Pages

Tuesday, April 12, 2011

பாலைவனத்துச் சுடர்

அரேபியர்களின் அறியாமைக் கால அநியாயங்களுக்கு முடிவுகட்டும் வகையில் உலக வரலாற்றுப் பொன்னேடு சந்தித்திராத ஒப்பற்ற ஒரு சகாப்தம் மலர்ந்தது. அந்த ஒளிமயமான சகாப்தத்தின் முதல் குரலாக "இறைவன் ஒருவன்! அவன் இணையில்லாதவன்! துணையில்லாதவன்! எங்கும் நிறைந்தவன்! எல்லாம் தெரிந்தவன்! என்ற ஏகத்துவம் பிறந்தது.

ஏகத்துவக்குரல் தந்த மனிதகுல மாணிக்கம் தாம் முஹம்மது (ஸல்) அவர்கள்!
அவர்களின் ஏகத்துவக் குரல் ஓங்காரமாக ஒலித்தபோது சிலிர்த்தெழும் சிங்கமெனச் சினந்தெழுந்தது அரபு சமுதாயம். கனலாகத் தாக்கும் பாலை நிலத்தைப் போல அனலாக தாக்கியது அரபு சமுதாயத்தின் எதிர்ப்புக் கணை. அனலாகப் பாய்ந்த அரபு சமுதாயத்தின் எதிர்ப்பினைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குளிர் புனலாக கருத்துக்களை கொட்டினார்கள்.

அடங்கவில்லை அரபுச் சமுதாயம்! ஆர்ப்பரித்தது ஆழ்கடல் அலையாக! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருக்கே விலை பேசினார்கள். எனவே

பிறந்த மண்ணை (மக்கா) மறந்து, நெஞ்சைக் கவர்ந்த மண்ணான மதீனமா நகருக்கு இரவோடு இரவாகப் பயணமானார்கள். மதீனா நகர் அடைந்த மன்னர் மாநபி (ஸல்) அவர்களை மலர்த்தூவி வரவேற்றார்கள் அந்நகரத்து மக்கள்.

நாட்கள் நகர்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலான இலட்சியமும் வளர்ந்தது. செம்மல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பாதையிலே நலம் நாடும் நல்லவர்கள் பலர் வந்து மாநபியின் போதனையை உளமேற்றார்கள். மாநபியின் மேலான போதனையில் பற்றுக்கொண்ட மக்கா வாழ் மக்களுள் சிலரும் மதீனா வந்து சேர்ந்தார்கள். நாடு கடந்து சென்று, பீடு நடை போடுகின்ற ஈடுகாணமுடியாத ஏகத்துவத்தின் வளர்ச்சியைப் பற்றி செவியேற்ற மக்கத்துக் குறைஷியர்கள், மதீனா நகர் நோக்கிக் கடல் அலைகள் எனப் படைநடத்தி வந்தார்கள்.

வம்பிழுக்க வரும் பகையை வாழவிடுவது கோழைத்தனத்தின் அடையாளமல்லவா?.. எனவே, மனிதகுல மாணிக்கம் நாயகம் (ஸல்) அவர்கள் தீன் வழி சார்ந்த தோழர்களைக் கூட்டிப் பேரணி ஒன்றைத் திரட்டிப் பத்ரு என்னும் போர்க்களம் நோக்கி விரைந்தார்கள். அந்த போர்க்களத்தில் கூட, வீட்டிற்குத் தீ வைத்தல், பெண்களுக்கு இடர் செய்தல், குழந்தைகளைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல் போன்ற மறநெறியைச் செய்திடக் கூடாது என்று தர்ம நெறியோடு போரிடச் சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள், தாக்கவந்த மக்கத்து குறைஷியர்களையெல்லாம் புறங்கால் பிடரிபடத் திரும்பியோடச் செய்தார்கள்.
பத்ரு போர்க்களத்தில் இறைவன் தந்த வெற்றி ஏகத்துவத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமைந்தது.

வளர்ச்சிப் பெற்ற சமுதாயமாக இஸ்லாம் திகழத் துவங்கிய இந்த நேரத்தில் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் சமுதாயச் சீர்திருத்தத்தில் நாட்டம் கொண்டு இறைவனுடைய மார்க்கமான இஸ்லாத்தில் எல்லோரும் சகோதரர்கள், இதில் ஏற்றத்தாழ்வு பேசுவது இறை நம்பிக்கை உடைய மனிதனுக்கு இழுக்காகும் என்று கூறி சமுதாயத்தைப் பற்றி நின்ற மக்களிடம் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பேதத்தை நீக்கினார்கள்.

ஆணுக்குரிய உரிமை பெண்ணுக்கும் உண்டு என்று சட்டம் செய்தார்கள். பின்தங்கிய மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்த வட்டித் தொழிலை உடைத்தெறிந்து சமுதாயத்தில் புனிதமான ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

தேடிய பொருளில் மிஞ்சுவதில் நாற்பதில் ஒரு பங்கை எளியவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறிச் சமுதாயத்தில் மலிந்திருந்த வறுமையை நீக்கிப் பொருளாதாரத்தில் புதிய ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

குற்றமற்ற ஒருவனைக் கண்ஜாடை காட்டிக் காட்டிப் பேசுவது கூடக் குற்றமாகும் என்று கூறி, நற்செயல் பெருகிடுவதற்காகப் பாதையை வகுத்தார்கள். உங்கள் மனைவியருக்கு நீங்கள் செய்திட வேண்டிய கடமைகள் சில உண்டு என்று கூறிப் பிற மங்கைகளை நெருங்கும் விபச்சாரத்தின் தீமையை வேருடன் களைந்தார்கள். விதவைகளின் மறுமணத்தைச் சிறப்பாக்கி வைத்து, உலக அரங்கில் ஒரு பெரிய மாறுதலையே உண்டாக்கினார்கள்.

மனதை மயக்கி ஆட்டி வைக்கும் மதுவை நினைத்தும் பார்த்திடாத வகையில் மதுவிலக்குச் சட்டத்தை நிரந்தரமாக்கினார்கள்.

இவற்றைப் போன்ற எண்ணற்ற சமூக சீர்திருத்தங்களைச் செய்த அண்ணல் மாநபியை எதிர்த்துப் போராடிய அரபியர்களின் குரலில் இப்பொழுது புது விதமான ராகம் பிறந்தது.

" எங்களிடம் நபி உண்டு. அவர் பெயர் முஹம்மதாகும் (ஸல்). அவர்களுக்கு நிகர் அவனியில் உண்டோ?.."" என்று உலகத்து மக்களிடம் பெருமிதத்தோடு ஒரு கேள்வியைக் கேட்டார்கள் அராபியர்கள். அதோடு எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் மற்றும் படைப்பினங்கள் அனைத்துக்குமே அருட்கொடையாக வந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்), என உலகினருக்கு எடுத்தோதி விளக்கினார்கள்.

சரித்திரம் அறியாத சாதனை புரிந்த செம்மல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையில் வாழ்வதற்கு உறுதி கொள்வோமாக! ஆமீன்.

***********

டிஸ்கி:


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை எங்க ஹஜ்ரத்து அவர்களின் வழிகாட்டலின் படி எழுதிய கட்டுரை. இந்த கட்டுரை நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.

***********

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்