
இது எனது 150 வது இடுகை. வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன். உங்கள் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடையாய் இந்த பதிவு. நம் மனைவி, மக்கள், பெற்றோர் சொந்தபந்தங்களை விட்டு அந்நிய மண்ணில் வாழும் பிரஜைகள் நாம். உள்ளமோ குடும்பத்தை நினைத்து வாட உதடுகளோ சிரிக்கும் ஒரு ஜீவன் நாம்.
என்ன செய்வது?.. எல்லாம் நம் பெரியகைகள் செய்த கொடையினால் நாம் எல்லோரும் இப்போது வெளிநாட்டில் அடுத்தவனுக்கு அடிமையாக. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்.. என்ற பாட்டு கேட்க மட்டுமே உதவும். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது. வெளிநாட்டுக்கு விமானம் ஏறும்போதே நம் ஆசை, விருப்புவெறுப்பு, சுதந்திர கனவெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுதான் ஏறவேண்டும். இங்கே ( அந்தந்த நாட்டு ) வந்தபின் இந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும். மீறும் போது கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகும் சூழ்நிலை.
இதே நம்நாடு என்றால் வெளிநாட்டு பயணிகளுக்கு நாம் தரும்மரியாதையே தனிதான். வெளிநாட்டுகாரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கிடைக்கும். ஆனால் இங்கே அப்படியே நிலைமை தலைகீழ். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தன்நாட்டுக்காரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கொடுப்பார்கள். அவங்க நாட்டு குடிமகனுக்கு ஒருசட்டம்; வெளிநாட்டுக்காரனுக்கு ஒரு சட்டம்.
அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு. அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது.. இப்படி எண்ணற்ற துன்பங்கள் கொடுக்கின்றனர். இப்படிதான் எங்க ஏரியாவில் சிலநாட்களுக்கு முன்னால், சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை இரும்புகம்பியை கொண்டு தலையிலும் முதுகிலும் பலமாக தாக்கி சென்றுள்ளனர். அவர் இப்போது ஆஸ்பத்திரியில். இந்தியாவுக்கு சென்று மருத்துவம் பார்க்கப்போகிறார். ஏன் தடுக்ககூடாதா என்று நீங்கள் கேட்கலாம்?. தாக்குபவர்கள் காரில் வந்துகொண்டிருக்கும்போதே தாக்கிவிட்டு வேகமாக சென்றுவிடுவார்கள்.
அப்படியே அவர்களை பிடித்தாலும் இந்த நாட்டுக்காரர்கள் கண்டும்காணாததுபோல இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதுபோல இதே நாம் அவர்களை தாக்கினால் நிலைமையே வேற.. அவ்வளவுதான் எப்படிடா எங்கஆளை நீ அடிக்கலாம்.. உனக்கென்ன உரிமை இருக்கு?.. வா போலீஸுக்கு.. உனக்கு சவுக்கடி தண்டனை வாங்கித்தராமல் விடமாட்டேன்., என்று கர்ஜிக்கும் சிங்கங்களுக்கு மத்தியில் நாம். என்ன செய்ய அமைதியாக இருக்கவேண்டிய நிலை.
இது மட்டுமல்ல.. இவங்க கார் ஓட்டுற ஸ்டைலே தனிதான். இங்க சின்ன பையன்கூட அழகாக திறமையா ஓட்டுவான். இருந்தும் என்ன பயன்?.. நம்மள ரோட்டை கடக்கவிடமாட்டாங்க.. ரொம்ப வேகமா ஓட்டுவாங்க.. சிட்டிக்குள்ளே 120 கி.மீ/ஹ ஸ்பீடுல வருவாங்கன்னா பாத்துக்கோங்க.. இதனால் நிறைய ஆக்ஸிடன்டுகள் நடக்கும். ஆனா இவங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. இவங்களுக்காக வேண்டியே காரை தரமா தயாரித்திருப்பார்கள்.
இப்படித்தான் போனவருஷம் நானும், அக்பரும், அக்பரின்தம்பியும் பர்சேசிங் பண்ணபோயிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன்; வீதியெங்கும் நல்ல ஜனநெருக்கடி, சரியான கூட்டம். சாலையில் வரிசையாக கார்கள் வந்துகொண்டிருந்தன. நாங்கள் சாலையை கடந்து அந்தபக்கம் செல்லவேண்டும். நாங்களும் பொறுமையாக நின்று சாலையை கடப்பதற்காக காத்து நின்றோம்.
எங்களுக்கு கொஞ்சதூரத்தில் சிலர் சாலையை கடப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கடக்கும்நேரத்தில் நாமும் கடந்துவிடலாம் என்று சாலையை கடக்க எத்தனித்தோம். சாலையை கடந்து வந்துகொண்டிருக்கும்போது அதற்குள் ட்ராபிக் ஜாமாகிவிட்டது. நாங்கள் சாலையின் பாதியில் நின்றுகொண்டிருந்தோம். சரியாக மாட்டிக்கொண்டோம். பின்னாலும் வரமுடியாது. முன்னால் செல்லலாம் என்று நினைக்கும்போது ஒரு கார் வந்துகொண்டிருந்தது. காரில் உள்ள சவுதிக்கு எரிச்சலாகி என்னடா நம்மை போகவிடாதபடி கடந்து கொண்டிருக்கிறார்களே என்ற கோபம். அந்த கோபத்தில் எங்களை இடிக்கும் அளவுக்கு வந்தார்...
அக்பர், அக்பர்தம்பியைவிட நான் கொஞ்சம் பருமன். எனது மூளை சுறுசுறுப்பாகி எங்கே இடித்துவிடுவானோ என்று சிறிதும் தாமதிக்காமல் ஒரு நொடியில் திடீரென அந்த சவுதியின் காரை முந்தி அந்த பக்கம் கடகடவென ஓடி மறுபக்கம் கடந்து சென்றுவிட்டேன். அக்பரும் அக்பர்தம்பியும் இரண்டு கார்களுக்கு மத்தியில். ரொம்ப குறுகி நின்றுகொண்டிருந்தார்கள். ஒரு இம்மி அளவு அவர்கள் அசைந்தாலும் முன்னால் சென்ற கார் மோதியிருக்கும். நான் மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் சட்னிதான்.
அப்பாடி.. ஆண்டவன் கிருபையினால் அன்று தப்பி பிழைத்தோம்.
இது உலகம்பூராவும் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சூழ்நிலை.. உண்டா இல்லையா சொல்லுங்கள் நண்பர்களே?...
இது மட்டுமல்லாமல் இங்கே நிலவும் தட்பவெப்பநிலை. ஆறு மாதம் கடும்வெயில் கடும் குளிர், பாலைவன மணற்காற்று, புயல்காற்று இப்படி இயற்கை சீற்றங்களுக்கும் தலைவணங்க வேண்டிய சூழ்நிலை..
ஆனால் நாம் இங்கு இருப்பது பற்றி நம்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கும் பிம்பமே வேற... குறிப்பாக நம்ம சொந்தக்காரங்களின் நினைப்பே தனிதான். ஆஹா வெளிநாட்டில் வேலை செய்யுறான்; கைநிறைய சம்பாதிக்கிறான்; ஏயப்பா வீடெல்லாம் கட்டிட்டான்.. வசதியா இருக்கான்; அவனுக்கென்ன கவலை.., இப்படி அவர்கள் அவங்க இஷ்டத்துக்கு மனக்கோட்டை கட்டி வச்சிருப்பாங்க.. ஆனா இங்க நாம கஷ்டப்படுறது நமக்கும் நம்ம குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்.
அதுமட்டுமல்லாமல் அவங்க நம்மிடம் ஏப்பா எனக்கு வரும்போது அத வாங்கிட்டுவா இத வாங்கிட்டுவா.. எனக்கு ஒரு விசாப்பாரு நானும் அங்க வரலாம்முன்னு நினைக்கிறேன்.. என்று நம் சக்திக்குமீறி கேட்கும்போது நம்மால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாத சூழ்நிலையில் மௌனமாகதான் இருக்கவேண்டியுள்ளது.
ஒரு போன் பண்ணமுடியல.. அவங்க பிள்ளைக்கு பிறந்தநாளுன்னு வாழ்த்து சொல்ல போன் பண்ணுனது தப்பா போச்சி.. போன் பண்ணுன உடனே எப்பா எனக்கு விசா பாரேன்.. எனக்கு வரும்போது அந்த சாமான் வாங்கிட்டுவந்திரு.. நீ நல்லாருக்கியான்னு ஒரு வார்த்தை மனசுல இருந்து வரட்டுமே பாப்போம்.. நீ நல்லாரு நல்லாரு நல்லாரு... இந்த வார்த்தைய கேட்கும்போது வாழ்த்துறமாதிரி தெரியல.. வயித்தெரிச்சல்ல சொல்றமாதிரி இருக்கு.. எவ்வளவு மனசு கஷ்டமாகுன்னு ஏன் அவங்களுக்கு தெரியல.. ஏன்ப்பா இவ்வளவு நாளா போனே பண்ணல.. இப்படி நீங்களெல்லாம் சொன்னா எப்படி போன் பண்ண மனசு வரும்?... சொல்லுங்க பாப்போம் மனச தொட்டு..
வெளிநாட்டுக்கு வரணும் என்றகனவு நல்ல கனவுதான். ஆனால் நாம் சில சூழ்நிலைகளை சந்தித்தே ஆகவேண்டும்.
இந்தியாவிலேயே நல்ல வேலை நல்ல வருமானம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் இங்கே வந்து கஷ்டப்படணும். மனைவி மக்களுடன் குடும்பத்துடன் சந்தோசமாக இந்தியாவிலே வாழலாமே...
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,