Pages

Monday, March 5, 2012

ஏமாறுகிறவன் இருக்கும்வரை...

சென்ற ஆண்டு ஊருக்கு சென்றிருந்த சமயம், எப்போதும் மதியம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கத்தை போடுவதுண்டு. அப்படி ஒருநாள், சாப்பிட்டுவிட்டு குட்டித்தூக்கத்தை புரண்டு புரண்டு வரவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது அலைபேசி அலறிக்கொண்டிருந்தை பார்த்த என் மனைவி, "ஹலோ! ய்யாரு.." என்றார். "ஹலோ! மிஸ்டர் ஷேக் மைதீன் இருக்கிறாரா.. அவரிடம் கொடுங்க., கொஞ்சம் பேசணும்" என்று கொஞ்சும் குரலில் ஒரு பெண் மறுமுனையில். மனைவி ஒருவித பார்வையுடனே என்னிடம் போனை தந்தார்.



நான் "ஹலோ" என்றேன். "ஹலோ நீங்கதான் ஷேக்மைதீனா?" என்றாள். "ஆமா நாந்தான்.. என்ன வேணும் சொல்லுங்க" என்றேன். உடனே மறுமுனை பெண், "சார்! கன்கிராஜிலேசன்ஸ்! நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படப்போகுது! உங்க கனவு நனவாகப்போகிறது!" என்றாள் அவள். "அட! என்னங்க சொல்றீங்க.. ஒண்ணும் புரியலியே.." என்றேன். "ஆமா சார்.. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. எங்க நிறுவனத்தின் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்)ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் உங்க ரெண்டுபேரையும் செலக்ட் பண்ணிருக்காங்க. இலவசமா பாலிசி தர்றாங்க. பணமே கட்டவேண்டாம். உங்களுக்கு 2 லட்சரூபாய்க்கு பாலிசி இலவசம்" என்றார் அந்த பெண்.

"அடடே.. ரொம்ப நல்ல விசயந்தான் சொல்லியிருக்கீங்க.. அப்ப நான் அதிர்ஷ்டசாலிதான் ரொம்ப சந்தோசமா இருக்கு.." என்றபடி மனைவியை ஒரு லுக் விட்டேன். மனைவியும் "என்ன?.. யாருங்க போன்ல" என்றபடி ஆர்வமானார். இதுபோல நிறைய இலவச பாலிசி மேட்டர் கேள்விபட்டிருந்தாலும் இவங்க என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே என்று போனை துண்டிக்காமல் இன்சூரன்ஸ் கம்பெனி பெண்ணுடன் பேச்சை தொடர்ந்தேன். இதைக் கண்டு என் மனைவியும், அத்தாவும், அம்மாவும், தங்கையும் ஆர்வத்துடன் என் அருகே அமர்ந்ததும், நான் பேசுவதை ஸ்பீக்கர் போனில் போட்டு அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

"ஆமா சார்! நீங்க அதிர்ஷ்டசாலிதான். பாலிசியை வாங்கிக்கொள்ள எங்க அலுவலகத்துக்கு வாங்க" என்றார். "சரிங்க.. உங்க அட்ரஸ் கொடுங்க.. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்" என்றேன். அந்த பெண்ணும் ஆபீஸ் அட்ரஸ் கொடுத்தார். ரொம்ப நன்றி என்றேன். "பரவாயில்லை சார்! எங்களுக்கும் பங்கு கிடையாதா?.." என்றார் அந்தபெண். "என்னது?.. உங்களுக்கும் பங்கா?.. அஸ்குபுஸ்கு!" என்றேன் நான். "அட என்ன சார்! நான் சொன்னது உங்க சந்தோசத்தில்" என்றார் அந்த பெண். இருவரும் கடகடவென சிரித்தோம்.

"சரிங்க அப்ப நான் உங்க ஆபீஸ்க்கு வந்து பாலிசியை வாங்கிக்கிறேன்" என்றேன். "சரிங்க‌ சார்! வரும்போது மறக்காம உங்க மனைவியையும் கூட்டிட்டு வாங்க" என்று அடுத்த குண்டை போட்டார் அந்த பெண். "மனைவியை ஏன் கூட்டிட்டு வரணும்?.. நானே வந்து வாங்கிக்கிறேன் மேடம்" என்றேன். "இல்லீங்க.. கண்டிப்பா உங்க மனைவியையும் கூட்டிட்டு வரணும். மனைவியோட வந்தால்தான் பாலிசி கொடுப்பாங்க. மறந்துருராதீங்க சார்" என்றதும் நான், "மேடம்! மனைவியை இப்ப கூட்டிட்டு வரமுடியாது. நானே வந்து வாங்கிக்கிறேனே மேடம்" என்றதும் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார் அந்த பெண்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். மறுபடியும் அவளிடமிருந்து போன். "ஏன் சார்.. உங்க மனைவி வரமாட்டாங்க?. கண்டிப்பா வரணுமே சார்" என்றார் அந்த பெண். "இல்லீங்க.. அவங்க வரமுடியாத சூழ்நிலை. அதனாலதான் நான் வருகிறேன் என்று சொன்னேன்" என்றேன் நான். அந்த பெண்ணும் லேசுல விடலை. துருவிதுருவி கேட்டுக்கொண்டிருந்தார். "என்ன சூழ்நிலை?. உங்களுக்கு பாலிசி வேணுமென்றால் மனைவியோட வாங்க" என்றார். "என் வொய்ப் ஊருக்கு போயிருக்காங்க. வர 2 நாளாகும். நான்கூட இப்ப ஊருக்குதான் கிளம்பிக்கிட்டு இருக்கிறேன். அதனால நான் இப்ப வந்து வாங்கிக்கிறேன். பாலிசி டாக்குமென்ட்ஸ் எல்லாம் ரெடியா வச்சிருங்க. இப்ப வருகிறேன்" என்றதும் அந்த பெண் போன் இணைப்பை மறுபடியும் துண்டித்து விட்டார்.

எங்க வீட்டிலுள்ளவர்களுக்கு இது உண்மையா இல்லை பொய்யா?.. என்று ஒரே குழப்பம். பொய்தான் என்று தெரிந்தாலும் அந்த பெண் பேசுவதை வைத்து பார்க்கும்போது உண்மையா இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த பெண்ணின் பேச்சு அற்புதமாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. இவர்களுக்கு ரொம்ப நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காங்க.

அப்போதுதான் எனது சிஐடி மூளையில் பல்பு பிரகாசித்தது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் இடம் நன்றாகத் தெரியும். அங்கே சென்று இது பொய்யா?.. உண்மையா? என்று நேரில் பார்த்துவிடலாம் என்று தோன்றியது. உடனே அங்கே கிளம்பிவிட்டேன்.

அதுஒரு ஐந்துமாடி கட்டடம். கீழ் தளத்தில் பிரபலமான ரெஸ்டாரென்ட் இயங்குகிறது. நான் அங்கு சென்று லிப்டை ஆன் செய்தேன். அது ஒர்க் ஆகவில்லை. அங்கிருந்த காவலாளி, "லிப்ட் ஒர்க் ஆகாது., படியில் ஏறி போங்க சார்" என்றார். விறுவிறுவென படிகளில் ஏறி நான்காவது மாடியில் உள்ள அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்றதும் எனக்கு அதிர்ச்சியானது.

சரியாக கட்டிமுடிக்கப்படாத கட்டடம். சுற்றிலும் நோட்டம்விட்டேன். அங்கு யாருமே இல்லை. மேலும் முன்னேறி சென்றேன். அப்போது மீண்டும் அதே குரல். அதே குரல் பல குரல்களாக எதிரொலித்தது. அப்போது எதிரே ஒரு பெண் அலுவலகத்துக்கு உள்ளிருந்து வந்தாள். நான் சுற்றும்முற்றும் பார்ப்பதை உணர்ந்து என்னவென வினவினாள். அதற்கு நான், "நான் கீழே ரெஸ்டாரென்ட்க்கு வந்தேன். மேல்மாடியில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் இலவச பாலிசி தருவதாக பேசிக்கிட்டாங்க. அதான் இங்கே வந்தேன்" என்றேன். "அப்படியா.. ரொம்ப சந்தோசம். ஆமா., இங்கே இலவச பாலிசி உண்டு. உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா ஒய்பை கூட்டிட்டு வாங்க. இலவச பாலிசி தருவாங்க" என்றாள். நான் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நோட்டம் விட்டேன். "சரிங்க மேடம் அப்ப நா வாரேன்" என்று அங்கிருந்து கிளம்பினேன்.

நான் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சிதான் மிஞ்சியது. உள்ளே நாலைந்து கால் கேபின்களில் இளம்பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் பேசிய பெண்ணின் குரலும் கேட்டது. இவர்கள் பேச்சாலே கஸ்டமர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தனர். அந்த அலுவலகத்தில் பாலிசி கொடுப்பதாக இருந்தால் எதாவது அதிகாரியோ இல்லை அலுவலகமாகவோ இயங்கவேண்டுமே. அங்கு ஐந்தாறு பெண்களை தவிர வேறயாருமே இல்லையே?.. பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து ஏமாற்றுதல் முறையற்ற செயல். இந்த பெண்களையும் குற்றம் சொல்லி பயனில்லை

எனக்கு தெரிந்து,

இப்படித்தான் சில இடங்களில் இலவச பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து உங்களுக்கு இலவசமா பாலிசி தருவதானால் இவ்வளவு தொகை செலுத்தினால் போதும். அப்புறம் நீங்க பணம் எதுவும் கட்டவேண்டாம் என்று சொல்லி பணத்தை கறந்துவிடுவார்கள். இப்படி நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

முதலில் இலவசம் என்று சொல்லி பின்னர் டாக்குமென்ட்ஸ் கையெழுத்திடும்போது ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை கேட்டால் என்ன செய்வது?.. இவர்களது இலக்கு நடுத்தர வர்க்கத்தினரை இலவசம் என்ற பெயரில் கவர்ந்து இழுப்பதுதான். இதுபோல கம்பெனி தரும் இலவசங்களை கண்டும் காணாமல் விடுவது சாலச் சிறந்தது.

அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். இதுபோன்ற இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

மறுநாள், மறுபடியும் அதே பெண்

"ஹலோ சேக்மைதீன்!.. உங்க ஒய்ஃப் ஓகே சொன்னாங்களா.. உங்க ஒய்ஃபை கூட்டிட்டு எப்ப வாரீங்க? உங்களுக்கான இலவச பாலிசி வெயிட்டிங்ல இருக்கு.. வந்தீங்கன்னா வாங்கிக்கிரலாம். இல்லன்னா வேற யாருக்காவது கொடுத்திடுவாங்க‌" என்றாள். உடனே நான், "இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோட பாலிசிய வேற யாருக்காவது கொடுத்திடுங்க.. எதோ நம்மளால முடிஞ்ச உதவி. உங்க புண்ணியத்துல அவங்களாவது நல்லாருக்கட்டுமே" என்றேன்.

,

Post Comment

25 comments:

  1. ஆளே இல்லாத கடைல டீ ஆத்துறாங்கன்னா சம்திங் ராங்...:)
    இலவச பாலிசி வாங்கறது என்னோட பாலிசி இல்லன்னு ஒரு பஞ்ச் டயலாக் விட்டுட்டு வரவேண்டியதான குரு....:))

    ReplyDelete
  2. ரொம்பப் புதினமா இருக்கே. மனைவியை ஏன் அழைத்து வரச் சொல்றாங்க? பணம் பறிக்கணும்னா ஆண்களைத்தானே தனியா வரச்சொல்லுவாங்க?

    ReplyDelete
  3. வாங்க பிரதாப் @ ஹா ஹா ஹா.. சிரிப்பை அடக்கமுடியல பிரதாப்.

    ReplyDelete
  4. இது மாதிரி எல்லாம் ஊரில் என்ன,இங்கேயே நடக்குது.புத்தியுள்ளவன் பிழைப்பான்.சகோ.

    ReplyDelete
  5. நல்ல விழிப்புணர்வுப் பதிவு. நன்றி!
    இப்படியெல்லாம் ஏமாத்திப் பொழைக்கிற அந்த காப்பீட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டுருக்கலாமே சகோ.?

    ReplyDelete
  6. விழிப்புணர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. :) நல்ல அனுபவம், இங்கெல்லாம் இலவச விமான டிக்கெட் மற்றும் 10 நாள் இன்பச் சுற்றுலா ன்னு சொல்லி செக் வைப்பாங்க

    ReplyDelete
  8. எத்தனை எச்சரிச்சாலும் போய் விழுறவங்க இருக்கத்தான் செய்யறாங்க.. நீங்க சுதாரிச்சுக்கிட்டீங்க :-)

    ReplyDelete
  9. இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகளை நீங்கள் போலிசில் பிடித்துக்கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. நல்ல எச்சரிக்கைப் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வாங்க ஹூசைனம்மா @ ஆமா ரொம்பவே புதுசா இருக்கு. ஒய்ஃபையும் கூட்டிட்டு வரச் சொல்றாங்கன்னா எதோ விசயமிருக்கும். உசாரா இருக்கணும் இல்லன்னா ஏமாத்திருவாங்க.

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  12. வாங்க ஆசியாக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  13. வாங்க மீரான் @ பெயர் குறிப்பிட்டு இருக்கலாம். பின்னாடி எதுவும் பிரச்சனை வந்துடகூடாது பாருங்க. அதான். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  14. வாங்க டாக்டர் பழனி. கந்தசாமி அய்யா @ கண்டிப்பா எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி அவசியம். அந்த நோக்கில்தான் எழுதினேன்.

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  15. இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோட பாலிசிய வேற யாருக்காவது கொடுத்திடுங்க.. எதோ நம்மளால முடிஞ்ச உதவி. உங்க புண்ணியத்துல அவங்களாவது நல்லாருக்கட்டுமே" என்றேன்.
    ///

    கரெக்டா சொன்னீங்க.ஷேக்.இப்படி ஏமற்றுபவர்கள் எத்தனை பேர்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமற்றுபவர்கள் ஒழிய் மாட்டார்கள்.நல்ல விழிப்புணரவை ஊட்டும் இடுகை.

    ReplyDelete
  16. வாங்க கண்ணன் அண்ணே @ எல்லா இடங்களிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும். எல்லா நேரமும் கவனமா இருக்கணும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. வாங்க சாந்தியக்கா @ சரியா சொன்னீங்க. கவனம் தேவை

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க அக்பரே @ ஹா ஹா ஹா... தப்பிச்சிட்டேன். நல்ல வேளை

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வாங்க ரஹீம் கஸாலி @ போலீஸ் போற அளவுக்கு அவங்க அவ்வளவு ஒர்த் இல்லை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  20. இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடிச்சிரலாம் என்று கணக்கு போடுகிறவர்கள், ஒரு பக்கம். இலவசம் பெயராலே, பாலிசி பணம் கொள்ளை அடிப்பவர்கள், ஒரு பக்கம்....... என்னத்த சொல்ல? மக்கள் தான் இலவசங்கள் என்று வந்தால் நம்பி போய் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  21. வாங்க தனசேகரன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  22. வாங்க ஸாதிக்காக்கா @ நன்றி! வலைச்சரத்தில் எனது சிறுகதையை குறிப்பிட்டதுக்கு.

    சரியா சொன்னீங்க. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்