Pages

Sunday, April 21, 2013

நான் கண்டதில் இப்படியும் சிலர்

அவன் இவனை குற்றம் சொல்வதும்
இவன் அவனை குற்றம் சொல்வதும்
இழிவாய் தெரியவில்லை உங்களுக்கு..

எத்தனையோ இயக்கங்களாய் பிரிந்து
ஒருத்தனை ஒருத்தன் குறைசொல்லும் நேரத்தில்
அத்தனையும் ஒன்று கூடினால்,
பிரச்சனை எதுவுமில்லையே..

உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி
எத்தனையோ பேர் உள்ளனர்
நாட்டிலும் உன் வீட்டிலும்.,
அவர்களை பற்றிய சிந்தனை
இல்லை உனக்கு., வீண்விவாதங்களோடு
அடித்துக்கொள்வதற்கு மட்டும்
இத்தனை நேரம் எதற்கு?!

காலநேரத்துடன் சேர்ந்து
கரையுதடா உன் வாலிபமும்
ஆனால் ஒற்றுமையை மட்டும்
கடைபிடிக்கவில்லை எப்பொழுதும்

அல்லாஹ், ரசூல் காட்டித்தராத
விஷயங்களில் தர்க்கம் செய்தே
தரம் கெட்டு போனாயடா
என்னருமை சகோதரா..

ஒரே ஒரு நிமிசம்
புரட்டியாவது பாராடா
அருள்மறையாம் திருமறையை
பிறகு மாற்றிக்கொள்வாயடா
உன் எதிர்மறையை

காசை கொடுத்து வாழும் நெறியை
நாசுக்காக கற்பிக்கும் இறைவனை
தூசாக எண்ணி துச்சமென நினைத்து
சொகுசு வாழ்க்கைக்கு விலை போனாயடா..,

ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம்.,

இதெல்லாம் ஒருகணமேனும்
திரும்பிப்பார்க்கும் வேளை - இறைவன்
திரும்ப அழைத்துக்கொள்வான்
திரும்பமுடியாத இடத்துக்கு...

Post Comment

Saturday, April 6, 2013

பயணம் தொலைவுதான்



என் பஞ்சம்தீர்க்க
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்..!
என் கதையை கேட்டபின் செல்..!

ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
கலங்கிய‌ கண்களில் நீருடன்..!

பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று,
தன் பசி நீக்க
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..

பர்லாங் தூரம் எம்பெண்கள்
கடப்பது ஒரு குடம் நீருக்காக..!
மடியில் கனமில்லை
தலைபாரம் தான் தீரவில்லை..!

செம்மண் மேடாக காட்சியளிக்கும்
குளமும் வாய்க்காலும்
தூரமானது கால்நடைகளுக்கு
அம்மா என்று பாசமுடன்
அழைக்கும் அவைகளுக்கு
தண்ணீர் காட்டவே நீரில்லையே..!
அய்யோ என் செய்வேன்....?!

'நெல்லுக்கு இறைத்த நீர்  -வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்'


ஆறு நிறைந்து,
வாய்க்கால் நிறைந்து,
பூத்துக் குலுங்கிய சோலைகளும்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பாய்விரித்து படுத்திருந்த,

எங்கள் வயல்வெளிகளும்
வற்றாத ஜீவநதி பாய்ந்து
வளம் கொடுத்த
புண்ணிய பூமி எங்கே.?
எங்களின் தாகம் தீர்த்த
பரணி எங்கும் மணல்மேடாய்..?!

பார்த்து பார்த்து
சலித்துப் போன‌
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?!..

குழாயினில் வரும் காற்றில்
எங்களின் மூச்சிக்காற்றும்
கலந்தது நிலத்தடி நீருக்காக..

யாரை குற்றம் சொல்ல..?!

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
என்ற வாசகத்தை தொலைத்து
நிற்கும் எங்கள் அறிவின்மையை
சொல்லவா..!

காட்டையும் வயற்காட்டையும்
அழித்து ப்ளாட் போட்ட
கயவர்களை பற்றி சொல்லவா..?!


அள்ள அள்ள குறையாது
தரும் அமுதசுரபி போல
வற்றாத ஜீவநதி பரணியில்
மணலை அள்ளி அள்ளி
பாலையாக்கிய கருணை
பிரபுக்களை பற்றி சொல்லவா..?!

குப்பைகளையும் ஆலைக்கழிவுகளையும்
ஆற்றில் கலக்க வைத்து
தொற்றுநோய்களை பரப்பிய
புண்ணியவான்களை பற்றி சொல்லவா..?!

செல்லும் தூரம் அறியாமலே
செல்லும் காலக்கொடுமையை
பற்றி சொல்லவா..?!

அதோ அங்கே தெரியும்
நிழல்கூட கருவேல நிழல் தான்
இளைப்பாற சிறிது நிழல் கிடைக்குமா..?!
எங்கள் தாகம் தீருமா..?!

சொல்லுங்க மேகங்களே..!

இதோ இந்த பயணம்
எப்போதும் தொலைவுதான்..!!


***********

குறிப்பு:

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை இது.

ரியாத் தமிழ்சங்கம் - கல்யாண் நினைவு அமைப்பினர் நடத்திய உலகாளவிய கவிதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை.

படம் உதவி : நன்றி தட்ஸ்தமிழ்.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்