Pages

Thursday, July 29, 2010

அழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை

அன்புள்ள நண்பர்களே!! உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு இந்த 200வது இடுகையை எழுதுகிறேன்.

இந்த உலகம் ரொம்ப வேகமாக முன்னேறி வருகிறது. எல்லாம் அறிவியல் வளர்ச்சியினால் மாறிவரும் உலகத்துக்கு தகுந்தாற்போல நாமும் வேகமாக இயங்குகிறோம். இளைப்பாற சிறிதுநேரம் கிடைத்தால் நமக்கு எவ்வளவு சந்தோசம். அந்த சிறு இடைவெளியில் நம்முடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது. அதுவும் சிறுவயது ஞாபகங்கள் என்றென்றும் பசுமைமாறாத நினைவுகள். அதை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தால் நம்முடைய கவலைகள், இடறுகள், மனஅழுத்தம் இதிலிருந்து கொஞ்சம் விடுதலைதான்.

நமக்கு தகுந்தாற்போல நம்முடைய பிள்ளைகளும் இந்த உலகத்துக்கேற்ப மாறி வருகிறார்கள். இன்று அவர்களது உலகத்தில் நிறைய மாற்றங்கள், அவர்களது குழந்தைபருவ விளையாட்டுகளும் மாறிவிட்டன. முன்பெல்லாம் சிறுவர்கள் தெருவில் சென்று கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இன்னும் நிறைய விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. அதையெல்லாம் இப்போது எங்கே என்று தேட வேண்டியுள்ளது.


அதுபோல சிறுமிகளும் பல்லாங்குழி, பாண்டி, தாயம், சிட்டிக்கல் இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவதை இன்று காணமுடிவதில்லை. எங்கே இந்த விளையாட்டுகள் எல்லாம்?.. காலமாற்றத்தினால் குழந்தைகளும் மாறிவிட்டனர். இப்போதைய சிறுவர் சிறுமியர்கள் இந்த விளையாட்டுன்னா என்னஎன்று கேட்கும் சூழல்..


வருடத்தில் 12 மாதங்களில் இந்தவிளையாட்டுகள் சீசன் போல ஒவ்வொன்றும் மாறிமாறி வரும். இந்த சீசன் கோலிக்கா சீசன் என்றால் நாம் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தால் மற்ற சிறுவர்கள் ஹை..ஏய்.. இவனப்பாருலே.. இன்னும் பம்பரம் விளையாடிக்கிட்டிருக்கான் என்று ஏளனமாக பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இந்த விளையாட்டுகள் அப்போதைய சிறுவர்களின் வாழ்க்கையோட பின்னிபிணைந்தே இருந்தன.

கோலி

சிறுவர் விளையாட்டுகளில் கோலி விளையாட்டு முக்கிய பங்கு பெறுகிறது. கோலிக்கா என்றுகூட சொல்வார்கள். விதவிதமான கோலிக்காவை கடையில் வாங்குவதற்கு கடும்போட்டி.., கடையில் உள்ள ஒரு டப்பா கோலிக்கா சீக்கிரம் விற்றுவிடும். கோலிக்கா உருண்டையில் உள்ளே தெரியும் கண்ணை கவரும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் சிறுவர்களை அதிசயக்க வைக்கும். அந்த கோலிக்காவில் ஒரு உலகம் உண்டென்று நம்பி அவர்களை வழிநடத்தி செல்லும் கோலிக்காவை எவராலும் மறக்க இயலாது.

கோலிக்கா விளையாட்டில் மூணுகுழி, பேந்தான், ஒத்தகுழி, வட்டடிஸ், பொட்டல், இரட்டகோடு போன்றவை ரொம்ப இன்ரஸ்டிங்கான விளையாட்டுகள். பள்ளிக்கூடம் முடிந்தஉடனே பைக்கட்டை வீட்டில் போட்டு போறதுதான்., கருக்கலான (இருட்டியபின்) அப்புறம் அம்மா தேடிவரும்வரை கோலிக்கா விளையாட்டுதான். எங்கிருந்தாலும் குறிபார்த்து அடிப்பதில் கில்லாடியாக இருப்பவர்கள் இந்த விளையாட்டில் ஜொலிப்பார்கள்.

பம்பரம்

பம்பரம் விளையாட்டை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விளையாடுவார்கள். அனைவரும் விரும்பும் விளையாட்டு. இதுவும் கோலிக்கா போல கடைகளில் வாங்க போட்டிதான். விதவிதமான கலர்களில் விற்கப்படும் பம்பரங்களை வாங்கிவந்து முதல்வேலையாக அதிலிருக்கும் சின்ன ஆணிய எடுத்துட்டு ஒரு பெரிய ஆணியை சைக்கிள் கடையில் கொடுத்து அடித்து அதில் சுழற்றிவிடும் பம்பரம் ஆடும் அழகு அழகுதான். உள்குத்து, ஆக்கர் போட்டு குத்துவாங்காத பம்பரமே கிடையாது.

கில்லி (குச்சிக்கம்பு, கில்லிதண்டா)

இதுவும் எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப பிரபலமான விளையாட்டு. இது விளையாடும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிரிக்கெட்டின் முன்னோடியான இதில் எதிர்த்து விளையாடுபவனுக்கு கொடுக்கப்படும் மூணு சான்ஸில் அவன் அடிக்காதபோது வரும் குதூகலம் ரொம்ப அருமையாக இருக்கும். அவன் அடிக்க ஆரம்பிக்கபோகும்போது ஒண்ணு காக்கா, இரண்டு குருவி, மூணு கொக்கு என்று சொல்லி அவனது கவனத்தை திசைதிருப்பும்போது அவனால் அடிக்கமுடியாதபோது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

ஒருதடவை நான் எங்கத்தெரு பையன்கள்கூட குச்சிக்கம்பு விளையாடும்போது ஒருவன் விளையாடும்போது இதேபோல சொன்னதும் அவனால் அடிக்கமுடியாமல் போனதும் அவனுக்கு பயங்கர கோபம். அதன்பின் அவனிடம் டேய் இதெல்லாம் விளையாட்டுடா; அதுக்காக என்னிடம் பேசாம இருக்காதே என்று சொன்னேன்.

காத்தாடி

பருவகாற்று காலத்தில் காத்தாடி விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பனை ஓலையில் காஞ்சரம் முள்ளை சொருகி காத்தாடி காத்தாடி அழகாக சுத்து சுத்து என்று காற்றடிக்கும் திசையில் வைத்து காத்தாடியை சுற்றவைப்பது மகிழ்வான விளையாட்டு.

அதுபோல டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட் அட்டை சேகரித்து விளையாடும் விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இதெல்லாம் அப்போதைய சிறுவர்களின் பொழுதுபோக்கான விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டுகள் உடல் வளர்ச்சிக்கும், அறிவுக்கும் வேலை கொடுப்பதாக அமைந்தது. அவர்களால் பல கோணங்களில் சிந்திக்க உதவியாய் இருந்தன.


இதுமாதிரி சிறுமிகளுக்கு பல்லாங்குழி, தாயம், பாண்டி, சிட்டிக்கல் போன்ற விளையாட்டுகள் இல்லாமல் பொழுதே போகாது.

இந்த விளையாட்டுகள் எல்லாம் எங்கே சென்றுவிட்டன?..

இப்போதைய குழந்தைகளின் பொழுதுபோக்கெல்லாம் வீட்டினுள்ளே கம்பியூட்டர் முன்னே கழிந்துவிட்டது. வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்று சிறுவர்களின் உலகம் மாறிவிட்டது. அவர்களது சந்தோசங்கள் அந்த நாலு சுவற்றுக்குள்ளே அடங்குகிறது என்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

இதுபோதாதென்று டிவியில் ஜெட்டிக்ஸ், போகோ, சுட்டிடிவி, கார்ட்டூன்ஸ் என்று டிவியிலும் அவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். இதெற்கெல்லாம் அடிமையானதை நினைக்கும்போது வருத்தம்தான்.

எங்கே அந்த குறும்புகள்... மறக்க முடியாத இளவயது குறும்பு சேட்டைகள் உங்களிடமிருந்து காணாமல் போய்விட்டதே. உங்கள் திறமைகளை வெளியே கொண்டுவாருங்கள். இதோடு முடிந்துவிட்டதா.. உங்கள் உலகம்??.. சொல்லுங்க குழந்தைகளே!!.

வெளிய வாங்க குழந்தைகளா.. உங்களின் பரந்த உலகம் இருட்டினில் இல்லை. வெளிச்சத்துக்கு வாங்க.. பாருங்கள் உங்கள் உலகத்தினை.. நாலு
சுவற்றுக்குள் உங்கள் சந்தோசத்தை தொலைத்துவிடாதீகள்.

உங்கள் கனவுகள் வெற்றிப்பாதையில் அழைத்து செல்லட்டும.. வாருங்கள் குழந்தைகளே... வெற்றி உங்களுக்கே..

,

Post Comment

Wednesday, July 28, 2010

பொருட்காட்சி


பளபளன்னு லைட்டு வெளிச்சம் கண்ணை கூசியது. சாலையில் எங்கும் சுவரொட்டிகளும் பேனர்களும் ஊர்ல பொருட்காட்சியென்று அறிவித்தது போதாதென்று ஆட்டோவிலும் ஒலிப்பெருக்கி கத்திக்கொண்டு வந்தது.

ஹைய்யா.. பொருட்காட்சி போட்டுட்டாங்களா..செம ஜாலி..அப்பா அம்மா என்னய பொருட்காட்சிக்கு கூட்டிட்டு போவீங்களா.. அங்க வெளாட்டுச்சாமா, பொம்ம, காரு, தண்ணிதுப்பாக்கி, வாங்கித்தருவியளா அப்பா.. அப்புறோம் ராட்டனத்துல ஆடணும், கொலம்பஸ், புதுபுது ராட்டணமெல்லாம் வந்திருக்காமுல்ல.. அப்பா அப்பா.. எங்களல்லாம் கூட்டிட்டுபோவீங்களா என்று பிள்ளைகள் அவங்கஅவங்க அப்பா அம்மாக்கிட்ட ஒரே நச்சரிப்பு.

ஆர்ச், ரத்னா தியேட்டர் ஸ்டாப் தாண்டியதும் பிள்ளைகளுக்கு ஒரே குசி.. ஹைய்யா பொருட்காட்சி வந்தாச்சி பொருட்காட்சி வந்தாச்சி என்று பிள்ளைகள் பஸ்ஸில் ஒரே குதியாட்டாம். ஆங்..ஆங்.. பொருட்காட்சியெல்லாம் இறங்குங்க.. இறங்குங்க.. என்று கண்டக்டர் விசில் கொடுத்து பஸ்ஸ நிப்பாட்டுனதுதான் தாமதம், எல்லா பிள்ளைகளும் தங்களோட அப்பா அம்மா கைய உதறிட்டு ஒரே ஓட்டம் பொருட்காட்சிய நோக்கி..

அந்த பிள்ளைகளைப் போல எனக்கும் சந்தோசம்.. இன்னக்கி நல்லா கூட்டம் வரணுன்னு நினைத்தேன் பொருட்காட்சிக்கு உள்ளிருந்து. ஆம்.. இன்னக்கி நல்லா கூட்டம் வந்திச்சின்னா கடன்காரன், சிறுசுகளுக்கு விளாட்டுச் சாமான் வாங்கணும், பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ரொட்டிக்கறி வாங்கிட்டு போகணும், அப்புறம் பெரியவனுக்கு நோட்டு புத்தகமெல்லாம் வாங்கணும், சின்னவளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும், சின்னவனுக்கு பால்பாட்டல், துணிமணியெல்லாம் வாங்க வேண்டியிருந்தது.. இன்னக்கி கூட்டம் வருமா.. என்று காத்திருந்தேன்.

நான் இந்த பொருட்காட்சித் திடலில் மேஜிக் ஷோ ஸ்டால் போட்டிருக்கேன். ஆமாம் எனக்குத் தெரிந்த மேஜிக்கை காட்டி மக்களை மகிழவைப்பது என்னுடைய தொழில். இருந்தாலும் மக்களுக்கு முன்னமாதிரி மேஜிக்ல விருப்பமே இல்லாம போயிருச்சி.. நல்லா கூட்டம் வந்தாத்தான் ஏதோ அன்னக்கி வயித்துப்புழப்பு கழியும்.. இது தெனோம் நடக்கிறதுதான். பாப்போம் இன்னக்கியாவது கூட்டம் வருதான்னு... என்ன செய்ய எல்லாம் காலத்தின் கோலம்.

பொருட்காட்சியில் மக்கள் வரவர கூட்டம் அலைமோதியது..

அய்யா.. வாங்க, அம்மா.. வாங்க, எதடுத்தாலும் இருபதுரூபா இருபதுரூபா.. வாங்க வாங்க சீக்கிரம் வாங்க, காலியாயிருச்சின்னா கிடைக்காது என்று பக்கத்துக்கடைக்காரன் கூவிக்கூவி வித்துக் கொண்டிருந்தான். அதற்கடுத்த கடைக்காரன் அம்மா பாருங்க அக்கா பாருங்க விதவிதமான வளையல், பொம்ம, கொண்டப்பூ, சைடு ஜோடி பத்துரூபா.. பாருங்கம்மா வளயல், வளயல், பொம்ம என்று கூவிக்கொண்டிருந்தான். இப்படி எல்லாக்கடைகளிலும் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.


மேஜிக் ஷோ ஆரம்பமாகப்போகுது. மேஜிக், மேஜிக் ஷோ புதுபுது மேஜிக்குகள் உங்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு ஆளுக்கு பத்துரூபா பத்துரூபா.. மேஜிக் மேஜிக் என்று என்னுடன் வேலைப்பார்ப்பவன் மேஜிக் ஷோ டிக்கெட் வித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் கூட்டம் வந்தால் நல்லாருக்குமேன்னு நினைத்தபடி திரைக்கு பின்னாலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏய்.. ஏய்..மேஜிக் ஆரம்பிங்கலே.. எவ்ளோ நேரமாச்சி.. மேஜிக் ஆரம்பிக்கபோறீங்களா இல்லையாலே.. இல்லன்னா பத்துரூபா திருப்பிக்கொடுங்கலே.. என்று கூட்டத்தினர் கத்திக்கொண்டிருந்தார்கள். இனியும் தாமதித்தால் காரியங்கெட்டுருன்னு நினைச்சி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

எல்லோரும் ஜோரா ஒருதடவ கைய தட்டுங்க.. என்றபடி வந்திருந்தவர்களை ஒவ்வொரு தலையாக எண்ணிக்கொண்டே சொன்னேன். நேத்து அளவுக்கு இல்லைன்னாலும் இன்னக்கி கொஞ்சம் சுமாரான கூட்டம்தான். எல்லோரும் இங்கப்பருங்க அம்மா பாருங்க அய்யா பாருங்க.. இந்த மேஜிக் புதுவிதமானது.. ஏய் பையா..பையா இங்க பாரு.. என்ன நல்ல பாரு.. கையில ஒண்ணுமில்லயா... சொயிங்.. இங்கப்பாரு.. பூங்கொத்தை அங்கிருந்த சிறுவனிடம் கொடுத்தேன். அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்து இங்கப்பாருங்க.. இப்போ இந்தா நிக்கிறாரே இவரு இப்போ இங்கருந்து மாயமாகப்போறாரு.. எல்லோரும் ஒருதடவ ஜோரா கைய தட்டுங்க.. என்று சொல்லியவாரே அவரை மறைய வைத்தேன். இப்படி எனக்கு தெரிந்த ஒரு அஞ்சாறு மேஜிக்க செய்துகாட்டினேன். மக்களுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சி..

ராத்திரி 11 மணியா ஆகப்போனது. எல்லோரும் பொருட்காட்சிய விட்டு கிளம்பினார்கள். ஷோவில் சேர்ந்த பணத்த ஸ்டாலுக்கு வாடக, துணிமணி வாடக, அரசாங்க வரி, கூட இருந்தவங்களுக்கு அன்னக்கி சம்பளன்னு போக மிச்சமீதி என்பங்குக்கு ஏதோ கிடைத்தது.

நான் கணக்கு போட்டு வச்சிருந்த காரியத்துக்கெல்லாம் வருமா என்று கணக்கு பார்த்ததில் துண்டு விழுந்தது. என்ன செய்ய.. அரைகுறை மனசோட வீட்டுக்கு நடந்து வந்தேன். வருகிற வழியில் இளங்கோவில் ரொட்டிக்கறி வாங்கினேன்.

வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ரொட்டிக்கறி பார்சலை பங்கு போட்டுக்கொடுத்தேன்.

என் சின்ன பையன், நான் மேஜிக் ஷோக்கு பயன்படுத்தும் மந்திரக்குச்சிய வைத்துக்கொண்டு எனக்கு பிரியாணி வேணும், பிஸ்கட்டு வேணும், பொம்ம வேணும் என்று மந்திரகுச்சியால் ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு இருந்தான்.

நான் அதை ரசித்தபடியே கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

,

Post Comment

Saturday, July 24, 2010

ஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே!! வியாழன் இரவு கொஞ்சம் வேலை இருந்தது. நம்ம நண்பர் சரவணக்குமார் அப்போது அலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசும்போது எங்கள் இடத்துக்கு கவிஞர் பா.ரா. அண்ணன் அவர்கள் வந்துள்ளார்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமை பாரா அண்ணனை
அழைத்துக்கொண்டு
ஹஸா வந்து விடுகிறோம் என்று சொன்னார். உடனே எனக்கும் அக்பருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை.


(வலமிருந்து அக்பர், ஆறுமுகம், ஸ்டார்ஜன், சரவணக்குமார், முடிவிலி சங்கர், அக்பரின் தம்பி, அக்பர் மச்சினன்)


ரொம்ப நாளாக பாரா அண்ணனை சந்திக்கவேண்டும் என்ற ஆவல். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. பாரா அண்ணன், ஜூபைலில் இருக்கும் நண்பர் முடிவிலி சங்கர், கவிஞரும் நண்பருமான ஆறுமுகம் முருகேசன் மற்றும் நண்பர் சரவணக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்திக்க வருகிறார்கள் என்ற செய்தி எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை நானும், அக்பரும், அக்பரின் தம்பி, அக்பரின் மச்சினனும் வியாழன் இரவே திட்டமிட்டோம்.

(நானும் ஆறுமுகம் முருகேசனும்)


காலையில் 9 மணிக்கு எழுந்து பிரியாணி செய்து சாப்பிட ஏற்பாடு செய்தோம். நண்பர்கள் அனைவரும் சொன்னதுபோல பகல் 12 மணிக்கு வந்து எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு 1 மணிக்கு சாப்பிட்டு 2 மணிக்கு எங்கள் பகுதியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மணல்களால் ஆன மணற்குன்று, குகையை காண எல்லோரும் கிளம்பினோம்.

ஜபல் கராஹ்_ வை பற்றிய ஒரு பார்வை.


ஜபல் கராஹ்_ ஒரு சுற்றுலாத்தளமாகும். இது அல் ஹசா ஹபூப் சிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இது பழைமை வாய்ந்த மணற்குன்றுகளால் ஆன மணற்குகை. இங்கு வித்யாசமான குகைகளையும் சிறிய சிறிய மலைகளால் ஆனது. இந்த இடத்துக்கு பெயர் அல் கராஹ். மலைகளால் சூழ்ந்துள்ளதால் இந்த இடத்துக்கு ஜபல் அல் கராஹ் என்ற பெயர் பெற்றது. மற்ற இடங்களில் எவ்வளவுதான் சூரியன் சுட்டெரித்தாலும் இங்கு வெயிலே தெரியாத அளவுக்கு குளுமையான இடம். இதை நாங்கள் குளுமையின் உணர்வை நன்றாக அனுபவித்தோம். அதனால் இங்குள்ள வெளிநாட்டினரும் அரபிகளும் அடிக்கடி இந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள். வெள்ளிக்கிழமையானால் எல்லோரும் இந்த ஜபல் கராவுக்கு கிளம்பி விடுவார்கள்.


ஜபல் காரா_ கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புகைப்பட கலைஞர்களின் கலை ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் விதவிதமான வடிவங்களில் குகைகளும், மணற்குன்றுகளும் பார்க்க பார்க்க ரொம்ப பரவசமாக இருக்கும். நாம் இந்த மலைகளின் மேல ஏறி நடந்து செல்லலாம். வெயிலில் நாம் பார்க்கும்போது தங்கம்போல பிரகாசிக்கும். வித்யாசமான கலர்களில் பார்க்க பார்க்க பரவசமாக இருக்கும்.

இங்குள்ள பாறைகள் குன்றுகள் எல்லாம் உயரமாக, செங்குத்தாக உள்ளது. குகையின் உள்ளே சூரியன் தனது ஒளிக்கற்றையை உள்ளே செலுத்தி பார்க்க ரொம்ப அழகாக் உள்ளது. நீங்களும் படங்களில் கண்டுகளியுங்கள்.


நம் நாட்டிலுள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைபிரதேசம். இங்குள்ள சவுதிகளுக்கு நீரோடை, பூங்கா, மலைப்பிரதேசம் என்றால் ரொம்ப கொள்ளை பிரியம். இங்குள்ளவர்கள் இயற்கைக்கு ரொம்ப ஏங்குகிறார்கள். அதனால்தான் செலவையும் பொருட்படுத்தாமல் பல வெளிநாடுகளுக்கு வருடம்தோறும் சுற்றுலா செல்கிறார்கள். சவுதி அரசாங்கமும் தங்கள் பங்குக்கு நகரமெங்கும் செயற்கை புல்வெளிகள், நீரூற்றுகள், பூங்காக்கள் அமைத்து வெயிலின் தாகத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறார்கள்.

********

நண்பர் ஆறுமுகம் முருகேசனின் காரில் எல்லோரும் சரியாக 2 மணிக்கு கிளம்பினோம். நானும் அக்பரும் இதற்கு முன்னர் ஜபல் கராஹ்_ க்கு இரண்டு மூன்று தடவை சென்றிருக்கிறோம். ஆனால் இப்போது செல்லும்போது வழியெங்கும் சாலைகள் எல்லாம் சீர்படுத்தி எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வைத்தது சவுதி அரசாங்கம். இருந்தாலும் இடையிடையே வழிக்கேட்டு சென்றது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ஒருவழியாக ஜபல் கராஹ்_ வை அடைந்தோம்.

உள்ளே செல்ல செல்ல ஆர்வம் மிகுதியானது. செல்ல முடியாத அளவுக்கு சிறிய சிறிய இடுக்குகளில் எங்கள் உடம்பை செலுத்தி உள்ளே சென்றோம்.
எல்லா இடத்துக்கும் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போது மலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் பகுதியையும் பார்வையிட்டோம். எனக்கும் அக்பருக்கும் வேலை இருந்ததால் மாலை 4.30 மணிக்கு திரும்பினோம்.

நேற்றைய பொழுது ரொம்ப சந்தோசமாக இனிமையாக கழிந்தது.

வீடியோ காண..

Post Comment

Thursday, July 22, 2010

வானமே எல்லை?..

காடும் சிறுத்து
கழனிக்கு செல்லாத‌
மாடுகள் சென்றன‌
இல்லாத காடிப்பானையை?..

பார்த்து பார்த்து
சலித்துப்போன‌
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?..

பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று பசியாற்ற‌
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..

பள்ளிக்கு சென்றவனும்
திரும்பினான் புத்தகமில்லாமல்?..
ஏட்டு சுரைக்காய்
கறிக்கு உதவாது
என்றெண்ணியோ?...

பட்டுப்போன
பயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க‌
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..

,

Post Comment

Tuesday, July 20, 2010

வரும்வரை காத்திரு..4 - தொடர்கதை

அன்புள்ள நண்பர்களே!! இந்த தொடர்கதையை வெளியிட‌ இரண்டு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. தமிழ்மண நட்சத்திர வாரம் மற்றும் சில அலுவல்கள் காரணமாக என்னால் இந்த தொடர்கதையை எழுத முடியவில்லை. இனி தொடர்கதை தொடர்ந்து வரும்.

தொடர்கதைக்குள் செல்லலாமா..

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌

வரும்வரை காத்திரு..
வரும்வரை காத்திரு..2
வரும்வரை காத்திரு..3

********


என்ன ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவள்வீட்டுக்கு சென்று அவளுடைய அப்பாவை பார்த்து பேசலாம் என்று கிளம்பினேன்.

என்ன தைரியத்தில் கிளம்பினேன் என்று தெரியாது. என்ன நடக்கப்போகுதோ?.. அவள் அப்பா என்ன சொல்வாரோ.. அவங்க வீட்டுல என்னை ஏத்துப்பாங்களா வழியெங்கும் யோசித்துக்கொண்டே சென்றேன்.

"டிக்கெட்..டிக்கெட்" என்று கண்டக்டர் கேட்டதுக்குகூட பதில் சொல்லாமல் யோசித்ததால் "ஏய்.. என்ன யோசனை.. முதல்ல டிக்கெட் வாங்கு அப்புறம் உக்காந்து நல்லா யோசி" என்று கண்டக்டர் உரக்க கேட்டபின்தான் ஞாபகம்வந்து போகும் இடத்தை சொல்லி டிக்கெட் வாங்கினேன். ப்ரியாவின் ஊர் அவளைப்போல அழகாகவே இருந்தது. நல்ல வயல்வெளிகள், சிலுசிலுவென்று வீசும் காற்றை அனுபவித்துக்கொண்டே, ஊர் அழகை ரசித்தபடியே நடந்துவந்து கொண்டிருந்தேன்.



அவளது வீட்டை நெருங்கியதும் மனதில் பக்கென்று பயம் ஒட்டிக்கொண்டது. வீட்டை நெருங்கி கேட்டை திற‌ந்ததும் உள்ளே நிறைய தலைகளாக நிறையபேர் அங்குமிங்குமாக சென்றுகொண்டிருந்தன. ப்ரியாவின் வீட்டில் ஏதோ விசேசம் போல. சிறுவர்கள் அங்கே இருக்கும் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அவர்கள் விளையாடுவதை விட்டுட்டு என்னையே பார்த்தபடியே என்னை பிந்தொடர்ந்தனர். அங்கு குழுமிருந்தவர்களும் என்னை நோட்டமிட்டதால் எனக்கு ஒருமாதிரியாக தப்பா எதுவும் வந்து மாட்டிக்கிட்டோமே என்று தோன்றியது.

திரும்பி செல்ல எத்தனிக்கும்போது உள்ளிருந்து ஒரு குரல்.. "தம்பி உள்ளவாங்க.. சரியான நேரத்துக்குதான் வந்திருக்கீக.. வாங்கவாங்க.. உள்ள வாங்க.. வெளிய நின்னுக்கிட்டிருக்கீக" என்றவரை பார்த்தால் ப்ரியாவின் அம்மா. "என்னங்க என்னங்க யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க.." என்றபடி ப்ரியாவின் அப்பாவிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். "அடடே வாங்க தம்பி.. ப்ரியாவுக்கு நிறைய உதவியெல்லாம் செஞ்சிருக்கீளாமுல்ல.. பிரியா அம்மா சொல்லிருக்காவ.. வாங்க வந்து உக்காருங்க.. நல்ல சமயத்துலதான் வந்திருக்கீக.. வந்ததுக்கூட ஒருவகையில் நல்லதாப்போச்சி.." என்றபடி அழைத்து சென்றார். எனக்கு எல்லாம் பிரமிப்பா இருந்தது. இங்க என்ன நடக்குது?.. என்று முகத்தில் கேள்வியுடனே அமர்ந்திருந்தேன்.

பின் ஒவ்வொருவராக என்னிடம்வந்து தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டது வியப்பாகவும் எனக்கு இது புது அனுபவமாகவும் இருந்தது.

எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தனர். என்கண்கள் பிரியாவை தேடின.

சிறிதுநேரம் சென்றதும் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமினர். நானும் அவர்களுடன் கலந்து நடப்பது என்னவென்று தெரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பரபரப்பின் உச்சியில் இருந்தேன். இவ்வளவுபேர் இருக்கிறார்கள், எப்படி அவளது அப்பாவிடம் எங்கள்காதலை சொல்வது?.. யோசனையில் மூழ்கியிருந்தேன். அருகில் எல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே.. அங்கே ப்ரியா அலங்காரத்துடன் தோழிகள் புடைசூழ வந்தது எனக்கு அதிர்ச்சியானது.

ஒரு நிமிடத்தில் எல்லாம் விளங்கிவிட்டது. ஆம் இன்று அவளுக்கு இன்னொருவனுடன் கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அடடா.. இது என்ன இப்படி?.. இப்போது என்ன செய்வது?..

நான் அமர்ந்திருந்ததை பார்த்த ப்ரியாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. எனக்கு என்னசெய்வதென்றே தெரியல.. ஆஹா வசமா மாட்டிக்கிட்டோமே இப்போ என்ன செய்வது?.. ப்ரியாவின் கண்களில் தெரிந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தேன்.

அய்யர் விவாக ஒப்பந்தத்தை படிக்க தயாரானார். "நிகழும் சங்கையான யுக வருடம் தை திங்கள்....." என்று படிக்கும்போது, "நிறுத்துங்க.. நிறுத்துங்க.. ஒரு நிமிசம்.." என்ற குரல்வந்த திசையை நோக்கி எல்லோரும் திரும்பினர்.

"நிறுத்துங்க.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லை. நான் ஒருத்தரை காதலிக்கிறேன்.,அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்ற ப்ரியாவை எல்லோரும் திகைப்புடன் பார்த்தனர். உடனே அங்கு வந்திருந்தவர்கள் குசுகுசுவென பேசிக்கொண்டனர். எல்லோருக்கும் ரொம்ப ஆச்சர்யம், திகைப்பு. எல்லோரும் அதிலிருந்து வெளியேற சிறிதுகால அவகாசம் ஆனது. உடனே ப்ரியாவுக்கு அருகிலிருந்த அவளது சித்தப்பா, "என்ன தைரியமிருந்தா இப்படி சொல்லுவ?.. என்ன கொழுப்பு.. ங்ம் ங்ம்.." என்று அடிக்கவரும்போது நான் உடனே அவரது கையை பிடித்து தடுத்தேன்.

"இனி ஒரு அடி அவமேல விழுந்தது.. அப்புறம் அவ்வளவு தான்.. ஆமா நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிறோம். எங்க ரெண்டுபேரையும் சேத்துவைங்க" என்றேன். "ஓஹோ இதுக்கெல்லாம் நீதான் காரணமா.. எல்லோரும் சேர்ந்து அடிங்கல.. எங்க வந்து என்ன பேச்சிபேசுறே.. எவ்வளவு தைரியம்" என்று அவளது சித்தப்பா சொன்னதும் சிலர் என்னை சூழ்ந்து அடிக்க ஆரம்பித்தனர். நானும் அவர்களை என்னால் முடிந்த அளவுக்கு தடுத்தேன். நிச்சயதார்த்த வீடு களேபரமானது. மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளை சொந்தக்காரங்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் அடிவாங்குவதை கண்ட பிரியா தடுத்தும் அவளுக்கும் அடி விழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு பெரியவர் "அட விடுங்கப்பா.. விடுங்கப்பா.." என்று எல்லோரையும் விளக்கிவிட்டார்.

ப்ரியாவின் அப்பா மாணிக்கம், "தம்பி எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன் உன்மேல.. சே.. எவ்வளவு துணிச்சல் இருந்தா இவ்வளவு கூட்டத்துலயும் ப்ரியாவ காதலிக்கிறேன்னு சொல்லிருப்ப.. இந்த விசேச வீட்டையே இவ்வளவு களேபரமா மாத்திட்டியே.. உன்னை காதலிக்கிறேன்னு அவளும் எங்கிட்ட சொல்லலியே.. இவ்வளவு ஏற்பாடும் செய்தபின்னாடி இப்படி சொன்னா எப்படிப்பா?.. என்னை இவ்வளவு கூட்டத்து முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டியே.. சே.. சரி அதெல்லாம் விடு. நீ என்ன வேலைப் பார்க்கிற?.. உங்க அப்பா அம்மா யாருன்னே எனக்கு தெரியாது., என்ன குலம் கோத்திரம் தெரியாமலே எங்கிருந்தோ வந்து என்பொண்ண கட்டிக்கிறேன்னு சொன்னா எப்படி தம்பி?.." என்றார்.

நான் "அய்யா., எனக்கு பக்கத்தூருங்க.. எங்கப்பா ரைஸ்மில்லுல வேலைப்பார்க்கிறாரு.. நான் பிஎஸ்சி படிச்சிக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர், "நீ இன்னும் படிச்சிமுடிக்கலை.. அதுக்குள்ளே காதலாம் காதல். ஒரு வேலைவெட்டி கிடையாது.. எம்பொண்ண எப்படி வச்சி காப்பாத்துவ.. இத்தனவருசமா பொத்திபொத்தி வளத்த பொண்ண வேலைவெட்டி இல்லாத வெறும்பயலுக்கு கட்டிக்கொடுத்து எம்பொண்ணையும் உன்னமாதிரி கஷ்டப்பட சொல்றீயா.. எப்போ எம்பொண்ண கட்டிக்கிற தகுதி இருக்கோ.. அப்ப வா.. இப்ப போகலாம்" என்றதும் அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றனர்.

"போகலாம்ன்னு சொன்னேனுல்ல.. ம்ம்ம்.. ம்ம்" என்று மாணிக்கம் சொன்னதும் ப்ரியாவை பார்த்தபடி நான் அவளது வீட்டைவிட்டு வெளியேறினேன்.

மாப்பிள்ளை வீட்டாரும் சொந்தக்காரங்களும் என்னை முறைத்து பார்த்தபடி என்னை கடந்து சென்றனர்.

தொடரும்...

,

Post Comment

Monday, July 19, 2010

காங்கிரசும் உட்கட்சி பூசலும்

சென்னையில் நடைபெற இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட, மாநில, பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டன. இது தொடர்பான தேர்தல் ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தேர்தல் 20 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கும் என தொண்டர்கள் பலர் தயாராக இருந்தனர். இந்நிலையில் இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ரவி மல்லு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்., தலைவர் தங்கபாலு கால அவகாசம் கேட்டதற்கிணங்க இந்த தேர்தல் ஒத்திவைக்ப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.


நன்றி: தினமலர் செய்திகள்.


************************


ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்து வருவது பற்றி செய்திகளில் படிக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. விடுதலைக்கு பாடுபட்ட பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சியில் இப்போது குறிப்பாக தமிழ்நாட்டில் உட்கட்சி பூசல்மோதல்கள் உருவாகி பல கோஷ்டிகளாக உருவெடுத்து ஒரு நிலைப்பாடு இல்லாமல் தவித்து வருவது வேதனையளிக்கிறது. ஒரு பெரிய அரசியல் கட்சியில் ஒற்றுமை இல்லாதது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம்தான். இது தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும்.

இது ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.

அந்தகாலத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முக்கியபங்கு ஆற்றிய காங்கிரஸ் கட்சியை பற்றி ஒரு பார்வை:


1885 ம் ஆண்டு உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டு, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஸ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த காங்கிரஸ் பால கங்காதர திலகர், கோபால கிருஸ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பல சிறந்த தலைவர்களை உருவாக்கியது.

1915ல் தென் ஆப்ரிக்காவிலிருந்து படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த காந்திஜி காங்கிரஸ்ஸின் கொள்கைகளால் கவரப்பட்டு காங்கிரஸுடன் இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் பெரியார் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திராவிட இயக்கத்தை உருவாக்கினார்.

ஜவஹர்லால் நேருவின் திறமையினால் காங்கிரஸ் கட்சி பிளவுபடாமல் சிறப்புற்று விளங்கியது. ஆனாலும் அவருடைய அரசு நிறைய பிரச்சனைகளையும் மற்றும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு ராஜினாமா செய்ய நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1957 இல் மகள் இந்திராகாந்தி காங்கிரஸ் தலைவரானது அதிக விமர்சனங்கள் எழுந்தன.

லால்பக்தூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். இந்திராகாந்தி தன்னுடைய திறமையினால் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தி மீண்டும் ஒரு சக்திவாய்ந்த கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்தார்.

1977 பொதுதேர்தலில் தோல்வியை சந்தித்த காங்கிரஸில் 1978ல் மீண்டும் பிளவு ஏற்பட்டு சுவரண் சிங் தலைமையிலான குழுவாகவும் இந்திராகாந்தி தலைமையிலான இ.காங்கிரஸ் குழுவாகவும் பிரிந்தனர்.

பின்னர் இந்திராகாந்தியின் மறைவுக்கு பின்னர் ராஜீவ்காந்தியினால் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றது. ஆனால் 1991ல் பொதுதேர்தலின்போது குண்டு வெடிப்பில் பலியான ராஜீவ்காந்திக்கு பின்னர் சரியான தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தள்ளாடிவந்தது. சிரிக்காத பிரதமர் நரசிம்மராவின் ஆட்சியில் முன்னேற்றம் இல்லாமல் மூப்பனார், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்ததினால் கட்சியில் பல்வேறு பூசல்கள் இருந்துவந்தது.

ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி தலைமையேற்றபின் இன்று ஒரு நிலையை எட்ட காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

தமிழக காங்கிரஸில் காமராஜருக்கு பின் எந்த ஒரு தலைவராலும் ஆட்சிஅமைக்க முடியவில்லை. இன்றுவரை திராவிடகட்சியின் கூட்டணியுடன்தான் ஆட்சியில் பங்குபெற்று வருகின்றனர். கட்சியில் உள்ளவர்கள் தங்களின் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட ஏன்தான் தயங்குகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும் ஒரு பெரிய கட்சி பிளவுபடுவதை காணும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

அந்தகாலத்தில் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியை தங்கள் வாழ்க்கையோடு இணைந்தே செயல்பட்டனர். பல போராட்டங்களை காங்கிரஸுடன் சேர்ந்து விடுதலைக்காக பாடுபட்டனர்.

ஆனால் இன்றைய மக்கள் காங்கிரஸ்ஸா அப்படின்னா என்ன என்ற அர்த்தத்துடனே காங்கிரஸை தூரத்தில்வைத்து பார்க்கின்றனர்..

இந்தநிலை மாறுமா?.. என்பதற்கு விடையை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Saturday, July 17, 2010

அறியா பருவம்

பத்துமாசம் சுமந்து
பெற்றதால் என்னவோ
அம்மாவுக்கு எவ்வளவு
சந்தோசம் முகத்தினிலே!!
எத்தனை எத்தனை
கோயில்களுக்கு சென்றிருப்பாளோ
என் வரவுக்காக..

தவழும்போதும் குப்புற
விழுந்து நான் அழும்போதும்
என் அழுகையை ரசித்து
பாலூட்டி தாலாட்டி
உறங்கவைத்தாள் என் அன்னை.

நடைபயில கற்றுக்
கொடுத்து நான்
நடக்கமுயற்சித்தாலும்
நடக்க விடுவதில்லை..
இடுப்பை விட்டு இறக்காமல்
எப்போதும் தூக்கிக்கொண்டு
கண்ணுக்கு கண்ணாக
காத்தாள் என் அன்னை.

நான் தனியாக சென்றால்
பதபதைப்புடன் உடனே
தேடி வந்து அள்ளிச்
செல்வாள் அன்னை.

குறும்பு சேட்டைகள்
செய்யும்போது கண்டிக்க‌
மனம் வருவதில்லை..
பாசம் நேசம்
எல்லாம் கண்டேன்
என் அன்னையிடம்..

நர்சரிக்கு செல்லும்
வயதில் சென்றேன்
அவளைவிட்டு பிரிந்து..
செல்லும்போதே மனம்
வலித்தது இருவருக்கும்

திரும்பி வந்தேன்
சலன‌மற்று..
அன்னையின் முகம்
காணமுடியாமல் நான்
கரிக்கட்டையாய்..


( 2004 ஜூலை 16 கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான பிஞ்சுகளுக்கு அஞ்சலிகளுடன் இந்த இடுகையை சமர்பணம் செய்கிறேன். )

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்