"சரிசரி வாங்கிட்டுவாரேன்.. முறைக்காதே" என்றபடி அப்பா ரயிலிருந்து இறங்கி தண்ணி வாங்கச் சென்றார். தண்ணி வாங்கிட்டுவர்றதுக்குள்ள ரயில் கிளம்பிருச்சி. அப்பா உடனே மீதிகாசை வாங்கிக்காம ஓட்டமும் நடையுமாக ஓடிவந்துக் கொண்டிருந்தார். "அப்பா சீக்கிரம் வாங்கோ.. என்னங்க சீக்கிரம் வாங்க" என்று ரயிலிருந்து நாங்கள் கத்திக்கொண்டிருந்தோம்.
அப்பா ஒருவழியாக எங்கள் பெட்டிக்குவந்து ரயிலில் தொத்தி ஏறினார். "அப்பாடா.. அப்பா வந்தாச்சி" என்ற சந்தோசம் எங்களுக்கு. "சந்தோசமா இப்போ சந்தோசமா.. நா தான் அப்பவே சொன்னேன்ல அடுத்த ஸ்டேசன்ல வாங்கிக்கிரலாமுன்னு.. கேட்டாத்தானே.. ரயில் போயிருந்ததுன்னா தெரியும் சங்கதி.. இந்தா புடி தண்ணிய.." அப்பாவுக்கு கோபமா இருந்தது. அம்மா அருகில் இருந்துகொண்டு, "ஏ.. அப்பாவுக்கு கோவத்த பாரேன்.. அழகா இருக்குல்ல., அந்த மூக்கப்பாரேன்.. நல்லாருக்குல்ல" என்றபடி தண்ணிய அம்மா குடித்தபடி, "ஏட்டி.. அப்பாவுக்கு தண்ணி வேனுன்னா குடிச்சிட்டு கொடுடி" என்றாள் அம்மா அக்காவிடம்.
"ஆனாலும் உனக்கு ரொம்ப குசும்புதாம்மா.. நீயே அப்பாவுக்கு கொடுத்துக்கோ..உங்க ரெண்டுபேரோட சங்கதியில என்னய இழுக்கிற.. அடிவிழவா.. ம்ஹுக்கும் ம்ஹுக்கும்" என்று அக்கா தலையை வெடுக்கென திருப்பினாள்.
நான் இதையெல்லாம் கண்டுக்காம ரயிலில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தேன். ரயிலில் போவதென்றால் கொள்ள ஆசைதான். கூகூ.. கூக்கூ.. குச்சி..குச்சி..குச்சிகுச்சி.. கூ என கூவிக்கொண்டே தடக் தடக் என்ற சத்தத்துடன் போகும்போது ஜாலிதான். இப்ப நாங்க எங்க மாமி வீட்டுக்கு தின்னவேலிக்கு போயிக்கிட்டு இருக்கோம். அங்க மாமி, மாமா, கார்த்திக் அத்தான், வித்யா, ரவி இருக்காங்க.
அங்க, கார்த்திக்கூடயும், ரவிக்கூடயும் விளையாடிக்கிட்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது. அப்புறம் அந்த குட்டச்சி வித்யா இருக்காலே.. பயங்கரமான ஆளு, என்ன பண்ணுவா தெரியுமா.. எப்பப்பார்த்தாலும் சண்டபோடுவா, ஒரே போட்டிதான் எங்களுக்குள்ள. ஆனா அவ என்னையே குறுகுறுன்னு பாக்கும்போது என்னவோ ஒரு மாதிரியா இருக்கும்.
பக்கத்து வீட்டு ராஜ்க்கு நாங்க தின்னவேலிக்கு ரயில்ல போறது, அவனுக்கு ஒரே பொறாமையா இருக்கும். ஹே ஹே.. நாளைக்கு நாங்க தின்னவேலிக்கி போறோமேன்னு சொன்னதும் "ரொம்ப கோலி வுடாதடா, நாங்களும் எங்க மாமி வீட்டுக்கு போவோமில்ல.. உட்றா., உட்றா.. நல்லா வுட்றா கோலி" என்றதும் எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியல. ஆனா அவங்க மாமி வீடு எதோ ஒரு ஊருன்னு சொன்னான். பேரு தெரியல..
ரயில் தாம்பரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. "டேய்..டேய் குரு.. என்னடா ஒரு இடத்துல இருக்க மாட்டியா.. அங்கேயுமிங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கே.. கீழ விழுந்துடாதடா" என்று என்னை கைபிடித்து இழுத்துச் சென்றாள் அம்மா.
"அம்மா விடுமா..விடுமா" என்று நான் சொன்னதை கண்டுக்காம அம்மா இழுத்துச் சென்றாள். "டேய் என்னடா.. எங்கடா போனே.." அப்பா சத்தம் போட்டார். நான் உம்மென்று கீழே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பாவும் அம்மாவும் எதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அக்கா ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஹை.. அக்கா நா அங்க, அடுத்த கேரேயஜ் வரைக்கும் போனேனே.. எத்தன எத்தன பேரு.. ரொம்ப ஜாலியா இருக்குது. வாரியா நாம போவோம். ஜாலியா இருக்கும்" என்று சொல்லியபடி அக்காவை அழைத்து சென்றேன். "டேய் டேய் இங்க இருடா.. எங்க போறீங்க.." என்று அம்மா சொன்னதை கண்டுக்காமல் நானும் அக்காவும் குடுகுடுவென ஓடினோம்.
ஒவ்வொரு பெட்டியா சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் சென்றதும் அக்கா, அம்மா இருக்கும் பெட்டிக்கு ஓடிவிட்டாள். சே.. அக்கா ஓடிட்டாளே என்று நினைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். அப்போது ரயில் நின்றது. சிலர் இறங்கினார்கள். சிலர் ஏறினார்கள். நான் அம்மா இருக்கும் பெட்டியில் சென்று பார்த்தால் அங்கே..
அங்கே நான் உக்கார்ந்திருந்த ஜன்னலோரத்தில் வேற ஒருத்தி உக்கார்ந்திருந்தாள். எனக்கு பயங்கர கோபம். "உன் இடம் போச்சா., போச்சா.. வெளிய போனில்ல.. உன் இடம் போச்சே" என்று எதிர் ஜன்னல் இருக்கையிலிருந்து அக்கா சொன்னதும் மேலும் கோபம் கோபமா வந்தது. என் இடத்தில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவளை நெருங்கி அவளது தோளை திருப்பினேன் கோவத்துடன்.
உக்கார்ந்திருந்தவள் திரும்பி என்னை பார்த்து, கண்களால் என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். நான் அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தேன். டேய் என்னடா, எங்கபோனே.. இவன் எப்போதும் இப்படிதாங்க.. துருதுருன்னு இருப்பான்; பேரு குரு, செகண்ட் கிளாஸ் படிக்கிறான். பெரியவ காயத்ரி., ஃபோர்த் படிக்கிறாள் என்று அம்மா, அந்த பொண்ணோட அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
"எங்களுக்கு ஒரே பொண்ணு., இவ பேரு மகாலட்சுமி. ரெண்டு படிக்கிறாள். நாங்க லீவுக்கு எங்கம்மா வீட்டுக்கு வருசாவருசம் போவோம்............" இருவரும் பேசியதில் தோழிகளாயினர்.
நான், ஆண்டி மடியில் இருந்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னவென்று தெரியவில்லை. உடனே அவள் என்னை திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள். "என் பேரு குரு; உன் பெயரென்ன" என நான் கேட்க, அவள் மெல்ல, "மகாலட்சுமி" என்றாள். "வாரியா விளையாடுவோமா.," என்றதும் அவள் "ஓ விளையாடுவோமா" என்றபடி என் கையை பிடித்தபடி வந்தாள். நாங்கள் இருவரும் நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அவள், "அம்மா தேடுவாங்க., போவோமா" என்றாள். நானும் எதுவும் சொல்லாமல் அவள் பின்னே சென்றேன்.
அவளுக்கு என்னை ரொம்ப பிடித்துப்போனது. என் அருகிலே இருந்தாள். சில மணி நேரங்கள் கழிந்திருக்கும், "அப்போ நாங்க போயிட்டுவாரோம். நீங்க ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க.. பக்கத்துலதானே ஒரு தடவை எங்க வீட்டுக்கு வாங்க.. கிளம்புறோம்" என்றபடி மகாலட்சுமியின் அம்மா எங்கம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எங்கம்மாவும், "கண்டிப்பா உங்க ஊருக்கு வாரேன். போன் பண்ணுங்க" என்றாள்.
அவளும் அவங்கம்மாவும் அப்பாவும் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். எதோ என்னில் மாற்றம். நானும் அவர்கள் பின்னால் சென்றேன் என்னையும் அறியாமல்.
"டேய்.. டேய் குரு இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க.. வாசல்ல நிக்கிறியே., வாடா உள்ள" என்றபடி அம்மா என் கையை பிடித்து இழுத்து வந்தாள்.
கூகூ.. கூக்கூ.. குச்சி..குச்சி..குச்சிகுச்சி.. கூ என கூவிக்கொண்டே சென்றது ரயிலுடன் என் மனமும்.
,