Pages

Sunday, January 16, 2011

ஊருக்கு செல்கிறேன்..


அன்புள்ள நண்பர்களே! எல்லோரும் நல்லாருக்கீங்களா..

ஒரு சந்தோசமான செய்தி.. நான் ஊருக்கு கிளம்பி வருகிறேன். இரண்டு வருடம் மனைவியையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து வனவாசம் போல இருந்த சவூதி வாழ்க்கை முடியப்போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஊரில் இருந்துவரும்போது பலவித சோகங்களுடன் வந்த எனக்கு இந்த பதிவுலகம் ஒரு புத்துணர்ச்சியை தந்தது. ஆம்! இன்று எனக்கு அண்ணன்மார்கள், அக்காமார்கள், மதனி, தங்கைகள், மாமா, டீச்சர், பங்காளிகள், நண்பர்கள் என ஒரு குடும்பம் போல உறவுகளை பெற்றுத்தந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஐந்து மாதம் விடுமுறையில் செல்கிறேன். நான், நாளை இரவு 11 மணிக்கு தம்மாம் டூ திருவன‌ந்தபுரம் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் செவ்வாய் காலை திருவனந்தபுரம் வந்து எங்க ஊருக்கு செல்கிறேன். ஊரில் இருக்கும்போது அடிக்கடி பதிவுபக்கம் வரமுடியாத சூழ்நிலை இருக்கும்.

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

,

Post Comment

Tuesday, January 11, 2011

தண்ணி விட்டா வளர்த்தோம்?..

சின்ன வயசுல எனக்கும் என் தங்கைக்கும் பக்கத்து வீடுகள்ல செடி கொடிகள், பூந்தொட்டிலாம் பார்க்கும்போது கொள்ளை ஆசையா இருக்கும். அதுமாதிரி நம்ம வீட்டுலயும் வைக்கலான்னு பார்த்தா, எங்க பெரியத்தா, "என்னல.. செடி, கிடி வளக்கணும் சொல்லுறே. ஆங்.. படிக்கிற வழியப்பாருடா" என்று கம்பைத் தூக்கிட்டு வந்துருவாக. அதேமாதிரி கோழி வளர்க்கணுமென்று ஆசையா இருந்தாலும் வீட்டில் அதற்கான இடவசதியும் சூழ்நிலையும் நமக்கு ஒத்துவராது. பெரியத்தாவுக்கு பயந்தே, சரி நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு மனச தேத்திக்கிருவோம்.

அத்தாவும் அம்மாவும் சத்தம் போடுவாக. வீட்டுல கஷ்டம். ஆனாலும் எங்களுக்கு செடி, கோழி வளர்க்கணும் என்ற ஆசை மட்டும் மாற‌வே இல்ல. எப்பவாவது எங்கத்தா கோழி வாங்கிட்டு வந்தாலும் அதை வீட்டுல கட்டிப்போட்டிருப்போம். கோழிய பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கும். பள்ளிக்கூடத்து பசங்ககிட்ட சொல்லி சந்தோசப்பட்டுக்கிருவேன். ஆனா மறுநாள் அந்த கோழி கழுத்துக்கு கத்தி வந்திரும். வீட்டுல கோழி பீ பேன்டு அசிங்கப்படுத்துன்னு பெரியம்மா சொல்லி பெரியத்தா கோழி கழுத்துல கத்தி வைச்சிருவாக. இதுல கொடுமை என்னன்னா அந்த கோழிய பிடித்துக் கொள்வது நான்தான். வருத்தமா இருந்தாலும் வெளிய காட்ட முடியாது. ஏன்னா அடி விழுகும்.


இப்படித்தான் ஒவ்வொரு கோழி வாங்கிட்டு வரும்போதெல்லாம் அந்த கோழிக்கு இதே கதிதான்.

எங்க செய்யது அப்பா காலமான பின்னர் நாங்கள் தனிக்குடித்தனம் சென்றோம். புதுவீட்டுக்கு சென்றபின்னாடியும் அந்தவீட்டில் செடி, கோழி வளர்க்க இடமில்லாததால் அந்த ஆசை நிராசையாகியது. "ஒருநாள் எங்கிட்ட மாட்டவா மாட்டேன்னு" ஒரு வைராக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்தவீட்டிலிருந்து காலிபண்ணி வேறவீட்டுக்கு குடியேறினோம். அங்கு சென்ற எங்களுக்கு சந்தோசமுன்னா அப்படியொரு சந்தோசம்தான் போங்க.. அங்கே வீட்டுக்கு பின்னாடி வள‌வுல ஒரு ரெண்டு மீட்டர் அள‌வுக்கு மண் தரையுடன் கூடிய இடம் இருந்தது.

உடனே எங்களுடைய செடி, கோழி வளர்க்கிற ஆசை மறுபடியும் முழிச்சிருச்சி..

"கோழிக்குஞ்சு, கரண்டு குஞ்சி 2ரூபாய்க்கு 1" என்று கூவிக்கிட்டே செல்லும் கோழிக்காரர் வியாபாரம் சூடுபிடிக்கும். நான் 5 ரூபாய்க்கு 3 வாங்கிட்டு வருவேன். "மறுபடியும் போய் ஐந்து ரூபாய்க்கு வாங்கிட்டுவா" என்று என் தங்கை அனுப்பிவைப்பாள். சிலசமயங்களில் பிரைஸில் வேறு கோழிக்குஞ்சு கிடைக்கும். வாங்கிட்டு வந்த கோழிக்குஞ்சுகள் அழகழகா கலர்கலரா பார்க்க பார்க்க ஆசையா இருக்கும். கோழிக்குஞ்சுகளுக்கு ஏற்ப கடையிலிருந்து வாங்கிய அட்டைப்பெட்டியில் வீடு தயார் செய்து கொடுப்பேன். கடைகளில் கஷ்டப்பட்டு கம்மம்புல் வாங்கிவந்து கோழிக்குஞ்சுகளுக்கு கொடுப்போம். என் தம்பிகள் ஆசையோடு கோழிக்குஞ்சுகளை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிருவாங்க.

ஆனால் நம் கண்காணிப்பை மீறியும் கோழிக்குஞ்சுகள் அங்கே நடமாடும் பூனைகளுக்கு விருந்தாகிவிடும் சோகம் தாங்கமுடியாது. மிஞ்சி இருக்கும் கோழிக்குஞ்சுகளை பத்திரமாக பார்த்துக்கொள்வோம். சில நோய்வந்தும் சில பூனைகளுக்கு விருந்தாகவும் ஆகி கடைசியில் ஒரே ஒரு கோழிக்குஞ்சு பெருசா வளர்ந்து சேவலாகியதை பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது. எங்க தெருவில் அது கம்பீரமாக பெட்டைக்கோழிகளுடன் உலா வரும். சில சமயங்களில் நான் கடைக்கு பஜாருக்கு செல்லும்போது என்பின்னாலே குடுகுடுவென ஓடிவரும். நான் அதை "வீட்டுக்கு போ" என்று சொன்னதும் போய்விடும்.


வளவில் உள்ள 2 மீட்டர் இடத்தில் எங்கத்தா முருங்கை மரத்தண்டை ஊன்றிவைத்தார். முருங்கை மரத்தண்டு நாளடைவில் தளிர்க்க தொடங்கியது. ஒரே மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மரமாக வளர ஆரம்பித்தது. சிலவிதைகளை முருங்கை மரத்தடியில் போட்டு வைப்போம். அப்படி போடப்பட்ட அவரை விதைதான் வேரூன்றி விருட்சமாகி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் முருங்கை மரத்தை ஒட்டி வள‌ர்ந்த அவரைச்செடி நாளடைவில் கொடியாக மாறியது. வளர்ந்த கொடிக்கு பந்தல்போட்டும் அதையும் மீறி வளர்ந்ததால் முருங்கை மரத்தோடு சுற்றிவிட்டோம். முருங்கை மரத்தில் முருங்கைக்காயும் காய்த்தது. அவரைக்கொடியும் பூத்து காய்க்கத் தொடங்கியது. எங்கம்மாவுக்கு சந்தோசம். முருங்கைக்காயும் கிடைக்குது; அவரக்காயும் கிடைக்கிறதென்றால் சும்மாவா.. வீட்டில் உணவில் முருங்கையும் அவரைக்காயும் போட்டி போட்டன.

எங்க தெருவில் உள்ளவங்களுக்கு வியப்போ வியப்பு. ஆச்சர்யம். எல்லோருடைய பேச்சில் எங்கவீட்டு முருங்கையும் அவரையும் தான் நிறைந்திருந்தது.

நாங்கள் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு காய்களை கொடுத்தோம். இப்படியே கொஞ்சநாள் போனது. அவரைக்கொடியில் நசுக்கோட்டான் பூச்சி உலாவரத் தொடங்கியது. முருங்கை என்றாலே நசுக்கோட்டானுக்கு கொண்ட்டாட்டம் அதிலும் அவரை என்றால் கேட்கவா வேணும். இப்படியே நிறைய பூச்சிகள் வரத்தொடங்கின. மருந்துகள் அடித்தாலும் பிரயோசனமில்லை என்பதால் அவரைக்கொடியை முருங்கைமரத்தோடு சேர்த்து வெட்டிவிட்டோம்.

பின்னர் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று எல்லோருக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய் அவரைக்காய் கொடுத்தது போக மீதமும் இருந்தது.

எங்க வீட்டில் பூத்துகாய்த்து விருட்சமாக வளர்ந்த எங்க செல்லம் அவரைக்கொடியை இப்போது நினைத்தாலும் சந்தோசமும் பெருமிதமும் குடிகொள்ளும்.

,

Post Comment

Saturday, January 8, 2011

சாலை விபத்துகளினால் இழந்தது என்ன?..

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம் என அறிவித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சாலையை கடக்கும்போதும் வாகனங்களில் செல்லும் போதெல்லாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய அவசியமாக இருக்கிறது. எப்போ என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. வெளியில் சென்றவர்கள் வீடு திரும்புவதற்கு போதும்போதும் என்றாகிவிடுகிறது. என்ன செய்ய?.. இந்த அவசரமான யுகத்தில் எல்லோரும் அவரவர் தேவைகளுக்காக அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார்மீதும் குற்றம் சுமத்தமுடியாது. விபத்து நடந்தபின்தான் அதைபற்றி யோசிக்கிறோம்.

அரசு பலவித சட்டதிட்டங்களை கொண்டு வந்தாலும் மக்கள் தங்களின் அலட்சியங்களினால் அதை மீறவேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியது. தலைக்கவசத்தின் விற்பனை அதிகரித்து போட்டாப்போட்டியான கதை நடந்தேறியதை நாம் அறிவோம். ஆனால் அதை யார் இப்போது பின்பற்றுகிறார்கள்?. இப்படி ஒவ்வொரு சட்டங்கள் கொண்டுவந்தாலும் வந்த புதிதில் ஆஹா ஓஹோன்னு இருக்கும். பின்காலப்போக்கில் வந்த சுவடே இல்லாமல் ஆகும். யாரும் முறையாக பின்பற்றுவதே கிடையாது.

அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு நாம் மதிப்பு கொடுத்து பின்பற்ற வேண்டும். டிமிக்கி கொடுக்கும் மக்களுக்கு அரசு கடுமையான விதிகளை ஏற்படுத்தி மக்களை பின்பற்ற செய்யலாம்.

இங்கே சவுதி அரேபியாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக இருக்கும். சாலைவிதிகளை எல்லோரும் பின்பற்றியே ஆகவேண்டும். மீறுவோர் மீது கடுமையான சட்டங்கள் பாயும். சாலையில் வேகமாக சென்றால் கண்காணிக்க ரேடார் பொருத்தப்பட்ட போலீஸ் கார்கள் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தவறு செய்யும் நபர்களை அடையாளம்கண்டு தண்டனை கொடுப்பார்கள். விபத்துக்கு காரணமானவர்கள் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்தே ஆகவேண்டும். இப்படி கடுமையான சாலைவிதிகளை வைத்திருந்தாலும் நம்மக்கள் அதை மீறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நம்மூரில் எல்லோரும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதைப் போல இங்குள்ளவர்கள் அனைவரும் கார் வைத்திருப்ப்பார்கள்.

இன்று மதியம் சாமான்கள் வாங்க பர்சேசிங் சென்றிருந்தோம். அப்போது சாப்பிடுவதற்காக தமிழ்நாட்டுக்காரங்க ஓட்டலுக்கு சென்றோம். அங்கே வேலை செய்யும் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நாங்களும் எங்களை அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களது பேச்சினில் சவுதி வாழ்க்கை குறித்தும், இந்திய வாழ்க்கை குறித்தும் இங்கு நாம் படும் கஷ்டங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சின்னவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

இவ்வாறாக பேசிக் கொண்டிருக்கும்போது அவரது காலைப் பார்த்ததும் அதிர்ச்சியானோம். பார்த்தால் செயற்க்கை கால்!. என்னஏது? என்று விசாரிக்கும்போது அவருக்கு ஒரு விபத்தில் கால் போய்விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். எப்படி என்று வினவியதில் அவர் சொன்னது..

"நான் 15 வருடங்களுக்கு முன் ஜித்தாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் நான் சாலையோரமாக உள்ள நடைப்பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சவுதி, காரில் சென்று கொண்டிருந்தவன் திடீரென நடைப்பாதையில் காரை செலுத்தி என் கால்மீது மோதிவிட்டான். எனது இடது கால் முறிந்து மிகவும் கஷ்டப்பட்டபோது என் கஃபில் (முதலாளி) என்னால் உனக்கு செலவழிக்கமுடியாது என்று சொல்லி 1000 ரியால்மட்டும் கொடுத்தான். அதை அவனிடமே கொடுத்து விட்டேன். மோதியவனும் கைவிட்டான். பின்னர் நான் இன்ஸூரன்ஸ் செய்திருந்ததில் அவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்."

இதே கேட்டதும் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

சென்ற வருடம் என்று நினைக்கிறேன். ஹசா டூ தம்மாம் நெடுஞ்சாலையில் ஊருக்கு செல்லும் பயணிகள் அடங்கிய டிராவல்ஸ் வேன்மீது ஒரு கார்மோதி 8 பேர் உயிரிழந்தனர். எதிர் முனையில் வேகமாக காரை ஓட்டிச் சென்ற சவுதி கட்டுப்பாட்டை இழந்து டிராக் மாறி தடுப்புகளையும் மீறி டிராவல்ஸ் வேனில் மோதியதில் வேன் கவிழ்ந்தது. எவ்வளவு வேகமாக வந்திருந்தால் அப்படிபோய் மோதியிருப்பான் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

**********

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஊரில் இருக்கும்போது டிவிஎஸ் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலக வேலையாக தூத்துக்குடிக்கு அடிக்கடி செல்வேன். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் பெரும்பாலும் ஃபுல்லாகித்தான் செல்லும். வண்ணார்ப்பேட்டை ரவுண்டானாவிலிருந்து ஏறும்போது உக்கார்ந்து செல்ல முடியாததால் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் செல்லமுடியும்.

ஒருநாள் மதியம், தூத்துக்குடி செல்வதற்காக வண்ணார்பேட்டையிலிருந்து பஸ் ஏறி சென்றேன். பஸ் எங்கும் நிற்காததால் பயணம் சுகமாகவே சென்றது. பஸ் வாகைக்குளத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு டாட்டா சுமோ வேகமாக எங்களது பஸ்ஸை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. டாட்டா சுமோவில் இருப்பவர்கள் எங்கள் பஸ்ஸை முந்துவதற்கு முயற்சித்தார்கள். அப்போது எதிரில் ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென டாட்டா சுமோக்காரர் எங்கள் பஸ்ஸை வேகமாக வந்து கட் அடித்து முந்தினார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் எங்கள் பஸ் டிரைவரும் எதிரே வந்த பஸ்டிரைவரும் சமயோசிதமாக பிரேக் அடித்து விபத்திலிருந்து காப்பாற்றினார்கள். இதனால் எல்லோரும் திகைத்தோம்.

இம்மியளவில் ஒரு விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து எல்லோரும் டிரைவரை பாராட்டினோம். சிறிது நேரத்தில் பஸ் தூத்துக்குடியை நெருங்கி அவுட்டரில் உள்ள கோரம்பள்ளம் என்ற இடத்தை அடைந்தது. அப்போது கோரம்பள்ளத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று விசாரித்ததில் ஒரு டாட்டா சுமோவும் பஸ்ஸும் விபத்துக்குள்ளானது என்று தெரிவித்தார்கள். அடடா.. சே..! டாட்டா சுமோவைப் பார்த்தால் அது எங்களை முந்திச் சென்ற டாட்டா சுமோ. ரொம்ப வருத்தமாக இருந்தது.

டாட்டா சுமோக்காரர் எதிரே வந்த அரசு டவுண் பஸ்ஸில் மோதி அந்த இடத்திலேயே இறந்து போனார். அவர் கூட வந்தவருக்கு பலத்த அடி. டவுண் பஸ் டிரைவருக்கும் பலத்த அடி. பஸ்ஸில் முன்பக்கம் இருந்த பெண்களுக்கும் தலை, முகம், கைக்கால்கள் எல்லாம் நல்ல அடி. பார்க்க ரொம்ப வருத்தமாக இருந்தது. சே..! ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் நாம் பார்த்த ஆள் இப்போது பிணமாகி விட்டாரே என்று எல்லோருக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.

இறந்தவரை பற்றி விசாரித்ததில் அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வடமாவட்டத்தில் (அவருடைய பெயரும், வேலைப்பார்த்த மாவட்டம் பெயரும் நினைவில்லை) ஒரு ஊரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர், பொங்கல் லீவுக்காக தன்னுடைய குடும்பத்தை காண தூத்துக்குடிக்கு வரும்போது இந்த துயர சம்பவத்தால் உயிரிழக்க நேர்ந்தது. இப்படியொரு சம்பவத்தால் அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை.

கொஞ்ச நேரம் பொறுமையாக வந்திருந்தால் இப்படி உயிரிழந்திருக்க வேண்டாமே!. சே..! எல்லாம் அவசரம். பொறுமையாக இருந்ததிருந்ததால் இப்படி நடந்திருக்குமா..!. சாலையில் வாகனத்தில் செல்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் கண்டிப்பாக தேவை. இதுதான் அடிப்படையாக இருக்கமுடியும். இதனை கவனத்தில் கொண்டால் விபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாமே.

,

Post Comment

Thursday, January 6, 2011

கும்மியடி பெண்ணே ! கும்மியடி..

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும்மா"

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி"

பாரதியாரின் இந்த பாடல் வரிகளை படிக்கும்போது அதற்கான உண்மையும் ஒளிந்திருக்கிறதை காணலாம். ஆம்! இந்த நூற்றாண்டில் பெண்கள் செய்துவரும் சாதனைகளை பட்டியலிட்டு காட்டலாம். அந்தளவுக்கு பெண்கள் முன்னேறிவருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?.. என்று சொன்ன காலமெல்லாம் மலையேறி விண்ணுக்கு சென்று சாதனைகள் ஆற்றிவரும் பெண்களை இன்று கண்கூடாக பார்த்து வருகிறோம்.

பெண்கள் நாட்டின் கண்கள். ஒரு சமுதாயம் முன்னேறுகிறது என்றால் அதில் கண்டிப்பாக பெண்களின் பங்கு இன்றைய சூழலில் இன்றியமையாததாகிறது. பெண்களுக்கு ஆண்டவன் நிறைய ஆற்றல்களை கொடுத்துள்ளான். பெண்கள் பலவித கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து வெற்றிநடை போடுகின்றனர். ஆண்களைவிட பெண்களுக்கு அறிவு அதிகம். வீட்டு நிர்வாகத்திலிருந்து நாட்டு நிர்வாகம்வரை திறம்பட செய்கிறார்கள். பெண்களுக்குதான் சந்ததிகளை உருவாக்குவதில் பெரும்பங்கு உண்டு.


குழந்தைகளை பத்துமாசம் சுமந்து பெற்று அவர்கள் பெரியவர்களாகும்வரை பேணிப்பாதுகாத்து வளர்ப்பது, அவர்களுக்கு தாய்ப்பாலுடன் அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்து, உலக அறிவை கற்றுக்கொடுத்து சமுதாயத்தில் நல்ல நிலமைக்கு கொண்டு வருவதுவரை பெண்களின் பாடு இருக்கிறதே அதனை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அத்தகைய பெண்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

இதேமாதிரி பொறுப்புகள் ஆண்களுக்கு கிடையாது எனலாம். பெண்களுக்குதான் நிறைய கஷ்டங்கள். சாகும்வரை அவர்களது பணி மகத்தானது. இப்படியெல்லாம் பெண்களை பற்றி பெருமைகளை சொல்லிக் கொண்டிருக்கும் நாம், அவர்கள் படும் கஷ்டங்களையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆணாதிக்கவாதிகளால் கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரத்துப் பெண்களும் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அந்த காலத்திலிருந்து சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவு மறுத்தல், ஈவ் டீசிங், பாலியல் தொந்தரவுகள், உரிமைகள் பறிக்கப்படுதல், கணவனால் கொடுமைகளுக்கு ஆளாவது இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்று மதியம் ஒரு முண்ணனி தொலைக்காட்சியில் பெண்களின் பிரச்சனைகளை அலசும் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது. அதில் குடும்பநலம், உளவியல், மனநலம் சிறப்பு பெண்மருத்துவர் கலந்து கொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளை சொல்லி, மருத்துவரிடம் அதற்கு தீர்வுகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் கேள்வி கேட்டார்கள். அவர்களில் சில பெண்களின் பிரச்சனைகள்...

* மேடம், என் கணவர் சில நாட்களாக என்னிடம் முகம்கொடுத்து சரியாகவே பேசமாட்டேங்கிறார். என் கணவர் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். எங்களுக்கு கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. கணவர் திருமணமான புதிதில் என்னிடம் அன்யோனியமாக பேசி கலகலப்பாக இருந்தவர் கடந்த 2 வருசமாக என்னை ஒதுக்குவதுபோல வேண்டாவெறுப்பாக நடந்து வருகிறார். நானும் அவரிடம் என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால் அவரோ, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை

* மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒரு பெண்.,

மேடம், என கணவர் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு 2 பையன்கள் இருக்கிறார்கள். அவருக்கு இத்தனை வருடங்களாலான பின்னும் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணுடன்தான் சுற்றுகிறார். அவளுடன் மணிக்கணக்கில் பேசுகிறார். எங்களிடம் எப்போதும் எரிந்துவிழுகிறார். என்னையும் என் பையன்களையும் அடிக்கிறார். நானும் பையன்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி பார்த்துவிட்டோம். திருந்தவே மாட்டேங்கிறார். ரொம்ப கஷ்டமா இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

* மேடம், நானும் என்கணவரும் ரொம்ப சந்தோசமாக குடும்பம் நடத்தினோம். எனக்கு தமிழ்நாடு, அவருக்கு கேரளா. நான் குழந்தை பெறுவதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். திரும்பி வந்து பார்க்கும்போது அக்கம்பக்கத்தினர் உன் கணவர் வேறொரு பெண்ணுடன் சுற்றுகிறார். நான் முதலில் நம்பவில்லை. பின்னர் அவரின் நடவடிக்கைகள் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எனக்கு அவர்மேல் கொள்ளை ஆசை. ஆனால் அவர் இப்படி செய்வது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதாவது வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள்.

இந்த பெண்கள் கண்ணீருடன் தங்களின் பிரச்சனைகளை சொன்னபோது எனக்கும் ரொம்ப பீலிங்கா இருந்தது.

மருத்துவர் அவர்களின் பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.

இதையெல்லாம் கேட்கும்போது சே..! ஏன் இப்படி இருக்கிறார்கள்?. நம்மை நம்பிவந்த பெண்ணுக்கு இப்படியெல்லாம் துரோகம் செய்கிறோமே என்று தோன்றவில்லையே.. பெண்கள் எத்தனை பிரச்சனைகள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று நினைத்துப் பார்த்ததுண்டா..?.

இதுமாதிரிதான் சில பெண்களும் தங்கள் கணவர்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள்..

குடும்பம் என்பது கணவன் மனைவி என்ற இரண்டு தூண்களால் ஆனது. இதில் ஒன்று சரிந்தாலும் அது நம் சந்ததியினரை பாதிக்கக்கூடும். இரண்டு மனங்கள் ஒருமித்து வாழ்க்கையின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும்போது மனதுக்கு இதமாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்போது வாழ்க்கையில் ஒருபிடிப்பு, சந்தோச தருணங்கள் இவையெல்லாம் நம்மையறியாமலே வழிநடத்திச் செல்லும்.

பெண்கள் வீட்டிலே இருப்பதால் எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பல்வித சிக்கல்களை சமாளிக்கிறார்கள். நம்நாட்டில் உள்ள பெண்களுக்காவது அக்கம்பக்கத்தினர் பேச்சுத்துணைக்கு ஒரு உதவி செய்வதற்கு முன்வருவார்கள். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் குடும்பத்தோடு வசிக்கும் பெண்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் வீட்டினுள்ளேதான் இருக்க வேண்டும். பெண்களுக்கும், அவர்களின் கணவர், குழ்ந்தைகளுக்கும் என்று ஆளுக்கொரு சாவி வைத்துக் கொள்வார்கள். வீடுகள் எப்போதும் பூட்டியேதான் இருக்கும். வெளி இடங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடியாது. லீவு நாட்களில்தான் வெளியில் செல்ல முடியும். நினைத்தவுடனே ஊருக்கும் சென்றுவிடமுடியாது. ரொம்ப கஷ்டம்தான்.

நீங்கள் அனைவரும், சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சினேகா, கூட்டுக்குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த பெண் தனிக்குடித்தனம் சென்றவுடன் அவர் தனிமையினால் இறுக்கமான சூழ்நிலையை சந்தித்து மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அந்தமாதிரிதான் தனிமையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் நிலைமையும்.

பெண்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டால் குடும்பத்தில் எந்தவித குழப்பமும் வராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள். பிரச்சனைகளை மேலும் பெரிதாக்காமல் விட்டுகொடுத்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பெண்ணுக்கு பிடித்தவற்றை வாங்கிக்கொடுத்தோ அல்லது அவர்களின் வேலைகளில் பங்கெடுத்தோ பாருங்கள். ஒன்றும் வேண்டாம்., "நீ இன்னக்கி ரொம்ப அழகா இருக்கே..! நீ செய்த சமையல் ரொம்ப நல்லாருக்கு..!" இப்படி தினமும் பாராட்டுங்கள். உங்கள் மனைவி உங்களைவிட்டு செல்லமாட்டார்.

அதேமாதிரி கணவருக்கு பிடித்தவற்றை உணர்ந்து அதன்படி குடும்பம் நடத்தும் பெண்கள் வெற்றி காண்கிறார்கள். கணவரோ மனம்விட்டு பேசுங்கள். அதன்மூலமும் கணவர் திருந்தவில்லையென்றால் இருவரும் குடும்பநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்லுங்கள்.

கணவர் திருந்துவது அவர் கையில்தான் இருக்கிறது. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்மால் ஆறுதல் சொல்லத்தான் முடியும்.

*********

தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான இறுதி சுற்று முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. விருதுக்கு நான் பரிந்துரைத்த 3 இடுகைகளும் தேர்வாகியிருப்பது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.

எனது இடுகைகளையும் தேர்வு செய்த நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தினருக்கும் என் நன்றிகள்.

,

Post Comment

Saturday, January 1, 2011

புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்

அன்புள்ள நண்பர்களே.. இன்னும் சில மணித்துளிகளில் 2010ம் ஆண்டு நம்மைவிட்டு மறையப்போகிறது. சிலருக்கு 2010ம் ஆண்டு சோதனையாகவும் வேதனையான மறக்க முடியாத சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கக்கூடும். சிலருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்திருக்கக்கூடும். வரப்போகும் 2011ம் ஆண்டு எப்படி எந்தமாதிரியான சூழ்நிலைகளை தரக்கூடியதாக அமையப்போகிறதோ.... தெரியவில்லை.

எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்க நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே 2011ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.நான் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போது மன‌தில் வேண்டிக்கொள்வேன்.

* இறைவா... இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கவேண்டும்.

* மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டும். சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள்க்கூடிய வழிமுறைகளை நீதான் எங்களுக்கு காண்பிக்க வேண்டும்.


* தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் எங்களுக்கு தந்தருள்வாய்..


* எல்லா மக்களும் இன்புற்று அவர்கள் வாழ்க்கையை ஒளிவீசிடச் செய்திடுவாய்..


* நோய்நொடி, தீயசக்திகளிடமிருந்து மக்களை நீயே பாதுகாப்பாயே..


* சோதனைகள் வந்தாலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத சோதனைகளை தந்துவிடாதே..


* கஷ்டப்படும் ஏழைஎளியவர்களுக்கு உதவக்கூடிய மன‌தினை எங்களுக்கு தந்தருள்வாயே...


* விலைவாசி, பொருளாதார வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், எல்லாம் குறைந்து நாடு முன்னேற வேண்டும்.


* எல்லா மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்.


* நாட்டில் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருவாயே..


* கடந்த ஆண்டு விட்டுபோன நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற வேண்டும்.


* நம்முடைய வேண்டுதல்கள் யாவும் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திப்போம்.....


*********

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். ஹைய்யா புதுவருசம் பிறந்திருக்கு.. ஜாலிதான் என்று மனதில் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறையும்.

தினத்தந்தியில் ஒவ்வொரு புத்தாண்டும் ஜனவரி முதல்நாள் அன்று முகப்பில் ஒரு கருத்துப்படம் வெளியிடுவார்கள். அதில் என்னவென்றால் ஒரு வீட்டில் இருந்து கிழவர் ஓடுவார். ஒரு சிறுவன் அந்த வீட்டின் வாசலிலிருந்து அதை ரசித்துக்கொண்டிருப்பான். அந்த கிழவர் நடந்துமுடிந்த‌ ஆண்டு. அந்த சிறுவன் பிறந்த‌ புத்தாண்டு.

தினத்தந்தி வாசிப்பவர்கள் இதை கவனித்து இருப்பார்கள். நானும் அதனை ரசித்துப்பார்ப்பேன்.

*********

மேற்கத்திய கலாச்சாரங்களை மக்கள் பின்பற்றி வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரியங்கள் மிக வருந்தத்தக்கதாக இருக்கிறது. இதனை பற்றி பதிவர் ஸாதிகா அக்கா சிறப்பான இடுகை வெளியிட்டுள்ளார். எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

*********

2011ம் ஆண்டை எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகள்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்