Pages

Thursday, July 8, 2010

ப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி 2

முதல் பாகம் படித்துவிட்டு தொடருங்கள்.

குப்பன்னாபுரம் பண்ணையார் பங்களா.. ஒரு பெரிய கூட்டம் கூடிருந்தது. பண்ணையார் புளிமூட்டை புண்ணியக்கோடி பங்களாவின் பால்கனியிலிருந்து கணக்காப்பிள்ளை முத்து கீழே எட்டிப்பார்த்தான்.. “ஏயப்பா.. எம்பூட்டு தலைங்க.. அய்யா அய்யா எல்லாரும் வந்துப்புட்டாங்க.. நீங்க வாங்க” என்று பண்ணையாரை முத்து அழைத்தான்.

பண்ணையார் வந்து தலைகாட்டியதும் அங்கு ஏற்பட்ட பெரும் கூச்சல் டவுனுக்கே கேட்டுருக்கும். அம்பூட்டு சத்தம்.

“அய்யா எல்லாத்தையும் வரிசையில நிக்கவச்சிருக்கேன்.. பட்டணத்துலருந்து வந்தவுகள அந்த அறையில தங்கவச்சிருக்கேன்.. நீங்க வந்து என்னன்னு விசாரிச்சிங்கன்னா மேக்கொண்டு ஆகிறத பாத்துப்புடலாம்” என்று முத்து அழைத்தான்.

"வாங்க வாங்க எல்லோரும் வாங்க வாத்தியாருங்களா.. சாப்பிட்டீங்களா.. எதுவும் குறவிருந்த சொல்லுங்க.. நம்ம ஊரு பயலுகளுக்கு கம்பூட்டருன்னு இருக்காம்ல.. அத சொல்லிக்கொடுக்கலாம்ன்னு இருக்கேன். நீங்க அவனுவளுக்கு நல்லா சொல்லிக்கொடுங்க.. அப்புறம் நமக்கொரு ஆசங்க.. அது உலகம்பூராவும் பேமஸ்ஸாகனும்ன்னு.. அதுக்கு நம்ம கணக்காப்பிள்ளை முத்து சொன்னானுங்க.. ஏதோ ப்ளாக்ன்னு இருக்காம்ல.. அதுல எழுதுனா பேமஸ்ஸாகிரலாமுல்ல., அதான் உங்கமூலமா நம்ம காட்டுமேட்டுல திரிஞ்ச நம்ம பயலுகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கலாம்ன்னு உங்கள அழைச்சிருக்கேன்.. நீங்களும் அவனுவளுக்கு சொல்லிக்கொடுத்து எழுத வச்சீங்கன்னா உங்களுக்கு ரொம்ப கடமபட்டவனா இருப்பேனுங்க..." என்று பண்ணையார் பட்டணத்துலருந்து வந்த ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அதற்கு அவர்கள் எல்லாம் நல்ல யோசனைதான் அய்யா.. நீங்க அவர்களுக்கு வேண்டியதையும், எங்களுக்கு தேவையானதையும் செய்து கொடுத்திருங்க.. பேஸ்ஸா பண்ணிடலாம். அதுக்கு முன்னாடி அவர்கள் ஏதாவது நாலெழுத்து படிச்சவங்களா இருக்கணும். ஏன்னா நாங்க சொல்லிக்கொடுக்கிறத ஓரளவாவது புரிஞ்சிக்கணுமில்லையா. அதுக்கு தான் ஒரு எட்டாம்கிளாஸ் வரைக்குமாவது படிச்சிருந்தா நல்லாருக்கும்ன்னு நினைக்கிறோம் என்று ஆசிரியர்களில் ஒருவர் பண்ணையாரிடம் சொன்னார்.

எனக்கு ஒரு எலவும் தெரியாதுங்க.. உங்களுக்கு என்னன்ன தேவைப்படுதுங்களோ அத கூச்சப்படாம கேளுங்க வாத்தியாரே.. அவனுவள்ல யாரு யாரு சரியா வர்றானுகளோ அவனுவளுக்கு சொல்லிக்கொடுங்க.. அப்புறம் மேக்கொண்டு ஆவுறத பாக்கலாமுங்க என்று பண்ணையார் சொன்னார்.

உடனே ஆசிரியர்கள் வந்திருந்த அத்தனை பேர்களிடமும் விசாரித்து மூன்று பேரை தேர்வு செய்தார்கள். அய்யா ஒரு மூணு பேர தேர்ந்தெடுத்திருக்கோம் என்று ஆசிரியர் சொன்னார்.

அதற்கு பண்ணையார் சரிங்க அப்ப அந்த மூணுபேருக்கு சொல்லிக்கொடுங்க.. மத்த பசங்களும் பண்ணையார் வேலைத்தருவாருன்னு என்னை நம்பி வந்திட்டானுங்க.. நா அரசாங்கத்துல சொல்லி அவனுவளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டி இலவசமா படிக்கவைக்கலாமுன்னு இருக்கேன். அதுப்போக நல்லா படிக்கிற பயலுகளுக்கு வேலையும் கொடுக்கலாமுன்னு இருக்கேன் என்ன நா சொல்றது சரிதானுங்களே!! என்ற பண்ணையாரை அவர்கள் இந்த காலத்துலயும் இப்படி ஒரு மனிதரா என்று வியந்தார்கள்.

************

தேர்வு செய்யப்பட்ட அந்த மூன்றுபேரையும் கூப்பிட்டு உங்க பேரென்னல்ல., எந்த ஊருன்னு சொல்லுல என்று கேட்டார். அய்யா கும்புடுறேனுங்க.. என்பேரு மாரிமுத்துங்க ஊரு கோடகநல்லூருங்க.. அய்யா என்பேரு கண்ணாயிரமுங்க; ஊரு தெக்குபட்டிங்க.. அய்யா என்பேரு கருப்பையாங்க ; ஊரு அலிய்யாண்டியபுரமுங்க (அழகியபாண்டியபுரம்).

அட அப்படியால்ல.. நல்லா படிக்கணுமுல்ல என்ன.. வாத்தியாருங்க சொல்லிக்கொடுக்கிறத கவனமா கேட்டு படிச்சி பெரியாளா வரணும் என்ன.. சரியாலே.. என்று சொல்லி பண்ணையார் தோட்டத்துக்கு கணக்காப்பிள்ளை முத்துவுடன் சென்றார்.

*********

ஆசிரியர்கள் அந்த மூன்றுபேருக்கும் கம்பியூட்டர் படிப்பு நன்றாக சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர். ஆசிரியர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுதான் கிராமத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். இதை கற்றுக்கொடுக்க ஒரு ஆறு ஏழு மாதமானது. பண்ணையாருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நம்ம கனவு பலிக்கப்போவதை எண்ணி பேரூவகை அடைந்தார்.

ஒரு நல்லநாளா பார்த்து பண்ணையார் பளாக் ஆரம்பித்தார். ப்ளாக் பெயர் புளிமூட்டை. புரோபைல் பெயர் புண்ணியகோடி என்று ஆரம்பித்தாயிற்று.

முதல் இடுகை : அறிமுகம்

அய்யா எல்லோருக்கும் வணக்கமுங்க., நான் நெல்லை ஜில்லாவுல இருக்கிற கோனூர் ஊராட்சி ஒன்றிய தலைவரா இருக்கேனுங்க.. இப்போதான் எழுத ஆரம்பிச்சிருக்கேனுங்க.. அல்லாரும் என்னோட வலைப்பூக்கு வந்து ஆதரவு கொடுக்கமுன்னு உங்களயெல்லாம் அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உங்கள் புளிமூட்டை புண்ணியக்கோடி.

கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் தம் கடமைமுடிந்துவிட்டதென தத்தம் ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

இதனைப்படித்த எல்லோரும் அட இதுயாரு புதுசா இருக்கு என்று தினமும் வருகைத்தர வருகைத்தர ஹிட்ஸ் கூடிக்கொண்டே இருந்தது. பண்ணையாருக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. பண்ணையாரும் தினமும் ஒரு இடுகை அந்த பயலுகளைவைத்து எழுதி ஹிட்ஸ் வாங்கிக்கொண்டிருந்தார். அவனுவளும் சளைக்காமல் எழுதித் தள்ளினர்.

நாளாகநாளாக பண்ணையாரின் அலும்பல் தாங்கமுடியவில்லை. அவருடைய எல்லா இடுகைகளும் பெரிய அளவில் பேசப்பட்டன. எப்பப்பார்த்தாலும் பண்ணையாருக்கு ப்ளாக் பற்றிய சிந்தனைகள்தான் ஓடிக்கொண்டிருந்தது. கணக்குவரவு செலவெல்லாம் மறந்துபோனது. தூக்கத்திலிருந்து எழுந்து இன்னைக்கி எத்தனபேர் வந்திருக்காங்க.., எத்தனபேரு கருத்து சொல்லிருக்காங்க‌.. எத்தனபேர் பாலோயரா ஆகிருக்காங்க என்று கணக்குபண்ண ஆரம்பித்தார். மனைவி, மக்கள், குடும்பம், சொந்தக்காரர் எல்லோருக்கும் பண்ணையார் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. மிகவும் வருந்தினர். எப்படி இவரை திருத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.

********

இப்படியே சிலமாதங்கள் ஓடின. அவரது பக்கத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளாகநாளாக குறைந்துகொண்டே இருந்தது. பண்ணையாருக்கு ரொம்ப கவலையாக இருந்தது. எப்பப்பார்த்தாலும் வலையில் இருப்பது, எழுதிக்கொடுக்கும் பயலுகளுக்கு அலுப்புத்தட்டியது. தினமும் புதுசுபுதுசா யோசிக்கிறது நல்லாருந்தாலும் நாளாகநாளாக ஆர்வம் குறைந்துகொண்டே போனது.

ஒருநாள் அந்த பசங்க மூன்றுபேரும் பண்ணையாரிடம் சென்று, "அய்யா!.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. எங்கோ காட்டுமேட்டுல சுத்திட்டிருந்த எங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்து கம்பூட்டர் கத்துக்கொடுத்து எங்களை அறிவுப்பாதையில் அழைத்து சென்றீர்கள். தினமும் புதியபுதிய விசயங்களை தேடிச்சென்றதால் எங்களுக்கு அறிவு வளம் பெற்றது. இதுக்கு உங்களுக்கு எம்பூட்டு நன்றி சொன்னாலும் ஈடுஇணையாகாது. நீங்க என்றென்றும் நல்லாருக்கணும்.. ஆனால் இந்த ப்ளாக் தொடர்ந்து எங்களால் எழுத முடியவில்லை. நாங்க போயிட்டுவாரோம்" என்று அவருடைய பதிலை என்னன்னு கேக்காம ஒரே ஓட்டமாக ஓடிட்டாங்க.

"அடப்பாவிப்பயலுகளா.. என்ன இப்படி நட்டாத்துல உட்டுட்டு போயிட்டீங்களேல்ல.. போங்கடா போக்கத்த பயலுகளா.. நானே எழுதுவேம்ல.. என்ன எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா.." என்று திட்டியவண்ணம் அவருக்கு தோணியதை எழுதினார்.

மறுநாள் அவருடைய வலைப்பக்கத்தை திறந்து பார்த்தால் எல்லோரும் கும்மியடித்து, "மவனே!! இனிமே பதிவுன்னு எழுத ஆரம்பிச்சே அப்பறம் நடக்கிறதேவேற" என்று திட்டிதீர்த்திருந்தார்கள்.

"அப்படி நான் என்ன எழுதிட்டேன்னு இந்தவாங்கு வாங்குறானுவ.. வேணான்டா சாமி.. இந்த பதிவுலகமே வேணான்டா அப்பா.. பேரும்வேணாம் புகழும்வேணாம்.. இருக்கிற பேரே போதும்டா சாமி.." என்று தலையில் கைவைத்து உக்கார்ந்தவர்தான் இன்னக்கிவரைக்கும் பதிவு பக்கமே எட்டிப்பார்க்கலை.


***************

அன்புள்ள நண்பர்களே!! இந்த கதையின் நீளம் கருதி இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளேன்.

,

Post Comment

7 comments:

 1. //"அப்படி நான் என்ன எழுதிட்டேன்னு இந்தவாங்கு வாங்குறானுவ.. வேணான்டா சாமி.. இந்த பதிவுலகமே வேணான்டா அப்பா..///

  பின்னங்கால் பிடரில அடிக்க ஓடின பண்ணையாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...கதை நல்லா.... இருக்கு...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. என்னங்க இந்த வாங்கு வாங்கிருக்கீங்க, பதிவுலகத்து மேல என்ன கோபமுங்க?

  ReplyDelete
 3. அன்பின் ஸ்டார்ஜன்

  இன்றைய நிலை இதுதானா - இப்படித்தான் முடியப் போகிறதா - சிந்திப்போம் -

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 4. என்ன ஸ்டார்ஜன்..கதையின் முடிவு//அப்படி நான் என்ன எழுதிட்டேன்னு இந்தவாங்கு வாங்குறானுவ.. வேணான்டா சாமி.. இந்த பதிவுலகமே வேணான்டா அப்பா.. பேரும்வேணாம் புகழும்வேணாம்.. இருக்கிற பேரே போதும்டா சாமி.." என்று தலையில் கைவைத்து உக்கார்ந்தவர்தான் இன்னக்கிவரைக்கும் பதிவு பக்கமே எட்டிப்பார்க்கலை.
  // இப்படி ஆகிப்போச்சு??

  ReplyDelete
 5. அப்பாடா கதை நல்லாயிருக்கு சார் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. யதார்த்தமான முடிவுதான். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
 7. க‌தை ந‌ல்ல‌ முடிந்த‌து ஸ்டார்ஜ‌ன்...

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்