் எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. "என்ன சொல்லுதீய மாப்ளே?.. ஏன் என்னாச்சி?!" என்றேன் அதிர்ச்சியுடன். "அத அவள்ட்டேயே கேட்டுக்கோங்க.. நா வாரேன்" என்றதும் எனக்கு ஒருமாதிரி ஆனது. என்ன சொல்றதுன்னே தெரில. உடனே சுதாரித்துக்கொண்டு "சரிங்க.. போயிட்டு வாங்க. அப்ப ஆறுமொவத்த அனுப்பி வைக்கிறேன்., வண்டி வரும்" என்றேன். மனது பாரமாவே இருந்தது.

"ஏலே மாரி! பொங்கல்லாம் சிறப்பா இருந்திச்சா வோய்!.. மொவளும் மருமொவனும் வந்திருந்தாவல்ல" என்றான் பிச்சை சந்தையில் நிற்கும்போது. நான் மௌனமாய் நின்றேன். "ஏலே மாரி! நா கேட்டுட்டே இருக்கேன். ஊமையா நிக்குறே.. என்னடே ஒருமாதிரியா இருக்கே.. உடம்புகிடம்பு சரியில்லையா.. என்னாச்சி சொல்லுலே" என்றான். "அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. செல்விய கட்டிக்கொடுத்த நேரமே சரியில்ல. இப்ப வீட்டுல வந்து கிடக்கப்போறா. மாப்பிள்ளை உட்டுட்டு போயிட்டாரு. இனிமே வரமாட்டாராம். என்னஏதுன்னு தெரியலே எனக்கு என்ன செய்றதுன்னே தெரில" என்றேன். "அய்யயோ.. இப்படி ஆகிருச்சே.. ரொம்ப கஷ்டமாவுல்ல இருக்கு. இரு என்னஏதுன்னு கேப்போம்" என்றான் பிச்சை.

"ஏலே செல்வி! என்ன புள்ள பிரச்சன உங்க ரெண்டுபேருக்குள்ள?. சொல்லுலே.." என்றேன் அருகில் செம்பவமும் பிச்சையும் இருந்தார்கள்.

"அப்ப்பா.. அதுவந்துப்பா.." என்றாள் கண்ணீருடன். அவளால் சொல்லமுடியவில்லை. "கல்யாணமாகி 6 மாசமாகியும் வயித்துல ஒரு புழுபூச்சிக்கூட தங்கல. டவுண்ல வள்ளியம்மை டாக்டருக்கிட்ட போயி என்னஏதுன்னு கேக்கும்போது அவுக ஸ்கேன் பண்ணி பாத்துட்டு கர்ப்பபையில கட்டி இருக்குதாம். அத ஆப்ரேசன் பண்ணி எடுத்தாதான் குழந்த பொறக்குமாம். ஏற்கனவே என்னைய கரிச்சி கொட்டிக்கிட்டு இருந்தாவ. இப்ப இதுன்னு தெரிஞ்சி ஒரே அடிஉதைதான். அவரு வேற கல்யாணம் பண்ணப்போறாறாம். கட்டிய ஆப்ரேசனு பண்ணினா உன்கூட வாழுவேன். இல்லைன்னா அப்படியே உங்க வீட்டுலே இருந்துக்கோன்னு சொல்லிட்டாருப்ப்பா.. ம்ம்ம்.." என்று அவள் சொல்லும்போது எங்களுக்கு ஒரே அழுகையானது. என்ன சொல்றதுன்னே தெரியல.

"சரிம்மா கவலப்படாதே.. எல்லாம் சரியாகிரும்" என்று அவளை தேற்றினோம். ஒரே கவலையாக இருந்தது.

"மாப்பிள்ளைக்கு போன்போட்டு பேசுணும் பிச்ச, போன்போட்டு தா" என்றேன். "மாப்ளே.. நீங்கதான் பெரியமனசு பண்ணி செல்விய ஏத்துக்கணும். ஊருக்கு வாங்க மாப்ளே.. எல்லாம் சரியாகிரும். பேசிக்கலாம்" என்றதுக்கு "அதான் செல்வி எல்லாம் சொல்லிருப்பாளே.. நா என்ன பேசுறதுக்கு இருக்கு?.. போன வையுங்கய்யா" என்று மொகத்துல அடிச்சமாதிரி சொல்லிட்டாரு.

எனக்கும் முன்புபோல ஓடியாடமுடியவில்லை. அடிக்கடி உடம்புக்கு முடியாம போனது. செல்விக்கு ஆப்ரேசன் பண்ண பணத்துக்கு எங்கப்போவேன்?.. இருந்த நஞ்சபுஞ்ச காணி நிலம், எல்லாத்தையும் வித்துதான் செல்விக்கு கல்யாணம் பண்ணிவச்சேன். இப்ப இருக்குற ஓட்டுவீடு தான் மிச்சம். ஏதோ வயல்ல கொஞ்சம் இருக்கு. அதுவும் கடன்ல இருக்கு. இது எதுவும் காணாதே. என்ன செய்ய?.. ஒரே யோசனையா இருந்துச்சி.

"மாரி கவலப்படாத மாரி., எல்லாம் அந்த அம்மன் அகிலாண்டேஸ்வரி கொடுக்கிற சோதன. எல்லாம் சரியாகிரும். நானும் என்னால முடிஞ்சத செய்யுறேன். பண்ணையாருக்கிட்ட எதுவும் கேட்டியா மாரி?.." என்றான் பிச்சை.

"ஏற்கனவே கல்யாணத்துக்கு வாங்கின கடனே முடியல. அதுக்குள்ள பணமா?.. என்று இல்லன்னு சொல்லிட்டாருப்பா. நானும் நிறைய பேருட்ட கேட்டுருக்கேன். எல்லாம் அகிலாண்டேஸ்வரி பாத்துப்பா. ம்ம்ம்ம்.." என்றேன்.

"என்னய்யா.. எதாச்சும் பணம் கிடைச்சுதா.. இப்ப என்னய்யா பண்ணப்போறே கவலப்படாதய்யா.. மனச போட்டு குழப்பிக்காதய்யா., எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்றாள் செம்பவம்.

"என்ன செய்றதுபுள்ள.. எல்லாத்துட்டயும் கேட்டு பாத்துட்டேன். இன்னா தாரேன் அன்னா தாரேன் தான் சொல்றாக. சரி பாப்போம். பொழுது விடியட்டும்" என்றேன். செம்பவம் என் அருகில் இருந்து தலையை கோதிவிட்டபடி தடவிக்கொண்டிருந்தாள். அது எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

நித்திரை என்னை தழுவ கண்களை மெல்ல மூடினேன்.

"என்னயிது.. என்னக்கும் இல்லாத திருநாளா இந்த மனுசன் இம்ப்ப்பூட்டு தேரம் தூங்கறாவுகளே.. எய்யா.. எழுந்திருய்யா., எய்ய்யா.," என்று உலுக்கியவள் அசைவற்று கிடந்ததை பார்த்ததும் "அய்யய்யோ... என் ராசா., என்ன விட்டுட்டு போயிட்டீயா.." என்று கதறினாள் செண்பகம்.

,

Post Comment

Sunday, January 15, 2012

பொங்கல் நல்வாழ்த்துகள்

பொங்கலோ பொங்கல்

புத்தரிசியும் புதுப்பானையும்
போட்டியிட்டு பொங்கலிட‌
சந்தோசமும் பூரிப்பும் பெருமிதமிட‌
இவ்வாண்டும் மகசூல் அதிகமாகிட‌
எங்கள் வாழ்வும் வளமும் பெருகிட‌
மங்களமாய் வசந்தம் வீச
குலவையிடுவோம்

பொங்கலோ பொங்கல் என்று!!

உழக்கரிசி நெல்லுமணி
பல கோட்டைகளாக
உருவெடுத்திட‌
உண்ணாமல் உறங்காமல்
கண்ணிமை போல‌
களத்துமேட்டினில் காத்த
உரமிட்டு உரமிட்டு
உரமேறிய கரங்களும்
சொல்லுதே

பொங்கலோ பொங்கல் என்று!

தன் பசி துறந்து பிறர்
பசி நீக்கும் மருத்துவனாய்
உழைப்பின் பெருமையை
உலகறிய செய்த‌
விவசாயியே! என்றும் நீ வாழியவே!

என்றும் உங்கள் வாழ்வினில்
வசந்த ஒளிவீசிட‌
வாழ்த்துதே எங்கள் மனம்

என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

*****

இனிய பொங்கல் திருநாளில் எல்லா வளமும் பெற்று இந்த தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாக மலர இறைவனிடம் பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Post Comment

Wednesday, January 11, 2012

அவளா இவள்?.. 250வது இடுகை

"டே..டேய்.., எங்கடா பாத்துட்டு போறே?.. கொஞ்சன்னா செத்துருப்பியே.. ஆளும் மூஞ்சியும் பாரு!.. சரியான சாவுக்கிராக்கி" என்ற ஆட்டோக்காரன் திட்டிக்கொண்டே சென்றான். செவி நரம்புகள் மூளைக்கு சென்றனவா என்று தெரியாது. அந்த ஜனநெருக்கடியிலும் அவள் மட்டும் காலையில் பூக்கும் பனிபடர்ந்த ஒற்றை ரோஜாப்போல அழகாய் பூத்திருந்தாள்.

அவளை கடந்ததும்தான் 'ஒருவேளை இது அவளா இருக்குமோ?' என்றெண்ணியது மனம். சே சே.. இருக்காது என்றாலும் மனது அவள்தான் என்று அடித்து சொல்லியது. பார்த்தது ஒரு நிமிடம்தான் என்றாலும் நினைவெல்லாம் அவளே நிறைந்திருந்தாள். பார்க்காமலாவது இருந்திருக்கலாம். அவளருகில் செல்வதற்குள் பஸ்ஏறி சென்றுவிட்டாளே.. இப்போ எங்கிருக்காளோ தெரியலியே..

"டேய் கணேஷ்.. காலேஜ் பஸ் வந்திருச்சிடா; அங்க என்னடா பாத்துட்டு இருக்கே.. சீக்கிரம் வாடா" என்று மூர்த்தி என் தோளை உலுக்கியதும் பஸ்ஸில் ஏறினேன். "பாடம் ந‌டத்துறத கவனிக்காம அங்க என்ன யோசனை" என்று சாக்பீஸை என்மேல் எறிந்த பாலா சார், "எங்கே நீரிலிருந்து ஹைட்ரஜனை டீஹைட்ரேட் செய்யும் முறையை சொல்லுங்க சார்?" என்றார். நான் பதிலறியாது நின்றிருந்தேன். "என்ன அதுக்குள்ள மறந்துருச்சா.., சரிசரி உட்கார்ந்து தொல" என்ற வசவுகள் எனக்கு புதுசா என்ன!.

மறக்கக்கூடியவளா அவள். சிறுவயதில் ஒன்றாய் படித்து விளையாண்டு மகிழ்ந்த காலங்கள் இப்போதும் நினைவிலிருந்து மாறலியே.. பள்ளியில் படிக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையே யார் முதல்ராங்க் வாங்குவது என்ற ஒரே போட்டிதான். ஒருதடவை அரையாண்டு தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும்போது, நான் பள்ளியறை வாசலில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தேன். அவள் வரும்போது நான் வாசலில் கைவைத்திருந்ததை அவள் கவனிக்கவில்லை. விருட்டென உள்ளே நுழைந்த அவள் என்கையில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு விட்டது. அவளால் பரிட்சை எழுத முடியாமல் போயிவிட்டது.

வேதனையில் மனம் துடித்து அவளிடம் சாரி சொன்னேன். டேக்இட்ஈஸியாக எடுத்துக்கொண்ட அவள் என்னிடம் நெருங்கி பழகினாள். ஆண்டுவிழாவில் அவளின் (அழகுமலர் ஆட...அபிநயங்கள் கூட‌) நாட்டிய நடனம் கண்டு மெய்சிலிர்த்தேன். பள்ளியை விட்டு இருவரும் பிரியும்போது இனம்புரியாத உணர்வு என்னை ஆட்கொண்டது. இது காதலா?...

மறுநாள், பாலா சாரின் வகுப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தபோது, என் செல்போன் அலறியதை கேட்ட பாலா சார், "போங்க சார்!.. உங்க வேலையெல்லாம் முடித்துக்கொண்டு வந்தால்போதும். வெளியே போறீங்களா" என்று கத்தினார்.

அடசே.., என்றபடி வெளியே வந்த நான், மொபைலில் வந்த நம்பரை பார்த்தால் ஒரு புதிய நம்பர். இதென்ன புது நம்பரா இருக்கு; யாராக இருக்கும் என்றெண்ணியபடியே ஹலோ என்றேன்.

மறுமுனை "ஹலோ கணேஷ்தானே இது!.. எப்படிங்க இருக்கீங்க?.." என்றது ஒரு பெண்குரலில்.

"நான் நல்லாருக்கேன். யாரு நீங்க!.. தெரியலியே..குரலும் பரிச்சயப்படலியே" என்றேன்.

"நல்லா யோசிச்சு பாருங்க‌.. யாருன்னு தெரியும்?!" என்றாள்.

"ம்ஹூம் ஞாபகத்துக்கு வரலியே.. சீக்கிரம் சொல்லுங்க. இங்க பாலா சார் என்னை காய்ச்சி எடுத்துருவார்" என்றேன்.

"நேத்து பஸ்ஸ்டாண்டுல நீங்க என்னை பார்த்துட்டு போனதாக என் பிரண்டு சொன்னாள். பேசுறதுக்குள்ள பஸ் வந்ததால் போயிட்டேன். மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் பேசுவோம். எனக்கும் இங்க மாலதி டீச்சர் வர்ற நேரமாகிருச்சி. பை பார் நவ்" என்றபடி போனை கட் பண்ணினாள்.

ஒருவேளை இது அவளா இருக்குமோ?.. என்று நினைக்கும்போதே மனம் சந்தோசத்தில் துள்ளியது. அன்றுமுழுவதும் அவள்தான் நிறைந்திருந்தாள்.

இன்று மாற்றம்கண்ட அம்மாவுக்கு புதிதாக தெரிந்தேன். எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்ற உத்வேகம்தான் இருந்தது. பரபரப்பான சாலையில் ஜனத்திரள்கள் மத்தியில் அவள்மட்டும் தனித்திருக்க மாட்டாளா என்று கண்கள் தேடின.

"ஏய் விஜி! என்னடி இன்னக்கி காலேஜ் வரலியா?.. யாரையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்கே?. என்னடி விசயம்" என்று கேட்ட மீராவுக்கு "அதெல்லாம் ஒன்னுமில்லடி" என்றாள் விஜி. 'இன்னக்கி பார்த்து 7சி நேரத்தோட வந்திருச்சே.., இப்போ கணேஷ் தேடிக்கிட்டு இருப்பாரே.. பார்க்கமுடியாம போயிருச்சே' என்ற வருத்தம் அவளுக்கு.

"ஹலோ யாரு கணேஷா!.. சாரிங்க., இன்றும் பார்க்கமுடியாம போயிருச்சே" என்றாள்.

"அதெல்லாம் பரவாயில்லீங்க. ஆமா உங்க பெயரை சொல்லவே இல்லியே" _ கணேஷ்.

"விஜி" _ விஜி.

"வாவ்.. நைஸ் நேம்"

"தேங்க்ஸ்

“என் செல்நம்பர் எப்படி கிடைத்தது?..”என்றேன். “என் பிரண்டு கொடுத்தாள். நாளைக்கு எப்படியாவது சந்திக்கணும். பை சீ யூ” என்றபடி போனை கட் செய்தாள். எனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்றே தெரியவில்லை. ஆனந்த‌த்தில் மனம் துள்ளி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போது எப்படியாவது என்காதலை அவளுக்கு தெரியப்படுத்தி விடவேண்டும்.

மறுநாள், அவளுக்காக‌ கொஞ்ச நேரத்தோடு பஸ்ஸ்டாண்டிற்கு வந்து காத்திருந்தேன். அவள் வருவாளா?.. அவள் வருவாளா?.. என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?.. என்று பாடலாம் போல இருந்தது. நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவள் தோழிகள் வந்தாலும் அவளை மட்டும் காணவில்லை. ‘என்னடா இது?.. இன்று சந்திக்க வருகிறேன்; என்றாளே! இன்னும் ஆளைக் காணவில்லையே. என்ன ஆனதோ அவளுக்கு?..’ மனம் பதைபதைப்பாய் இருந்தது.

“ஹலோ விஜியா.. எங்கிருக்கீங்க. வரலியே என்னாச்சி?..” என்றேன்.

“சாரி கணேஷ்!.. கிளம்பும்போது கால் சுளுக்கிவிட்டது. நடக்க முடியவில்லை” என்றாள்.

“அய்யய்யோ.. என்னாச்சி. இப்போ எப்படி இருக்கு.. டாக்டரிடம் காண்பித்தீங்களா” என்றேன். “தைலம் போட்டு தடவியிருக்கேன். டாக்டர் 2 நாள்ல சரியாகிரும் என்றிருக்கிறார். இப்போ வலி பரவாயில்லை” என்றாள். “சே!.. இப்படி ஆகிருச்சே விஜி., உடம்ப பாத்துக்கோங்க., எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதீங்க” என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. அவளுக்கு வலியென்றதும் என்மனதும் சேர்ந்து வலித்தது.‌

இரண்டு நாட்கள் கழித்து,

இன்று எப்படியும் வருவாள். என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். தூரத்தில் அவள் தோழிகள் புடைசூழ வந்து கொண்டிருந்தாள். இங்கே என்மனம் குதூகலித்து எப்படி சொல்ல எப்படி ஆரம்பிக்க..,என்ற தயக்கம்தான் மேலிருந்தது. என்காதலை ஏற்றுக்கொள்வாளா.. பேசியிருக்கும்போது இருந்த தைரியம்., இன்று நேரில் காணும்போது இல்லையே. என்ன செய்ய?! என்ற தவிப்பில் இருந்தேன்

சிறிதுதூரத்தில், விஜி அவளது தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது இந்தபக்கம் பார்ப்பதும் அங்கே பார்ப்பதுமாக எனக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள்.

நான் அவளருகே சென்று பேச எத்தனிக்கும்போது என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு உள்ளூற மனதில் குறுகுறுப்பும் பயமும் சேர்ந்து ஒட்டிக்கொண்டது.

விஜி என்னிடம் வந்து, “ஹலோ மிஸ்டர், என்ன வேணும் உங்களுக்கு! நானும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் நடவடிக்கையே சரியில்லையே. யார் நீங்க?..” என்றதும் எனக்கு தூக்கிவாரி போட்டது.

“ஹலோ என்னை தெரியலியா.. தெரியாத மாதிரி கேக்குறீங்க.. நல்லா யோசித்து பாருங்க” என்றேன் பதபதைப்புடன்.

“ஹலோ யாருன்னே தெரியலைங்கிறேன். அப்புறம் எப்படி தெரியாதமாதிரி இருப்பது?.. என்ன விளையாடுறீங்களா?.. ஈவ் டீசிங் பண்றீங்கன்னு போலீஸ்ல சொல்லவா?!..”

“நாந்தான் கணேஷ். என்னை தெரியலியா.. தினமும் போனில் பேசியிருக்கீங்க.. தெரியலைன்னு சொல்றீங்களே என்னங்க விஜி!.”

“என்னது நான் உங்ககூட டெய்லி பேசினேனா.. சான்ஸே இல்ல. நீங்க யாருன்னே தெரியாதே.. என் பேர் எப்படி தெரியும்!” என்றாள் விஜி வியப்புடன்.

“ஆமா விஜி.. நாந்தான் கணேஷ். என்ன நம்புங்க. டெய்லி பேசியிருக்கீங்க. 2 நாளுக்கு முன்னாடி உங்களுக்கு கால் சுளுக்கிருந்ததே.. இப்போ பரவாயில்லையா” என்றேன் விளக்கமாக‌.

அவள் வியப்புடன், “அப்படியா.. நான் யார்க்கூடவும் பேசலியே., இதுல எங்கேயோ தப்பு நடந்துருக்கே.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.”

“நீங்க நம்பலைன்னா என் மொபைல்லயும் உங்க மொபைல்லயும் கால்ஹிஸ்ட்ரி பாருங்க. அப்ப புரியும்” என்றேன் வருத்ததுடன்.

"இதுல என் தோழியோட அண்ணனுக்கு தானே போன் செய்தேன். இதுல எப்படி உங்க நம்பர்!!....... ஆ!!.. அடடா.. ஒரு நம்பர் மாறியிருக்குது அட ஆமா!!!!. அவர் பேரும் கணேஷ்தான். ஓ.. ஐ ம் சாரி. தப்பான நம்பருக்கு பேசிட்டேன். இது இந்தளவுக்கு போகுமுன்னு நா நினைக்கலை. எதுவும் தப்பா நினைச்சு மனதை போட்டு குழப்பிக்காதீங்க" என்றாள்.

விஜி இப்படி சொன்னதும் எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. இத்தனை நாள் காதல் முடிவுக்கு வந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது.

விஜிக்கு அவள் மனதில், இவனுடன்தான் பேசியிருக்கிறோமா; இதயத்தை கொள்ளை கொண்ட காதலன் இவந்தான் என்றதும் வெட்கமும் வேதனையும் கலந்து முகத்தினில் தெரிந்தது.

“ஏய் விஜி! அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே.. 7சி வந்திருச்சி. சீக்கிரம் வா” என்று மீரா அழைத்ததும் விஜி ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் அங்கிருந்து நகன்றாள்.

நான் உடனே விஜியிடம், “விஜி! மறுபடியும் எப்போ போன் பண்ணுவீங்க” என்றேன்.

அவள் என்னை குறுகுறு பார்வையுடன் வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள்.

“போலாம் ரைட்” என்று 7சி கண்டக்டர் விசில் கொடுத்தார்.

Post Comment

Tuesday, January 3, 2012

விடிவெள்ளியாய் உதித்தவள்

சிறுவயதிலேயே உலகசாதனை புரிந்த நெல்லையை சேர்ந்த சிறுமியை பற்றி உணவு உலகம் சங்கரலிங்கம் சார் தன்னோட பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதைப் படித்தததும் அந்த சிறுமியை பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம். சிறுவயதிலேயே கணனி தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு பாடம்நடத்தும் திறமை உள்ள, ஐக்யூவில் சிறந்துவிளங்கும் இந்த சுட்டிப்பெண்ணின் வயது பதினொன்றுதான் ஆகிறது என்றால்
வியப்பாக
இருக்கிறதல்லவா.. ஆம். இந்த சிறுமியின் பெயர் விசாலினி.

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள்.
சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.








இத்தனை
சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.



உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network

Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.




உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com

வேண்டுகோள்:1)

ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.


2) விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

****

இத்தனை சாதனைகளும் புரிய காரணமாய் அமைந்த ஊக்குவித்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இவள் இன்னும் பல சாதனைகள் புரிந்து உலக அரங்கினில் பெருமைப்படுத்தப்பட வேண்டும்.

விசாலினிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

சங்கரலிங்கம் சார் பதிவினை பார்க்க..

நன்றி சங்கரலிங்கம் சார்.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்