அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) நாயக்கர் வம்சத்தில் ஆட்சிபுரிந்தவர் ஜெகவீர பாண்டியன். இவரிடம் அமைச்சராக இருந்த தெலுங்கை பூர்வீகமாக கொண்ட கெட்டிபொம்மு (வீரம் மிகுந்தவர்) என்பவரின் பரம்பரையில் வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனின் இயற்பெயர் வீரபாண்டியன்.
ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
அந்த காலகட்டத்தில் வணிகம் செய்ய நம்நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றத் தொடங்கினர். நம்நாட்டை தந்திரமாக ஆங்கிலேயர் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். எல்லா அரசர்களும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டவேண்டும் என்று கி.பி. 1793ல் ஆங்கிலேயர் சட்டம் கொண்டு வந்தனர். இதற்கு நாட்டின் பலபகுதிகளிலிருந்து மன்னர்கள், நம்நாட்டை வெள்ளைக்காரன் அடிமைப்படுத்துவதா என்று வெகுண்டெழுந்தனர். தமிழ்நாட்டிலும் பல மன்னர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கட்டபொம்மன் திருநெல்வேலி பாளையத்துக்காரகளை ஒன்றுதிரட்டி ஆலன்துரையை எதிர்த்து போரிட்டார். இந்தபோரில் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். பின்னர் நெல்லை கலெக்டராக இருந்த ஜாக்சன் துரையுடனான சந்திப்பு பயனளிக்காமல் போகவே வெள்ளையர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்தார். அக்டோபர் 1, 1799 இல் எட்டப்பனால் காட்டிகொடுக்கப்பட்டு புதுக்கோட்டை மன்னன் தொண்டைமானின் உதவியுடன் ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை கைதுசெய்து கயத்தாறுக்கு கொண்டு வந்தனர்.
அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.
************************************
வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி சிறுவயதில் பாடபுத்தகங்களில் படிக்கும்போது பெருமையாக இருக்கும். அப்போதே என்மனதை கவர்ந்தவர் கட்டபொம்மன். என்னுடைய சிறுவயதில் கயத்தாற்றில் இருக்கும் எங்க நன்னி (அம்மம்மா) வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். கட்டபொம்மனை இங்கேதான் தூக்கிலிட்டார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் ஒருதடவை கூட அந்த இடத்தை அப்போது பார்த்ததில்லை.
கயத்தாரிலுள்ள கட்டபொம்மன் சிலை. இதுதான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்.
ஒருநாள் எதோ ஒரு ஊருக்கு சென்றுவிட்டு வரும்போது நன்னி, "எல சேக் இதுதான் கட்டபொம்மன் தூக்குலபோட்ட இடம். பார்க்கணும் பார்க்கணும் என்று சொல்லுவியலே நல்லா பாத்துக்கோ" என்று காட்டும்போதுதான் தெரிந்தது. இதன்பின்னர் கட்டபொம்மன் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டார். நெல்லையில் பாளையங்கோட்டை பேரூந்து நிலையத்துக்கு அருகிலும் கட்டபொம்மன் சிலை உண்டு.
சிறுவயதில் கயத்தாரில்தான் நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்டேன். அங்கே உள்ள சைக்கிள்கடையில் வாடகைசைக்கிள் ஒரு மணிநேரத்துக்கு 50பைசா. சைக்கிள் கடைக்குசென்று எங்கமாமா பேரச்சொல்லுவேன். உடனே கடைக்காரர் "பத்திரமாக ஓட்டு என்ன".. என்றுசொல்லி சைக்கிளை கொடுப்பார். மாமாவிடமிருந்து "ரோட்டுப்பக்கமெல்லாம் போகக்கூடாது" என்று கண்டிப்புடன் அனுமதி கிடைக்கும். நான் எங்கசொந்தக்கார பையனை சேர்த்துக்கொண்டு கட்டபொம்மன் சிலை, குட்டிகுளம், பன்னீர்குளம் என்று மாமாவுக்கு தெரியாமல் சுத்துவேன்.
மாமாவிடம், "மாமா கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடத்தில் எப்படிமாமா சிலை வந்தது?" என்று கேட்டேன்.
அதற்கு மாமா, "இந்தஇடம் ஆரம்பத்தில் வெறும் தரையாகத்தான் இருந்தது. இந்த இடத்தின் மகிமையை தெரிந்து கொண்ட நடிகர் சிவாஜி கணேசன்தான் இந்த இடத்தை வாங்கி அதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை நிறுவினார். சிலை திறப்பு விழா 1970-ம் வருடம் ஜூலை மாதம் 16-ம் நாள் நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டி தலைமை வகிக்க பெருந்தலைவர் காமராஜர் கட்டபொம்மன் சிலையை திறந்து வைத்தார்" என்று மாமா சொன்னபோது பிரமிப்பாக இருந்தது.
மாமா, "கட்டபொம்மனை விசாரணை நடத்தி சிறையில் வைத்திருந்த கட்டடம் போலீஸ் நிலையத்துக்கு பின்னால் உள்ள சந்தைக்கு போகும் தெருவில் உள்ளது. ஆனால் அது இப்போது ரொம்ப சேதமடைந்து உள்ளது" என்றார்.
பாஞ்சாலங்குறிச்சியின் நுழைவாயில். இதிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கட்டபொம்மனின் கோட்டை உள்ளது.
இதனால் எனக்கு ரொம்ப ஆவலானது. அப்படியானால் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமானது. அப்போதைய சூழ்நிலையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு செல்வது இயலாத காரியமாக இருந்தது. இருந்தாலும் என்றாவது ஒருநாள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மட்டும் மாறவே இல்லை.
பின்னர் மாமாவீட்டுக்கு கயத்தாறுக்கு போகும்போதெல்லாம் கட்டபொம்மன் சிலையை பார்க்க தவறுவதில்லை. கல்லூரி படிப்பு முடித்தபின், இந்தகாலத்தில் படித்த படிப்புக்கு ஏத்தமாதிரி எங்கே வேலை கிடைக்குது?.. வீட்டு கஷ்டசூழ்நிலையினால் வேலையை தேடியதில் நிரந்தரமில்லா வேலைதான் மிஞ்சியது. கிடைத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். கயத்தாற்றில் மாமாவுக்கு தெரிந்தவர் டிவிஎஸ் (இருசக்கர வாகன விற்பனை) டீலர்ஷிப் வாங்கினார். அப்போது மாமா, அவரிடம் என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்கே எனக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலை கிடைத்தது.
கயத்தாறில் வேலை கிடைத்ததால் தினமும் வீட்டுக்கு நெல்லை செல்ல முடியாததால் மாமாவீட்டிலே தங்கியிருந்து வேலை பார்த்தேன். எங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள நெல்லை டிவிஎஸ் தான் டிஸ்ரிபியூட்டர். அதனால் தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அலுவலக வேலையாக தூத்துக்குடி, நெல்லை செல்லவேண்டியிருந்தது. இருசக்கர வாகனத்தில்தான் தூத்துக்குடிக்கு செல்வதுண்டு.
இப்போதைய பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ளே இருக்கும் கட்டபொம்மன் நினைவகம்.
அந்த பகுதியில் உள்ள அனைத்துபகுதியும் எனக்கு அத்துப்படி. இந்தநேரத்தில்தான் என்விருப்பமான பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்க்கும்வாய்ப்பு கிடைத்தது. கயத்தாரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில்தான் பாஞ்சாலங்குறிச்சி இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. போகும்போதெல்லாம் குறைவான தூரம் கொண்ட வேறவழி இருந்தாலும் பத்துநிமிசமே அதிகம்எடுக்கும் இந்த வழியில் வருவேன்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை செப்பனிட்டு புதிய கோட்டை மதில்சுவர்கள் நினைவகம், அருங்காட்சியகம் விளையாட்டு திடல் எல்லாம் அந்த கோட்டையில் உண்டு. இந்த கோட்டையை 1974ல் அப்போதைய முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திறந்துவைத்தார். இப்போதும் பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் மே மாதம் 14ம் தேதி மற்றும் 15ம்தேதி கட்டபொம்மன் விழா நடைபெறும். இந்தவிழாவில் தூத்துக்குடிமாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
ஆனால் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தவிழாவில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இப்போது விடுமுறையில் சென்றதும் கயத்தார் சென்றிருந்தேன். நான், என்மனைவி, தங்கை தம்பிகள், மாமா பசங்கள் என்று எல்லோரும் கட்டபொம்மன் சிலையை காண சென்றோம். வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் நெல்லை டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்போது கயத்தார் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டபொம்மன் சிலை அமைவிடத்தில் சிறுபூங்காவும், குடிநீர்வசதிகள் அமைத்து நல்லமுறையில் பராமரித்து வருகிறார்கள்.
***********************************
அன்பு நண்பர்களே!! இந்த கட்டுரையை யூத்புல் விகடனுக்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் இந்த கட்டுரையை பாராட்டி குட்பிளாக்ஸ் பகுதியில் முக்கியத்துவத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
,