Pages

Friday, June 18, 2010

நீ நான் அவள்


நீ நான் அவள்
இது தமிழ் இலக்கணமல்ல‌
அருகில் நீ இலக்கணமாய்
தொலைவில் அவள்
இலக்கணம் மறந்து
யாரையோ அழைத்தபடி..

,

Post Comment

Tuesday, June 15, 2010

ரயில்பாதை குண்டுவெடிப்பு

ரயில்பாதை குண்டுவெடிப்பு செய்தியை நேற்றுமுன்தினம் கேட்டபோது மனம் பதபதைப்பாக இருந்தது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டிக்கும், பேரணி ரயில் நிலையத்துக்கும் இடையே சித்தணி என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.இதில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது.

சேலம் எக்ஸ்பிரஸ் அப்பாதையை கடந்த சில நிமிடங்களில் குண்டு வெடித்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு சத்தம் கேட்டு என்ன என்று பார்த்தபோது குண்டுவெடிப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பேரணி ரயில் நிலையத்தை உஷார்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மலைக்கோட்டை ரயில் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

நல்லவேளை எந்தவிதமான அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை.

**************

ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைக்கும்போது சிறுவயதில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

மலையூர் ஒரு அழகான சிற்றூர். அழகிய வயல்வெளிகளும் தோட்டங்களும் பசுமை நிறைந்த ஊர். பக்க்த்து ஊரில் உள்ள பள்ளியில் கண்ணன் ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தான். தினமும் 6 கிலோமீட்டர் நடந்து சென்று படித்துவந்தான். அவனது குடும்பம் ஏழ்மையானது. பள்ளிச்சீருடை வாங்கமுடியாததால் கலர்ச் சட்டைதான் அணிந்துவருவான். மற்ற பிள்ளைகள் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது படிப்பில் கவனம்செலுத்தி முதல்மாணவனாக இருந்தான்.

ஒருநாள், தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் பள்ளிக்கு மதியத்துக்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கண்ணன் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தான். அப்போது வழியில் ரயில் இருப்புபாதை குறுக்கிட்டது. வேடிக்கை பார்த்தபடியே வந்த கண்ணன், மழையினால் ரயில்பாதை அரிப்பு ஏற்பட்டு துண்டாக உடைந்திருந்ததை பார்த்ததும் மனம் திகைத்து போய்விட்டான். தூரத்தில் ரயில்வரும் சப்தம் கேட்டது.

கண்ணனுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. ரயிலை உடனடியாக நிறுத்தவேண்டும். யாரும் வருவார்களா என்று அங்குமிங்கும் ஓடினான். கண்ணுக்கு எட்டியதூரம் யாரையும் காணவில்லை. ரயில் அருகில் வந்துகொண்டிருந்தது. உடனடியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவன் போட்டிருந்த‌ சட்டை சிவப்புக் கலரில் இருந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறே ரயிலை நிறுத்த முயற்சி செய்தான்.

ரயில்வரும் திசையில் சட்டையை கொடிபோல அசைத்துக்கொண்டே வேகமாக ஓடினான். இதை கவனித்த ரயிலின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். நடந்த சம்பவத்தை கண்ணன் எல்லோரிடமும் கூறினான். அனைவரும் திகைத்தனர்; பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கண்ணனை அனைவரும் பாராட்டினர்

*************

தீவிரவாத‌த்தை ஏன் கைவிட மறுக்கின்றார்கள் என்றே தெரியவில்லை????..

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Friday, June 11, 2010

வெளிநாட்டில் வாழும் குடும்பங்கள்


இன்று அமெரிக்காவில் இருக்கும் பதிவர் சித்ராக்காவுடன் மின்னஞ்சல் உரையாடலின்போது இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சித்ராக்கா, "உங்க பேமிலி இந்தியாவுலயா இருக்காங்க?. அப்புறம் எனக்கு ரொம்ப நாளா கேட்கணும் என்ற கேள்வி இது.. ஏன் ஸ்டார்ஜன், ஏன் மிடில் ஈஸ்டேர்ன் நாடுகளில் வேலை பார்க்கும் நிறைய பேர்கள், தங்கள் குடும்பத்தை தங்களுடன் கூட்டி கொண்டு போவதில்லை? அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் போறவங்க கூட்டிட்டு போறாங்களே!! - அதான் கேட்டேன்...." என்று கேட்டார்.

எனக்கு உடனே இது குறித்து ஒரு இடுகை எழுதவேண்டும் என்று தோன்றியது. அதனால் உண்டான கருத்து பரிமாற்றம்தான் இந்த இடுகை. இதை எழுதவைத்த சித்ராவுக்கு என் நன்றிகள்.

இது சற்று சிந்திக்கவேண்டிய கேள்விதான். பொதுவா வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் மனைவி,மக்களை பிரிந்துதான் விமானத்தில் ஏறுகிறார்கள். உள்ளம் இந்தியாவில் பயணிக்க உடலோ போகவேண்டிய நாட்டுக்கு பயணிக்கிறது. பிரிவின் சோகத்துக்கு எந்த அளவுகோலும் கிடையாது. இந்த சோகம், ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒருவாரமோ அல்லது ஒருமாதமோ நீடிக்கும். அதிகபட்ச சோகம் அவரவர் மனநிலையை பொறுத்தது. இது மத்தியகிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கும் பொருந்தும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை பற்றி இந்த இடுகையில் எழுதியிருந்ததை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வெளிநாட்டு வாழ்க்கையே கஷ்டமான ஒன்று.

மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிபவ‌ர்கள் தங்களோடு குடும்பத்தை அழைத்து செல்லாததுக்கு இதுதான் முக்கிய காரணங்களாக இருக்கமுடியும்.

1. பொருளாதார பிரச்சனை.
2. இங்குள்ள தட்ப‌வெப்ப காலநிலை மற்றும் மருத்துவ வசதி
3. பிள்ளைகளுக்கு படிப்பு கெடும். தரமான கல்வி இல்லாதது.

பொருளாதார பிரச்சனைகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போதே குறைவான சம்பளத்துக்கு ஒப்புதல் பெற்றபின்தான் தேர்ந்தெடுத்துதான் அனுப்புகின்றனர். குறைவான சம்பளம் வாங்குபவர்களால் எப்படி குடும்பம் நடத்தமுடியும்?. இங்கே குடும்பங்களோடு இருப்பவர்கள் எல்லோரும் நல்ல‌ கம்பெனியில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கம்பெனியில் வீடுவசதி, இதர சலுகைகள் கிடைக்கின்றன. அதனால் அவர்களுக்கு தங்குதடையின்றி குடும்பங்களை கவனிக்கமுடிகிறது.

குறைவான சம்பளம் வாங்குபவர்கள்... அதிகவேலை, குறைவான சம்பளத்தால் குடும்பத்தை நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இப்போது எல்லோரும் குடும்பத்தை அழைத்துவரலாம் என்ற அறிவிப்பு சவூதி அரசாங்கத்தால் அறிவிக்கப்படிருக்கிறது. இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சிதான். காலையில் வேலைக்கு சென்றால் இரவு வீடு திரும்புபவர்களும் உள்ளனர். அவர்களால் எப்படி குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடியும்?.

தட்பவெப்ப காலநிலை மற்றும் மருத்துவ வசதிகள்

மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை உங்களுக்கே தெரியும் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இந்த நாடுகள் அமைந்துள்ளன. அதிக வெயில், அதிக குளிர், புயல்மணற் காற்று, இன்னபிற இன்னல்கள் உண்டு. இந்த தட்பவெப்ப நிலை இங்கு வேலை செய்பவர்களுக்கே ஒத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலே வாழ்ந்து வந்தவர்கள் திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் குடும்ப அங்கத்தினருக்கு ஒத்துவரவேண்டுமே... பிள்ளைகள் நலன்தான் முக்கியம். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ வசதிகள் அவ்வளவாக தரமானதாக இருப்பது கிடையாது.

நம்நாட்டில் உள்ள மருத்துவ வசதிகள் இல்லாதது பெரிய குறை. ஒரு தலைவலி காய்ச்சல் என்றால் நாம் பெனடால் என்ற மாத்திரையைத்தான் தேடிச் செல்கிறோம். மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இங்குள்ள டாக்டர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்களுக்கு ஏற்ற மருத்துவ சாதனங்கள் கிடையாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

பிள்ளைகளுக்கு தரமான கல்வி இல்லாதது

மத்தியகிழக்கு நாடுகளுக்கு வருபவர்களுக்கு இந்தியாவில் நம்பிள்ளைகளின் படிப்பை மூட்டைகட்டி விட்டுதான் விமானத்தில் ஏறவேண்டும். படிப்பு அதோ கதிதான். படிக்கவைக்க நல்ல கல்விச்சாலைகள் இல்லாததும் ஒரு காரணம்தான். நம்மூரை போல கல்விநிலையங்கள் இங்கு இல்லை. இருக்கும் பள்ளிகளில் எல்லா வெளிநாட்டினரின் குழந்தைகளும் படிக்கின்றனர். எல்லோருக்கும் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இதுபோன்ற காரணங்களினால் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை அழைத்துவர தயக்கம் காட்டுகின்றனர். அதுபோக அவரவர் மனநிலையை பொறுத்தது.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Wednesday, June 9, 2010

கறுப்பு வெள்ளை


"மாமா... ரெண்டுநாளா போனே ஒர்க் ஆகல. காலையில ராயபுரம் போய் டெலிபோன் எக்சேஞ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திருங்க. அப்புறம் அந்த ரோட்டிலே கிழக்கால இருக்கிற கேஸ் கம்பெனியோட ஆபீஸ்ல புக் பண்ணி பத்து நாளாச்சே கேஸ் என்னாச்சின்னு கேளுங்க, சரியா மாமா," என்று என் மருமகள் மல்லிகா சொன்னாள்.

"சரிம்மா," என்றபடி தலையாட்டினேன்.

"அப்புறம் சொல்லமறந்திட்டேன் மாமா, மத்தியானம் உங்க பேரன் பேத்தியை ஸ்கூல்லருந்து கூட்டியாந்து சாப்பாடு கொடுத்திட்டு மறுபடியும் ஸ்கூல்ல விட்டுருங்க மாமா. சாயங்காலம் சும்மா இருக்கிற நேரத்துல அந்த பைனான்ஸ் கம்பெனியில சீட்டு போட்டிருந்தோமே, அங்கபோய் சீட்டு ஏலம் என்னாச்சின்னு கேட்டுட்டு வரும்போது வீட்டுக்கு தேவையான சாமான்ல்லாம் வாங்கியாந்துருங்க மாமா."

"நான் நைட்டுவந்து சமைக்கணும்.. உங்களை அனுப்புறதுக்கு வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்ய..? நானும் உங்க பிள்ளையும் வேலைக்குப் போனா வர்றதுக்கு நைட்டு ஆகிறது, என்ன செய்யன்னு தெரியல மாமா..." என்றபடி மல்லிகா தன் அறைக்குச் சென்றாள்.



"சரிம்மா சரிம்மா," என்று வார்த்தைகள் தான் பேசியதே தவிர உள்ளம் ஒட்டவில்லை. என் படுக்கையை விரித்துக் கொண்டிருந்தபோது அருகில் என் செல்லக்குட்டிகள் பேரன் கார்த்திக்கும் மலரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

கார்த்திக்கின் காலில் கடித்த கொசுவைத் தட்டிவிட்டுக் கொண்டு போர்வையை எடுத்து போர்த்திவிட்டேன். இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஃபேனை அவர்கள் பக்கம் திருப்பி என் உடலை படுக்கையில் சாய்த்தேன்.

மனம் பலவற்றை அசைப்போட்டபடி இருந்ததால் என்னால் உறங்க முடியவில்லை. எப்போ உறங்கினேன் என்று தெரியாது.

*****

"தாத்தா தாத்தா இந்த ஜட்டிய போட்டுவிடு," என்றபடி வந்த கார்த்திக்கின் குரல் கேட்டு விழித்துப் பார்த்தேன். ஆஹா இன்னக்கி ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல. கண்ணெல்லாம் அழுத்தியது.

"டேய் கார்த்திக், தாத்தாவோட கண்ணாடிய எடுத்துத்தாப்பா," என்ற என் குரல் அவனுடைய விளையாட்டில் கரைந்து போனது. தட்டுத் தடுமாறி கண்ணாடி அணிந்தேன்.

"ம்ம்.. ம்ம்.. தாத்தா இங்கப் பாரு என்னோட பென்சில் முனையை கார்த்திக் உடைச்சிட்டான்; நா எப்படி எழுதுவேன்," என்று கண்ணை கசக்கிய மலருக்கு, "ஓகே ஒகே இதுக்கெல்லாமா அழுவாங்க என்ன பொண்ணு... நா உனக்கு பென்சில் சீவித் தாரேன், அழக்கூடாது என்ன? இந்தாப் பாரு பென்சில் சீவுனதுக்கு அப்புறம் எப்படி அழகா இருக்குபாரேன்," என்று பென்சிலைக் கொடுத்தேன்.

"தாத்தா, எங்க மிஸ் பேரன்ட்ஸ கூட்டிட்டு வரச் சொன்னாங்க. மம்மிட்ட சொன்னா தாத்தாவ கூட்டிட்டு போன்னு சொல்றாங்க. ஏன் தாத்தா, மம்மியும் டாடியும் வரமாட்டேங்கிறாங்க?"

"அவங்களுக்கு நிறைய வேலையிருக்கும், அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது. நான் வாரேன்... சரியா?" என்று மலரின் தலையை தடவிகொடுத்தேன்.

இருவரையும் ஸ்கூலில் விட்டுட்டு ராயபுரம் செல்வதற்கு பஸ் ஏற காத்திருந்தேன். வந்த இரண்டு பஸ்ஸிலும் வாசலில் தொங்கியபடி நின்றனர். அடுத்த பஸ்ஸில் ஏறினால்தான் சீக்கிரமாக ராயபுரம் போய்விட்டு, கார்த்திக்கும் மலருக்கும் சாப்பாடு கொடுக்க போக முடியும். வந்த பஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன்.

பஸ்ஸில் ஒரே கூட்டம். நிற்ககூட இடமில்லாமல் ஒருவருக்கொருவர் இடித்துகொண்டு நின்றனர். எனக்கு கிடைத்த குறுகிய இடத்தில் ஓடுங்கி நின்றேன். பஸ் கூரையில் மேலுள்ள கம்பியை பிடித்தபடி எவ்வளவு நேரந்தான் நிற்பது? பேலன்ஸ் கிடைக்காமல் அங்குமிங்கும் தள்ளாடினேன். வயசானாலே இப்படித் தானோ?

"இந்தா பெருசு ரொம்ப நேரமா சரக்கடிச்சவன் மாதிரி தள்ளாடிக்கிட்டே இருக்கே... இப்படிக்கா குந்து," என்ற இளைஞனை நன்றியுடன் பார்த்தபடி சீட்டில் அமர்ந்தேன்.

பேப்பரில் அக்னி நடசத்திரம் தொடர்கிறது என்று படித்த ஞாபகம். தாகம் தொண்டையை அடைத்தது. டெலிபோனுக்கு கம்ப்ளைண்ட் கொடுத்திட்டு கேஸ்ஸுக்கு சொல்லிட்டு வெளியே வர்றதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சு.

*****

ஆஹா மணி பன்னிரெண்டாகிருச்சே... கார்த்திக்கு ஸ்கூல் விட்டிருக்குமே! அரக்கபரக்க பஸ் பிடித்து ஸ்கூலிலிருந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

இருவருக்கும் சாப்பாடு கொடுத்து ஸ்கூலில் விட்டுவிட்டு வர்றதுக்குள் மணி ரெண்டாகிவிட்டது. தட்டில் உள்ள சாதம் வயிற்றில் செல்ல முடியாமல் திரும்பியது. எதிரே செண்பகம் சிரித்துக் கொண்டிருந்தாள் மாலையுடன். 'ஆமா உனக்கென்ன கவலையில்லாமல் போய் சேந்திட்டே. இங்கே நான் படுகிற அவஸ்தையை யார்ட்ட போய் சொல்லுவேன்? நீயும் போய்ச் சேர்ந்திட்டே... சே... என்ன வாழ்க்கையிது?' மனம் ஒரு நிலையில் இல்லை. கண் மூடினேன்.

நான்கு மணிக்கு ஸ்கூல் விட்டதும் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

"ஏய் மலர் தம்பிய பாத்துக்கிறணும் என்ன..? தாத்தா வெளிய போயிட்டு வாரேன். நல்லபடியா இருக்கணும்; சேட்டைகள் எதுவும் செய்யாம சமர்த்தா இருக்கணும் என்ன சரியா," என்றேன்.

"தாத்தா எப்போ வருவ?"

"வருவேன்," என்று அவர்களிடம் விடைபெற்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். ஜன்னலோர இருக்கையில் மாலை நேரத்து இளம்வெயில் என்னை வரவேற்றது. மனம் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல கனமானது. மனம் பல நினைவுகளை அசைபோட்டபடி என்னோடு பயணித்தது.

'கிராமத்துல விவசாயம் பண்ணிக்கிட்டிருந்த எங்க அப்பாரு ஏதோ அவருடைய சக்திக்கு ஏத்த மாதிரி படிக்க வைத்தார். படிப்புக்கான‌ வேலையை விட‌ வயித்து பசிக்கான வேலையில்தான் ஐக்கியமாக முடிந்தது. கல்யாணமான புதிதில் செண்பகத்தோடு இந்த சென்னை மாந‌கரத்துக்கு வந்து கிட்டதட்ட 30 வருசமாச்சி.

எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளமாய் பாஸ்கரும் முத்துவும் பிறந்தார்கள். ஆஹா ஓஹோன்னு இருக்காவிட்டாலும் அப்படி இப்படின்னு உருண்டு பிரண்டு இருவரையும் நன்றாக படிக்க வைத்தேன். அவர்களும் என் பெயரைக் காப்பாத்தி இன்று இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். எங்க பக்கம் வீசிய காற்று, எப்போ இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ அப்பவே திசைமாறியது.

இருவரும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால் நானும் செண்பகமும் அன்னியமானோம். என்ன செய்ய..? எல்லாம் நேரந்தான். செண்பகமும் கவலைப்பட்டு கவலைப்பட்டு அந்த கவலையிலே போய் சேர்ந்திட்டாள்.

டேய் உனக்கும் சேர்த்து வைச்சிக்கோடா என்ற என் நண்பனின் வார்த்தை என் மகன்களின் செயலில் காணாமல் போனது.'

ஆஹா.. என்ன இது? காற்று இதமா வீசுகிறதே... சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. அடடா... மனம்போன போக்குல மெரீனா பீச்சுக்கு வந்திட்டேன் போல. அதுவும் நல்லதுக்குதான் என்று என் மனம் சொல்லியது. கடல் அலை என்னை வா வா என்றழைத்ததற்கு ஏற்ப என் கால்கள் வீறுநடை போட்டன.

"சார் சார் கடலை வாங்கிக்கோங்க சார்..." என்ற குரல் வந்த திசையில் பார்த்தேன். என் வயதை ஒத்த ஒருவர் அங்கே கடலை வித்துக் கொண்டிருந்தார். அந்த தள்ளாத வயதிலும் யாருக்கும் பாரமாக இருக்காமல் உழைக்கும் அவரது எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே... இங்கே தன்னம்பிக்கையுடன் உழைக்கும் எத்தனை எத்தனை கரங்கள்? வா வா என்று ஆர்ப்பரித்த கடலலை அமைதியாக உறங்கியது என் மனதினிலே...

ஆங்.. ஆங்.. தப்பு பண்ணிட்டேனே..! மகனையும் மருமகளையும் நம்பிய நான் என்னை நம்பாமல் போய்விட்டேனே.. கண்முன் என் மகனுக்கு எழுதிய கடிதம் நிழலாடியது...

அன்புள்ள பாஸ்கருக்கும் முத்துவுக்கும்,

உங்கள் வாழ்க்கைத் திரியை ஏற்றிவிட்ட மெழுகுவர்த்தியின் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் முன்னுக்கு வர நான் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறீர்கள். சந்தோசம் அதுதான் தேவை; நீங்க நல்லாயிருந்தா சந்தோசப்படும் நபர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்ளலாமா... மன்னிக்கவும் உங்களை பெற்றெடுத்தவன் என்ற முறையில் சொல்லிட்டேன்.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வார்கள். ஆம்! உங்கள் திருமணம் எனக்கு திருப்புமுனைதான்.

மனைவி என்பவள் நம் வாழ்க்கையில் சரிபாதி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் உங்களுக்கு மனைவிதான் வாழ்க்கையானதால் நானும் என் மனைவியும் தனிமைபடுத்தப்பட்டோம். இந்த உண்மைத் தெரிந்த அவளும் சீக்கிரமே போய்விட்டாள். அவள் என்னை பிரியமனமில்லாமல் அடிக்கடி வாங்கவாங்க என அழைக்கிறாள்.

உங்களுக்கு மனைவி சொல்லே மந்திரம் ஆனது போல எனக்கும்தான். நானும் அவள் வழியிலே செல்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு அப்பா.

*****

ஆங்.. ஆங்.. தப்பு பண்ணிட்டேனே.. மகனையும் மருமகளையும் நம்பிய நான் என்னை நம்பாமல் போய்விட்டேனே... மனதில் புதிய தெம்பு கிடைத்தது. என் கால்கள் தானாக பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைந்தது.

ஆ!! இந்நேரம் என் மருமகள் வந்திருப்பாளே.. அவள் கண்ணில் கடிதம் பட்டிருக்குமோ... தெரியலியே.

அட சே!!... பஸ் ஊர்வலத்தோடு ஊர்வலமாக‌ ஊர்ந்தது.

"தாத்தா... கார்த்திக் தண்ணீரில் விளையாடிக்கிட்டே இருக்கான். ரொம்ப சேட்டை பண்ணுறான்," என்ற மலரின் சொல்லைத் தாண்டி என் அறைக்கு சென்றேன்.

அவனுடைய விளையாட்டில் என் கடிதமும் கப்பலாய் மாறியிருந்தது.

*****

அன்புள்ள நண்பர்களே!! இந்த கறுப்பு வெள்ளை சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறுகதையை தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

,

Post Comment

Sunday, June 6, 2010

அறிவியல் முன்னேற்றங்கள்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா...

இன்று அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பழங்கால மக்களின் வாழ்க்கைமுறை, இன்றைய சூழ்நிலைக்கு ஒப்பிடும்போது ஏணிவைத்தாலும் எட்டாத உயரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை. எந்த வளர்ச்சியும் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை செய்துபாருங்கள்.

இப்போது, எந்த அறிவியல் சாதனமும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். எப்படி உலகம் இயங்குகிறது என்று நீங்களே இந்த புகைப்படங்களை பார்த்து ரசியுங்கள் நண்பர்களே....

























Post Comment

Saturday, June 5, 2010

பதிவுலகம் செய்வது சரியா?.. தவறா?..

நேற்றுமுன்தினம் நான் எழுதிய "சத்தியமா நான்" என்ற கவிதை இடுகை வெளியிட்டிருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு விழுந்திருந்தது. பொதுவா நான் இந்த மைனஸ் ஓட்டுப்பற்றி கவலைகொள்வதில்லை. மைனஸ் ஓட்டுபோடுவது என்பது அவரவர் விருப்பம்தான். ஆனால் நண்பர் உடன்பிறப்பு தன்னோட பதிவில் ஜனரஞ்சக பதிவர் ஸ்டார்ஜன்னுக்கும் மைனஸ் ஓட்டு விழுந்திருக்கிறதே என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

நண்பர் உடன்பிறப்பின் இடுகை இதுதான்.

அதற்கு நொந்தக்குமாரன் என்பவர் கீழ்கண்டவாறு பின்னூட்டமிட்டிருந்தார். அதனை நீங்களே படியுங்கள்:


///நொந்தகுமாரன் said...

உடன்பிறப்பு,

நேற்று நர்சிம் பிரச்சனை குறித்து, பல பதிவுகளையும் படித்த பொழுது.. கலகம் அவர்களின் பின்னூட்டங்களில் ஓட்டளிக்க ஒரு வாய்ப்பு இருந்தது. பதிவின் கருத்தில் உடன்பட்டதால்...நான் வாக்களித்தேன். அதை வாக்களிக்கும் வாய்ப்பை கலகம் அவர்களே செய்திருக்கலாம். இதில் வினவின் டெக்னிக்கல் குழு தான் செய்தது என்பது உங்கள் கற்பனை.

பிறகு, நடுநிலை பதிவுக்கு மைனஸ் ஓட்டு என்கிறீர்களே... அந்த வாக்களித்தது நான் தான். அந்த "ஸ்டார்ஜன்" பதிவு ஊரில் சாதிய ஒடுக்குமுறை நடக்கும் பொழுது...இரு தரப்பினரும் அமைதியாக போக வேண்டும் என 'அமைதி விரும்பிகள்' வேண்டுகோள் விடுப்பார்கள் அல்லவா! அது மாதிரி இருந்தது அந்த பதிவு. அதனால் எதிர் வாக்களித்தேன்.

நர்சிம் என்ற பதிவரால் ஒரு பெண் பதிவர் கேவலமான முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறார். 'உடன்பிறப்பு'கள் எல்லாம் கமுக்கமாய் வேடிக்கைப் பார்க்கும் பொழுது... வினவு அதை தட்டிக்கேட்கிறது. அதையும் கூட ஆதரிக்கும் நேர்மை இல்லாமல், சித்து வேலைகள் என பதிவு போட முடிகிறது என்றால்.. இது எப்பேர்பட்ட கயவாளித்தனம்.

பின்குறிப்பு : இதை நீங்கள் வெளியிடவில்லை என்றால்.. உங்களுக்காக தனிப்பதிவு இட வேண்டியிருக்கும். வெளியிடுவீர்கள் தானே! உடன்பிறப்பு!

6:19 AM ///.


இதுதான் நான் எழுதிய கவிதை:

சத்தியமா நான்...

சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை
மறுநாள் காணாமல்
போயிருந்தது குடிக்கப்
போகும்போது...

எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு.
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்..

நீவருவாய் உணவருந்த
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.

கடையேழு வள்ளல்களைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது அந்தோ பரிதாபம்.

இருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..

இதில் எந்த இடத்தில் நான் நடுநிலைக் கருத்தை சொல்லிருக்கேன்?. இந்த கவிதைக்கும் அந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?.

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க சார்?...

,

Post Comment

Wednesday, June 2, 2010

சத்தியமா நான்...


சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை
மறுநாள் காணாமல்
போயிருந்தது குடிக்கப்
போகும்போது...

எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு.
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்..

நீவருவாய் உணவருந்த
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.

கடையேழு வள்ளல்களைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது அந்தோ பரிதாபம்.

இருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்