இந்த பெயரே வித்யாசமா இருக்கே.. அதுவும் நம்ம உலக நாயகன் இந்த படத்துல நடித்திருக்கிறார் என்றால் வித்யாசம் இல்லாமல் இருக்காது.
ரொம்ப எதிர்பார்ப்புக்குள்ள படம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு விமர்சனம் எழுதியது. அதுக்கப்பறம் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவோமே என்று தோன்றியது.
நிஷா என்ற அம்புஜம் (திரிஷா) பிரபல சினிமா நடிகை, மதனகோபால் (மாதவன்) தொழிலதிபர் இருவரும் காதலிக்கின்றனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் திரிஷாவை சந்தேகப்படுகிறார் மாதவன். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுகின்றனர். இதனால் மனக்கசப்படைந்த திரிஷா பிரான்ஸில் இருக்கும் தனது பள்ளித்தோழி சங்கீதா வீட்டுக்கு செல்கிறார்.
மேஜர் ஆர். மன்னார் (கமலஹாசன்) தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவரின் நண்பர் ரமேஷ் அரவிந்த், ஆஸ்பத்திரியில் உயிருக்காக போராடிவருவதால் மருத்துவசெலவுக்காக பணம் தேவைப்படுவதால் கமலும் பிரான்ஸ் செல்கிறார். திரிஷா வேறுயாருடனாவது நெருங்கி பழகுகிறாரா என்பதை வேவு பார்க்க கமலஹாசன் மாதவனால் அனுப்பி வைக்கப்படுகிறார். ப்ரான்ஸில் த்ரிஷாவை பிந்தொடர்ந்து அவரைபற்றிய தகவல்களை அவ்வப்போது கமலஹாசன் மாதவனுக்கு அனுப்பி வைக்கிறார்.
சங்கீதாவுடனும் அவரின் 2 குழந்தைகளுடனும் சந்தோசமாக ஜாலியாக இருக்கும் திரிஷா தன்காதலனை மறக்காமல் இருக்கிறார். இதனால் பணம்தர மறுக்கும் மாதவனிடம் கமலஹாசன் த்ரிஷாவை பற்றி அவதூறு தகவல்களை தருகிறார். திரிஷாவுடன் நெருங்கி பழகும் கமல் தன் குடும்பத்தை பற்றி குறிப்பிடும்போது, தன் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறுகிறார். கமல் கூறும் சூழ்நிலைகளை அறிந்த திரிஷா அந்த விபத்துக்கு தான்தான் காரணம் என்று அறிந்து வேதனைப்படுகிறார். மாதவனின் டார்ச்சரால் வெறுப்படைந்திருக்கும் திரிஷாவுக்கு கமலுடன் ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது.
இருவரும் இணைந்தார்களா..., மாதவன் - திரிஷா காதல் என்ன ஆனது?.. முடிவு என்ன?.. என்பதை படம் பாக்காதவங்க படம்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசனுடன் இணைந்து திரிஷா, மாதவன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இசை: தேவிஸ்ரீ பிரசாத். கதை திரைக்கதை வசனம்: கமலஹாசன். இயக்கம்: கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்.
மன்மதன் அம்பு படம் இன்னொரு பஞ்சதந்திரம் போலவோ அல்லது தெனாலி போலவோ இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் வெளியானது.
நல்ல கலகலப்புடன் கமலஹாசனுக்கே உரிய பாணியில் காமெடி செய்து படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறார். தன் நண்பனின் மருத்துவத்துக்காக வேவுபார்க்க செல்லும் கமல் வேவுபார்க்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு. வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. கதையும் நல்ல கதை.
பணம் தரமறுக்கும் மாதவனுடன் கெஞ்சும் காட்சிகளும், தன் குடும்பத்தை குறிப்பிடும் ப்ளாஸ்பேக் காட்சிகளிலும் கமல் மின்னுகிறார். தெனாலி படத்தில் இயல்பான நடிப்பில் கலக்கிய கமல் இந்த படத்திலும் அதே கெட்டப்பில் அசத்துகிறார். திரிஷா, சங்கீதா குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் காட்சிகளில் கமல்ஹாசனின் காமெடி களைகட்டுகிறது.
ஒரே ஒரு பாடல்காட்சியில் வந்தாலும் அசத்தலான நடனத்தினாலும் துறுதுறுவென நடிக்கும் சூர்யா நம்மை கவருகிறார்.
திரிஷா தன் காதலன் மாதவனை மறக்கமுடியாமலும் சந்தேகப்படும் காதலனை சமாளிக்கும் இடங்களிலும் தன் நடிப்பால் கவர்கிறார். தன்னை பிந்தொடர்ந்து வருபவர் கமல்தான் என்று தெரியாமல் படத்தயாரிப்பாளாராக வருபவர்தான் என்று தெரிந்து மொத்தி எடுப்பது நல்ல காமெடி. திரிஷா சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பது நல்லாத்தான் இருக்குது.
மாதவன் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு பொருந்தி முகத்தில் பலவித எக்ஸ்பிரசன்ஸ். எப்போதும் தண்ணியிலே இருக்கும் மாதவன் கலக்கியிருக்கிறார். தன் நண்பருக்காக பணம்கேட்கும் கமலிடம், அதான் கொடுத்த வேலையில் ஒண்ணுமே கண்டுபிடிக்கலியே.. பணம் எதுக்கு கொடுக்கணும்.. நீங்க உடனே ஊருக்கு வந்திருங்க என்று சொல்லும் இடங்களிலும் கமல் கூறும் பொய்யை உண்மையென நம்பி திரிஷாவை சந்தேகப்பட்டு டெர்ராகும் இடங்களிலும் நல்ல நடிப்பு.
பணம் கேட்கும் காட்சியில் மாதவனும் கமலும் நல்ல நடிப்பு. இதுமாதிரி தான், வீடு பார்க்கும் புரோக்கர்கள் கஷ்டப்பட்டு வீடுபார்த்து கொடுக்கும்போது வீட்டு உரிமையாளரும் வீட்டை வாங்குபவரும் சேர்ந்து பேசிவைத்துக் கொண்டு புரோக்கரை வெட்டிவிடும் காட்சி என் மனதில் ஓடியது. விசு இயக்கத்தில் வந்த குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் எஸ்வி சேகர் நடித்த காட்சி. அதேமாதிரி இயல்பான தவிப்பு கமலின் முகத்தில் தெரிந்தது.
நீலவானம் பாடல் ஒரு புதிய முயற்சி. கமல் தனது ப்ளாஷ்பேக்கை பின்னாலிருந்து சொல்வது போன்று எடுக்கப்பட்ட காட்சி தமிழ்சினிமாவுக்கு புதுசு.
ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, சங்கீதா, மாதவன் அம்மாவாக வரும் பிண்ணனி பாடகி உஷாஉதூப், ஸ்ரீமன், படத்தயாரிப்பாளராக வருபவர் என்று பலர் நடித்திருந்தாலும் சங்கீதா பரவாயில்லை. மாதவனின் மாமாமகளாக வரும் களவாணி ஓவியா ஒரே ஒரு காட்சியில் தலைக்காட்டுகிறார்.
இசை தேவிஸ்ரீ பிரசாத் நீலவானம் என்ற பாடலில் மட்டுமே ஜொலிக்கிறார். பாடல்கள் சுமார்ரகம்தான்.
இயக்கம் கேஎஸ் ரவிக்குமார். கதை, திரைக்கதை, வசனம் என்ற பொறுப்புகளை கமலே எடுத்துக்கொண்டதால் கேஎஸ்ஆர் தனித்து விடப்பட்டுள்ளார். நல்ல கதையிருந்தும் சொதப்பலான திரைக்கதையினால் படம் அந்தளவுக்கு பேசப்படவில்லை. திரைக்கதையை கேஎஸ்ஆர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லையென்றால் கமல் திரைக்கதை வசனத்தை நம்ம கிரேஸிமோகனிடம் கொடுத்திருந்தால் படத்தை கலகலக்க செய்திருப்பார். குறிப்பிட்ட சில காட்சிகளை தவிர்த்து படம் ஒட்டவில்லை. இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கவேண்டிய கதை. எல்லாம் மிஸ்ஸிங்.
படம் ஆரம்பித்து சுமாராக செல்லும் கதையில் கமல் வந்ததும் விறுவிறுப்பாக செல்வது போல இருந்தாலும் இடைவேளைக்கு பின்னர் படம் ஆமைவேகத்தில் செல்கிறது. அதுவும் கடைசி அரைமணி நேரம் எப்படா படம் முடியும் என்று தோன்றவைக்கிறது.
இப்படியொரு கிளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்கலை.. மாதவனையும் சங்கீதாவையும் சேர்த்துவைப்பது கொடுமையிலும் கொடுமை. முதலிலே தெரிந்துவிடுகிறது கமலும் திரிஷாவும் ஜோடி என்று.
இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம்.
மன்மதன் அம்பு - கூர் மழுங்கியது
,