Pages

Sunday, September 5, 2010

கற்க கசடற


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

கற்க வேண்டியவற்றை முழுவதையும் சந்தேகமில்லாமல் கற்கவேண்டும். நாம் கற்றுக்கொண்டதுக்கு ஏற்ப அதன்படி வாழவேண்டும்.

மணல் உள்ள கிணற்றில் (ஊற்றில்) தோண்டத் தோண்ட தண்ணீர் வந்துகொண்டிருக்கும். அதாவது ஊற்றில் எந்த அளவுக்கு தோண்டுகிறோமோ அந்தஅளவுக்கு தண்ணீர் ஊறும். அதுபோல எந்த‌அளவுக்கு கல்வி கற்கிறோமோ அந்தளவுக்கு நமது அறிவு வளர்ச்சி பெறும்.

******************

கல்வி ஒருவனுக்கு வாழ்க்கையில் இன்றியமையான ஒன்று. அவனுக்கு வாழ்க்கையில் நேரான பாதை எது., தவறான பாதை என்பதை சுட்டிக்காட்டி அதன்படி நடக்க உறுதுணையாக இருக்கிறது. பிறந்ததிலிருந்து உலகமே என்னன்னு தெரியாமல் இருக்கும் நமக்கு, கல்வி ஒரு திருப்புமுனையை அமைத்துக்கொடுக்கிறது.

கல்வி கற்க, பள்ளிக்கூடம் நுழைவாயிலாக இருக்கிறது. அங்கே நுழைந்தவுடன் புது உலகம். அதுவரைக்கும் அம்மா அப்பாவின் அரவணைப்பில் இருக்கும் நாம் ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைக்கும்போது புதுபுது உறவுகள் நம்மை அதிசயிக்க வைக்கும். அதில் கிடைக்கும் சந்தோசம் எல்லையில்லாதது. நல்ல நண்பர்களை பள்ளிக்கூடம் சேர்த்து வைக்கிறது. சிலபேருக்கு சின்ன வயசுல ஒண்ணாம்வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்த நண்பர்கள் இணைபிரியாமல் சாகும்வரை நண்பர்களாக இருப்பார்கள்.

பள்ளிக்கு ஆசிரியர்கள்தான் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரம் சரியில்லை என்றால் அந்த கட்டடமே செயலற்றுதான் இருக்கும். பள்ளிக்கு உயிர் கொடுப்பது ஆசிரியர்கள்தான். ஒரு இருட்டறையில் உள்ள ஒரு ஒற்றை மெழுகுவர்த்தி அந்த அறை முழுவதுக்கும் தன்னுடைய வெளிச்சத்தை பரப்பி அந்த அறைக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது. அதுபோல ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் தன்னுடைய திறமையின்மூலம் மாணவர்களுக்கு அறிவை போதிக்கின்றனர்.

எந்த மாணவர்கள் நல்லா படிப்பார்கள்.., யாரிடம் என்னனென்ன திறமைகள் உள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய திறமைகளை வளர்த்து இந்த சமுதாயத்துக்கு ஒரு ஒழுக்கமான நல்ல மனிதர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் தான் பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்மோடு அதிக நேரம் செலவிடுவது. அந்த சூழ்நிலை ஒரு பையனுக்கு/பொண்ணுக்கு வாழ்க்கை நியதியை கற்றுக்கொடுக்கிறது.

மாதா பிதா குரு தெய்வம். மூன்றாவது வரும் தெய்வம்தான் நமக்கு இதுதான் நேரான வழியென்று சொல்லி அந்த பாதையில் அழைத்து செல்கிறது. ஆனால் சிலர் அந்த ஆசிரியர்களை கேலிப்பொருளாக பார்க்கிறார்கள். கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை கொடுக்கவேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்புடன் இல்லாமல் இருந்தால் நாம் அவரை ஏச்சி தண்ணி குடித்திடுவோமா இல்லையா அதான் அவர்கள் சிறிது கண்டிப்புடன் இருப்பார்கள். பள்ளிக்கூடம் வரைதான் அந்த கண்டிப்பு. ஆசிரியர்களை நாம் கண்டால் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கவேண்டும். அதுதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும். ‌அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது அவர்கள் காட்டும் அன்பே தனிதான்.


**************


நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் எட்டுவரை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தேன். சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அரசு பள்ளியில்தான் பனிரெண்டாம் வகுப்புவரை படித்தேன். ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த நேரம் மதிய உணவு இடைவேளை முடிந்து முதல் பாடம் கணக்கு. அந்த சார், கொஞ்சம் கோபக்கார ஆள்.

எனக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் கிளாஸ் லீடரிடம், "எலேய் மகேசு, எனக்கு தண்ணீர் தாகம் எடுக்குது., தண்ணீர் குடித்துவிட்டு வாரேன்" என்று சொன்னேன். அவனும் "எலேய், சீக்கிரமா வந்திரு.. சார் சத்தம் போடுவார்" என்றான். நான் தண்ணீர் குடித்துவிட்டு வருவதற்குள் கணக்கு சார் வந்துட்டார். நானும் விருவிருவென சாரிடம் உள்ளே வரலாமா என்று கேட்காமல் நுழைந்து விட்டேன். அப்போது, அவருக்கு சரியான கோபம்.

"எலே., இங்கவா.. வெளிய போடா ராஸ்கல்.. படுவா.., உம்பாட்டுக்கு உள்ளவாரே.. இனிமே என் கிளாஸ்யெல்லாம் வெளியத்தான் நிக்கணும்.. வரக்கூடாது" என்று கோபமாக கத்தி வெளியேற்றி விட்டார். உடனே மகேஷ்., "சார்.. சார் அவன் நியூ அட்மிசன் சார்.. அவனுக்கு தெரியாது சார்" என்று சொன்னான். உடனே அவர் கோபம் தணிந்து, "ஒஹோ அந்த பயலா நீ.. இனிமே எங்கபோனாலும் கேட்டுட்டுதான் உள்ளே வரணும்.. அதான் நல்ல பழக்கம். சரிசரி உள்ளவா" என்றார்.


*************

அதுபோல இன்னோரு சம்பவம்..

அதே ஒன்பதாம் வகுப்பில் தமிழ் பாடம்.. அந்த சார்தான் எங்க கிளாஸ்சார். அவர் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபு, ரம்பா நடித்த உழவன் படம். நாங்க படிக்கும்போதுதான் அந்தபட சூட்டிங் போயிட்டு வந்தார். சூட்டிங்கில் எடுத்த படங்களை எங்களிடம் காட்டியதில் எங்களுக்கு பெருமையாக இருந்தது. தமிழ்ப் புலவர் பட்டம் வாங்கியிருக்கிறார். நல்ல மனிதர்.

அவர் ஒருநாள்.., முதல்நாள் நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்டார். அப்போது விடைத் தெரியாத எல்லா பயலுகளும் எழுந்து நின்றார்கள். விடை தெரிந்த நானும் ஒரு சிலரும்தான் உக்கார்ந்து கொண்டோம். அப்போது அவர், "என்னை சுட்டிக்காட்டி.., பாத்தீகளால.. இவன் நம்ம ஸ்கூலுக்கு புதுப்பையன்.. படிப்புல என்னா ஆர்வமா இருக்கான். இவனைமாதிரி நல்லா படிங்கலே..." என்று பாராட்டி., "ஏய் ராசா.. நீ சொல்லு அந்த கேள்விக்கு பதிலு.." என்றார்.

நான் அந்த கேள்விக்கு பதில் பாதிவரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கும்போது பதில் மறந்து போய்விட்டது. உடனே தெரியாமல் பே பேன்னு முழிச்சேன். உடனே அவர், "எலேய்.. நல்லா ஆளுதான் ஓய்.. உன்னய நல்லபயல்லென்னு நினைச்சேன். பொய்யால சொல்லுறே.."என்று கோபமாக திட்டி அடிபின்னிட்டார். முட்டிக்கால் போடவைத்துவிட்டார். "எலேய்.. இந்த வருசம் பெயிலுதாம்லே நீ.. ராஸ்கல்.. இரு இரு உங்கப்பாட்ட சொல்லிக்கொடுக்கிறேன்" என்று திட்டிவிட்டார்.

எனக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது. அழுகையானது. உடனே என்நண்பன் முருகராஜன்.. "எலே இதுக்குபோயா அழுவுறே.. உடுஉடு.." என்று தேற்றினான். அதற்கு.. "எல., எனக்கு அவர் திட்டினதுகூட வருத்தமில்ல..ஆனா அவர் உன்ன பெயிலாக்கிருவேன்னு சொன்னார்பாரு.. அதான்" என்றேன்.

"பூ.. இதானா.. அவர் சும்மாதான் சொல்வார். பெயிலாக்கமாட்டார். கவலைப்படாதே.." என்று ஆறுதல் சொன்னான்.

அன்றிலிருந்து நான் அவருக்கு பிடித்தமான மாணவனாக நடந்துகொண்டேன்.

"எலேய்.., நல்லா படிச்சி உங்கப்பா அம்மாவுக்கு பேர் வாங்கிக் கொடுக்கணும். அவங்க நீங்க‌ பெரிய ஆளா உயர்ந்து நிற்கும்போது அவங்க படுகிற சந்தோசத்துக்கு அளவே இல்லை" என்று சொல்வார்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மகனை அறிஞன் என எல்லோரும் போற்றுதலை கேட்கும்போது அவனுடைய தாய் அவனை பெற்றெடுக்கும்போது எவ்வளவு சந்தோசப்படுவாளோ அதைவிட அதிகமாக சந்தோசப்படுவாள்.

இதுமாதிரி நிறைய வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள்.. பாட சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் என்று நிறைய சொல்லிக்கொடுப்பார். அவருடைய மனைவியும் ஆசிரியர்தான். அவர்களிடம் நான் ட்யூசனுக்கு 6 கிலோமீட்டர் நடந்து சென்று படிப்பேன். சில நேரம் மகேஷ்ன் சைக்கிளில் செல்வதுண்டு.

**********

விளையாட்டு, பழக்கவழக்கங்கள், போட்டி, படிப்பில் ஆர்வம் இந்த செயல்கள் மூலம் நமக்கு நண்பர்களை உருவாக்கும். சிலபேருடைய அறிமுகமே சண்டையில்தான் ஆரம்பிக்கும். அதுபோக, போட்டி இருக்கும்.., ஒருதடவை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நாந்தான் எப்போதும் முதல்ராங் வாங்குவேன். என்னோடு படிக்கும் மாணவிகளும் மாண‌வர்களும் முதல் மதிப்பெண் வாங்க என்னோடு போட்டி போடுவார்கள்.

அப்போது என் நண்பன் "எப்பப்பார்த்தாலும் நீதான் முதல்ராங் வாங்குறியே.. இந்த தடவ நீ முதல் ராங் வாங்கிறீயா,, இல்ல, நான் வாங்குறேனா பாப்போமாலே" என்ற போட்டி. அந்த மாதத்தேர்வில் நானும் நல்லா எழுதியிருந்தேன். ஆனால் ஆங்கிலப்பாடத்தில் மார்க் குறைந்ததால் என்னால் முதல்ராங் எடுக்கமுடியவில்லையே என வருத்தப்பட்டேன். அவனுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

"ஹேய் நாந்தான் இந்த தடவ முதல்ராங்" என்றான். எனக்கு என்னடா இப்படி ஆகிருச்சே என்ற வருத்தம். நான் உடனே என்னுடைய மார்க் அனைத்தையும் மறுபடி கூட்டினேன். அப்போது 9 மார்க்கை டீச்சர் கவனிக்காமல் கூட்டிவிட்டார். நான் உடனே டீச்சரிடம் சென்று, "டீச்சர் இந்த 9 மார்க்கை கூட்டாமல் விட்டுட்டீங்க என்றேன். உடனே டீச்சர் மறுபடியும் கூட்டி சாரிப்பா ஷேக், கவனிக்கல" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அப்போது நாந்தான் முதல்ராங்.

************

இது ஆரோக்கியமான போட்டி. இதில் பொறாமை கிடையாது. ஆசிரியர் இந்தப் போட்டியை ஊக்குவிப்பார். நன்கு பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து திறமைகளை வளர்ப்பார்கள்.

அது நமது வெற்றிக்கு அடிகோலும்..

நமக்கு சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசியர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூர்தல் சாலச்சிறந்தது. அதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

,

Post Comment

23 comments:

  1. //பள்ளிக்கு ஆசிரியர்கள்தான் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரம் சரியில்லை என்றால் அந்த கட்டடமே செயலற்றுதான் இருக்கும். பள்ளிக்கு உயிர் கொடுப்பது ஆசிரியர்கள்தான். ஒரு இருட்டறையில் உள்ள ஒரு ஒற்றை மெழுகுவர்த்தி அந்த அறை முழுவதுக்கும் தன்னுடைய வெளிச்சத்தை பரப்பி அந்த அறைக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது. அதுபோல ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் தன்னுடைய திறமையின்மூலம் மாணவர்களுக்கு
    அறிவை போதிக்கின்றனர்.//

    வாழ்த்துக்கள். அனுபவங்களை தொகுத்து வழங்கி ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியான பதிவு.

    ReplyDelete
  2. நனவோடைகளால் ஆசிரியர்களுக்கு வந்தனம். அழகு:)

    ReplyDelete
  3. சொந்த அனுபவத்தின் மூலம் ஆசிரியரின் அருமையை உணர்ந்த விதம் அழகு.

    ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. படித்த பள்ளி ஆசிரியர்களை ஞாபாகம் வைத்துக் கொள்வதே பெரிய விஷயம். அதை வைத்து பதிவும் போட்டு soooper பாஸ்! எமை புகழுக்கு உயர்த்திய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!!

    ReplyDelete
  5. //அம்மா அப்பாவின் அரவணைப்பில் இருக்கும் நாம் ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைக்கும்போது //

    எங்கே ஷேக் இப்பெல்லாம் இரெண்டரை வயசிலேயே பிரி கேஜி ஆராம்பிச்சிடுது :-))

    ReplyDelete
  6. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மெழுகுவர்த்தி உவமை அருமை .
    ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அழகான மலரும் நினைவுகளையும், பகிர்ந்து விட்டீர்கள்!!

    ReplyDelete
  10. ஷேக், உங்களது பள்ளிப் பகிர்வு என்னுள்ளும் பழசைக் கிளறி விட்டது.
    உங்களுக்கும் உங்கள் மனம் கவர்ந்த ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ///நான் அந்த கேள்விக்கு பதில் பாதிவரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கும்போது பதில் மறந்து போய்விட்டது. உடனே தெரியாமல் பே பேன்னு முழிச்சேன்////

    எனக்கும் இந்த அனுபவம் உண்டுங்க... உணர்ச்சி வசப்பட்டு, கைய தூக்கிற வேண்டியது...
    அப்புறம் பதில் சொல்லிட்டே வரும் போது.. பாதியில மறந்துரும்.. :D :D


    ///உடனே டீச்சர் மறுபடியும் கூட்டி சாரிப்பா ஷேக், கவனிக்கல" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அப்போது நாந்தான் முதல்ராங்///

    ஆஹா... அப்பவே முதல் ரேங்க்கா....?? கலக்குறேள் போங்கோ... :-))

    உங்கள் ஆசிரியர்களை .... நினைவில் கொண்டு வந்தது அருமை.. :-))))

    ReplyDelete
  12. அனுப‌வ‌ங்க‌ளுட‌ன் ஆசிரிய‌ர்க‌ளின் அருமையை அழ‌கா ப‌கிர்ந்துள்ளீர்க‌ள் ஸ்டார்ஜ‌ன்.. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. //விடை தெரிந்த நானும் ஒரு சிலரும்தான் உக்கார்ந்து கொண்டோம்//

    விடை தெரியலை என்றாலும் இப்படி தான் உட்காருவோம்.

    ReplyDelete
  14. அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. உங்கள் அனுபவங்களை சொல்லி எங்கள் பள்ளி நாட்களையும் நினைவு படுத்தி விட்டீர்கள்...நன்றி.

    //இது ஆரோக்கியமான போட்டி. இதில் பொறாமை கிடையாது. ஆசிரியர் இந்தப் போட்டியை ஊக்குவிப்பார். நன்கு பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து திறமைகளை வளர்ப்பார்கள்.//

    உண்மைதான்.

    எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாக இருப்பவர்கள் நம்ம ஆசிரியர்கள் தான்.

    ஆசிரியர் தின வாழ்த்துகள்....

    ReplyDelete
  16. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. அனுபவம் அழகான ஒரு பதிவை தந்திருக்கிறது சேக்.
    இந்த பதிவு கல்விக்கண் திறந்த ஆசிரியர்களுக்கு சிறந்த சமர்பணமாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அதே மாணவ வெள்ளந்தி மனதுடன், பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கீங்க. அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. அருமையான பதிவு.கூடவே சுவாரஸ்யாமான கொசுவத்தியுடன்.சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் நெல்லைத்தமிழ் பேச்சு வழக்கில்.

    ReplyDelete
  20. ஒரே பதிவில் இத்தனை மெசேஜ்
    அனுபவங்கள் அருமை

    ஆசிரியர்கள் மிகவும் மதிப்பிற்குரியவர்கள்

    ReplyDelete
  21. இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்