Pages

Saturday, March 30, 2019

தேர்தல் நேரம் - கவனம்

2014ம் ஆண்டு சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த நேரம், நாடாளுமன்ற தேர்தல் சமயம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து அவசர வேலையாக நெல்லை செல்வதற்காக கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் பஸ் டிப்போவில் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பேக்கை எனது காலடியில் வைத்து நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், அவரது பேக்கை எனது பேக்கிற்கு ஒட்டியபடி வைத்தார். உடனே நான் என்ன என்று முறைத்தபடி கேட்டேன். " சார், எனது பேக்கை பார்த்துக் கொள்ளுங்கள், நான் டாய்லெட் போயிட்டு வருகிறேன் என்று மெல்ல அவ்விடத்தை விட்டு அகல முயன்றார். "ஹலோ முதல்ல பேக்கை தூக்குங்க தூக்குங்க, இங்கே வைக்காதீங்க," ஆபீஸ்ல சொல்லி வைத்துவிட்டு செல்லுமாறு கூறினேன்.   ரொம்ப யோசித்தபடியே அவரது பேக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

நான் செல்ல வேண்டிய பஸ் வந்ததும் ஏறி அமர்ந்து எனது பயணத்தை தொடர்ந்தேன். சில மணி நேரங்கள் கழிந்திருக்கும், பஸ் நிற்பது போல உணரவே கண் விழித்து பார்த்தேன். நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களின் வரிசையில் எங்களது பஸ்ஸும் நிறுத்தப்பட்டிருந்தது.

போலீசார் ஒவ்வொரு பஸ்ஸாக சோதனை போட்டு எங்களது பஸ்ஸையும் சோதனையிட்டனர். ஒவ்வொருத்தர் லக்கேஜ்ஜையும் செக் பண்ணினாங்க, அவங்க எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கோயம்பேட்டில் அந்த ஆள் வைத்து விட்டுச் சென்ற  பேக்கை கொண்டு வந்திருந்தால் போலீஸில் மாட்டியிருப்பேன். நல்ல வேளை இறைவன் அருளால் உசாராக இருந்ததினால் தப்பித்தேன்.

இது போன்ற பயணங்களில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். யார் எப்படி இருப்பாங்கன்னே தெரியாது. இல்லாவிடில் சொந்த செலவில் சூன்யம் வைத்தாற் போலாகிவிடும்.

Post Comment

Monday, April 13, 2015

வலைப்பயணம்

அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு,

பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பயணத்தை துவக்குகின்றேன்.

சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Thursday, March 6, 2014

ஒளியும் ஒலியும்


முதல்முறை என் விழிகள்
தேடியது உன் வரவை நோக்கி!
அவள் வருவாளா என மனம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடிக்க‌
தூரத்தில் இருள் விலக‌
அமைதி அலறி அடித்து ஓட!

அங்கே ஒரு ஒளியும் ஒலியும்
அரங்கேறியது.

எல்லோரும் காண ஒரு அழகு
தேவதையாய் மின்னினாய் என் அருகாமையில்!

உன் முதல் பரிசம் ஆயிரமாயிரம்
ஆனந்த ஊற்றுகள் பொங்கிட‌
நான் மெய்மறக்கையில்
ஆச்சர்யமானேன் எல்லோருக்கும்!
உன் அருகாமை என்னை இம்சிக்க‌

என்னைப்போலவே உன் வருகையை
ஆயிரமாயிரம் கண்கள் ஏங்குகின்றன!

மழையே! உன் வரவை எண்ணி!!

Post Comment

Wednesday, January 1, 2014

புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு (2014) வாழ்த்துகள்.

நான் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போது மன‌தில் வேண்டிக்கொள்வேன்.

* இறைவா... இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கவேண்டும்.

* மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டும். சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள்க்கூடிய வழிமுறைகளை நீதான் எங்களுக்கு காண்பிக்க வேண்டும்.


* தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் எங்களுக்கு தந்தருள்வாய்..


* எல்லா மக்களும் இன்புற்று அவர்கள் வாழ்க்கையை ஒளிவீசிடச் செய்திடுவாய்..


* நோய்நொடி, தீயசக்திகளிடமிருந்து மக்களை நீயே பாதுகாப்பாயே..


* சோதனைகள் வந்தாலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத சோதனைகளை தந்துவிடாதே..


* கஷ்டப்படும் ஏழைஎளியவர்களுக்கு உதவக்கூடிய மன‌தினை எங்களுக்கு தந்தருள்வாயே...


* விலைவாசி, பொருளாதார வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், எல்லாம் குறைந்து நாடு முன்னேற வேண்டும்.


* எல்லா மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்.


* நாட்டில் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருவாயே..


* கடந்த ஆண்டு விட்டுபோன நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற வேண்டும்.


* நம்முடைய வேண்டுதல்கள் யாவும் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திப்போம்.....


Post Comment

Sunday, April 21, 2013

நான் கண்டதில் இப்படியும் சிலர்

அவன் இவனை குற்றம் சொல்வதும்
இவன் அவனை குற்றம் சொல்வதும்
இழிவாய் தெரியவில்லை உங்களுக்கு..

எத்தனையோ இயக்கங்களாய் பிரிந்து
ஒருத்தனை ஒருத்தன் குறைசொல்லும் நேரத்தில்
அத்தனையும் ஒன்று கூடினால்,
பிரச்சனை எதுவுமில்லையே..

உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி
எத்தனையோ பேர் உள்ளனர்
நாட்டிலும் உன் வீட்டிலும்.,
அவர்களை பற்றிய சிந்தனை
இல்லை உனக்கு., வீண்விவாதங்களோடு
அடித்துக்கொள்வதற்கு மட்டும்
இத்தனை நேரம் எதற்கு?!

காலநேரத்துடன் சேர்ந்து
கரையுதடா உன் வாலிபமும்
ஆனால் ஒற்றுமையை மட்டும்
கடைபிடிக்கவில்லை எப்பொழுதும்

அல்லாஹ், ரசூல் காட்டித்தராத
விஷயங்களில் தர்க்கம் செய்தே
தரம் கெட்டு போனாயடா
என்னருமை சகோதரா..

ஒரே ஒரு நிமிசம்
புரட்டியாவது பாராடா
அருள்மறையாம் திருமறையை
பிறகு மாற்றிக்கொள்வாயடா
உன் எதிர்மறையை

காசை கொடுத்து வாழும் நெறியை
நாசுக்காக கற்பிக்கும் இறைவனை
தூசாக எண்ணி துச்சமென நினைத்து
சொகுசு வாழ்க்கைக்கு விலை போனாயடா..,

ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம்.,

இதெல்லாம் ஒருகணமேனும்
திரும்பிப்பார்க்கும் வேளை - இறைவன்
திரும்ப அழைத்துக்கொள்வான்
திரும்பமுடியாத இடத்துக்கு...

Post Comment

Saturday, April 6, 2013

பயணம் தொலைவுதான்



என் பஞ்சம்தீர்க்க
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்..!
என் கதையை கேட்டபின் செல்..!

ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
கலங்கிய‌ கண்களில் நீருடன்..!

பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று,
தன் பசி நீக்க
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..

பர்லாங் தூரம் எம்பெண்கள்
கடப்பது ஒரு குடம் நீருக்காக..!
மடியில் கனமில்லை
தலைபாரம் தான் தீரவில்லை..!

செம்மண் மேடாக காட்சியளிக்கும்
குளமும் வாய்க்காலும்
தூரமானது கால்நடைகளுக்கு
அம்மா என்று பாசமுடன்
அழைக்கும் அவைகளுக்கு
தண்ணீர் காட்டவே நீரில்லையே..!
அய்யோ என் செய்வேன்....?!

'நெல்லுக்கு இறைத்த நீர்  -வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்'


ஆறு நிறைந்து,
வாய்க்கால் நிறைந்து,
பூத்துக் குலுங்கிய சோலைகளும்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பாய்விரித்து படுத்திருந்த,

எங்கள் வயல்வெளிகளும்
வற்றாத ஜீவநதி பாய்ந்து
வளம் கொடுத்த
புண்ணிய பூமி எங்கே.?
எங்களின் தாகம் தீர்த்த
பரணி எங்கும் மணல்மேடாய்..?!

பார்த்து பார்த்து
சலித்துப் போன‌
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?!..

குழாயினில் வரும் காற்றில்
எங்களின் மூச்சிக்காற்றும்
கலந்தது நிலத்தடி நீருக்காக..

யாரை குற்றம் சொல்ல..?!

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
என்ற வாசகத்தை தொலைத்து
நிற்கும் எங்கள் அறிவின்மையை
சொல்லவா..!

காட்டையும் வயற்காட்டையும்
அழித்து ப்ளாட் போட்ட
கயவர்களை பற்றி சொல்லவா..?!


அள்ள அள்ள குறையாது
தரும் அமுதசுரபி போல
வற்றாத ஜீவநதி பரணியில்
மணலை அள்ளி அள்ளி
பாலையாக்கிய கருணை
பிரபுக்களை பற்றி சொல்லவா..?!

குப்பைகளையும் ஆலைக்கழிவுகளையும்
ஆற்றில் கலக்க வைத்து
தொற்றுநோய்களை பரப்பிய
புண்ணியவான்களை பற்றி சொல்லவா..?!

செல்லும் தூரம் அறியாமலே
செல்லும் காலக்கொடுமையை
பற்றி சொல்லவா..?!

அதோ அங்கே தெரியும்
நிழல்கூட கருவேல நிழல் தான்
இளைப்பாற சிறிது நிழல் கிடைக்குமா..?!
எங்கள் தாகம் தீருமா..?!

சொல்லுங்க மேகங்களே..!

இதோ இந்த பயணம்
எப்போதும் தொலைவுதான்..!!


***********

குறிப்பு:

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை இது.

ரியாத் தமிழ்சங்கம் - கல்யாண் நினைவு அமைப்பினர் நடத்திய உலகாளவிய கவிதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை.

படம் உதவி : நன்றி தட்ஸ்தமிழ்.

Post Comment

Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..?!

நடிகர் கமலஹாசன் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்து பெரும்பாலான இடங்களில் வெளிவந்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அது வெளியானால் பல சமூக சீரழிவை ஏற்படுத்தும் எனக்கருதி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையின் காரணமாக தமிழக அரசு இந்த படத்தை 15 நாட்களுக்கு தடை செய்துள்ளது.

நமது கருத்துக்கள் மற்றவர்களை சென்றடைய ஊடகம் கண்டிப்பாக தேவை. அது எந்தத்துறையாகவும் இருக்கலாம். இதில் திரைத்துறை என்பது எல்லாவற்றையும்விட அதிவிரைவாக மக்கள் மனதில் சென்றடையும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இந்த சினிமாவின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள்.

அப்படி மக்கள் மனதோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களில், இஸ்லாமிய சமூகங்களை பற்றி திரைப்படங்களில் காட்டும்போது கொச்சையாக தமிழ்பேசுபவராகவும், சாம்ப்ராணி போடுபவராகவும், கைலி, பச்சை தலைப்பாகை அணிந்தவராகவும், அரேபிய ஷேக்குகள் போன்றும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர் இந்தமாதிரி படங்களை எடுப்பவர்கள். இவர்களது குறிக்கோள் முஸ்லிம்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கோடு படங்களில் காட்டுவது வேதனைக்குரிய விசயம்.

உதாரணமாக, இப்போது வந்த அனைத்து திரைப்படங்களும் இஸ்லாமியர்களை திவிரவாதிகளை போன்றும், இன்றைய மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து படமெடுத்து வருகின்றனர். இந்த விஷமங்களை விதைக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கண்டித்தக்கவர்கள்.

முஸ்லிம்களும் மாற்றுமதச் சகோதரர்களும் அண்ணன்- தம்பி என்று ஒரே குடும்பம் போல பழகிவருகிறார்கள். இது நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தமாதிரி கருத்துக்களை விஷம்தான் என்றறிந்த இன்றைய மாற்றுமதச் சகோதரர்கள் இதனை பெரிய விசயமாக கருதாமல் முஸ்லிம்களோடு நல்லிணக்கத்தோடு பழகி வருகிறார்கள். இப்படியான சினிமாக்கள் தொடர்ந்து வந்து கீழ்தரமான எண்ணங்களை விதைத்துச் சென்றால் மாற்றுமதச் சகோதரர்கள் இது உண்மைதான் என்று முஸ்லிம்களை கேவலமாக பார்ப்பார்கள்.

ஆனால் நாளைய சமுதாயம் எப்படி தாங்கிக்கொள்ளும்; எப்படி எடுத்துக் கொள்வார்கள்?.. இந்த படங்களை பார்க்கும் வளர்ந்து வரும் சிறுபிள்ளைகள் நெஞ்சில் என்னமாதிரியான எண்ணங்களை உருவாக்கும் என்பதனை நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்க  கடமைப்பட்டுள்ளோம்.


சமுதாய பொறுப்புணர்வோட செயல்படவேண்டிய தணிக்கைத் துறை இந்தமாதிரி திரைப்படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி மேலும் இவர்களை ஊக்கப்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் மத நல்லிணக்கத்தோடு சமுதாய பொறுப்புணர்வோடு செயல்பட்டு இந்த படத்தை தடைசெய்ய உத்தரவிட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்தவிஷயத்தில் நீதிமன்றமும் தங்களுடைய பங்களிப்பை ஆற்றும் என்பது விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தீர்ப்பினை தள்ளிவைத்ததிலிருந்து தெரிகிறது. இப்படம் நிரந்தரமாக தடைசெய்ய ஏதேனும் வழிவகைகள் உண்டா என்று அறிந்து நல்லதொரு தீர்ப்பினை வழங்க அனைத்து தரப்பு மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கின்றோம்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் மனதை புண்படுத்தும்படி மதநல்லிணக்கத்தை குழிதோண்டி புதைக்கும்  திரைப்படங்களுக்கு எதிராகவும் நாம் அனைவரும் போராடவேண்டும். 
அனைத்து தரப்பு மக்களும் இந்தமாதிரி விஷங்களை விதைக்கும் திரைப்படங்களை வேறோடு கிள்ளியெறிய முன்வர வேண்டும்.

பார்க்கலாம்... எல்லாம் இறைவனின் சித்தம்..!

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்