Pages

Saturday, April 6, 2013

பயணம் தொலைவுதான்



என் பஞ்சம்தீர்க்க
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்..!
என் கதையை கேட்டபின் செல்..!

ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
கலங்கிய‌ கண்களில் நீருடன்..!

பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று,
தன் பசி நீக்க
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..

பர்லாங் தூரம் எம்பெண்கள்
கடப்பது ஒரு குடம் நீருக்காக..!
மடியில் கனமில்லை
தலைபாரம் தான் தீரவில்லை..!

செம்மண் மேடாக காட்சியளிக்கும்
குளமும் வாய்க்காலும்
தூரமானது கால்நடைகளுக்கு
அம்மா என்று பாசமுடன்
அழைக்கும் அவைகளுக்கு
தண்ணீர் காட்டவே நீரில்லையே..!
அய்யோ என் செய்வேன்....?!

'நெல்லுக்கு இறைத்த நீர்  -வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்'


ஆறு நிறைந்து,
வாய்க்கால் நிறைந்து,
பூத்துக் குலுங்கிய சோலைகளும்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பாய்விரித்து படுத்திருந்த,

எங்கள் வயல்வெளிகளும்
வற்றாத ஜீவநதி பாய்ந்து
வளம் கொடுத்த
புண்ணிய பூமி எங்கே.?
எங்களின் தாகம் தீர்த்த
பரணி எங்கும் மணல்மேடாய்..?!

பார்த்து பார்த்து
சலித்துப் போன‌
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?!..

குழாயினில் வரும் காற்றில்
எங்களின் மூச்சிக்காற்றும்
கலந்தது நிலத்தடி நீருக்காக..

யாரை குற்றம் சொல்ல..?!

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
என்ற வாசகத்தை தொலைத்து
நிற்கும் எங்கள் அறிவின்மையை
சொல்லவா..!

காட்டையும் வயற்காட்டையும்
அழித்து ப்ளாட் போட்ட
கயவர்களை பற்றி சொல்லவா..?!


அள்ள அள்ள குறையாது
தரும் அமுதசுரபி போல
வற்றாத ஜீவநதி பரணியில்
மணலை அள்ளி அள்ளி
பாலையாக்கிய கருணை
பிரபுக்களை பற்றி சொல்லவா..?!

குப்பைகளையும் ஆலைக்கழிவுகளையும்
ஆற்றில் கலக்க வைத்து
தொற்றுநோய்களை பரப்பிய
புண்ணியவான்களை பற்றி சொல்லவா..?!

செல்லும் தூரம் அறியாமலே
செல்லும் காலக்கொடுமையை
பற்றி சொல்லவா..?!

அதோ அங்கே தெரியும்
நிழல்கூட கருவேல நிழல் தான்
இளைப்பாற சிறிது நிழல் கிடைக்குமா..?!
எங்கள் தாகம் தீருமா..?!

சொல்லுங்க மேகங்களே..!

இதோ இந்த பயணம்
எப்போதும் தொலைவுதான்..!!


***********

குறிப்பு:

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை இது.

ரியாத் தமிழ்சங்கம் - கல்யாண் நினைவு அமைப்பினர் நடத்திய உலகாளவிய கவிதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை.

படம் உதவி : நன்றி தட்ஸ்தமிழ்.

Post Comment

11 comments:

  1. நன்றாக உள்ளது அண்ணே!

    ReplyDelete

  2. பர்லாங் தூரம் எம்பெண்கள்
    கடப்பது ஒரு குடம் நீருக்காக..!
    மடியில் கனமில்லை
    தலைபாரம் தான் தீரவில்லை..!//மிக அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.கோடை ஆரம்பமாகி விட்டது.இனி நீரை நினைத்தால்தான்....!

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது...

    இன்றைய உண்மை நிலைமை வரிகளாக...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மன ஆதங்கம் கவிதையில் எதிரொளிக்கிறது. நல்ல கவிதை.
    உங்கள் வலைப பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன். நிலா அது வானத்து மேலே என்று ஒரு கவிதை எழுதி இருந்தேன். உங்கள் வலைப்பூவின் பெயராக இருந்தது எதிர்பாராத ஆச்சர்யம்

    ReplyDelete
  5. அருமையா எழுதியிருக்கீங்க அண்ணா.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய அழகிய கவிதை.
    கவிதையில் வருவோரின் வலியை கண்முன் நிறுத்துகிறது அண்ணா...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மிக அருமை ஸ்டார்ஜன், மனவேதனையை பிறரும் உணரும் வண்ணம் எழுதப்பட்ட கவிதை..தொடர்ந்து எழுதுங்கள் ஸ்டார்ஜன்.கதை,கவிதை,சுமுதாய விழிப்புணர்வு போன்ற உங்களின் படைப்புக்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. கஞ்சமின்றி
    நஞ்சையும்
    புஞ்சையும்
    கொஞ்சிக்குலவும்-குலவிய எம்
    தஞ்சைத்தரணியின் கதையும் உம்
    பஞ்சப்பரணியின் கதைதான்..!

    நெஞ்சம் குமைகிறது...
    மஞ்சம் நனைகிறது...
    எஞ்சிய நம்கால
    பிஞ்சுகளின் வருங்கால
    கஞ்சியில் வடிநீர்
    மிஞ்சுமா என நினைக்கையிலே..!

    நிலா அது வானத்து மேலே - பரவாயில்லை.
    தண்ணீர் அதுவும் மேகமாய் வானத்து மேலே...?

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்