Pages

Sunday, January 31, 2010

உன்னை நேசிக்கிறேன்

கவியில் ஆடும்
உன் அழகே
என்னை ம‌யக்கையில்
நானோ எட்டி நின்றேன்
உன்னை ரசிக்க !!

ஒரு தடவை தரிசனம்
தருவாயா என் அன்பே
வரும் வழியில் ஆயிரம்
தடைகளும் தூசியாகுமா ..
உன் தரிசனம் கிடைக்குமா
எட்டி நின்று தான் உன்னை
காண வேண்டுமாம்
சொல் என்னுயிரே !!! .

உன் மேல் உள்ள
காதல் அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லையே
ஆயினும் நான்
ரசித்தேனே உன்னை
ஆனந்தமாய் யாரும்
அறியாமலே !!
உன் இடத்துக்கு
நான் வராமலே !! .

என்னருகில் உன்னை
கண்டேனே அதுவே
எனக்கு பேரின்பமானதே
யாரும் அனுபவிக்க
வாய்ப்பில்லையே
இப்படி ஒரு
தரிசனத்தை !!!


என்னை பாட
வைத்து கேட்டாயே
உன்னை பத்தி
பாடத்தான் தெரியும் எனக்கு
வேறொன்றும் நான்
அறியேனே !!


நான் போகும் அழகே
கண்டு ரசித்தாயே !!
நான் தைரியமானேனே
நீ என்னோடு
இருக்கையிலே !!! .


என்னில் ஒவ்வொரு
அசைவிலும்
என்னுள் கலந்தாயே
இயங்கினேன்
வெற்றியை நோக்கி ...


நான் இன்னும் பல
சாதனைகள் படைப்பேன்
நீ தரும் நம்பிக்கையிலே ...


உன்னை நேசிக்கிறேன்
என் இறைவா ...
நேர் வழியில்
என்னை செலுத்துவாயே ....

Post Comment

Saturday, January 30, 2010

இந்தியா VS பாகிஸ்தான் கிரிக்கெட் - ஜன 29

அன்பு மிக்க நண்பர்களே !!


எல்லோரும் எப்படி இருக்கீங்க , நலமா ...பெற்றோர்களையும் மனைவி மக்களையும் ஊரில் விட்டு வெளியூர் சென்று வேலைப்பார்பவர்களின் நிலை கஷ்டம். அதை விட வெளி நாட்டில் வேலை பார்க்கும் எங்களைப் போன்றவர்களின் நிலையைப் பற்றி சொல்ல தேவை இல்லை.


காலையில் எழுந்தோமா வேலைக்கு சென்றோமா மதியம் நமக்கு இஷ்டப்பட்டதை சமைத்து சாப்பிட்டோமா . மதியம் குட்டித்தூக்கம் போட்டோமா , நாலு மணிக்கு வேலைக்கு போனோமா நைட் வந்து எதாவது படத்தை பார்த்தோமா தூங்கினோமா என்று இயந்திரத்தனமாக வாழ்க்கை ஓடிவிடும்.

ஊருக்கு போன் செய்து பேசினால் அங்கு காலில் அடிப்பட்டதை கேட்டு இங்கு வலிக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் இயந்திரத்தனமாகவே கழிந்து கொன்டு இருக்கும் வாழ்வில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் காலை மட்டுமே லீவு இருக்கும். ஒரு மாறுதலுக்காக‌ நானும் ,அக்பரும் , உறவினர்களும் இன்னும் சில கேரளா நண்பர்கள் , உபி நண்பர்கள் சேர்ந்து காலையில் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் .


சில வாரங்களுக்கு முன்பு , பக்கத்தில் ஒரு கம்பெனியில் வேலைப்பார்க்கும் பாகிஸ்தானி நண்பர்கள் " வாரீங்களா நாம ஒரு மேட்ச் விளையாடுவோம் " என்று கேட்டார்கள். சரியென்று போன வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றோம் .


டாஸ்ஸில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம் . நாங்கள் 16 ஓவர் வைத்து விளையாண்டோம் . 16 ஓவருக்கு 66 ரன்கள் எடுத்தோம் . அதில் அக்பர் மட்டும் 19 ரன்கள் எடுத்தார் . நான் 5 ரன்கள் எடுத்தேன் . பின்னர் பாகிஸ்தானிகள் விளையாட ஆரம்பித்தனர் . முதலில் பந்து வீசிய உபி நண்பர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார் . நண்பர் அக்பரும் தன் பங்குக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார் . நான் ஒரு விக்கெட் எடுத்தேன் . ஆனாலும் பாகிஸ்தானிகளும் சுதாரித்து வெற்றி இலக்கை நோக்கி வந்தனர் .


கடைசி ஓவர் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக எங்களுக்கு அமைந்தது . கடைசி ஓவர் வீசிய கேரளா நண்பர் ஒரு விக்கெட்டை சாய்த்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வழி வகுத்தார் .


எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .


அதே சந்தோசத்தில் , இந்த வாரம் இன்று நாங்கள் மறுபடியும் பாகிஸ்தானிகள் கூட விளையாட சென்றோம் .


இன்று டாஸ்ஸில் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம் . நாங்கள் 16 ஓவருக்கு 95 ரன்கள் எடுத்தோம் . பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தானிகள் எங்கள் பந்துவீச்சை துவைத்து எடுத்தனர் . ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி , வெற்றி இலக்கை அடைய போகும்போது , அக்பர் 1 விக்கெட் எடுத்து பின்னடைவை ஏற்படுத்தினார் .


அவர்கள் 12 ஓவரிலே வெற்றி பெற்றனர் . இதில் அக்பர் 1 விக்கெட் , ஒரு ரன் அவுட் கேரளா நண்பர் 1 விக்கெட் எடுத்தனர் .


காலையில் எழுந்தோமா வேலைக்கு சென்றோமா மதியம் நமக்கு இஷ்டப்பட்டதை சமைத்து சாப்பிட்டோமா . மதியம் குட்டித்தூக்கம் போட்டோமா , நாலு மணிக்கு வேலைக்கு போனோமா நைட் வந்து எதாவது படத்தை பார்த்தோமா தூங்கினோமா என்று தான் நாள் கழியும் .


வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாத நாட்டில் இந்த கிரிக்கெட் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது . வேறு என்ன செய்வது ...


இப்படி ஒவ்வொரு வாரமும் கிரிக்கெட் விளையாடுவதால் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் எங்களை தொற்றிக் கொள்கிறது .


அடுத்த வாரத்தை நோக்கி ...


உங்கள் ஸ்டார்ஜன் .

Post Comment

Thursday, January 28, 2010

ஆயிரத்தில் ஒருவன் - அப்பாவும் நானும் ...

அப்பாடி ஒரு வழியா நானும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தாச்சு . ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தாலும் வந்தது . ஏகப்பட்ட விமர்சனங்கள் . நானும் விமர்சனம் எழுத களத்தில் இறங்கியாச்சு . நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நேற்று தான் பார்த்தேன் .


கதை தொடங்குவது சுமார் 45 வருடஙகளுக்கு முன்னால் ...புரட்சித் தலைவர் ஒரு டாக்டர் . தன்னிடம் வேலை செய்யும் வேலையாள்களை அடிமைப் போல பாவிக்கும் மனோகரின் ஆட்களுக்கு வைத்தியம் பார்க்க நம்ம தலைவர் செல்வார் . அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் தலைவர் பொங்கி எழுகிறார் . இதனால் ஆத்திரமடையும் மனோகர் தலைவரை அடிமைகள் தீவுக்கு அடிமையாக அனுப்பி விடுகிறார் . இந்த தீவு ராமதாஸுக்கு ( பாமக ராமதாஸ் இல்லை ) சொந்தமானது . அங்கே சென்றதும் அங்குள்ள அநியாயங்களை கண்டு தோழர்களுக்கு ஆறுதல் சொல்கிறார் .

ஒரு கட்டத்தில் புரட்சித்தலைவி தலைவரை காதலிக்க , இருவரும் காதலர்களாக ஆகிறார்கள் . அங்கே கொள்ளை அடிக்க வரும் நம்பியார் ராமதாசுக்கு இடைஞ்சலாக இருக்கிறார் . இதனால் ராமதாஸ் தலைவரிடம் நம்பியாரை விரட்டினால் விடுதலை என்று நயவஞ்சகமாக பேசியதால் தலைவரும் நம்பியாரை விரட்டுகிறார். பின்னர் உண்மையறிந்து தன் தோழர்களுடன் நம்பியாரின் கப்பலில் தப்பி விடுகிறார் தலைவர் .நம்பியாரின் பிளாக்மெயிலால் கொள்ளைக்காரனாகிறார் தலைவர் . நம்ம தலைவர் நீதி நேர்மையின் காரணமாக கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்து தான் கொள்ளை அடிக்கிறார் . ஜெவையும் கப்பலையும் இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார். . ஜெவின் மேல் ஒரு கண் வைத்திருக்கும் நம்பியாரை திருத்த முயற்சிக்கிறார். எதற்கும் மசியாத நம்பியாருக்கு பகையாளி ஆகிறார் . மனோகரும் இவருக்கு தொல்லை கொடுக்க , கடைசியில் , தலைவர் ஜெவை கரம்பிடித்தாரா ? . நம்பியார் , மனோகர் கூட்டங்களை அடக்கினாரா ? . தலைவர் கடைசியில் என்ன ஆனார் . என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .


புரட்சித் தலைவர் , தலைவி நடித்த இந்த படம் 1965ல் வெளியானது . இயக்கம் பிஆர் பந்துலு . அருமையாக இயக்கி உள்ளார் .

இதில் எம்ஜிஆர் , ஜெயலலிதா நாகேஷ் நம்பியார் மனோகர் ராமதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வனாதன் _ ராமமூர்த்தி .

இந்த படம் ரபேல் சபாடினி எழுதிய ( CAPTAIN BLOOD ) என்ற புகழ் பெற்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் . இந்த நாவல் அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஹென்றி மார்கன் பின்னாளில் மேற்கிந்திய தீவுகளின் கவர்னராக ஆனாராம் .

அருமையான ஆர்ட் டைரக்ஷ்ன். காட்சிகள் ரொம்ப அருமையாக மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.
திரைக்கதை ரொம்ப சூப்பர் .

இந்த படத்தில் எம்ஜியாரும் நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ரொம்ப நல்லாருக்கும் . காட்சி ரொம்ப பிரமாதம் .

தலைவர் , தலைவி நம்பியார் மனோகர் , நாகேஷ் ராமதாஸ் நடித்திருப்பதை பற்றி கேட்கவா வேண்டும் . நடிப்புன்னா நடிப்பு . நாகேஷ் காமெடியில் கலக்கியிருப்பார் .

பாடல்கள் ரொம்ப அருமை . இப்பவும் கேட்க கேட்க சக்கை போடுகிறதே ! . அவ்வளவு இனிமை .

கண்ணதாசனும் வாலியும் போட்டிப்போட்டு அருமையான பாடல்களை எழுதியிருக்காங்க . கண்ணதாசன் அதோ அந்த பறவை , நாணமோ பாடல்களை எழுதி உள்ளார் . வாலி , பருவம் எனது பாடல் , ஆடாமல் ஆடுகிறேன், ஏன் என்ற கேள்வி , ஓடும் மேகங்களே , உன்னை நான் சந்தித்தேன் போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.


மொத்ததில் இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் . இப்போது பார்த்தாலும் திகட்டாதது .

ஆயிரத்தில் ஒருவன் _ அசத்தலான வீரர்களில் ஒருவன் .*************************************


இனி 2010 ஜனவரி 27 இரவு 10 மணி ...


ரீமா சென் ஒரு சிறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் . அவர் 800 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சோழர்களை பத்தி அகழ்வாராய்ச்சி செய்ய இந்திய அரசு அனுமதி வழங்குகிறது . அவருக்கு உதவியாக ஆண்ட்ரியா , எஸ்பி அழகம்பெருமாள் போலீஸ் துணையோடு தேடிச் செல்கிறார் . கூடவே , கார்த்தி தலைமையில் பணியாளர்களும் செல்கின்றனர் .

அக்கால சோழர்கள் பாண்டியர்களுடனான மோதலில் பலர் கொல்லப்படுகின்றனர் . அதில் தப்பிய சோழர்கள் பாண்டியர்களின் குலத்தெய்வ சிலையுடன் தப்பித்து செல்கின்றனர் . போகும்போது யாரும் தம்மை பின்தொடர்ந்து வராமலிருக்க பல பயங்கரமான ஆபத்துககளை உருவாக்கி வைத்து விட்டு தப்பித்து சென்று விடுகின்றனர் .செல்லும் வழியெல்லாம் பயங்கரமான ஆபத்துக்களைக் கண்டு தோழர்கள் இறக்கின்றனர் . இதனால் பயப்படும் கார்த்தி , ரீமாசென்னின் கண்டிப்பால் உடன் செல்கிறார் .இந்த ஆபத்துக்களை எல்லாம் ரீமாசென் குழுவினர் கடந்து வரும்போது பல சோதனைகளை சந்திக்கின்றனர் . பார்க்க பாவமாக இருக்கிறது .

கடைசியில் சோழர்கள் வாழ்ந்த இடத்துக்கு வரும் போது இன்னும் சோழர்கள் உயிரோடு இருக்கின்றனர் . அந்த சோழர்களின் அரசன் பார்த்திபன் . பார்த்திபன் அந்த மக்களை ஆண்டு வருகிறார்.

ரீமாசென்னும் சிலரும் அக்கால பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று பின்னர் தான் தெரிய வருகிறது . ரீமாசென் பார்த்திபனை மயக்கி ராணியாகி பழி வாங்க நினைக்கிறார் . ரீமாசென் பழி வாங்கினாரா .. இல்லையா , பார்த்திபன் என்ன ஆனார் என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .

இந்த படத்தை இயக்கிய செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் . என்ன அருமையாக எடுத்திருக்கிறார் .

இந்திய சினிமாவில் ஒரு புதிய கதைக்களம் . ஹாலிவுட் தரத்துக்கு படத்தை எடுத்திருக்கிறார் . படத்தில் எத்தனை எத்தனை திருப்பங்கள் . அசத்தி இருக்கிறார் . 3 வருட உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது .

ஆனால் படம் இவ்வளவு நீளம் தேவையில்லை . படம் பார்த்து முடிக்கும் போது ஒருவித அயர்ச்சி தள்ளாட வைக்கிறது .

ரீமாசென் , பார்த்திபன் கார்த்தி , ஆண்ட்ரியா பாத்திரத்துக்கேற்ப நடித்துள்ளனர் .

இசை ஜீவி பிரகாஷ் . ஒரளவே பிரகாஷிக்கிறார் . இன்னும் நிறைய முயற்சிகள் தேவை .

படத்தில் சிலசில ஓட்டைகள் இருந்தாலும் படம் பார்க்கலாம் .


ஆயிரத்தில் ஒருவன் _ தள்ளாடும் வீரர்களில் ஒருவன் .


**********************************

Post Comment

Wednesday, January 27, 2010

வரமாய் ஒரு தட்சணை ...

வரமாய் ஒரு தட்சணை

அலைந்தேன் திரிந்தேன்
எதுஎதுக்கோ _ நீங்கள்
எதுவும் நினைப்பது போல‌
வேறொன்றும் இல்லை .பாசம் கொட்டி வளர்த்து
வந்தேன் _ என் கஷ்டத்தை
நினைக்காமலே ...
கேட்டதெல்லாம் வாங்கிக்
கொடுத்தேன் _ ஆனால்
இப்போது அவள் கேட்பது
என் மருமகனாக மாப்பிள்ளையை .பெயரும் மனசும் வெள்ளையாய்
இருந்து என்ன பயன் ?.
பொன் பொருளல்லவா
வேண்டும் எனக்கு ...நான் உழைத்தெல்லாம்
சாப்பாட்டுக்கே பத்தல ..
உலகத்தில் ஆயிரம் இருக்கு..
அதை தேடி அலையாத‌
சோம்பேறியல்ல நான் .
மாப்பிள்ளை சந்தைக்கு
சென்றால் யானை விலை
குதிரை விலையாம் ..
நானும் விலை பேசுகிறேன்
மாப்பிள்ளையை என் செல்லத்துக்கு ...வரலாற்றிலே பெண் சுயம்வரம்
நடத்தினாளாம் .. மாப்பிள்ளை
ஓடோடி வந்தனரே ...
நானும் சுயம்வரம் நடத்த‌
அந்த காலத்துக்கே போகணுமோ ?...நானும் அணையைக் கட்டி
வழிமேல் விழி வைத்து
காத்திருக்கிறேன் ...
ஊருக்குள் வராத
ஆற்றை எண்ணி ...
வருமா என் தாகம் தீருமா ..


****************************************

Post Comment

Sunday, January 24, 2010

ஆயிரத்தில் நான் ஒருவன் - 100 வது பதிவு


அன்பு மிக்க வலைப்பதிவு நண்பர்களே ,

நான் இன்று எனது 100 வது இடுகையை பதிவிடுகிறேன் . சென்ற வருடம் ஏப்ரல் 19ம் தேதி முதல் இடுகையை இட்ட நான் இன்று ஆயிரத்தில் நான் ஒருவன் இடுகையின் மூலம் 100 வது பதிவிடுகிறேன் . உங்களின் கருத்துக்களினாலும் , பாராட்டுக்களினாலும் , வாழ்த்துக்களினாலும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஆதரவுகளினாலும் தான் என்னால் 100 இடுகைகளை எழுத முடிந்திருக்கிறது .

என்னுடைய எழுத்தை அங்கீகரித்து என்னையும் உங்களில் ஒருவனாக்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை .

எனக்கு இதுவரை 57 பேர் பாலோயர்ஸ் ஆகி உள்ளனர் .

கவிதை எழுத தெரியாதே !
பெண்ணே உன்னை
பார்க்கும் வரையிலே !
நாள்தோறும் உன் முகம்
தேடி வந்தேன் என் முகம்
மறக்கும் வரை !!

இதுதான் காதலோ !! உன்னில்
என்னைத் தொலைத்தேனே ...


***********************************

அப்புறம் குட்டியாய் குட்டி விமர்சனம்

நான் நேற்று தான் குட்டித் திரைப்படம் பார்த்தேன் . ஹீரோ முதன்முதலில் ஒரு இடத்தில் ஹீரோயினை பார்க்கிறார் . காதல் வருகிறது . ஹீரோயினும் எம்பி பையனும் காதலிக்கிறார்கள் . அந்த நேரத்தில் ஹீரோ தன் காதலை சொல்கிறார். ஹீரோவும் எம்பி பையனும் போட்டிப் போடுகிறார்கள் . யார் காதல் ஜெயிக்கிறது என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .....

சரியில்ல்லாத கதையும் காட்சிகள் மனதில் ஒட்டாத திரைக்கதையும் ஒரு படத்தை தோல்வியடைய செய்கிறது என்பதற்கு இந்த குட்டி படம் சாட்சி .

படம் ஆரம்பம் முதலே குழப்பங்கள் . தனுஷ் என்ற அருமையான நடிகரை வீணடித்தடிருக்கிறார்கள் . காட்சிகள் , திரைக்கதை ரொம்ப சொதப்பல் .
ஒரே ஆறுதல் தனுஷ் .

ஸ்ரேயா சும்மா வந்து போகிறார் . கதையில் தான் குழப்பம் என்றால் இவர் முகத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள் . எதையோ இழந்தது போல ...

இந்த படத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை .

குட்டி _ கடைக்குட்டி .

***************************************


ஒரே ஒரு தத்துவம்

நாளை நலமாக இருக்க , உங்களை இன்றே நலமாக்கிக் கொள்ளுங்கள் ...


****************************************

ஆயிரத்தில் ஒருவன் என்று தலைப்பு வைத்து விட்டு ஒன்றுமே சொல்ல வில்லையே என்று நீங்க கேட்பது என‌க்கு புரிகிறது .

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை . படம் பார்த்து விட்டு விமர்சன்ம் எழுதிகிறேன் . என்ன சரியா ,,,


******************************************


நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படிக்கும் போதென்று நினைக்கிறேன் . டீச்ச‌ர் ஒரு புத்தகம் வாங்கனும் என்று எல்லோரிடமும் சொல்லி இருந்தார் . அந்த புத்தகத்தை பள்ளி நிர்வாகம் வெளியிடும் . அது பாட புத்தகம் அல்ல . இந்த பொறுப்பு என் வகுப்புத் தோழியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது .

அந்த தோழி என்னிடம் வந்து புத்தகத்தை வாங்கிக்கோ என்றாள் . நான் முடியாது என்று மறுத்து விட்டேன் . மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினாள் . நான் முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன் . அவள் கையை தட்டி விட்டேன் . அப்போது அவளின் வளையல் உடைந்து லேசா ரத்தம் வந்தது .

எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது . அதை பார்த்த நான் என்ன நீ நாந்தான் வேண்டாமுன்னு சொல்றேனே , சே இப்படி ஆயிருச்சே என்று வருத்தப்பட்டேன் .

அவளுக்கு அழுகை வந்திருச்சி . நான் சாரி சொன்னேன் . தெரியாம இப்படி பண்ணிட்டேன் . சரி நான் புக் வாங்கிக்கிறேன் . உடனே அவள் , பரவாயில்லை சேக் , நான் டீச்ச்ரிடம் சொல்ல மாட்டேன் என்றாள் .

அப்புறம் சில மாதங்கள் கழித்து அந்த பொறுப்பு என்னிடம் வந்தது .


*************************************


நான் எழுதிய பதிவுகளுக்கெல்லாம் பாராட்டி ஆலோசனைகள் தந்து வாழ்த்திய அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறேன் .

நான் எழுதிய 100 பதிவுகளில் எந்த இடுகை உங்களுக்கு பிடித்த இடுகை
கொஞ்சம் சொல்லுங்களேன் .

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக ...

உங்கள் ஸ்டார்ஜன் .

Post Comment

Saturday, January 23, 2010

தமிழா தமிழா ...


தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் . தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே எவ்வளவு இனிமையாக உள்ளது . இப்போது எல்லோருக்கும் பிற மொழி மோகங்கள் நம்மை ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது . தமிழில் எத்தனை நூல்கள் உள்ளது . அதனை பாதுகாக்கிறோமா என்றால் இல்லையெனலாம் . தமிழனாக இருந்தால் மட்டும் போதாது . தமிழை பாதுகாக்க வேண்டும் . தமிழில் உள்ள நூல்களை பாதுகாக்க நம்மால் ஆன சிறு முயற்சி மேற்கொள்ள வேண்டும் .

தமிழ் இலக்கிய நூல்களை பத்தி நாம் அறிந்து கொள்வதற்கு நான் இங்கே தொகுத்து தந்துள்ளேன் .


தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் , மருத்துவ நூல்கள் எனப்படும் சித்தர் எழுதிய இலக்கிய நூல்கள் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது . காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தையே தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தொன்மையான தமிழ் மொழிகளின் மிக மூத்த நூல் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று கூறப்படுகிறது.

இலக்கியம் தோன்றியபிறகே அதனை ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்கமுடியும் என்பதால், அகத்தியத்திற்குமுன்னரே தமிழில் சிறப்பான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் .

இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற மூத்த தமிழ் நூல் தொல்காப்பியமே. இதுவும் இலக்கண நூல்தான்.

[ கி.மு.300 - கி.பி 100. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்க முற்பட்டனர் தமிழ் அறிஞர்கள். அப்போது தோன்றியவையே சங்கம் இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.அதோடு
இக்காலக் கட்டம் கடைச் சங்ககாலம் எனப்படுகிறது]

சங்க இலக்கியம்

சங்க இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. பத்துப் பாட்டு.
2. எட்டு தொகை.
3. பதினெண் கீழ்க்கணக்கு.

பத்துப் பாட்டு

இவற்றில் பத்துப்பாட்டு ஒரு தனிப்பட்ட நூல் அல்ல. பல நூல்களின் தொகுப்பு.

மொத்தம் எட்டுப் புலவர்கள் எழுதிய பாடல்கள் பத்தைத் தொகுத்து பத்துப்பாட்டு என்று கூறினர். இவற்றில் ஒவ்வொரு பாட்டும், தனி நூல் என்று சொல்லத்தக்க அளவில் முழுமையானவை. இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் 100 அடிகளுக்கு மேலானவை. 500 அடிகள் வரை கூட சில போகும், சில பத்துப்பாடல்கள் .

முருகு, பொருநாறு, பான் இரண்டு, முல்லை, பெருகு, வளமதுரைக் காஞ்சி,
மருவினிய கோலநெடுநல் வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை,
கடாத்தொடும் பத்து

அதாவது,

திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை,
பொருநாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்....
ஆகிய 10 நூட்கள் 10 பாட்டு.

எட்டுத் தொகை.

எட்டுத் தொகை நூற்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே, ஆனால், இவற்றுள் எந்தப் பாடலையும் ஒரு தனி நூலாகக் குறிப்பிடமுடியாது. 100 அடிகளுக்குக் கீழ்ப்பட்ட இந்த
எட்டுத் தொகை நூலக்ளை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது.

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐயகுறுநூறு பதிற்றுப்பத்து, பரிபாடல்
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு...., ஆகியவை இந்த 8 நூல்கள் ஆகும்.

பதினெண் கீழ்க்கணக்கு.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் என்போர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியர்களை வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில்தான் முச்சங்கத்தின் கடைசியான கடைச்சங்கம் அழிந்தது. தமிழர்களின் கலை,
கலாச்சாரம், நாகரிகம் நசிய தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள்.
இதனை 'சங்கம் மருவிய காலம்' என்பார்கள்.அப்போது தோன்றிய நூல்கள் பதினெண்கீழ்க் கணக்கு என்று அழைக்கப்படுகிறது.

ஐந்தோ அல்லது அதற்கு கீழோ அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க்கணக்கு நூல். அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூலகள் . மேற்கணக்கு நூல்களைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள்.(பத்துப்பாடல், எட்டுத்தொகை)

அறம்,பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில் எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூல்கள்.
நாலடி, நான்மணி,நாநாற்பது ஐந்திணை, முப்பால்,கடுகம், கோவை. பழமொழி -மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியோடு ஏலாதி என்பதும் கைநீலையுமாம் கீழ்க்கணக்கு.

(பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைச் சொல்வது உண்டு.
அது பற்றிய குறிப்பைக் காணவில்லை.ஒருவேளை முப்பால் எனச் சொல்லப்
பட்டிருப்பதால் இருக்கலாம்?)

நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனிவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி
முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய 11
அற ஒழுக்க நூல்களும்,

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய 7 அகத்துறை (காதல்) நூல்களும் சேர்த்து 18 நூல்கள் பதினென்கீழ்க்கணக்கு நூல்களாக வருகின்றன. இவையே சங்க கால நூற்கள்.


செய்யுள் இலக்கியம்

காகிதமும் அச்சு இயந்திரமும் இல்லாத காலத்தில், ஓலைச் சுவடிகளில் எழுதிப் படிப்பதும், சுவடிகளைப் பேணிக் காப்பதும் கடினமானதாக இருந்தது. செய்யுள் வடிவங்களைப் பெற்ற கலை இலக்கியங்கள் எளிதில் மனனம் செய்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஏற்றதாக, பயனுடையதாக விளங்கியது. எத்தகைய செய்திகளானாலும் அவற்றைக் கல்லிலோ, செப்புப் பட்டயங்களிலோ ஓலைச் சுவடிகளிலோ எழுதும் போது, செய்யுள் வடிவமே கையாளப்பட்டது. அவ்வாறு, செய்யுளுருவம் பெற்ற மருத்துவம், தனித்த இலக்கிய வகையாக வளர்ச்சியுற்று ஏட்டுருவம் பெறத் தொடங்கிற்று.சித்தர் இலக்கியம்

தமிழில் வழங்கி வரும் மருத்துவ நூல் ஆசிரியர் பெயர்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன. அகத்தியர்12000; திருமூலர்8000; போகர்7000; மச்சமுனி800; சட்டமுனி3000; கொங்கணர்3000; கோரக்கர் சந்திரரேகை என்றே குறிப்பிடப்படுகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் சித்தர் பெயராகவே இருப்பதனால், மருத்துவ இலக்கியம் அனைத்தும் ‘சித்தர் இலக்கியம்’ என்னும் பொதுப்பெயரால் வழங்கப்படுகின்றன.

சித்தர் இலக்கியம் முழுவதும் மருத்துவம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு கூறுகளைக் கொண்ட மருத்துவத்தின் அடிப்படைகளை வகுத்துக் கொண்டு, நோய்களைக் கண்டறிதல், மருந்துகளை நோய்களுக்கு ஏற்றவாறு தயாரித்து அளித்தல், நோய் அணுகாதிருக்க கற்ப முறைகளைக் கூறுதல், சாகா நிலையைப் பெற யோக முறைகளை விளக்குதல் போன்ற செய்திகளையும் முறைகளையும் உரைப்பதால், ‘மருத்துவ இலக்கியம்’ என்றும் வழங்கப்படும். அவ்வாறான மருத்துவ இலக்கிய நூல்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்மொழியில் வழங்கி வருவதனால், அவை, ‘தமிழ் மருத்துவ நூல்’ என்று பழமையைச் சுட்டும் பெயராகவும் வழங்கப்படுகின்றன.


அகத்தியர்

தமிழில் காணப்பெறும் மருத்துவ நூல்களில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களே அதிகமாக இருக்கின்றன.கீழ்த்திசைச்சுவடி நூலகத் தொகுப்பில் காணப்பெறும் மருத்துவச் சுவடிகளில் அகத்தியர் பெயரால் வழங்கப் பெறும் 166 சுவடிகள் உள்ளன. அத்தனை செய்யுள்களையும் ஒருவரால் இயற்றிட இயலுமா? என்று எண்ணும் போதே ஒரு வித மலைப்புத் தோன்றுகிறது. அந்நூல்களில் காணப் பெறுவது கற்பனைச் செய்யுள்கள் அல்ல; அறிவியல் கருத்துகளைக் கொண்ட மருத்துவச் செய்யுள்கள்.

அவ்வாறு கூறப்பெறுகின்ற நூல்கள் தொகுக்கப்பெற்ற பட்டியல்களில் காணப் பெறாதவை. அவ்வாறான நூல்களில் சிலவற்றின் விபரம் வருமாறு:

அகத்தியர்81000; அகத்தியர்51000; அகத்தியர்30000; அகத்தியர் 21000; அகத்தியர்18000; அகத்தியர்8000; திருமூலர்8000; பரஞ்சோதி 8000; கோரக்கர் வெண்பா; மச்சமுனி கலிப்பா; சங்கர மாமுனி கிரந்தம் போன்றவையாகும்.

இந்த சுவடிகள் எல்லாம் காலப்போக்கில் அழிந்து வருகிறதே . இதனை பாதுகாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது .


மிகவும் நலிந்தும் சிதைந்தும் காணப்படும் சுவடிகளும், நல்ல நிலையிலும் சிதைவுகள் ஏதுமில்லாத நிலையில் உள்ள சுவடிகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் இடைப்பகுதி மட்டுமே உள்ள சுவடிகளும், முழுவதும் இருந்தாலும் படித்தறிய முடியாத நிலையில் உள்ள சுவடிகளுமாக இருக்கின்றன.

தமிழ் நாட்டில் உள்ள சுவடி நிலையங்களாவன:

1. தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாப்பதுடன், அவற்றை ஆய்வு செய்வதற்கென்று ‘ஓலைச் சுவடித்துறை’ என்றொரு தனித்துறையையும் இயக்கி வருகிறது. அத்துறையில் சுமார் 5000 சுவடிகள் இருக்கின்றன. அவற்றுள் மருத்துவச் சுவடிகள் மட்டும் ஏறத்தாழ 60 சதவீதம் எனலாம்.

2. சென்னை, அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலகம், பல்லாயிரக் கணக்கான சுவடிகளின் களமாக விளங்குகிறது. இந்நூலகம்

ஆய்வாளர், சுவடியியல் கற்போர், பதிப்பாளர், மருத்துவர், கல்வியாளர் போன்ற அனைவரும் பயன்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கிறது. இந்நிலையத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளின் பட்டியல் பின்னிணைப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

3. தஞ்சைச் சரசுவதி மஹால் நூல் நிலையம், தஞ்சை மன்னர் சரபோஜி (கி.பி. 1798 -1832) அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனத் தொகுக்கப்பெற்று பாதுகாக்கப் படுகின்றன. இந்நிலையத்தில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட 396 மருத்துவச் சுவடிகள் உள்ளன.

4. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 270 மருத்துவச் சுவடிகளைத் தொகுத்திருக்கிறது. அவற்றுள் சில பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன.

5. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு 478 தலைப்புகளைக் கொண்ட சுவடிகளைச் சேகரித்துள்ளது.

6. மத்திய அரசால் 1924–இல் நீதி அரசர் உஸ்மான் தலைமையில் அமைக்கப்பெற்ற சித்த மருத்துவ நூலாய்வுக்குழு, அதனது அறிக்கையில், 594 சுவடிகளைத் தொகுத்திருப்பதாக அறிவித் திருக்கிறது.

7. உ.வே.சாமிநாதையர் நூலகம், 15 மருத்துவச் சுவடிகளைப் பாதுகாக்கிறது.

8. விருத்தாசலம், குமார வீரசைவ மடத்தில் 15 மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன.

9. பாண்டிச்சேரி, பிரஞ்சுஇந்தியக் கலைக்கூடம் 80 சுவடிகளைப் பாதுகாக்கிறது.

10. மதுரை, தமிழ்ச்சங்கம் 24 தலைப்புகளைக் கொண்ட நூல்களைப் பாதுகாக்கிறது.

11. திருவனந்தபுரம், கீழ்த்திசைச் சுவடி நூலகம் 165 மருத்துவச் சுவடி களைக் கொண்டிருக்கிறது.

12. சென்னை, ஆசியவியல் நிறுவனம் பல சுவடிகளைத் தொகுக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

13. மேற்கண்ட நிலையங்களில் காணப்படும் சுவடிகள் மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்கள், மருத்துவச் சாலைகள், மருத்துவர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், துறவிகள், மடாலயங்கள், சித்தர் பீடங்கள், கோயில்கள் எனப் பல்வேறிடங்களில் மேற்குறிப்பிட்ட தொகுப்புள் அடங்காத சுவடிகள் பயன் கருதாது முடங்கிக் கிடக்கின்றன.

த‌மிழில் தோன்றி மறைந்து விட்டதாகக் கருதப்படும் மிகச் சிறந்த நூல்கள் பல தமிழல்லாத பிற மொழிகளில் காணப்படுகின்றன. பிறமொழிகளில், மிகவும் குறிப்பாக சமஸ்கிருதம், திபெத்தியன், அரபிக், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் வழங்கிவரும் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவ நூல்களாகக் காணப்படுகின்றன என்பர். அம்மொழிகளில், தமிழ் மருத்துவ நூல்கள் எளிதில் கிடைக்கக் கூடியவையாகவும், திரண்ட மருத்துவக் கருத்துகளைத் தரக் கூடியவையாகவும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன.

சித்த மருத்துவத்தை மரபு வழியாக அறிந்த தொழில்முறை மருத்துவர்கள், தங்களுக்கு வேண்டிய சித்த மருத்துவ முறைகளை அறிய அம்மொழிகளையே நாடி அறிந்து வருகின்றனர் .


எனவே நாம் நம்மால் ஆன சிறு முயற்சியாக தமிழ் நூல்களை பாதுகாக்க முயற்சி மேற்கொள்வோமா ...

Post Comment

Thursday, January 21, 2010

விடியலைத் தேடி ...

கொடி பிடிக்கவில்லை
கோசம் போடவில்லை
கோட்டைக்கும் போகவில்லை
தெருக்கோடிக்கும் வரவில்லை
ஆயினும் கோடிகளில் புரள
வைத்தனரே என்னை !!
கேட்டால் கைம்பெண்ணாம் நான் !!!


நீ ஆசையாய் இட்ட
வளையலும் நொறுங்கியது
பூவும் வாடியது
பொட்டும் அழிந்தது
என் கண்ணீராலே !!
கலைமகள் வாசம் செய்த‌
வீணையும் சோக கீதமானதே!!
நீ என்னை விட்டு போனதிலே !!!


கூண்டுக்கிளியாய் இருந்த என்னை
வானம்பாடியாய் திரிய வைத்தாயே !
கல்யாணம் என்ற பந்தத்தாலே
ஆயிரமாயிரம் பந்தங்களை
கண்டேனே உன்னாலே !
இப்போ ஒரு பந்தமும்
இல்லாமல் தனியாய்
தவிக்க வைத்தாயே !!


ஆயினும் ஒரு
சிறிய சந்தோசமே
நீ தந்த உயிருக்காக
என்னை நானே
அர்ப்பணிக்கிறேன் !!.


பெண்ணாய் இருப்பதினால்
தொல்லைகள் பலவும்
சந்தித்தேனே ! நீ
இருந்தால் இதெல்லாம்
தூசியடா எனக்கு !!


உழைக்காத வண்டுகள்
இருக்கும் இங்கே தான் !
நானும் தேனியாய்
வெளியில் காலடி வைத்தேனே !
ஓடி ஒளிகின்றனரே
என்னை கண்டு !!
நானோ வெற்றியெனும்
பாதையை நோக்கி முன்னேற
நீங்களோ தோல்வி எனும்
அகல பாதாளத்திலே !!!
கேட்டால் விதவையாம் நான் !!!


நிம்மதியாய் வேலை செய்ய
விடவில்லையே என்னை !!
உதவி செய்கிறேன் சாக்கில்
உபத்திரம் செய்யாதடா !
முக மலர்ச்சியைக் கொண்ட நீ
உள்ளமெல்லாம் நஞ்சடா
உன் உள்ளம் !!!

மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!


நான் போகிறேன் ...!
என்னவன் போன
இடத்துக்கு அல்ல ...
விடியலைத் தேடி ...

Post Comment

சாலை விதிகளை மீறாதீங்க ...

அன்புமிக்க வலைப்பதிவு நண்பர்களே !

உலகம் சுருங்கி விட்டது . எத்தனை எத்தனை முன்னேற்றங்கள் . அறிவியல் வளர்ச்சி மனிதனை முன்னேற்ற பாதையில் செலுத்துகிறது . தகவல் பரிமாற்றங்கள் , தகவல் தொடர்பு , போக்குவரத்து , நாகரீக வளர்ச்சி , கலாச்சார முன்னேற்றங்கள் இப்படி மக்கள் முன்னேறி வருகிறார்கள் .


மக்கள்தொகை அதிகரிப்பது போல போக்குவரத்தும் பெருகி வருகின்றது . நாளுக்கு நாள் புதிய புதிய வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன . அதுவும் ஒருத்தரிடம் டூவீலர் இருக்கிறதென்றால் அவர் காட்டுற பந்தாவைக் கேட்க வேணாம் . நம்ம ஆள் பாக்கிறதுக்காக வேண்டியே வேகமா போவாங்க .


இவ்வளவு வேகமா போகும் போது சாலை விதிகளை பின்பற்றுவார்களா என்றால் இல்லை . சாலை விதிகளை பின்பற்றாமல் இழப்புகளை நிறைய சந்திக்கிறோம் . நாம எதிர்பாராத இழப்புகளை சந்திக்கிறோம் . நோய் வந்து இறந்து போவதை விட சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நிறைய பெருகி வருகின்றது . என்ன செய்வது ...நான் காலேஜ் படிக்கும் வரை டூவீலர் ஓட்டத் தெரியாது . சைக்கிள் தான் ஓட்டுவேன் . காலேஜ் படிக்கும் போது நண்பர்கள் கொண்டு வரும் டூவீலரை ஓட்ட பழகினேன் .


நான் டிவிஎஸ் கம்பெனியில் வேலைப்பார்க்கும் போது பெரும்பாலும் நிறைய தூரம் மோட்டார் சைக்கிளில் தான் பயணம் செய்வேன் . ஆனால் கவனமாக செல்வேன் . நிதானம் இழக்க மாட்டேன் . இரவில் பயணம் செய்யும் போது கவனமாக செல்வேன் .


நம்ம பஸ் ஓட்டுனர்களை பற்றி கேட்கவே வேண்டாம் . பிளைட் ஓட்டுவதை போல வேகமாக ஓட்டுவார்கள் . இரவு நேரத்தில் ஒரு ஹெட்லைட் மட்டும் தான் போட்டு வருவார்கள் . ஒரு தடவை தூத்துக்குடியில் இருந்து நெல்லை வந்து கொண்டிருந்தேன் . அப்போ இரவு நேரம் . எதிரே தூரத்தில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது . நான் அறியவில்லை . ஒரு ஹெட்லைட் மட்டும் தான் எரிந்தது . ஏதோ டுவீலர் தான் வந்து கொண்டிருக்கிறது என நான் நினைத்தேன் . அருகே வரும் போது தான் தெரிந்தது அது பஸ் என்று .


அந்த பஸ் என்னை உரசுவதுபோல சென்றதால் திடிரென பிரேக் அடித்தேன் . வண்டியை ஓரமாக ஒதுக்கினேன் . இதே நேரம் என்னால் பின்னால் ஏதாவது வாகனம் வந்திருந்தால் என் கதி என்னாயிருக்கும் ?.


அப்புறம் இன்னொரு சம்பவம்


நான் இன்னொரு நாள் டுவீலரில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் போய்க்கொண்டிருந்தேன் . வழியில் ஸ்ரீவைகுண்டம் பாலத்துக்கு அருகில் வரும்போது எதிரில் ஒரு சைக்கிள் நபர் நான் வருவதைக் கவனிக்காமல் ரோட்டை கடந்தார் . அப்போது என் வண்டியில் மோதிவிட்டார் . நான் உடனே பிரேக் அடித்ததில் என் டுவீலர் சரிந்து என் பாதத்தில் பிரேக் லீவர் குத்தி மறுபக்கம் வந்தது . உடனே நான் மயங்கினேன் .


உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்னைத் தூக்கி சோடா தெளித்து மயக்கம் தெளிவித்தனர் . பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஆட்டோக்காரர் என்னை அவர் வண்டியில் ஏத்தி ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார் . என் வண்டியை பக்கத்தில் இருந்த வாகன காப்பகத்தில் சேர்த்தனர் . ஆட்டோக்காரரே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்து டாக்டரிடம் காண்பித்து தையல் போட வைத்தார் . பின்னர் நான் ஓரளவு சுதாரித்துக் கொண்டேன் .


நான் அந்த ஆட்டோக்கார நண்பருக்கு என் நன்றிகளை தெரிவித்தேன் . அவரும் பரவாயில்லை தம்பி என்று சொன்னார் .


அதன்பின்னர் நான் அலுவலகத்து போன் செய்து விபரம் சொன்னேன் . அங்கே இருந்து நண்பர் ஒருவர் வந்தார் . பின் நான் செல்ல வேண்டிய ஊருக்கு என் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றார் . நான் ஊருக்கு மெதுவா மெதுவா பஸ்ஸில் ஏறி வந்தேன் . நான் இப்போதும் அவ்வழியா சென்றால் அந்த இடத்தை மறக்க மாட்டேன் .


அப்புறம் இன்னொரு சம்பவம்


எங்கள் ஷோரூம் இருந்த இடத்துக்கு 200 மீட்டர் தொலைவில் போலீஸ் ஸ்டேசன் உண்டு . போலீஸ் ஸ்டேசன் அருகில் செக்போஸ்ட் வைத்திருந்தார்கள் . வரும் வாகனங்கள் அந்த குறுகிய வழியாக மெதுவாக செல்ல வேண்டும் .


அந்த ஊரில் ஐடிஐ உண்டு . அதில் மோட்டார் மெக்கானிக் சொல்லிக் கொடுக்கும் சார் மிகவும் தங்கமானவர் . எல்லோரிடமும் அன்பா இருப்பார் . என்னிடமும் சார் சார் என்று அன்பா இருப்பார் .


ஒரு நாள் அவரும் அவருடைய மாணவர் ஒருவரும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . செக்போஸ்ட் அருகே வரும் போது எதிரில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது . பின்னாலும் பஸ் வந்து கொண்டிருந்தது . பின்னால் வந்த பஸ் டிரைவரின் அவசர புத்தியால் செக்போஸ்டில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தட்டியில் மோதி அருகில் வந்த ஐடிஐ சார் வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது . இதில் பஸ்ஸில் இருந்தவர்களுக்கு ஒன்றும் இல்லை .


ஐடிஐ சார் வண்டியில் பஸ் மோதியதால் அவரும் அவர் மாணவரும் பலத்த காயம் அடைந்தனர் . அருகில் உள்ள முதலுதவி மையத்தில் முதலுதவி செய்தனர் . உடனே நெல்லை பெரிய மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் . மாணவனுக்கும் பலத்த அடி . சாருக்கு பலத்த அடி . அவருடைய காலை இழக்க வேண்டியதாயிற்று . எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது .********************************************


சாலை பாதுகாப்பு வாரமான ஜனவரி முதல் வாரத்தில் இந்த இடுகையை பதிவிட நினைத்து இருந்தேன் . கால தாமதமாகி விட்டது .

Post Comment

Tuesday, January 19, 2010

அதிலென்ன சந்தேகம் ?...

பதிவர் ஹேமா தன் வலைப்பக்கத்தில் ( உப்புமடச் சந்தி ) ஒரு கதை சொல்லி இருந்தார் . நல்ல அருமையான அழகான கதை . அதை படித்ததும் எனக்கு சிறு வயதில் படித்த கதை ஞாபகத்தில் வந்தது . அந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .

இதோ அந்த கதை :

*******************************************************

ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தான் . நல்ல சொத்து செல்வாக்கு இருந்தும் என்ன பயன் . அவன் ஒரு கஞ்சன் , பேராசைக்காரன் . அடுத்தவங்களுக்கு உதவியே செய்ய மாட்டான் . இப்படி அவன் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது .

பக்கத்து ஊரில் ஒரு வியாபாரி ஒருவன் இருந்தான் . அவன் சிறுசிறு பொருள்களை சந்தையில் விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான் . அவன் பக்கா ஏமாற்றுக்காரன் .அடுத்தவனை எப்படியெல்லாம் ஏமாற்றி சம்பாதிக்ககூடிய வித்தைகள் தெரிந்தவன் . ஆனா அவனை யாரும் சுலபமா ஏமாத்திட முடியாது .

வியாபாரி ஒரு கிளி வளர்த்து வந்தான் . அதுக்கு தினமும் பேச பயிற்சி கொடுத்து வந்தான் . ஆனால் ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேச கத்துக் கொடுத்தான் . அது என்னன்னா , அதிலென்ன சந்தேகம் என்ற வார்த்தையை மட்டும் தான் என்று அந்த கிளிக்கு பேசத்தெரியும் .

ஒரு நாள் இரவோடு இரவாக சந்தைக்கு சென்று அங்கே தான் கொண்டு வந்திருந்த பணம் நகை பொன் வைரம் பொருள்களை எல்லாம் தரையில் புதைத்து வைத்தான் . மறு நாள் காலை , சந்தையில் அந்த கிளியை விற்றுக் கொண்டிருந்தான் .


எல்லோரும் பாருங்க இது அதிசய கிளி ; இது புதையல் இருக்கிற இடத்தை நமக்கு சொல்லும் அதிசய கிளி . இப்போ பாருங்க , அதிசயகிளியே ! இங்கே புதையல் இருக்கா என்று கிளியிடம் கேட்டான் . உடனே கிளியும் அவன் சொல்லிக் கொடுத்தது போல அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது .

உடனே அந்த இடத்தை தோண்டினான் . அங்கே அவன் ஏற்கனவே புதைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து பணம் நகை இருந்தது . இதை பார்த்த மக்கள் அவன் சொன்னதை உண்மை என்று நம்பினர் . அவனும் புதைத்து வைத்த இடங்களை சுட்டிக்காட்டி கிளியே இந்த இடத்தில் புதையல் உள்ளதா என கேட்க கிளியும் அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது . மக்கள் ஆச்சர்யத்தில் திளைத்தனர் . அந்த கிளியை ஏலத்தில் எடுக்க போட்டாபோட்டி போட்டனர் .

இதை பார்த்த செல்வந்தரும் ஏலத்தில் கலந்து கொண்டு 10000 பொன் கொடுத்து ஏலத்தில் அந்த கிளியை வாங்கினான் . செல்வந்தருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . இனி நாந்தான் உலகில் பெரிய பணக்காரன் என்று கிளி முன்னிலையில் சொன்னான் . உடனே கிளி அதிலென்ன சந்தேகம் என்று சொன்னதும் கிளிக்கு முத்தம் கொடுத்தான் செல்வந்தர் .

உடனே செல்வந்தர் அவன் வீட்டில் தரையை , அந்த கிளியிடம் காண்பித்து என் அதிசய கிளியே !! இந்த இடத்தில் புதையல் இருக்கிறதா ? என்று கேட்டான் . கிளி உடனே அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது . அந்த இடத்தை தோண்டினான் . அந்த இடத்தில் ஒன்றும் கிடைக்க வில்லை . அப்புரம் , வேறொரு இடத்தை காண்பித்து இந்த இடத்தில் புதையல் உண்டா என்று கேட்டான் . கிளியும் அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது . அந்த இடத்திலும் ஒன்றும் கிடைக்க வில்லை . இப்படி செல்வந்தர் தன் வீட்டில் எல்ல இடத்திலும் தோண்டினான் .

இப்படி தன் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினான் . புதையல் கிடைத்தபாடில்லை . கிளியும் வழக்கம் போலவே , அதிலென்ன சந்தேகம் என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் சொல்ல வில்லை .

ஆஹா இந்தகிளிக்கு அதிலென்ன சந்தேகம் என்ற வார்த்தை மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கு என்பதை உணர்ந்தான் . அந்த வியாபாரி என்னை நல்லா ஏமாத்தி விட்டான் . பேராசைப்பட்டு இருந்த சொத்தை எல்லாம் இழந்தேனே !! என்னைப்போல இந்த உலகில் அடிமுட்டாள் யாரும் இல்லை என்று கதறி அழுதான் .

உடனே கிளி அதிலென்ன சந்தேகம் என்றது .

கிளி சொன்னதை கேட்டு இடிந்து போனான் செல்வந்தர் .

********************************************************


ஹேமாவின் கதையை கேட்க

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்