Pages

Saturday, July 10, 2010

செய்யது அப்பா

செய்யது அப்பா

ஒருவனுடைய வாழ்க்கையில் முன்னேற உந்துகோலாய் இருந்த மனிதரை பற்றிய ஒரு இடுகை. நான் சிறுவயதில் இருக்கும்போது எங்க வீட்டில் ரொம்ப கஷ்டம். வறுமையான சூழ்நிலை. அப்போது எங்களுக்கு உதவியாய் இருந்தது எங்கப்பா செய்யது அப்பாதான். உங்களுக்கே தெரிந்திருக்கும் இஸ்லாமியர் குடும்பங்களில் தாத்தாவை அப்பா என்றும், அப்பாவை அத்தா என்றுதான் கூப்பிடுவோம்.

செய்யது அப்பாவுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உண்டு. அதில் நான் அவரது இரண்டாவது மகனுக்கு பிறந்த‌ மூத்த பேரன். எங்கப்பாமேல எனக்கு நிறைய அன்பு உண்டு. அவருக்கும் என்மேல் பிரியம் உண்டு. பெரியத்தாவையும் அவரது குடும்பத்தினர் மேல் பாசம் இருந்தாலும் எங்கள் குடும்பத்தின்மேல் அளவு கடந்த பாசம் வைத்திருத்திருந்தார். எங்கத்தாவுக்கு அந்த நேரத்தில் அவ்வளவா வேலை இருப்பதில்லை. அப்போது கஷ்டப்படும்போது எங்கப்பா அவரால் இயன்ற உதவிகளை செய்வார்.

என்னிடம் படிக்கும் ஆவலைக் கண்ட எங்கப்பா எங்கத்தாவிடம், எலே சேக்கை எப்படியாவது படிக்கவை. அவன் படிக்கணும் என்று சொல்லி ஊக்கப்படுத்துவார். எங்கத்தாவுக்கும் என்னை படிக்கவைக்க வேண்டும் என்ற கனவு. எங்க ஊரில் எங்கள் பகுதியில் நான் முதன்முதலில் அறிமுகமானது எங்கப்பாவின் மூலம் தான். எங்கப்பா ஒவ்வொருவரிடமும், இவந்தான் என் பேரன் ஷேக், இவன் நல்லா படிக்கிறான். நல்ல பையன் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். இன்றும் எங்கள் தெருக்களில் செய்யது அப்பா பேரன் என்று என்மேல் பாசத்துடனும் அன்புடனும் இருந்து மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் அது எங்கப்பா மூலம்தான் கிடைத்தது.

அவர் என்மேல அளவு கடந்தபாசம் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். அதேமாதிரி நான் சேட்டை செய்யும்போதெல்லாம் கண்டிக்கத் தவறுவதில்லை. அவர் அந்த காலத்தில் சித்தமருத்துவம் வைத்தியம் பார்த்து கொண்டிருந்தார். என்னுடைய காலத்திலும் அவரது வைத்தியம் தொடர்ந்தது. உடம்பு சரியில்லாதவங்களுக்கு மருந்து தயாரித்து மருந்துகளை என்னிடமும் கொடுத்துவிடுவார். நான் கொண்டு கொடுத்துவிட்டு வருவேன். நாளாகநாளாக வயதாகிக் கொண்டே போனதால் அவருக்கு பின்னால் எங்க பெரியத்தாவோ எங்கத்தாவோ அவரது மருத்துவத்தை தொடரவில்லை.

பெரியமகன் இருந்தாலும் அவரது வீட்டில் சாப்பிடமாட்டார். எங்க வீட்டில் எங்கம்மா கையினால் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுவார். எப்போதும் எங்களுடனே தான் இருப்பார். எங்கு சென்றாலும் அவர் என்னைத்தான் அழைத்து செல்வார். சொந்தக்காரங்களின் கல்யாண விஷேச‌ங்களுக்கும் ஊருக்கு செல்வதானால் என்னைத்தான் அழைத்து செல்வார்.

ஒருதடவை மதுரைக்கு எங்க பெரிய மாமி (அத்தாவின் தங்கை) வீட்டுக்கு சென்றது மறக்கமுடியாத அனுபவம். அப்போது மாமி குடியிருக்கும் ஏரியாவுக்கு குதிரை வண்டியில் சென்றது இன்று நினைத்தாலும் மறக்கமுடியாது. ஆட்டோ, டாக்சி இருந்தபோதும் குதிரை வண்டியில் போனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அது இன்று நினைத்தாலும் கிடைக்கமுடியாத குதிரைவண்டி பயணம். எங்கமாமி பசங்களோட விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் மாமி குடும்பத்தோடு எங்க ஊருக்கு வந்திடுவாங்க. ஒரே ஜாலிதான். நாங்களும் எப்போதாவது மதுரைக்கு செல்வதுண்டு.

எங்கப்பா எங்கத்தாவிடம் அன்று நடந்தவற்றை சுவாரசியமாக பேசுவார். நானும் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருப்பேன். எங்கப்பா சுருட்டி பிடிக்கிற ஸ்டைலே தனிதான். அவர் அப்போது பேமஸா இருந்த மான்மார்க் சுருட்டுதான் பிடிப்பார். நான் அவருக்கு மான்மார்க் சுருட்டு கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அவர் பிடிக்கும் ஸ்டைலை அவர் அருகிலிருந்து மெய்மறந்து ரசிப்பேன். நாளாக நாளாக அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. எங்கத்தா கூட இருந்து கவனித்துக் கொண்டார்.

ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க எங்கம்மாவிடமிருந்து சாப்பாடு வாங்கிக்கொண்டு செல்வேன்.

இப்படி எங்கள் குடும்பத்தின்மேல் பாசமும் அன்பும் கொண்டு பிரியாமல் இருந்த செய்யது அப்பா இறக்கும் தருவாயில் நாங்க (எங்கத்தா, எங்கம்மா, நான், தங்கை தம்பிகள்) யாரும் இல்லையென்று நினைக்கும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும். அதான் விதின்னு சொல்வாங்க போல..

நான் பத்தாம்வகுப்பு தேர்வு முடிந்து லீவு விட்டிருந்தாங்க. அப்போது எங்க மாமி குடும்பத்தோடு ஊருக்கு வந்திருந்தாங்க. அவர்கள் ஊருக்கு செல்லும்போது என்னையையும் என் தங்கையையும் உடன் அழைத்து சென்றார்கள். நாங்களும் விருப்பப்பட்டோம். போகும்போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. மதுரைக்கு போனாலே ரொம்ப ஜாலிதான்.

அந்த நேரத்தில் எங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போனது. எங்க மாமா (அம்மாவின் அண்ணன்) மதுரைக்கு செல்லும்போது எங்கப்பா, மாமாவிடம் சேக்கை அழைத்துக் கொண்டு வந்திடுங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார். மாமா அங்குவந்து வா சேக் ஊருக்குபோவோம். உங்கப்பா கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க என்று அழைத்தார். நான் விளையாட்டுபுத்தியில் நா இன்னும் கொஞ்சநாள் இருந்துட்டு வாரேன் மாமா என்று வர மறுத்துவிட்டேன்.

இரண்டுமூன்று நாள் கழித்து எங்கத்தாவும் அம்மாவும் மதுரைக்கு வந்தார்கள். எங்கத்தா வரும்போது அப்பாவிடம் அவர்களை கூட்டிகொண்டு நாளைக்கு வந்துடுவேன் கவலைப்படாதீங்க என்று சொல்லி அப்பாவிடமிருந்து விடைபெற்றிருக்கிறார்.

மதுரைக்கு வந்த அன்று இரவு 2 மணிக்கு அப்பா இறந்துவிட்டார்கள் என்று பெரியத்தாவிடமிருந்து தந்தி வந்திருக்கிறது. உறங்கிகொண்டிருந்த நான் அழுகுரல் கேட்டு விழித்து பார்த்தேன். அப்போதுதான் எங்கப்பா இறந்துபோன செய்தி கேட்டு மனம் ரொம்ப வேதனைப்பட்டது. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம். அப்போது அந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்ததை எண்ணி கண்ணீருடன் இந்த இடுகையை எழுதுகிறேன்.

மீண்டு வருமா அந்த காலம்?..

எங்கப்பாவுக்கு எவ்வளவு ஏக்கமாக இருந்திருக்கும். அப்பா இறக்கும்போது நாங்க ஒருவர்கூட இல்லாதது ரொம்ப வருத்தத்திலும் வருத்தம்.

செய்யது அப்பாவுக்கு இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன்.

Post Comment

15 comments:

  1. உண்மையில் மிகுந்த சோகம்தான்... காலம் உங்கள் மன வருத்தத்தை மாற்றட்டும்...:((

    ReplyDelete
  2. எத்தனையே விசயங்கள் இப்படி விளையாட்டாய்தான் போய் விடுகிறது.
    :-(

    ReplyDelete
  3. ஸ்டார்ஜன்,

    உங்கள் வருத்தமும் ஆதங்கமும் இந்த பதிவில் தெரிகிறது.

    இழந்த காலங்களும் இறந்த உறவுகளும் மீண்டு வருவதில்லைதான்.

    உங்கள் மனக்காயத்துக்கு காலமே மருந்தாகட்டும்.

    ReplyDelete
  4. அருமை,
    பேட்டையில் வீடு எங்கே, செக்கடி பக்கமா

    ReplyDelete
  5. நன்றாக நினைவுகூர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. एनक्कुम एंग थाथावाई रोम्बा पिदिक्कुम.
    enakkum enga thaathaavai romba pidikkum.
    எனக்கும் எங்க தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  7. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    மனதை தேற்றிக்கொள்ளவும் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  8. என்ன சொல்ல.. வருத்தங்கள் காலப்போக்கில் மாறும்.. கவலை வேண்டாம்.

    ReplyDelete
  9. உங்கள் நினைவுகளை படித்ததும் எனக்கும் எங்கப்பா நியாபகம் வந்துருச்சி...எனக்கு வயது அதே மதுரைல இருக்கும்போது மே உழைப்பாளர்கள் தினம் மாலை 6 மணிக்கு தந்தி வந்தது........................ உணர்வுபூர்வமான பகிர்வு

    ReplyDelete
  10. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  11. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. சில வலி வழ்க்கைமுலுவதும் நம் கூடவே வரும்.

    ReplyDelete
  13. அன்பின் ஸ்டார்ஜன்

    என்ன செய்வது - நம்மை அறியாமலேயே நாம் எடுக்கும் முடிவுகள் சில சமயங்களில் நம்மை வருத்தமடையச் செய்து விடுகின்றன.

    செய்யது அப்பாவினிற்கு சமரப்பணம் செய்த இடுகை நன்று.

    நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  14. மனதை நெகிழவைக்கும்வண்ணம்
    எழுதியுள்ளீர்கள். அப்பா அவர்களின்
    சுவன வாழ்க்கைக்காக துஆ செய்வோம்.

    ReplyDelete
  15. வருகைதந்து ஆறுதல்களையும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    கௌசல்யா @ நன்றி
    ஜெய்லானி @ நன்றி
    குமார் @ நன்றி
    ராம்ஜி அண்ணே @ ஆமா செக்கடி பக்கம்தான். உங்களுக்கு வீடு எங்கே..
    அமைதிச்சாரல் அக்கா @ நன்றி
    நையாண்டி நைனா @ நைனா.. என்ன ஆளே காணோம்.. பதிவுகள் இப்போது எழுதவில்லையா..
    அக்பர் @ நன்றி
    கட்டபொம்மன் @ நன்றி
    சீமான் கனி @ நன்றி
    செந்தில் @ நன்றி
    ராஜவம்சம் @ நன்றி
    சீனா அய்யா @ நன்றி
    நிஜாமுதீன் @ நன்றி.

    அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்