நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை
"ஏ.. மாரிமுத்து.! ஏ மாரிமுத்து.. எங்கிட்டு இம்ப்பூட்டு தூரோம்.. அதுவும் இந்த வேகாத வெயில்லுல விரசா போறீய.. செத்த நில்லுப்பா" என்ற குரல் வந்த திசையில் கோயில்பிச்சை நின்று கொண்டிருந்தான். "என்ன செய்யுறது பிச்ச!.. இந்த பொங்கலுக்கு மொவளும் மருமொவனும் ஊருலருந்து 10 மணி பஸ்ஸுக்கு வாரவுகல்ல.. அதான் கூட்டியாற போறேன்.. ஆமா! நீ எங்கல போறே. அதுவும் வெள்ளையும் சொள்ளையுமா?!. சோக்கா இருக்கேலே" என்றேன். "அட நம்ம செல்வி வாராளா.. கட்டிக் கொடுத்ததுக்கப்பறம் பார்க்கவே இல்லயே.. பார்த்து எம்ப்பூட்டு நாளாச்சி.. எதாச்சும் கடிதாசி கிடிதாசி போடுவாளா மாரி?.. கண்ணுக்குள்ளே வளந்த புள்ள!.. ம்ம்ஹும். நா பக்கத்தூரு சந்தைக்கி மாடுவாங்கலான்னு போறேன்.. நீயும் வாறியா மாரி?.." என்றான் பிச்சை.
"இல்லப்பா.. இன்னக்கி மருமொவன் வாராவுல்லா.. நீ போயிட்டு வா"
"ஆமா.. ஆமா மருமொவன் கொஞ்சம் முசுரு புடிச்சவருதான். சரி சரி.. பஸ் வர்ற சத்தங்கேட்குது"
"அப்ப்பா.. எப்புடி இருக்கீய" என்றபடி வந்தாள் செல்வி. "வாங்க மாப்ளே.. எப்டி இருக்கீய.. சொகந்தானா.. வீட்டுல எல்லோரும் சவுக்கியந்தானா?.." என்றதுக்கு "ம்ம்.. நல்லாருக்காங்க.. நல்லாருக்காங்க" என்றார் மாப்பிள்ளை. "மாப்ளே.. எப்படி இருக்கீங்க.. செல்விம்மா எப்படி இருக்கே.. பார்த்து எம்ப்பூட்டு நாளாச்சி" என்று பிச்சை கேட்டதுக்கு "பிச்ச சித்தப்பா.., எப்படி இருக்கீய.. வீட்டுல எல்லோரும் நல்லாருக்காங்களா" என்றாள் செல்வி.
"மாரி!.. புள்ளைகள கூட்டிட்டு வீட்டுக்கு போ.. நா சந்தைக்கி போயிட்டு வாரேன். பஸ்ஸு கிளம்ப போவுது. நா வாரேன்" என்றபடி பிச்சை பஸ்ஸில் ஏறினான்.
"ஏய்ய்ய் ஆறுமொவம்.. இவுகள வீட்டுல கொண்டுபோய் இறக்கிவிட்டுரு.. செல்வி.. ரெண்டுபேரும் வீட்டுக்கு போங்க. நா செத்த பொடிநடையா வாரேன்" என்று வண்டிக்காரனிடம் சொல்லி அவர்களை மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். மனம் பழையவற்றை அசை போட ஆரம்பித்தது.
இந்தா போறானே கோயில்பிச்சை. என்னோட 3 வயசு சின்னவன்தான். ஆனா, சின்ன வயசுலருந்து இவந்தான் எனக்கு எல்லாமே. அப்போம் நாங்கெல்லாம் விளாடாத விளாட்டே இல்லை. பள்ளிக்கொடம் பக்கத்துல நிழலுக்குக்கூடபோனது கிடையாது. வாத்திக்கும் எனக்கும் சின்ன தகராறாகி சிலேட்ட கொண்டு அவர் மண்டைல போட்டதுக்கு அப்புறம் படிப்ப மூட்டை கட்டுனதுதான். படிப்பு சுத்தமா மண்டைல ஏறல. ஆனா பிச்சை அப்படியில்லை. நல்லா படிப்பான். அதுனால அவனுக்கு விவரமெல்லாம் அத்துப்படி. ஆனா அவனால மேக்கொண்டு படிக்கமுடியல.
எங்கப்பாவுக்கு நஞ்சை, புஞ்சை தோட்டம்துரவுன்னு எக்கசக்கமா உண்டு. சீட்டு, குடி, பந்தயம்முன்னு இருந்த சொத்தை அழிக்க ஆரம்பிச்சார். அம்மாவையும் எங்களையும் அடிப்பாரு. அம்மா பாவம். அப்பாவ நினைச்சி கவலப்பட்டு கவலப்பட்டு நோயில விழுந்துருச்சி. அம்மாவையும் தங்கச்சி, தம்பிகளை காப்பாத்துறக்காக சின்ன வயசுலயே விவசாயத்துல எறங்கியாச்சி. பிச்சையும் என்கூட விவசாயத்துல எறங்கிட்டான்.
அப்பாவுக்கு ஏதோ நோய் வந்திருச்சி.
"நானும் எனக்கு தெரிஞ்ச வைத்தியமுல்லாம் செஞ்சுட்டேன். இனி ஆண்டவன் விட்ட வழி. மாரி உங்கப்பா பொழைக்கிறது கஷ்டம்தான்."
"வைத்தியரே.. டவுண் ஆசுபத்திரிக்கு கொண்டு போலாமுங்களா.."
"ம்ஹூம் தேறுறது கஷ்டந்தேன்."
அப்பா போனகவலையிலே அம்மாவும் போய் சேர்ந்திருச்சி. அப்பா விட்டுட்டு போன கொஞ்சநஞ்சத்தை வச்சி தங்கச்சியையும் கரை சேர்த்துப்புட்டேன். தம்பிகளையும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஒருநிலைக்கு கொண்டு வந்தேன்.
செண்பகம் வந்தபின்னாடி எல்லாமே மாறிச்சி.. "ஏலே மாரி! செல்வி பொறந்தபின்னாடி செழிப்பாவுல்ல இருக்கே.. ரொம்ப சந்தோசமா இருக்குடே" என்று பிச்சை சொன்னபோது எனக்கும் சந்தோசமாக இருந்தது.
ஆனா கொஞ்சநாள்ல என் உடம்பெல்லாம் சிறுசிறு கட்டிபோல பொக்களம் பொக்களமா இருந்ததை பார்த்து "ஏன்யா.. என்னைய்யா.. உடம்பெல்லாம் இப்படி இருக்கு. உங் அப்பாருக்கு உள்ள வியாதி தொத்திருச்சா.. என்னஏதுன்னு வைத்தியருக்கிட்ட கேளுய்யா" என்று செம்பவம் சொன்னபோது அதிர்ச்சியா இருந்தது.
வைத்தியரும் ஏதேதோ பச்சயில மருந்தெல்லாம் கொடுத்து சரிபடுத்தினார்.
"ஏலே மாரி! இவுக டவுண்லருந்து வந்துருக்காவ. எதோ கவருமென்ன்ட்டுலருந்து பணம் கொடுக்காங்களாம். எதோ எல்ஐசி யாம். மாசாமாசம் கொஞ்ச ரூவா கொடுத்தா போதுமா., ஒரு பத்து பதினைஞ்சு வருசத்துல ஒரு லட்சமா கொடுப்பாகளாம். நானும் சேந்துட்டேன். நீயும் சேருறியாலே" என்றான் பிச்சை.
"எலே பிச்ச.. நமக்கெல்லாம் எதுக்குலே இதெல்லாம். வயசு போன காலத்துல இதெல்லாம் தேவையா" என்றேன்.
"பின்னாடி உதவுமுல்லே.." என்றான். சரி அவன் சொன்னா சரியாத்தான் இருக்குமுன்னு கைநாட்ட வச்சிப்புட்டேன்.
"செல்வியும் வளர்ந்து பெருசாயிட்டா.. ஒரு நல்ல வரனா பாத்துமுடிங்கன்னு" செம்பவம் அடிக்கடி நச்சரித்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கென்ன தெரியப்போவுது?.. நா படுதபாடு!. இருந்ததையெல்லாம் தங்கச்சிக்கும் தம்பிகளுக்கும் பிரிச்சி கொடுத்து மிச்சமீதி இருந்ததை கொண்டும் கடனஉடன வாங்கி செல்வியோட கல்யாணத்தை செய்யலாமுன்னு நினைச்சேன்.
கல்யாணத்தன்னக்கி மாப்பிள வீட்டுக்காரவுக வரதட்சண பாக்கி அதுஇதுன்னு சொல்லி ரொம்ப கிராக்கி பண்ணிப்புட்டாக. அவுகள சரிக்கட்டி புள்ளைய ஆனந்த கண்ணீரோடு மறுவீட்டுக்கு வழிஅனுப்பினேன்.
அப்ப போன செல்வி இப்பதான் ஊருக்கு வாரா. ம்ம்ம்.. என்ன செய்ய?.. என்று நினைத்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
"ஏன்யா.. இம்ப்பூட்டு தேரம்..." என்று செம்பவம் கேட்டதற்கு "ஏபுள்ள! வருத வழியில நம்ம செட்டியார் கடையில மளிகை சாமான் சொல்லிட்டு அப்டியே நாம் தாஸ் நல்ல இளசா கிடாக்கறி வச்சிருந்தான்; மாப்புள நல்லா சாப்பிடுவாகல்ல அதான் வாங்கியாந்துட்டேன்., சட்டுபுட்டுன்னு செஞ்சிப்புடு. புள்ளைக பசி தாங்கமாட்டாக, காப்பித்தண்ணி எதாச்சும் கொடுத்தியாப்புல்ல" என்றேன். "ம்ம்ஹாம்.. ஆச்சுப்பா., எதுக்குப்பா இதெல்லாம்" என்ற செல்விக்கு "கல்யாணத்தக்கப்பறம் இப்பதான் வந்திருக்கிய.. சும்மாரு புள்ள" என்றபோது எனக்கு கண்களில் நீர் கோர்த்திருந்தது.
பொங்கலன்று, செல்வி புதுத்துணி பட்டு உடுத்தியிருந்ததை பாக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. என் கண்ணே பட்டுரும் போல., அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருந்துச்சி. செம்பவம் திருஷ்டி சுத்திப்போட்டாள். "செல்வி நம்மூரு கொட்டாயில எங்கவீட்டு பிள்ளை படம் போட்டிருக்கான்; போயிட்டு வாங்க" என்று சொல்லி அனுப்பினோம்.
"ஏய்.. செம்பவம், செம்பவம்.. எங்கடி போயிட்டே?., வயக்காட்டுக்கு உரம், பூச்சிமருந்து வாங்கியாந்துட்டு அப்டியே சந்தக்கி போயிட்டு சாமானெல்லாம் வாங்கியாந்துறேன் சரியாபுள்ள" என்றபடி கிளம்பும்போது மாமா என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
"மாமா, நா ஊருக்கு கிளம்புறேன்" என்றார் மாப்ளே. "என்ன மாப்ள.. அதுக்குள்ள கிளம்பிட்டீக.. வந்து ஒருவாரம்தான் ஆச்சி.. இருந்துட்டு போலாம்ல" என்றேன். "இல்ல மாமா., ஊருல சோலி நெறையா இருக்கு. நா கிளம்புறேன்" என்றார். "அப்பஞ்சரி., நல்லபடியா போயிட்டு வாங்க. செல்விய எப்பவந்து கூட்டிட்டு போவீக., அடுத்தவாரம் வருவீயளா" என்றேன் மாப்பிள்ளையிடம். "செல்வி, இனிமே எங்கூட வரமாட்டா. இனிமே இங்கதான் இருக்கப்போறா.."என்றதும் எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. "என்ன சொல்லுதீய மாப்ளே?.. ஏன் என்னாச்சி?!" என்றேன் அதிர்ச்சியுடன். "அத அவள்ட்டேயே கேட்டுக்கோங்க.. நா வாரேன்" என்றதும் எனக்கு ஒருமாதிரி ஆனது. என்ன சொல்றதுன்னே தெரில. உடனே சுதாரித்துக்கொண்டு "சரிங்க.. போயிட்டு வாங்க. அப்ப ஆறுமொவத்த அனுப்பி வைக்கிறேன்., வண்டி வரும்" என்றேன். மனது பாரமாவே இருந்தது.
"ஏலே மாரி! பொங்கல்லாம் சிறப்பா இருந்திச்சா வோய்!.. மொவளும் மருமொவனும் வந்திருந்தாவல்ல" என்றான் பிச்சை சந்தையில் நிற்கும்போது. நான் மௌனமாய் நின்றேன். "ஏலே மாரி! நா கேட்டுட்டே இருக்கேன். ஊமையா நிக்குறே.. என்னடே ஒருமாதிரியா இருக்கே.. உடம்புகிடம்பு சரியில்லையா.. என்னாச்சி சொல்லுலே" என்றான். "அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. செல்விய கட்டிக்கொடுத்த நேரமே சரியில்ல. இப்ப வீட்டுல வந்து கிடக்கப்போறா. மாப்பிள்ளை உட்டுட்டு போயிட்டாரு. இனிமே வரமாட்டாராம். என்னஏதுன்னு தெரியலே எனக்கு என்ன செய்றதுன்னே தெரில" என்றேன். "அய்யயோ.. இப்படி ஆகிருச்சே.. ரொம்ப கஷ்டமாவுல்ல இருக்கு. இரு என்னஏதுன்னு கேப்போம்" என்றான் பிச்சை.
"ஏலே செல்வி! என்ன புள்ள பிரச்சன உங்க ரெண்டுபேருக்குள்ள?. சொல்லுலே.." என்றேன் அருகில் செம்பவமும் பிச்சையும் இருந்தார்கள்.
"அப்ப்பா.. அதுவந்துப்பா.." என்றாள் கண்ணீருடன். அவளால் சொல்லமுடியவில்லை. "கல்யாணமாகி 6 மாசமாகியும் வயித்துல ஒரு புழுபூச்சிக்கூட தங்கல. டவுண்ல வள்ளியம்மை டாக்டருக்கிட்ட போயி என்னஏதுன்னு கேக்கும்போது அவுக ஸ்கேன் பண்ணி பாத்துட்டு கர்ப்பபையில கட்டி இருக்குதாம். அத ஆப்ரேசன் பண்ணி எடுத்தாதான் குழந்த பொறக்குமாம். ஏற்கனவே என்னைய கரிச்சி கொட்டிக்கிட்டு இருந்தாவ. இப்ப இதுன்னு தெரிஞ்சி ஒரே அடிஉதைதான். அவரு வேற கல்யாணம் பண்ணப்போறாறாம். கட்டிய ஆப்ரேசனு பண்ணினா உன்கூட வாழுவேன். இல்லைன்னா அப்படியே உங்க வீட்டுலே இருந்துக்கோன்னு சொல்லிட்டாருப்ப்பா.. ம்ம்ம்.." என்று அவள் சொல்லும்போது எங்களுக்கு ஒரே அழுகையானது. என்ன சொல்றதுன்னே தெரியல.
"சரிம்மா கவலப்படாதே.. எல்லாம் சரியாகிரும்" என்று அவளை தேற்றினோம். ஒரே கவலையாக இருந்தது.
"மாப்பிள்ளைக்கு போன்போட்டு பேசுணும் பிச்ச, போன்போட்டு தா" என்றேன். "மாப்ளே.. நீங்கதான் பெரியமனசு பண்ணி செல்விய ஏத்துக்கணும். ஊருக்கு வாங்க மாப்ளே.. எல்லாம் சரியாகிரும். பேசிக்கலாம்" என்றதுக்கு "அதான் செல்வி எல்லாம் சொல்லிருப்பாளே.. நா என்ன பேசுறதுக்கு இருக்கு?.. போன வையுங்கய்யா" என்று மொகத்துல அடிச்சமாதிரி சொல்லிட்டாரு.
எனக்கும் முன்புபோல ஓடியாடமுடியவில்லை. அடிக்கடி உடம்புக்கு முடியாம போனது. செல்விக்கு ஆப்ரேசன் பண்ண பணத்துக்கு எங்கப்போவேன்?.. இருந்த நஞ்சபுஞ்ச காணி நிலம், எல்லாத்தையும் வித்துதான் செல்விக்கு கல்யாணம் பண்ணிவச்சேன். இப்ப இருக்குற ஓட்டுவீடு தான் மிச்சம். ஏதோ வயல்ல கொஞ்சம் இருக்கு. அதுவும் கடன்ல இருக்கு. இது எதுவும் காணாதே. என்ன செய்ய?.. ஒரே யோசனையா இருந்துச்சி.
"மாரி கவலப்படாத மாரி., எல்லாம் அந்த அம்மன் அகிலாண்டேஸ்வரி கொடுக்கிற சோதன. எல்லாம் சரியாகிரும். நானும் என்னால முடிஞ்சத செய்யுறேன். பண்ணையாருக்கிட்ட எதுவும் கேட்டியா மாரி?.." என்றான் பிச்சை.
"ஏற்கனவே கல்யாணத்துக்கு வாங்கின கடனே முடியல. அதுக்குள்ள பணமா?.. என்று இல்லன்னு சொல்லிட்டாருப்பா. நானும் நிறைய பேருட்ட கேட்டுருக்கேன். எல்லாம் அகிலாண்டேஸ்வரி பாத்துப்பா. ம்ம்ம்ம்.." என்றேன்.
"என்னய்யா.. எதாச்சும் பணம் கிடைச்சுதா.. இப்ப என்னய்யா பண்ணப்போறே கவலப்படாதய்யா.. மனச போட்டு குழப்பிக்காதய்யா., எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்றாள் செம்பவம்.
"என்ன செய்றதுபுள்ள.. எல்லாத்துட்டயும் கேட்டு பாத்துட்டேன். இன்னா தாரேன் அன்னா தாரேன் தான் சொல்றாக. சரி பாப்போம். பொழுது விடியட்டும்" என்றேன். செம்பவம் என் அருகில் இருந்து தலையை கோதிவிட்டபடி தடவிக்கொண்டிருந்தாள். அது எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
நித்திரை என்னை தழுவ கண்களை மெல்ல மூடினேன்.
"என்னயிது.. என்னக்கும் இல்லாத திருநாளா இந்த மனுசன் இம்ப்ப்பூட்டு தேரம் தூங்கறாவுகளே.. எய்யா.. எழுந்திருய்யா., எய்ய்யா.," என்று உலுக்கியவள் அசைவற்று கிடந்ததை பார்த்ததும் "அய்யய்யோ... என் ராசா., என்ன விட்டுட்டு போயிட்டீயா.." என்று கதறினாள் செண்பகம்.
,
Post Comment