தாலாட்டு கேட்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க . அது அன்னை நமக்காக இசைக்கும் ஒரு இனிய கீதம் .
தாயின் தாலாட்டில் ஒரு தாயின் அன்பு , பாசம் , அரவணைப்பு எல்லாமே உண்டு . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒன்று .
தாலாட்டு , குழந்தைக்கு நல்ல ஒரு வளர்ச்சியை கொடுக்கும் .
குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்கச் செய்யும் சூழலில் பொதுவாகத் தாயினால் தாலாட்டுப் பாடல் பாடப்படுகின்றது. "தால்" என்ற சொல்லுக்கு நாக்கு என்று பொருள். நாவினை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டு பேச்சு வழக்கில் ரோராட்டு, ஆராட்டு, ராராட்டு, ஓராட்டு, தாராட்டு என்றெல்லாம் வழங்கப்படுகின்றது. இவை நாவினை ஆட்டிப் பாடும்போது எழும் ஒலியால் பெற்ற பெயர்கள்.
பாடலமைப்பாலும், பொருண்மையாலும், பாடப்படும் சூழலாலும் தாலாட்டினைத் தனி வகையாகக் கருதலாம். இதனைக் குழந்தையின் தாய், பாட்டி, அத்தை, சகோதரி, செவிலி முதலியோர் பாடுவர். ஆண்கள் தாலாட்டுப் பாடுவதில்லை. விதிவிலக்காகச் சில நேரங்களில் பாடுவதுண்டு.
தாலாட்டுப் பாடல்களின் பொருள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது :
1. குழந்தை 2. அதற்கு வேண்டிய சாதனங்கள் 3. உறவினர்கள்
1. குழந்தையை மையப் பொருளாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
அ. குழந்தையின் அழகு, அருமந்தத்தன்மை (அருமருந்தன்ன தன்மை), எதிர்காலம் இவற்றைப் பாராட்டல்.
ஆ. குழந்தையைப் பெறத் தாய் செய்த நோன்பு.
2. சாதனங்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
அ. சாதனங்களின் அழகு, வேலைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டல்.
ஆ. அந்தச் சாதனங்களைச் செய்தவர்களுக்கும் பரிசாக அளித்தவர்களுக்கும் நன்றி கூறல்.
3. உறவினர்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
உறவினர்களின் செயல் வீரத்தை, ஈகைத் திறனை, சொல் வளத்தைப் பாராட்டல். இப்பொருள்களும் அவற்றின் உட்கூறுகளும் தாலாட்டுப் பாடல்களுக்குரிய அடிப்படையான கருத்துகளாகின்றன.
நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டுப் பாடல் வடிவம் அனைத்துச் சாதி மக்களிடமும் காணப்படுகின்றது. இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது. எதிர்காலத்தில் இப்பழக்கம் மறைந்து விடவும் வாய்ப்புள்ளது.
பின்வரும் பாடல் குழந்தையை மையமாகக் கொண்ட தாலாட்டுப் பாடல் ஒன்றின் ஒரு பகுதி ஆகும். குழந்தையின் அருமையை, அது தனக்கு எத்தகைய இனிமையானது என்பதைத் தாய் மகிழ்ந்து பாடுகிறாள்.
ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிராரோ ஆராரோஎன் கண்ணே
நவமணியே - என் அப்பா நீ
கல்கண்டு சர்க்கரையோ என் தேனோ
தினைமாவோ - என் கண்ணே நீ
தெகுட்டாத தேங்கனியோ என்
வெள்ளி நிலவோ நீ -
என் தம்பிய வெளிச்சமுள்ள பால்நிலவோ
என் காய்க்கப்பட்ட தோப்புலியும் -
என் தம்பிய நீ தனியப்பட்ட என் மாங்கனியோ.
[தெகுட்டாத - திகட்டாத; தோப்புலியும் - தோப்பிலேயும்]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1; பக் - 112, 113]
குழந்தைக்குரிய கருவிகள் அவற்றைக் கொடுத்தோர் பற்றிய விவரங்கள் இடம்பெறும் தாலாட்டு :
பால் குடிக்கக் கிண்ணி பழந்திங்கச்
சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன் .
(நா. வானமாமலை, 1964, ப. 82)
குழந்தையைத் தாலாட்டும் போது அதன் உறவினர்கள் - குறிப்பாகத் தாய் மாமன் பெருமையைச் சொல்லித் தாலாட்டும் பாடல்கள் பல உண்டு.
செக்கச் சிவப்பரோ - உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ அழகு
சிவப்பரோட - ஐயா நீ
அருமை மருமகனோ ? ....
முத்தளக்க நாழி முதலளக்கப்
பொன்னாழி வச்சளக்கச்
சொல்லி வரிசையிட்டார் தாய்மாமன் .
(நா. வானமாமலை, 1964, பக். 90-91)
அன்னைக்கு நிகர் அன்னையே ....
ஸ்டார்ஜன்