Pages

Wednesday, December 29, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

மன்மதன் அம்பு

இந்த பெயரே வித்யாசமா இருக்கே.. அதுவும் நம்ம உலக நாயகன் இந்த படத்துல நடித்திருக்கிறார் என்றால் வித்யாசம் இல்லாமல் இருக்காது.
ரொம்ப எதிர்பார்ப்புக்குள்ள படம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு விமர்சனம் எழுதியது. அதுக்கப்பறம் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவோமே என்று தோன்றியது.

நிஷா என்ற அம்புஜம் (திரிஷா) பிரபல சினிமா நடிகை, மதனகோபால் (மாதவன்) தொழிலதிபர் இருவரும் காதலிக்கின்றனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் திரிஷாவை சந்தேகப்படுகிறார் மாதவன். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுகின்றனர். இதனால் மனக்கசப்படைந்த திரிஷா பிரான்ஸில் இருக்கும் தனது பள்ளித்தோழி சங்கீதா வீட்டுக்கு செல்கிறார்.


மேஜர் ஆர். மன்னார் (கமலஹாசன்) தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவரின் நண்பர் ரமேஷ் அரவிந்த், ஆஸ்பத்திரியில் உயிருக்காக போராடிவருவதால் மருத்துவசெலவுக்காக பணம் தேவைப்படுவதால் கம‌லும் பிரான்ஸ் செல்கிறார். திரிஷா வேறுயாருடனாவது நெருங்கி பழகுகிறாரா என்பதை வேவு பார்க்க கமலஹாசன் மாதவனால் அனுப்பி வைக்கப்படுகிறார். ப்ரான்ஸில் த்ரிஷாவை பிந்தொடர்ந்து அவரைபற்றிய தகவல்களை அவ்வப்போது கமலஹாசன் மாதவனுக்கு அனுப்பி வைக்கிறார்.

சங்கீதாவுடனும் அவரின் 2 குழந்தைகளுடனும் சந்தோசமாக ஜாலியாக இருக்கும் திரிஷா தன்காதலனை மறக்காமல் இருக்கிறார். இதனால் பணம்தர மறுக்கும் மாதவனிடம் கமலஹாசன் த்ரிஷாவை பற்றி அவதூறு தகவல்களை தருகிறார். திரிஷாவுடன் நெருங்கி பழகும் கமல் தன் குடும்பத்தை பற்றி குறிப்பிடும்போது, தன் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறுகிறார். கமல் கூறும் சூழ்நிலைகளை அறிந்த திரிஷா அந்த விபத்துக்கு தான்தான் காரணம் என்று அறிந்து வேதனைப்படுகிறார். மாதவனின் டார்ச்சரால் வெறுப்படைந்திருக்கும் திரிஷாவுக்கு கமலுடன் ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது.

இருவரும் இணைந்தார்களா..., மாதவன் - திரிஷா காதல் என்ன ஆனது?.. முடிவு என்ன?.. என்பதை படம் பாக்காதவங்க படம்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசனுடன் இணைந்து திரிஷா, மாதவன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இசை: தேவிஸ்ரீ பிரசாத். கதை திரைக்கதை வசனம்: கமலஹாசன். இயக்கம்: கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்.

மன்மதன் அம்பு படம் இன்னொரு பஞ்சதந்திரம் போலவோ அல்லது தெனாலி போலவோ இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் வெளியானது.

நல்ல கலகலப்புடன் கமலஹாசனுக்கே உரிய பாணியில் காமெடி செய்து படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறார். தன் நண்பனின் மருத்துவத்துக்காக வேவுபார்க்க செல்லும் கமல் வேவுபார்க்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு. வசன‌ங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. கதையும் நல்ல கதை.


பணம் தரமறுக்கும் மாதவனுடன் கெஞ்சும் காட்சிகளும், தன் குடும்பத்தை குறிப்பிடும் ப்ளாஸ்பேக் காட்சிகளிலும் கமல் மின்னுகிறார். தெனாலி படத்தில் இயல்பான நடிப்பில் கலக்கிய கமல் இந்த படத்திலும் அதே கெட்டப்பில் அசத்துகிறார். திரிஷா, சங்கீதா குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் காட்சிகளில் கமல்ஹாசனின் காமெடி களைகட்டுகிறது.

ஒரே ஒரு பாடல்காட்சியில் வந்தாலும் அசத்தலான நடனத்தினாலும் துறுதுறுவென நடிக்கும் சூர்யா நம்மை கவருகிறார்.

திரிஷா தன் காதலன் மாதவனை மறக்கமுடியாமலும் சந்தேகப்படும் காதலனை சமாளிக்கும் இடங்களிலும் தன் நடிப்பால் கவ‌ர்கிறார். தன்னை பிந்தொடர்ந்து வருபவர் கமல்தான் என்று தெரியாமல் படத்தயாரிப்பாளாராக வருபவர்தான் என்று தெரிந்து மொத்தி எடுப்பது நல்ல காமெடி. திரிஷா சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பது நல்லாத்தான் இருக்குது.

மாதவன் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு பொருந்தி முகத்தில் பலவித எக்ஸ்பிரசன்ஸ். எப்போதும் தண்ணியிலே இருக்கும் மாதவன் கலக்கியிருக்கிறார். தன் நண்பருக்காக பணம்கேட்கும் கமலிடம், அதான் கொடுத்த வேலையில் ஒண்ணுமே கண்டுபிடிக்கலியே.. பணம் எதுக்கு கொடுக்கணும்.. நீங்க உடனே ஊருக்கு வந்திருங்க என்று சொல்லும் இடங்களிலும் கமல் கூறும் பொய்யை உண்மையென நம்பி திரிஷாவை சந்தேகப்பட்டு டெர்ராகும் இடங்களிலும் நல்ல நடிப்பு.

பணம் கேட்கும் காட்சியில் மாதவனும் கமலும் நல்ல நடிப்பு. இதுமாதிரி தான், வீடு பார்க்கும் புரோக்கர்கள் கஷ்டப்பட்டு வீடுபார்த்து கொடுக்கும்போது வீட்டு உரிமையாளரும் வீட்டை வாங்குபவரும் சேர்ந்து பேசிவைத்துக் கொண்டு புரோக்கரை வெட்டிவிடும் காட்சி என் மனதில் ஓடியது. விசு இயக்கத்தில் வந்த குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் எஸ்வி சேகர் நடித்த காட்சி. அதேமாதிரி இயல்பான ‌தவிப்பு கமலின் முகத்தில் தெரிந்தது.

நீலவானம் பாடல் ஒரு புதிய முயற்சி. கமல் தனது ப்ளாஷ்பேக்கை பின்னாலிருந்து சொல்வது போன்று எடுக்கப்பட்ட காட்சி தமிழ்சினிமாவுக்கு புதுசு.

ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, சங்கீதா, மாதவன் அம்மாவாக வரும் பிண்ணனி பாடகி உஷாஉதூப், ஸ்ரீமன், படத்தயாரிப்பாளராக வருபவர் என்று பலர் நடித்திருந்தாலும் சங்கீதா பரவாயில்லை. மாதவனின் மாமாமகளாக வரும் களவாணி ஓவியா ஒரே ஒரு காட்சியில் தலைக்காட்டுகிறார்.

இசை தேவிஸ்ரீ பிரசாத் நீலவானம் என்ற பாடலில் மட்டுமே ஜொலிக்கிறார். பாடல்கள் சுமார்ரகம்தான்.

இயக்கம் கேஎஸ் ரவிக்குமார். கதை, திரைக்கதை, வசனம் என்ற பொறுப்புகளை கமலே எடுத்துக்கொண்டதால் கேஎஸ்ஆர் தனித்து விடப்பட்டுள்ளார். நல்ல கதையிருந்தும் சொதப்பலான திரைக்கதையினால் படம் அந்தளவுக்கு பேசப்படவில்லை. திரைக்கதையை கேஎஸ்ஆர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லையென்றால் கமல் திரைக்கதை வசனத்தை நம்ம கிரேஸிமோகனிடம் கொடுத்திருந்தால் படத்தை கலகலக்க செய்திருப்பார். குறிப்பிட்ட சில காட்சிகளை தவிர்த்து படம் ஒட்டவில்லை. இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கவேண்டிய கதை. எல்லாம் மிஸ்ஸிங்.

படம் ஆரம்பித்து சுமாராக செல்லும் கதையில் கமல் வந்ததும் விறுவிறுப்பாக செல்வது போல இருந்தாலும் இடைவேளைக்கு பின்னர் படம் ஆமைவேகத்தில் செல்கிறது. அதுவும் கடைசி அரைமணி நேரம் எப்படா படம் முடியும் என்று தோன்றவைக்கிறது.

இப்படியொரு கிளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்கலை.. மாதவனையும் சங்கீதாவையும் சேர்த்துவைப்பது கொடுமையிலும் கொடுமை. முதலிலே தெரிந்துவிடுகிறது கமலும் திரிஷாவும் ஜோடி என்று.

இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம்.

மன்மதன் அம்பு - கூர் மழுங்கியது

,

Post Comment

Thursday, December 23, 2010

கானல் நிலா..!


கானல் நிலா..!

பனிவிழும் இரவுதனில்
நீயும் அருகினில் என்னவளும்
கையிலேந்தி உன்னை ரசிக்கும்போது
அவள் மெல்லமெல்ல நாணுகிறாள்.
உன்னழகை ரசிக்கவா..!
அவளழகை ரசிக்கவா..!
போராட்டத்தில் அவளை
ஜெயிக்க வைத்தது
அவள் தந்த முத்தமன்றோ..!

மெல்ல அவள் துள்ளிதுள்ளி
ஓடும் அழகை ரசிக்கவா..!
கொஞ்சி கொஞ்சி பேசும்
அவளின் காதல்மொழியை ரசிக்கவா..!
வா அருகினில் வாவென
அழைக்கும் அவள்
இமைகளை ரசிக்கவா..!
உன்னுடைய பிரகாசத்தை
மங்கவைக்கும் அவளின்
முகத்தை ரசிக்கவா..!

சலக்கு சலக்கென அவளின்
கொலுசின் சத்தம் கேட்டு
இலைகளின் உள்ளே தூங்கி
கொண்டிருக்கும் பனித்துளியும்
எட்டிப் பார்க்கின்றதே..!

உன்னையும் மறக்கமுடியாமல்
அவள் அழகினில்
என்னை மறந்து
கவிபாடுகின்றேன்..!

விடியலைத் தேடி
கரையும் ஒவ்வொரு
நிமிடமும் உன் அருகாமையை
தேடித் தேடி...!

மறக்கமுடியாத
தருணங்கள் அவை..!

,

Post Comment

Saturday, December 18, 2010

தமிழ்மண விருதுகள் 2010

அன்புள்ள நண்பர்களே!!..

தமிழ்மண நிர்வாகத்தினர் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி பதிவர்களை ஊக்குவித்து வருகின்றனர். தமிழ்மணத்தின் இந்த சேவை மகத்தானது. பதிவர்களும் உற்சாகத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். இந்த விருது விழா இந்த ஆண்டும் தமிழ்மணம் 2010 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ம்தேதிமுதல் விருதுக்கு இடுகைகளை பரிந்துரை செய்யப்பட்டு 16ம்தேதி - 26ம்தேதி வரை முதற்கட்ட வாக்கெடுப்பு நடைபெறுகிறது.நானும் தமிழ்மணம் 2010 விருதுக்கு 3 பிரிவுகளில் இடுகைகளை பரிந்துரை செய்துள்ளேன்.

எனது இடுகைகள்


பிரிவு: 1. அரசியல், சமூக விமர்சனங்கள்.

சாலை விதிகளை மீறாதீங்க.

********

பிரிவு: 2. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்.

யூத்புல் விகடனில் வெளியான ஏழையின் சிரிப்பினிலே.

**********

பிரிவு: 3. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்

வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?..

**********

இந்த மூன்று இடுகைகளையும் பரிந்துரை செய்துள்ளேன். இந்த இடுகைகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, December 14, 2010

கரகர மொறுமொறு - 13/12/2010

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா..

கடந்த டிசம்பர் 9ம்தேதி என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. வலையுலக நண்பர்கள், நண்பர்கள் , உறவினர்கள் அனைவரும் வாழ்த்தியது மிக மகிழ்ச்சியாக அமைந்தது. வலைப்பூ, பேஸ்புக், மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி என்னை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

*************

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தமிழ்2010 கருத்தரங்க செய்திகளை முத்துலட்சுமி மேடம் பதிவின் மூலம் படிக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதில்,

/// நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.///

வாழ்த்துகள் ஹேமா. இன்னும் பலரின் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு முத்துலட்சுமி மேடம் பதிவினை படித்துப் பாருங்கள்.

***********

ஊருக்கு கிளம்பும் சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். சில காரணங்களினால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தாயகம் திரும்புவேன் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கின்ற ஆனந்ததுக்கு அளவே இல்லை. குடும்பம், நண்பர்கள், உறவினர்களை சந்திக்கவேண்டும் என்ற‌ ஆவல் உள்மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு போகணும் என்ற நினைப்பாவே இருப்பதால் நாட்கள் மெல்ல மெல்ல நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்கிறது. எழுதவேண்டும். உங்களிடம் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எழுத உக்கார்ந்தால் 2 வரிக்கூட தாண்ட முடியவில்லை. ‌ நண்பர் அப்துல்காதர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த கட்டுரையை பாதி எழுதினாற்போல இருக்கிறது.

************

ஒரு சிறிய ஒருபாரா கதை ஒன்றை எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே..


சில்லறைக்காசுகள்

"அய்யா.. தர்மம் பண்ணுங்க சாமி" என்றவனை ஏறிட்டுப் பார்த்தேன். "ஏம்ப்பா நல்லாதானே இருக்கே., உழைச்சி சாப்பிடலாமே" என்ற எனக்கு அவன் சொன்னது அதிர்ச்சிதான். "எனக்கு மட்டும் பிச்சை எடுக்கணுன்னு ஆசையா என்ன!!. இந்த 2150 ல எல்லாமே நகரமயமாக்கல், பொருளாதார வீக்கம், விலைவாசி ஏற்றம். இப்படியே போனா, எனக்கு பிச்சை எடுக்கக்கூட தெம்பு இருக்காது. உங்களுக்கு இந்த நிலமை வர்றதுக்குள்ள யோசிங்க சார்."

***********

Post Comment

Sunday, December 5, 2010

கடைசி பஸ்..


ஆளரவம‌ற்ற வெறிச்சோடிய சாலையை முனைடீக்கடையில் உள்ள ஒற்றைபல்பு ஒளிரூட்டிக் கொண்டிருந்தது. அந்த டீக்கடை கூரையின் ஓலைகள் டமடம.. டமடம.. என்று இடித்த இடி எங்கே தன்மேல் விழுந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தன. பளிச்.. பளிச்.. என மின்னல் வேறு கண்ணை பறித்துக் கொள்வதுபோல மிர‌ட்டியது. ரோட்டில் கிடந்த‌ குப்பைகளெல்லாம் 'நாங்கல்லாம் வேறெடத்துக்கு போறோமே..' என்றபடி பறந்தன. மாடசாமி டீக்கடை என்றிருந்த போர்டு காற்றுக்குஏற்ப தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

'அய்யயோ மழை தூத்தப் போவுதே.. இன்னக்கி யாபாரம் அம்புட்டுதேன்.. பத்தர மணிக்கே வரும் கடைசி பஸ், இன்னக்கி பார்த்து பதினோறு மணிஆகியும் காணலியே.. பஸ் வந்தாலாவது எதாவது யாபாரம் இருக்கும். மழைவேற.. சே.. பெரிய தூத்தல் வர்றதுக்குள்ள வீடுபோய் சேர்ந்திரணும்..' என்று நினைத்தபடியே எல்லாச் சாமானையும் சட்டுபுட்டுன்னு எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

முட்டாய் பாட்டலெல்லாம் அழுக்கா இருக்கு.. காலம்பர வந்து துடச்சி வைக்கணும்.. நாளைக்கி வர்ற பால்காரனுக்கு பாக்கிய 2நாளு கழிச்சி தாரேன்னு சொல்லணும். புள்ளைங்க ஆசப்படுற மாதிரி எப்படியாவது கடனஉடன வாங்கியாவது கறிச்சோறு ஆக்கிப்புடணும். எத்தன நாளைக்கிதான் கூழும் கஞ்சியையும் பச்சமுளகாய கடிச்சிக்கிட்டு குடிக்கிறது. ம்ம்ம்.. ம்ம்ம்.., என்ன செய்ய.. வருமானந்தேன் இல்ல.. கருப்பண்ண சாமி.. நீதான் அம்பட்டையும் கொடுக்கணும் என்றதுக்கு கருப்பண்ண சாமி படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

கடய சாத்திட்டு சிமிண்டு சாக்கை தலையில் போட்டபடி 2 எட்டுதான் நடந்திருப்பேன்.. கண்ணெல்லாம் கூசியது.. தூரத்தில் கடைசி பஸ் வந்துகொண்டிருந்தது. ஆட்கள் இறங்கினால் எதாவது யாபாரம் இருக்குமே என்று நினைத்தபடி கடையை நோக்கி திரும்பவும் நடந்தேன். ஒரு பயப்புள்ளயும் இறங்குனமாதிரி தெரியல.. சரி மழைத் தூத்துறதுக்குள்ள வீட்டுக்கு போயிருவோம் என்றபடி நடந்தேன். பஸ்ஸும் திரும்பி போயிட்டான்.

கொஞ்சதூரம் சென்றிருப்பேன்.. யாரோ பின்னால் "மாடசாமி அண்ணே மாடசாமி அண்ணே" என்று அழைத்தபடியே வருவது தெரிந்து திரும்பி பார்த்தேன். 'என்னடா இது கூப்பிட்டமாதிரி இருந்துதே.. ஒருத்தரையும் காணோமே.. ஒருவேள மோகினி பிசாசா இருக்குமோ' என்று மனதுக்குள் கிலி பிடித்துக் கொண்டது.

"எலேய் மாடசாமி!.. ராத்திரி வரும்போது பாத்து பரிவிச்சி வாலே.. மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. நம்ம மூக்கைய்யா தாத்தா சொன்னாருலே.. வாரபோற ஆள்களையெல்லாம் பயம்காட்டுதாம்.. மோகினிய பாத்துட்டு ரெண்டுமூணு பேரு காய்ச்ச வந்து கிடக்கானுவ.. ரத்தக்குறி பாக்காம விடாதாம்லே.. ஜாக்கிரதையா வாலே" என்று நடராஜன் சொன்னபோது நான் நம்பவில்லை. "எலே.. நா எத்தனவாட்டி ராத்திரி நேரம் தன்னந்தனியா வந்திருக்கேன்.. ஒருநாளாவது..?.. மோகினியாவது கீகினியாவது... நானாவது பயப்படுறதாவது.. நல்லா கதகட்டி விட்டிருக்கானுவ.. நீயும் நம்பிக்கிட்டு இருக்கியே.." என்ற என் வீராவசனம் தவிடுபொடியாகிரும்போல.

மனது திக்திக் என்று அடித்துக் கொண்டது. மறுபடியும் என்னை கூப்பிடுவது போல ஒரு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் யாரையும் காணல.. காற்று பலமாக ஊஊஊ..ஊஊவென இரைச்சலுடன் மரமெல்லாம் ஆடியது. ஊஊ..ஊஊவ்வ்வ்வ்... ஊஊஊ தூரத்தில் எங்கோ நாய் குலைப்பது கேட்டது. என்னை அழைப்பது போல இப்போதும் அதே குரல்.. நடையில் கொஞ்சம் வேகம் கூட்டினேன்.. பின்னால் வருபவரும் என்னைப் போல நடையில் வேகம்.

கண்ணுக்கெட்டும் தூரம்வரை யாரையும் காணவில்லை. 'கருப்பண்ண சாமி என்னைய பத்திரமா வீட்டுல கொண்டுபோய் சேத்துரு' என்று வேண்டியபடியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சே.. வீட்டுக்கு 2 பர்லாங் நடக்கணுமே. குளத்தாங்கரை பக்கம் வந்தாச்சி.. ஓடினேன்.. பின்னால் வருபவரும் ஓடிவருவதுபோல திமுதிமுவென சத்தம்.

'ஆஆ.. அய்ய்யோ அம்மா..' என்று கத்தியபடி கீழே விழுந்தேன். முட்டியிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. புள்ளைங்களுக்காக கையில் வச்சிருந்த பண்டமெல்லாம் அங்கொன்னும் இங்கொன்னுமாக சிதறிக் கிடந்தது. கீழே கிடந்தவற்றை எல்லாம் தூசித்தட்டி பையில் அள்ளிப்போட்டேன். மழைச் சாரல் முகத்தில் அறைந்தது. கண்ணுக்கெட்டும் தூரம்வரை யாரையும் காணவில்லை. முட்டி ரொம்ப வலித்தது. முன்புபோல வேகமாக நடக்க முடியவில்லை.

இப்போது அந்த உருவம் மிக அருகில்.. 'அய்யோ என்னை அடிக்காம விடாதுபோல.. இன்னக்கி நா அம்புட்டுதேன்' பயத்தில் அந்த மழைநேரத்திலும் வேர்த்துக் கொட்டியதை துடைத்தபடியே வந்தேன். "மாடசாமி அண்ணே.. மாடசாமி அண்ணே" என்று மிக அருகில் குரல் கேட்டது. என் தோள்பட்டையில் ஒரு கைவிழுந்து என்னை நிறுத்தியது.

"அய்யோ.. என்ன விட்டுரு.. விட்டுரு.. நா புள்ளக்குட்டிக்காரென்" பயத்தில் அழுகை வந்தது. அய்யோ என்ன மாடசாமி அண்ணே.. இப்படி ஆகிட்டீங்க என்றதும் திரும்பி பார்த்தால் அங்கே ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

"யாருப்பா நீயி.." என்றேன் திகைப்புடன். "அண்ணே என்னத்தெரியலியா.. நல்லா யோச்சிப்பாருங்க" என்ற அவனுக்கு "யாருன்னு தெரியலியேப்பா" என்றேன். உடனே அவன் "நாந்தான் செல்லாத்தா பாட்டியோட பேரன்., எம்பேரு முத்து. சின்னவயசுல வீட்டவிட்டு ஓடிப்போனேனே.. ஞாபகம் இல்லயா.. உங்க கடையில வந்து சல்லியம் பண்ணுவேனே.." என்றான்.

"அடப்பாவி நீயா அது" என்ற திகைப்பில் நான். "சரிண்ணே.. வீட்டுக்கு எப்படி போகணும்.. ஊருக்கு வந்து ரொம்ப வருசமாச்சா.. வழி தெரியல.. எப்படி போகணும்?." என்றானே பார்க்கலாம். "எலேய் இதுக்கா இப்படி?.. நானும் என்னவோ ஏதோன்னு பயந்து சே.. இத அங்கேவச்சு கேட்டுருக்கலாமுல்ல.. பின்னாடியே துரத்துற.." என்றேன்.

"என்னண்ணே.. நா எத்தனதடவ உங்கள்ட்ட விளாண்டிருக்கேன். சும்மா விளாட்டுக்குதாண்ணே., விளாட்டு காட்டினேனே" என்றான். "நீ விளாடுறது நாதேன் கிடைச்சேனா.. சரிசரி இந்தா இப்படியே சோத்தாங்கை பக்கமா கொஞ்சதூரம் போனீன்னா அங்க மாரியம்மன் கோவில் வரும். அதுலருந்து ரெண்டுதெரு தள்ளி குத்துக்கல் தெரு வரும். அதுல நாலாவது கிழக்க பாத்தவீடுதான் உங்கவீடு. சீக்கிரம்.. காலாகாலத்துல போய்ச்சேரு.. பத்திரமா போலே" என்று சொன்னேன்.

"சரிண்ணே" என்றபடி அவன் நடந்துபோனதை பார்த்தபடியே நான் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். 'பாவிப்பய.. என்னைய பயங்காட்டி இப்படி ஆக்கிப்புட்டானே' என்று நினைத்தபடியே வீடுபோய் சேர்ந்தேன்.

காலையில், "அண்ணே.. ரெண்டு சாயா கொடுண்ணே" என்ற குரல்வந்த திசையை பார்த்தால் அங்கே முத்து நின்று கொண்டிருந்தான். "என்னல முத்து ராத்திரி நா சொன்னமாதிரி போனீயா.. வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா., இல்ல வழி தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னியா.." என்றேன் அவனிடம்.

"மாடசாமி அண்ணே!! என்ன உளருதீரு.. நானாவது எங்கவீட்டுக்கு வழி தெரியாம நிக்கிறதாவது. நான் வந்து ஒரு வாரமாச்சே. ராத்திரி வழி கேட்டேன்னு சொல்தீரு.. காலையிலேயே தண்ணிகிண்ணி போட்டுட்டீரா" என்று சொன்ன அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து "மாடசாமி அண்ணே.. மாடசாமி அண்ணே.." என்று யாரோ கூப்பிடுவதுபோல இருந்தது.

,

Post Comment

Wednesday, December 1, 2010

உசாரய்யா.. உசாரு..

அன்புள்ள நண்பர்களே!!.. என்னுடைய நண்பர் மெயில் அனுப்பி இருந்தார். அதில் நமக்கு தெரியாமல் கேமரா மூலம் படம் எடுக்கும் கும்பல்கள் பெருகிவருகின்றனர். அதனை இணையத்தில் வெளியிட்டு காசு சம்பாரித்து வருகின்றனர். அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கெங்கெல்லாம் மறைவாக கேமராக்கள் வைத்திருப்பார்கள் என்று கீழ்கண்ட படங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நாம் பொது இடங்களுக்கு செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். பொருட்கள் வாங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வெளியிட்டுள்ளேன். எனவே கவனமாக இருங்கள். இந்த படங்களை அனுப்பிய என் நண்பர் சேக்கப்பா (எ) அஹ்மது முகைதீனுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்