Pages

Tuesday, August 10, 2010

போனஉயிர் திரும்ப வருமா..

நெல்லையில் அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி.
பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற பஸ்ஸிலிருந்து இறங்கியதால் மாணவர் அருண்குமார் பலியானார்.

இந்த செய்தியை காலையில் கேட்டதும் மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

நெல்லை புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டரில் தொலைவில் திருநெல்வேலி_ நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ஐ.ஆர்.டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இது அரசாங்க போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகையில் கல்லூரி கட்டணங்கள் அமைந்திருக்கும். இதர மாணவர்களும் படித்து வருகிறார்கள். இந்த பாலிடெக்னிக்கில் சேருவதற்கு கடும்போட்டி உண்டு.

இந்த கல்லூரி புறநகர் பகுதியில் இருப்பதால் அவ்வளவாக பஸ் போக்குவரத்து கிடையாது. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே நெல்லை ஜங்சன் பேரூந்து நிலையத்திலிருந்து பஸ்கள் உண்டு. தவறினால் கல்லூரிக்கு செல்லமுடியாதநிலை. ஆனால் நாகர்கோவில் செல்லும் பேரூந்துகள் மனதுவைத்தால் மட்டுமே செல்லமுடியும். கஷ்டம்தான் இதுமாதிரி புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு..

இன்று பலியான மாணவர் அருண்குமார் தென்காசியை சேர்ந்தவராம்.. தினமும் தென்காசியிலிருந்து நெல்லைக்கு பயணம் செய்து கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரிக்கு நேரமானதால் நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் ஏறி கல்லூரியில் இறங்க திட்டமிட்டு பயணம் செய்தார். ஆனால் கண்டக்டரும் டிரைவரும் கல்லூரி நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் டிரைவரிடம் கெஞ்சியதில் டிரைவர் பஸ்ஸை ஸ்லோ செய்தார். அருண்குமார் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது தவறிவிழுந்து பலியானார்.

இந்த மாணவர் எனது உறவினர் மகனின் வகுப்புத் தோழன் என்பதால் மிகவும் வருத்தத்திலும் வருத்தம். இந்த செய்தியை காலையில் கேட்டதும் ரொம்ப மனசு கஷ்டமாகிவிட்டது.

பள்ளி மாணவர்/ கல்லூரி மாணவர்களை கண்டாலே கண்டக்டருக்கும் டிரைவருக்கும் பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை... ஒரு மனிதாபிமானம் இல்லையே.. இறங்குவதற்கு ஒரு நிமிசம் ஆகுமா.. அலட்சியத்தால் ஒரு உயிரை இழக்கவேண்டியதாயிற்றே..

பொதுவாக எங்கெல்லாம் பள்ளி/கல்லூரி நிறுத்தங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ்கள் நிற்கவே நிற்காது. ஒரு அரைகிலோமீட்டர் சென்றுதான் நிறுத்துவார்கள். மாணவர்கள் எல்லோரும் பஸ்கள் பின்னாலே ஓடிவந்து ஏறுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். ஏறியபின்னாடியும் கண்டக்டரிடமிருந்து வசவை வாங்கிவிட்டுதான் பயணிக்க வேண்டும். என்ன கொடுமை இது.. இதுமாதிரி அனுபவங்கள் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.

பஸ்ஸில் ஏற்றிச்சென்றால் குறைந்தா போய்விடுவார்கள் என்ன.. ஏதோ அவர்கள் வீட்டு சொத்தை அபகரித்ததுபோலதான் அங்கலாய்த்து கொள்வார்கள். அதுவும் பஸ்பாஸ் வைத்திருக்கும் சிறுவர்களுக்கு நிறைய வசவு கிடைக்கும்.. அவர்களை தங்கள் பிள்ளைகளை போல நினைக்க மறுப்பது ஏனோ?..

பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தரப்பிலிருந்து கேட்டால் என்ன சொல்வார்கள்.. ஸ்டாப்பிங் கொடுக்காத இடங்களில் நிறுத்த எங்களுக்கு அனுமதி இல்லை. மீறி நிறுத்தும்போது டைம்கீப்பிங்கில் எங்களுக்கு ரீமார்க் கிடைக்கும். மாணவர்களை ஏற்றி இறக்கும்போது காலவிரயமாகும். நாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லாவிட்டால் பதில் சொல்லவேண்டியிருக்கும். அதுபோக மாணவர்கள் பஸ்ஸுக்குள் சேட்டை செய்யும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். இதை தவிர்க்கவே மாணவர்களை பஸ்ஸுக்குள் ஏற அனுமதிப்பதில்லை.

இவர்கள் இப்படி சொன்னால் மாணவர்களின் போக்குவரத்து கேள்விக்குறியாகிறது. பள்ளி/கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகிறது. மாணவர்களை எல்லா நேரங்களிலும் ஏற்றிச்செல்ல வேண்டியதில்லையே.. பள்ளி/கல்லூரி நேரங்களான காலை, மாலை வேளை நேரங்களில் தானே மாணவர்கள் செல்வார்கள். அந்த நேரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் மனிதாபிமான நோக்கோடு உதவி செய்யலாமே..

எப்படிதான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இறந்த அந்த மாணவனின் உயிர் திரும்ப கிடைக்குமா..

வரும்காலங்களில் இதுமாதிரி வருந்ததக்க சம்ப‌வங்கள் நடைபெறாமலிருக்க போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுக்குமா..

என்பதே நம் அனைவரின் கேள்வியும்..

,

Post Comment

22 comments:

 1. நான்தான் பஸ்ட்டு....ஊ ஊஊஊஊஊ

  ReplyDelete
 2. காலம் காலமா இதே கதைதான் நடக்குது யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை...இந்த நிலை மாறனும் பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 3. பொதுவாகவே மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் சாகசத்தை விரும்புவதால் இம்மாதிரி நடந்து விடுகிறது.

  பெற்றோர் படிக்க அனுப்பிய பிள்ளையை பிணமாக பார்ப்பது கொடூரம்...

  ReplyDelete
 4. வருத்தமான செய்திதான் அனால் சில மாணவர்கள் அவசியம் இன்றி படிகட்டில் பயணம் செய்வதும் சாகசம் என்றபெயரில் உயிருடன் விளையாடுவதும் கூட வாடிக்கைதான்.

  ReplyDelete
 5. இதில பாதி மாணவர்களின் செயல்கள்தான் .
  இனியாவது கொஞ்சம் கவனமாக இருக்கனும்
  :-(

  ReplyDelete
 6. ரொம்ப வருத்தமா இருக்குங்க.. :-((

  ReplyDelete
 7. இந்த செய்திக்கு வருத்தம்
  கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
  Link:www.secondpen.com/tamil/what is jaiku?

  ReplyDelete
 8. //பொதுவாக எங்கெல்லாம் பள்ளி/கல்லூரி நிறுத்தங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ்கள் நிற்கவே நிற்காது. ஒரு அரைகிலோமீட்டர் சென்றுதான் நிறுத்துவார்கள். //

  உண்மைதான் ஸ்டார்ஜ‌ன்.... வ‌ருத்த‌மான் நிக‌ழ்வு.. :)

  ReplyDelete
 9. இப்படிப்பட்ட அசம்பாவித நிகழ்வுகள் நடை பெறும் பொழுது மீடியாக்களில் விஸ்வரூபம் எடுத்து மக்களை திகிலடையசெய்தாலும் நாளைடைவில் மறந்து போய்..மீண்டும் இது [போல் அசம்பாவிதம் நிகழும் பொழுது..மறுபடி... இது நிகழ்ந்தவண்ணமாகத்தான் உள்ளது.கண்டிப்பாக களைந்தெறியப்படவேண்டிய விடயம்.படிகட்டுப்பிரயாண்ங்களைப் பார்க்கும் பொழுது பகீர் என்றுதான் உள்ளது.அர்சாங்கம்தான் கடுமையான சட்டதிட்டங்களைக்கொண்டுவந்து,முறைபடுத்தி விலைமதிக்கபட முடியாத உயிர்களை காக்க வேண்டும்

  ReplyDelete
 10. //பொதுவாக எங்கெல்லாம் பள்ளி/கல்லூரி நிறுத்தங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ்கள் நிற்கவே நிற்காது. ஒரு அரைகிலோமீட்டர் சென்றுதான் நிறுத்துவார்கள். மாணவர்கள் எல்லோரும் பஸ்கள் பின்னாலே ஓடிவந்து ஏறுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். //

  உண்மைதான்... வருத்தமான விஷயம்.... இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 11. வருத்தந்ரும் நிகழ்வு.
  இதில் மாணவர்களும் அவசியமின்றி படியில் நிற்பது, ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்குவது போன்றவற்றை ஒரு சாகசமாக நினைக்கிறார்கள். உயிரின் மதிப்பு அனைவருமே உணர வேண்டும்.

  ReplyDelete
 12. உயிரின் விலை தெரியாமல் விளையாடுகிறார்கள்

  ReplyDelete
 13. படித்து தன் பிள்ளை ஒரு நல்ல நிலைக்கு வரும் என்கின்ற எண்ணத்தோடு, காத்திருக்கும் பெற்றோருக்கு இது போன்ற செய்தி இடியாக வரும்பொழுது.
  அந்த வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த மாணவரின் குடுபத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.
  அதே நேரத்தில் இது எல்லா ஓட்டுனரும் நடத்துனரும் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. நல்ல மனம் படைத்தவர்களை என் அனுபவத்தில்
  நான் பார்த்து இருகின்றேன். மாணவ பருவத்தில் ஒரு சிலர் செய்கின்ற தவறு
  எத்தனை மாணவர்களின் வாழ்க்கையை பாதிகின்றது.

  ReplyDelete
 14. வருத்தமான நிகழ்வு. நானும் அங்கு சில மாதங்கள் வேலை பார்த்திருக்கிறேன். போக்குவரத்து அப்போதே பிரச்னைதான். இம்முறை ஊர் சென்றிருந்த போதும், மாலை அக்கல்லூரி வாசலில் பேருந்துக்காகக் கூட்டமாக நின்றிருந்தனர்.

  போக்குவரத்துத் துறையினரால் நடத்தப்படுவதால் எல்லா அரசு பேருந்துகளும் நிற்கும் என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் தகராறுதான்.

  ஆனால், ஊருக்கு வெளியே கல்லூரி வைத்திருக்கும் தனியார் கல்லூரிகள் பக்காவாகப் போக்குவரத்து வசதி செய்து தருகிறார்கள். அரசு கல்லூரிகளில் மட்டும்தான் இந்தக் குறைபாடு.

  பேருந்துகளில் மாணவர்களைத் தவிர்ப்பதற்கு மாணவர்களே காரணம் என்பது மறுப்பதிற்கில்லை. இதிலும் செய்தவர்கள் தப்பித்துவிட, அப்பாவி மாணவர்களே தண்டனை பெறுகின்றனர்.

  ReplyDelete
 15. மாணவர்கள் ஸ்ட்ரைக் போன்ற விஷயங்களில் முதலில் அடிபடுவது பஸ்கள்தான்... கூட்டமாக ஏறும் மாணவர்கள் பஸ்ஸில் செய்யும் கலாட்டாக்கள் டிரைவர் கண்டக்டர்களை வெறுப்படைய வைத்திருக்கலாம். அரசாங்கம்,
  பள்ளி கல்லூரி விடும் சமயத்தில் மாணவ மாணவியர்க்கு என்று தனியான சர்வீஸ் விடலாம்.... 'லேடீஸ் ஸ்பெஷல்' மாதிரி.

  ReplyDelete
 16. மாணவர்கள் ஸ்ட்ரைக் போன்ற விஷயங்களில் முதலில் அடிபடுவது பஸ்கள்தான்... கூட்டமாக ஏறும் மாணவர்கள் பஸ்ஸில் செய்யும் கலாட்டாக்கள் டிரைவர் கண்டக்டர்களை வெறுப்படைய வைத்திருக்கலாம். அரசாங்கம், பள்ளி கல்லூரி விடும் சமயத்தில் மாணவ மாணவியர்க்கு என்று தனியான சர்வீஸ் விடலாம்.... 'லேடீஸ் ஸ்பெஷல்' மாதிரி.

  ReplyDelete
 17. ரொம்ப வருத்தமா இருக்குங்க..

  ReplyDelete
 18. உண்மைதான் ஸ்டார்ஜ‌ன்.... வ‌ருத்த‌மான் நிக‌ழ்வு.. :)

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்