Pages

Friday, February 10, 2012

சாதிக் S/o ஜமீலா - சிறுகதை

​சாதிக் S/o ஜமீலா - சிறுகதை


"எலே சாதிக்கி!.. சாதிக்!.. இந்த பய எங்கப்போனான்?.. பள்ளிக்கோடம் போவணும். இம்ப்பூட்டு தேரமாச்சி.. ரெண்டுவா சோறு திங்காம அரக்கபரக்க ஓடுவானே" என்றபடி தோசை சுட்டு அருகிலிருந்த பாத்தரங்களில் வைத்துக் கொண்டிருந்தேன். அருகிலிருந்த பிள்ளைகளும் பள்ளிக்கொடம் போவுறதுக்கு அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர்.


"ஏ புள்ளைகளா.. அவசரப்படாதீங்கோ.. ஒவ்வொருத்தருக்கா தானே சுட்டு வைக்கமுடியும்" என்றபடி தோசையை திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தேன். "எலா ஜமீலா.. என்ன இம்ப்பூட்டு தேரமா சுட்டுக்கிட்டு இருக்கே.. நா அப்பவே பாத்தரத்தை வைச்சிட்டு போனேனே.. இன்னுமா சுடலை?.. எம்புள்ள பள்ளிக்கொடத்துக்கு கிளம்பிட்டான். சீக்கிரம் கொடுலா" என்றாள் பக்கத்துவீட்டு பாத்திமா. "இந்தா முடிஞ்சிருச்சி. எடுத்துக்கோ" என்றபோது சாதிக் வீட்டுக்குள் வந்தான்.


"உம்மா.. நா இஸ்மாயிலுட்ட நோட்ஸ் வாங்கப்போனேம்மா" என்றான். "சரி சரி.. இந்தா ki ரெண்டு தோசைய சாப்பிடு வாப்பா" என்றேன். "அதெல்லாம் வாணாம்மா.., பழைய சோறு சாப்பிட்டு போறேம்மா.. நேரமாச்சி" என்றான். "சரி வாப்பா.. நல்லா பெரிய படிப்பெல்லாம் படிக்கோணும் என்ன!.., க்க்ஹ்ஹும், க்க்ஹ்ஹூம்" என்று இருமியபடியே சொன்னேன். "உம்மா பாத்தும்மா.. அடுப்பு கிட்டத்துல இருக்காதேம்மா தள்ளியிருமா. இருமலா இருக்குல்ல.. டாக்குடருட்ட போன்னால்லும் போவமாட்டேன்ங்குதே, என்னம்மா இதெல்லாம்?.." என்றான் சாதிக். "அதெல்லாம் உம்மாக்கு ஒன்னுமில்ல வாப்பா. தர்மாஸ்பத்திரிக்கு போவணும்.. எங்க நேரம் கிடைக்குது?" என்றேன். "உக்கும் இப்படியே சொல்லிக்கிட்டு இரு. சரி நா ஸ்கூலுக்கு போறேம்மா" என்றபடி பைக்கட்டை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.


அவன் பள்ளிக்கொடத்துக்கு போற அழகை கண்களில் நீர் சூழ பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம்! வெறும் பழையசோத்த சாப்பிட்டு போறான். எனக்கும் தோசை கொடுக்கணுன்னு ஆச. ஆனா தோச சுட்டு வித்தாதான் அன்னக்கி உலை வைக்கமுடியும். இன்னக்கி கொஞ்சம் யாபாரம் நல்லாருந்தது.


*****


எப்படில்லாம் வாழ வேண்டிய புள்ள. இப்போ தகப்பன் இல்லாதவனா ஆயிட்டானே!.. கல்யாணத்துக்கு முன்னாடியே துபாய்க்கு போன எங்கூட்டுக்காரவுக‌ சம்பாரிச்சி சம்பாரிச்சி மொத்தத்தையும் அனுப்புனாக. தங்கச்சிமார்களுக்கு ஜாம்ஜாம்முன்னு கல்யாணம் நடத்துனாக‌.., கல்யாணத்துக்கப்பறம் நா வந்தபின்னாடி கொஞ்சநஞ்சமா செலவு செஞ்சதுல எதோ மிச்சம் வந்துச்சி.. அப்படியிருந்தும் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சி.. மாமாவும் மாமியும் என்ன நல்லா பாத்துக்கிட்டாக. சாதிக் வாப்பாவும் கஷ்டப்பட்டு சம்பாரிச்சாக.


துபாயில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது எங்வூட்டுக்காரவுகளுக்கு மிசினில் கைமாட்டிருச்சி.. முழுகையும் மாட்டிக்கிருச்சி., அங்குள்ள டாக்டருங்க, 'இவுகளுக்கு சுகர் இருக்காம்; அதனால காப்பாத்த முடியாதுன்னு' ஊருக்கு அனுப்பிச்சாட்டாங்க.. ஊருக்கு வந்தபின்னாடி நானும் எப்படியாவது காப்பாத்திப்புடலாமுன்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா அல்லாஹ் அவுகளை கூப்பிட்டுக்கிட்டான். எனக்கு தலையில் இடி விழுந்தமாதிரி உலகமே இருண்டுவிட்டது. என்னடா செய்வது?.. பேசாம நானும் அவுகக்கூடயே போய்சேர்ந்திரலாமுன்னு தோணிச்சி. சாதிக்கின் பிஞ்சுமுகம் பார்த்து என்னை நானே ஆறுதலாக்கிக் கொண்டேன். சாதிக் 10 வயசு. அவன படிக்க வைச்சி பெரிய ஆளாக்கணுன்னு அவன் வாப்பாவுக்கு ரொம்ப இஷ்டம்.


துபாயிலிருந்து சாதிக் வாப்பாவுக்கு கிடைத்த பணம் கடன்காட்சிக்கே சரியாப்போச்சி. இப்ப இருக்கிற ஓட்டுவீடுதான் மிச்சம்.


*****


ஆஹா மணி பத்தாகிருச்சே.. நாலு தெருவுக்கு மீன் விக்க போகணும்.. யா அல்லாஹ் இன்னக்கி மீன் நல்லா விக்கணும் என்று பிரார்த்தப்படி மீன்கூடையை சுமந்து சென்றேன். "இங்க பாருலா ஜமீலா! இன்னக்கி நல்லநல்ல மீன்லாம் கிடைச்சிருக்கி.. யாபாரத்த சுருக்கா முடிச்சிட்டுவா என்ன.. சுணங்கிராதே சரியா" என்றார் மீன் வியாபாரி மரியதாஸ்.


"மீனு வாங்கலியோ மீன்னு மீனே.. யம்மோய் மீன் வாங்கிலியோ.."


"மரியம்மா, ஏய் உபகாரம், மேரி.. நல்ல நல்ல மீனெலாம் இருக்கு.. உனக்குன்னு பந்துசா கொண்டுவந்திருகேன்லா.."


"ஏலா சாச்சி, இந்தா முதல்ல.. இந்த நீசுத்தண்ணியக்குடி.. அப்புறம் மீனு விக்கலாம். என்ன மீனெலாம் வச்சிருக்கே??.."


"நெத்திலி, ஆரா, கெண்டை, கெழுத்தி, வாவல், சூரா, சீலா.. இப்படி ஆத்துமீன்னு கடல்மீன்னு நிறைய இருக்கு.."


"விலையெல்லாம் ஆனை வில குதிர வில சொல்லுவியேலா.."


"என்ன சாச்சி.. இப்பூடி கேட்டுட்டே.. அநியாயமா வித்தா அல்லாஹ்வுக்கு யார் பதில் சொல்றதாம்."


"தெரியும் சாச்சி.. அதான் உங்கிட்ட வாங்குறோம்."


"சரி நேரமாச்சி.. நா நாலு தெருவுக்கு போவணும். வர்றேன் சாச்சி" என்றபடி மீன் விற்க சென்றேன்.


*****


"ஏய் ஜமீலா.. ஜமீலா.. என்னலா இப்படி ஆகிட்டே.. ம்ம்ம்.. பாவமா இருக்கு. உன்னய பாக்கும்போது!. இப்படி கஷ்டப்படுறதுக்கு சாதிக்கை படிப்ப நிப்பாட்டிட்டு எதாவது வேலைக்கி அனுப்ப வேண்டியது. உனக்கு கொஞ்சம் கஷ்டம் தீருமுல்ல" என்ற கதிஜாவுக்கு "எம்புள்ளக்காக கஷ்டப்படாம யாருக்கா கஷ்டப்பட போறேன். இன்ஷா அல்லாஹ்! அவன் நல்லா படிச்சி நல்ல பெரிய ஆளா வரணும். அதான் சாதிக் வாப்பாவோட ஆசையும் கூட. அத நா பாக்கணும்" என்றேன். சரிதான். ஆனா உன் உடம்பு இருக்குற நிலமைய நினைச்சி பாரு. இந்தா இத சாதிக் படிப்பு செலவுக்கு வச்சிக்கோ.. அப்புறமா துட்டு வாரவுட்டு தா" என்றாள் கதிஜா.


*****


"சாதிக் பத்தாம் வகுப்பு முடிஞ்சிட்டான். நல்ல மார்க்கு வாங்கிருக்கான். 11 சேக்கணும். எதோ உங்களால இயன்ற உதவியை அக்பர் முதலாளிக்கிட்ட சொல்லி செய்ய சொன்னீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்" என்றேன் அக்பர் முதலாளியின் மனைவியான ஆயிஷாவிடம்.


"நல்ல கதையா இருக்கே.. இதுக்கு முன்னாடி வாங்குனது போறாதா.. இருக்குறது குச்சி வீட்டுல.. நெனப்பு மாளிகையோ?.. அவன வேலைக்கி அனுப்புறத விட்டுட்டு படிக்க வைக்கிறாளாம். சரிசரி.. போ, நா சொல்றேன். வந்துட்டா துட்டுதுட்டுன்னு" என்று சலித்தபடி சொன்னாள் ஆயிஷா.


*****


இன்னிக்கி பார்த்து ரொம்ப இரும்மலா இருக்கே.. ரொம்ப தலைசுற்றல்.


"யாரும்மா இங்க ஜமீலா?.. உன்னய டாக்டர் கூப்பிடுதாக.. உள்ளே போம்மா" என்று நர்ஸ் அழைத்தாள்.


டாக்டர் முத்து என்ற பெயர் பலகைக்கு முன்னால் போய் அமர்ந்தேன்.


"நீங்கதான் ஜமீலாவா.. என்னம்மா இப்படி உடம்ப வச்சிருக்கீங்க.. தொடர்ந்து இரும்மலா இருந்துச்சா.. இப்போ உங்க நுரையீரல் பக்கத்துல கேன்சர் உண்டாகிருக்கு. இப்பதான் ஆரம்பம். நீங்க தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்தா குணப்படுத்திடலாம். விட்டுட்டீங்கன்னா உசுருக்கே ஆபத்தா முடியும். உடம்ப கவனிச்சி பாருங்க.. தோசை, இட்லி சுடுறதை, அடுப்புல வேல பாக்கிறத விடணும். சரியா" என்றார் டாக்டர்.


"என்னம்மா ஆச்சி.. டாக்டர் என்ன சொன்னாக?.." என்றான் சாதிக் கவலையோடு. "அதெல்லாம் ஒண்ணுமில்ல வாப்பா. சும்மா இருமல்தான். டானிக் மருந்தெல்லாம் கொடுத்திருக்காங்க., சரியாகிரும்; கவலப்படாதே" என்றேன் அவன் தலையை தடவியபடி.


*****


இப்படியே நாட்களும் நகர்ந்தன. சாதிக் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மதியம் பள்ளியில் இருந்து வந்த சாதிக்கிடம் பக்கத்துவீட்டு பாத்திமா, "எலே சாதிக்!.. உங்கம்மா மீன் விக்க போகயிலே.. தலை சுத்தி கீழே விழுந்துட்டா" என்று சொன்னதும் அவன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.


"உம்மா.. உம்மா.. என்னாச்சிம்மா.. உனக்கு கேன்சராம்!.. பாத்திமா மாமி சொன்னாங்க., ஏம்மா எங்கிட்ட சொல்லலை. எனக்காக நீ கஷ்டப்படுவதை பார்க்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு. நா படிப்ப நிப்பாட்டுதேன்ம்மா, படிப்ப விட உன் உசுருதான் முக்கியம். நீ வேணும் எனக்கு., என்னைய விட்டுட்டு போயிராதேம்மா" என்ற சாதிக் கண்ணீர் வடித்தான். "எனக்கு ஒண்ணும் இல்லப்பா சாதிக்! நீ படிச்சி பெரியாளாகணும் அதான் உங்க வாப்பா உம்மாவோட ஆசை. அல்லாஹ் எல்லாம் நல்லவழிய காட்டுவான். கவலைப்படாதே சாதிக்" என்றேன். அவன் கண்ணீரை துடைத்தபோது எனக்கும் கண்களில் நீர்.


இந்த நேரத்தில் முழுஆண்டு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. சாதிக் அந்த நேரத்திலும் படித்துக்கொண்டே என்னையும் கவனித்துக் கொண்டான். என் உடல்நிலை கொஞ்சம் தேறி வருவதை உணர முடிந்தது.


"உம்மா.. உம்மா.. நா பாஸாகிட்டேம்மா., நாந்தான் ஸ்டேட் பர்ஸ்ட்.. என்னோட பேரு பேப்பருல்லாம் வந்துருக்கு.. எல்லோரும் பாராட்டியிருக்காங்க.. நா டாக்டருக்கு படிக்கப்போறேம்மா., நம்ம அக்பர் முதலாளி உதவி செய்யுறேன்னு சொல்லிருக்காவ. ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த வெற்றியெல்லாம் உன்னால்தான் உம்மா. இனி உன்ன சந்தோசமா வச்சிக்கிருவேன்" என்று சாதிக் ஆனந்த கண்ணீரோடு சொன்னதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


"யா அல்லாஹ்! எல்லா புகழும் உனக்கே.."


அவனை உச்சிமுகர்ந்து ஆனந்த கண்ணீரோடு கட்டிய‌ணைத்தேன்..

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்