Pages

Saturday, March 30, 2019

தேர்தல் நேரம் - கவனம்

2014ம் ஆண்டு சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த நேரம், நாடாளுமன்ற தேர்தல் சமயம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து அவசர வேலையாக நெல்லை செல்வதற்காக கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் பஸ் டிப்போவில் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பேக்கை எனது காலடியில் வைத்து நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், அவரது பேக்கை எனது பேக்கிற்கு ஒட்டியபடி வைத்தார். உடனே நான் என்ன என்று முறைத்தபடி கேட்டேன். " சார், எனது பேக்கை பார்த்துக் கொள்ளுங்கள், நான் டாய்லெட் போயிட்டு வருகிறேன் என்று மெல்ல அவ்விடத்தை விட்டு அகல முயன்றார். "ஹலோ முதல்ல பேக்கை தூக்குங்க தூக்குங்க, இங்கே வைக்காதீங்க," ஆபீஸ்ல சொல்லி வைத்துவிட்டு செல்லுமாறு கூறினேன்.   ரொம்ப யோசித்தபடியே அவரது பேக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

நான் செல்ல வேண்டிய பஸ் வந்ததும் ஏறி அமர்ந்து எனது பயணத்தை தொடர்ந்தேன். சில மணி நேரங்கள் கழிந்திருக்கும், பஸ் நிற்பது போல உணரவே கண் விழித்து பார்த்தேன். நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களின் வரிசையில் எங்களது பஸ்ஸும் நிறுத்தப்பட்டிருந்தது.

போலீசார் ஒவ்வொரு பஸ்ஸாக சோதனை போட்டு எங்களது பஸ்ஸையும் சோதனையிட்டனர். ஒவ்வொருத்தர் லக்கேஜ்ஜையும் செக் பண்ணினாங்க, அவங்க எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கோயம்பேட்டில் அந்த ஆள் வைத்து விட்டுச் சென்ற  பேக்கை கொண்டு வந்திருந்தால் போலீஸில் மாட்டியிருப்பேன். நல்ல வேளை இறைவன் அருளால் உசாராக இருந்ததினால் தப்பித்தேன்.

இது போன்ற பயணங்களில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். யார் எப்படி இருப்பாங்கன்னே தெரியாது. இல்லாவிடில் சொந்த செலவில் சூன்யம் வைத்தாற் போலாகிவிடும்.

Post Comment

Monday, April 13, 2015

வலைப்பயணம்

அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு,

பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பயணத்தை துவக்குகின்றேன்.

சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Thursday, March 6, 2014

ஒளியும் ஒலியும்


முதல்முறை என் விழிகள்
தேடியது உன் வரவை நோக்கி!
அவள் வருவாளா என மனம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடிக்க‌
தூரத்தில் இருள் விலக‌
அமைதி அலறி அடித்து ஓட!

அங்கே ஒரு ஒளியும் ஒலியும்
அரங்கேறியது.

எல்லோரும் காண ஒரு அழகு
தேவதையாய் மின்னினாய் என் அருகாமையில்!

உன் முதல் பரிசம் ஆயிரமாயிரம்
ஆனந்த ஊற்றுகள் பொங்கிட‌
நான் மெய்மறக்கையில்
ஆச்சர்யமானேன் எல்லோருக்கும்!
உன் அருகாமை என்னை இம்சிக்க‌

என்னைப்போலவே உன் வருகையை
ஆயிரமாயிரம் கண்கள் ஏங்குகின்றன!

மழையே! உன் வரவை எண்ணி!!

Post Comment

Wednesday, January 1, 2014

புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு (2014) வாழ்த்துகள்.

நான் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போது மன‌தில் வேண்டிக்கொள்வேன்.

* இறைவா... இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கவேண்டும்.

* மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டும். சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள்க்கூடிய வழிமுறைகளை நீதான் எங்களுக்கு காண்பிக்க வேண்டும்.


* தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் எங்களுக்கு தந்தருள்வாய்..


* எல்லா மக்களும் இன்புற்று அவர்கள் வாழ்க்கையை ஒளிவீசிடச் செய்திடுவாய்..


* நோய்நொடி, தீயசக்திகளிடமிருந்து மக்களை நீயே பாதுகாப்பாயே..


* சோதனைகள் வந்தாலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத சோதனைகளை தந்துவிடாதே..


* கஷ்டப்படும் ஏழைஎளியவர்களுக்கு உதவக்கூடிய மன‌தினை எங்களுக்கு தந்தருள்வாயே...


* விலைவாசி, பொருளாதார வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், எல்லாம் குறைந்து நாடு முன்னேற வேண்டும்.


* எல்லா மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்.


* நாட்டில் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருவாயே..


* கடந்த ஆண்டு விட்டுபோன நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற வேண்டும்.


* நம்முடைய வேண்டுதல்கள் யாவும் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திப்போம்.....


Post Comment

Sunday, April 21, 2013

நான் கண்டதில் இப்படியும் சிலர்

அவன் இவனை குற்றம் சொல்வதும்
இவன் அவனை குற்றம் சொல்வதும்
இழிவாய் தெரியவில்லை உங்களுக்கு..

எத்தனையோ இயக்கங்களாய் பிரிந்து
ஒருத்தனை ஒருத்தன் குறைசொல்லும் நேரத்தில்
அத்தனையும் ஒன்று கூடினால்,
பிரச்சனை எதுவுமில்லையே..

உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி
எத்தனையோ பேர் உள்ளனர்
நாட்டிலும் உன் வீட்டிலும்.,
அவர்களை பற்றிய சிந்தனை
இல்லை உனக்கு., வீண்விவாதங்களோடு
அடித்துக்கொள்வதற்கு மட்டும்
இத்தனை நேரம் எதற்கு?!

காலநேரத்துடன் சேர்ந்து
கரையுதடா உன் வாலிபமும்
ஆனால் ஒற்றுமையை மட்டும்
கடைபிடிக்கவில்லை எப்பொழுதும்

அல்லாஹ், ரசூல் காட்டித்தராத
விஷயங்களில் தர்க்கம் செய்தே
தரம் கெட்டு போனாயடா
என்னருமை சகோதரா..

ஒரே ஒரு நிமிசம்
புரட்டியாவது பாராடா
அருள்மறையாம் திருமறையை
பிறகு மாற்றிக்கொள்வாயடா
உன் எதிர்மறையை

காசை கொடுத்து வாழும் நெறியை
நாசுக்காக கற்பிக்கும் இறைவனை
தூசாக எண்ணி துச்சமென நினைத்து
சொகுசு வாழ்க்கைக்கு விலை போனாயடா..,

ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம்.,

இதெல்லாம் ஒருகணமேனும்
திரும்பிப்பார்க்கும் வேளை - இறைவன்
திரும்ப அழைத்துக்கொள்வான்
திரும்பமுடியாத இடத்துக்கு...

Post Comment

Saturday, April 6, 2013

பயணம் தொலைவுதான்



என் பஞ்சம்தீர்க்க
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்..!
என் கதையை கேட்டபின் செல்..!

ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
கலங்கிய‌ கண்களில் நீருடன்..!

பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று,
தன் பசி நீக்க
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..

பர்லாங் தூரம் எம்பெண்கள்
கடப்பது ஒரு குடம் நீருக்காக..!
மடியில் கனமில்லை
தலைபாரம் தான் தீரவில்லை..!

செம்மண் மேடாக காட்சியளிக்கும்
குளமும் வாய்க்காலும்
தூரமானது கால்நடைகளுக்கு
அம்மா என்று பாசமுடன்
அழைக்கும் அவைகளுக்கு
தண்ணீர் காட்டவே நீரில்லையே..!
அய்யோ என் செய்வேன்....?!

'நெல்லுக்கு இறைத்த நீர்  -வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்'


ஆறு நிறைந்து,
வாய்க்கால் நிறைந்து,
பூத்துக் குலுங்கிய சோலைகளும்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பாய்விரித்து படுத்திருந்த,

எங்கள் வயல்வெளிகளும்
வற்றாத ஜீவநதி பாய்ந்து
வளம் கொடுத்த
புண்ணிய பூமி எங்கே.?
எங்களின் தாகம் தீர்த்த
பரணி எங்கும் மணல்மேடாய்..?!

பார்த்து பார்த்து
சலித்துப் போன‌
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?!..

குழாயினில் வரும் காற்றில்
எங்களின் மூச்சிக்காற்றும்
கலந்தது நிலத்தடி நீருக்காக..

யாரை குற்றம் சொல்ல..?!

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
என்ற வாசகத்தை தொலைத்து
நிற்கும் எங்கள் அறிவின்மையை
சொல்லவா..!

காட்டையும் வயற்காட்டையும்
அழித்து ப்ளாட் போட்ட
கயவர்களை பற்றி சொல்லவா..?!


அள்ள அள்ள குறையாது
தரும் அமுதசுரபி போல
வற்றாத ஜீவநதி பரணியில்
மணலை அள்ளி அள்ளி
பாலையாக்கிய கருணை
பிரபுக்களை பற்றி சொல்லவா..?!

குப்பைகளையும் ஆலைக்கழிவுகளையும்
ஆற்றில் கலக்க வைத்து
தொற்றுநோய்களை பரப்பிய
புண்ணியவான்களை பற்றி சொல்லவா..?!

செல்லும் தூரம் அறியாமலே
செல்லும் காலக்கொடுமையை
பற்றி சொல்லவா..?!

அதோ அங்கே தெரியும்
நிழல்கூட கருவேல நிழல் தான்
இளைப்பாற சிறிது நிழல் கிடைக்குமா..?!
எங்கள் தாகம் தீருமா..?!

சொல்லுங்க மேகங்களே..!

இதோ இந்த பயணம்
எப்போதும் தொலைவுதான்..!!


***********

குறிப்பு:

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை இது.

ரியாத் தமிழ்சங்கம் - கல்யாண் நினைவு அமைப்பினர் நடத்திய உலகாளவிய கவிதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை.

படம் உதவி : நன்றி தட்ஸ்தமிழ்.

Post Comment

Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..?!

நடிகர் கமலஹாசன் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்து பெரும்பாலான இடங்களில் வெளிவந்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அது வெளியானால் பல சமூக சீரழிவை ஏற்படுத்தும் எனக்கருதி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையின் காரணமாக தமிழக அரசு இந்த படத்தை 15 நாட்களுக்கு தடை செய்துள்ளது.

நமது கருத்துக்கள் மற்றவர்களை சென்றடைய ஊடகம் கண்டிப்பாக தேவை. அது எந்தத்துறையாகவும் இருக்கலாம். இதில் திரைத்துறை என்பது எல்லாவற்றையும்விட அதிவிரைவாக மக்கள் மனதில் சென்றடையும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இந்த சினிமாவின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள்.

அப்படி மக்கள் மனதோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களில், இஸ்லாமிய சமூகங்களை பற்றி திரைப்படங்களில் காட்டும்போது கொச்சையாக தமிழ்பேசுபவராகவும், சாம்ப்ராணி போடுபவராகவும், கைலி, பச்சை தலைப்பாகை அணிந்தவராகவும், அரேபிய ஷேக்குகள் போன்றும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர் இந்தமாதிரி படங்களை எடுப்பவர்கள். இவர்களது குறிக்கோள் முஸ்லிம்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கோடு படங்களில் காட்டுவது வேதனைக்குரிய விசயம்.

உதாரணமாக, இப்போது வந்த அனைத்து திரைப்படங்களும் இஸ்லாமியர்களை திவிரவாதிகளை போன்றும், இன்றைய மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து படமெடுத்து வருகின்றனர். இந்த விஷமங்களை விதைக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கண்டித்தக்கவர்கள்.

முஸ்லிம்களும் மாற்றுமதச் சகோதரர்களும் அண்ணன்- தம்பி என்று ஒரே குடும்பம் போல பழகிவருகிறார்கள். இது நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தமாதிரி கருத்துக்களை விஷம்தான் என்றறிந்த இன்றைய மாற்றுமதச் சகோதரர்கள் இதனை பெரிய விசயமாக கருதாமல் முஸ்லிம்களோடு நல்லிணக்கத்தோடு பழகி வருகிறார்கள். இப்படியான சினிமாக்கள் தொடர்ந்து வந்து கீழ்தரமான எண்ணங்களை விதைத்துச் சென்றால் மாற்றுமதச் சகோதரர்கள் இது உண்மைதான் என்று முஸ்லிம்களை கேவலமாக பார்ப்பார்கள்.

ஆனால் நாளைய சமுதாயம் எப்படி தாங்கிக்கொள்ளும்; எப்படி எடுத்துக் கொள்வார்கள்?.. இந்த படங்களை பார்க்கும் வளர்ந்து வரும் சிறுபிள்ளைகள் நெஞ்சில் என்னமாதிரியான எண்ணங்களை உருவாக்கும் என்பதனை நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்க  கடமைப்பட்டுள்ளோம்.


சமுதாய பொறுப்புணர்வோட செயல்படவேண்டிய தணிக்கைத் துறை இந்தமாதிரி திரைப்படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி மேலும் இவர்களை ஊக்கப்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் மத நல்லிணக்கத்தோடு சமுதாய பொறுப்புணர்வோடு செயல்பட்டு இந்த படத்தை தடைசெய்ய உத்தரவிட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்தவிஷயத்தில் நீதிமன்றமும் தங்களுடைய பங்களிப்பை ஆற்றும் என்பது விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தீர்ப்பினை தள்ளிவைத்ததிலிருந்து தெரிகிறது. இப்படம் நிரந்தரமாக தடைசெய்ய ஏதேனும் வழிவகைகள் உண்டா என்று அறிந்து நல்லதொரு தீர்ப்பினை வழங்க அனைத்து தரப்பு மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கின்றோம்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் மனதை புண்படுத்தும்படி மதநல்லிணக்கத்தை குழிதோண்டி புதைக்கும்  திரைப்படங்களுக்கு எதிராகவும் நாம் அனைவரும் போராடவேண்டும். 
அனைத்து தரப்பு மக்களும் இந்தமாதிரி விஷங்களை விதைக்கும் திரைப்படங்களை வேறோடு கிள்ளியெறிய முன்வர வேண்டும்.

பார்க்கலாம்... எல்லாம் இறைவனின் சித்தம்..!

Post Comment

Sunday, January 13, 2013

உன்னோடு ஒரு பயணம்..!


உன்னோடு ஒரு பயணம்..!

ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று
இழுத்து செல்கிறது உன் அருகாமையை தேடி..!
பயணத்தில் தேடித்தேடி
அலுத்துப்போகின்றேன்
மறுபடியும் மறுபடியும் இம்சிக்கிறாய்..!

விழிகளுக்குள் காட்சிகள் விரிய
உன்னோடு பயணித்தது ஒளியும் ஒலியுமாய்..!
மீண்டும் சந்திக்கும் தருணத்தை
விழா எடுக்க முயற்சிக்கிறேன்
என் நினைவுகளும்
விரைந்தோடும் காலமும்
உனக்காக வீற்றிருக்கும் அன்பே..!

என் கைக்கோர்த்தபடி நீ
சுற்றிவரும்போது வியந்து வியந்து
ஒவ்வொன்றையும் நீ கேட்கும்போது
நான் விளக்கும் அழகினை
மெய்மறந்து ரசித்தது
இன்னும் மறையவில்லையடி அன்பே..!

உன் செல்ல பொய்க்கோபங்களை
காணாது அங்குமிங்கும் தேடுகின்றேன்

விண்ணில் தெரியும் நட்சத்திரங்கள்
மினுமினுக்கின்றன
உன் அழகிய முகமும்
மின்னுகின்றதா என
மெய்மறந்து நிற்கின்றேன்
கடும்குளிரையும் பொருட்படுத்தாது..!

Post Comment

Monday, January 7, 2013

முஸ்லிம்கள் என்றால்???.



சில ஆண்டுகளுக்கு முன்னர், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் தினமும் பஸ்ஸில் தான் செல்வேன். பஸ்பாஸ் இருந்தால் செலவை சிக்கனப்படுத்தலாமே என்று நெல்லை பஸ் டிப்போவில் பஸ்பாஸ் வாங்கி பயணம் செய்வேன். மாதாமாதம் அதை புதுப்பிக்க டிப்போவுக்கு செல்வதுண்டு. அங்கு அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்க்கும் பெண் எங்க ஊரை சேர்ந்தவர்; நன்கு பழக்கமானவர். அந்த அக்கா பெயர் ஞாபகமில்லை. இதனால் அங்குள்ள மேலாளார் என்னிடம் நன்கு பழகிவிட்டார்.

ஒருநாள் காலையில், பாஸை புதுப்பிக்க டிப்போ அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது மேனேஜரிடம் கையெழுத்து வாங்கும்போது, ”தம்பி உன்னப்பார்த்தா எனக்கு பயமிருக்குப்பா” என்றார். நான் திடுக்கிட்டு, ”என்ன சார்! என் தலையில் கொம்பு முளைத்து அகோரமாவா இருக்கேன்” என்றேன் சிரித்துக் கொண்டே. அதற்கு அவர், ”அதுல்லப்பா, முஸ்லிம்கள் என்றால் தாடிவைத்துக் கொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு தீவிரவாதி போல இருப்பாங்களாம். அவங்க எங்க குண்டு வைப்பாங்கன்னே தெரியாது. அதமாதிரி நீயும் எதாவது வச்சிருக்கியா” என்றார் சிரித்தபடி. நானும் சிரித்துக்கொண்டே, ”யார் சார் சொன்னா உங்களுக்கு முஸ்லிம் என்றால் தீவிரவாதின்னு??..” என்றேன். அவர் உடனே, ”அதான் டிவியில சினிமாவுல காட்டுறானேடே. முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டுக்குள்ள ஊடுவிருயிருக்காங்க.. ஆங்காங்கே குண்டு வைக்கிறாங்கன்னு படத்துல காட்டுறாங்களே., அதற்கு என்னப்பா சொல்றே” என்றார்.

சார், முதல்ல ஒண்ணு புரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம் என்றால் அமைதியானவன் என்று அர்த்தம். நாட்டுல இருக்கிற முஸ்லிம்கள் இருபது சதவீதம் பேரும் கையில் துப்பாக்கியும் குண்டும் வைத்துக் கொண்டு இருந்தால் நீங்களும் நானும் நிம்மதியா வாழ முடியுமா.. அதுபோக இந்த நாட்டில் முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் என்று ஒரு குடும்பம் போல பழகிக்கிட்டு இருக்கோம். இது இன்னக்கி நேற்றல்ல.. காலம் காலமா இப்படித்தானே வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம். சினிமா என்பது ஒரு நிழல். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை” என்றேன். மேலும் நான், ”சார்! எங்கோ ஒருவன் மதவெறி பிடித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்றீங்களே இது சரியா??.. தீவிரவாத செயல்கள்ல ஈடுபடுகிறவங்களுக்கு ஏன் மத அடையாளப்படுத்துறீங்க??.. அவன் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்டியனோ.. தண்டிக்கப்பட வேண்டியவன். மற்ற மதத்தினர் செய்யும் இதுபோன்ற தீவிரவாத செயலுக்கு மத அடையாளம் பொருத்தாத மீடியாக்கள் அவன் முஸ்லிமாக இருந்தால் உடனே எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க சார்??” என்றேன்.

உடனே அந்த மேனேஜர் ”ஆமா தம்பி! எல்லோரையும் குற்றம் சொல்வது கூடாது. எனக்கு தெரியும்.. முஸ்லிம்கள் என்றால் ரொம்ப நல்லவங்கன்னு.. இல்லன்னா கொடுக்கல் வாங்கல் வச்சிருப்போமா சொல்லு., ஆனா இதுபோன்ற கருத்துக்களை மீடியாக்கள் பரப்பும்போது இதனைப் படிக்கும் அல்லது அந்தமாதிரி படங்களை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?! நம் அருகில் உள்ளவர்கள் இப்படியாப்பட்டவங்களான்னு நம்மிடையே முஸ்லிம்கள் தீய எண்ணத்தோடே பழகுறாங்கபோலன்னு நினைப்பாங்களே.. இது நெஞ்சில விஷத்தை விதைத்ததுக்கு சமம். சே! என்ன மாதிரியான உலகம்டா இது!! என்று நொந்து கொண்டார்.


தம்பி அருமையா சொன்னேப்பா.. நல்ல தெளிவான சிந்தனை. நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய்” என வாழ்த்தியனுப்பினார். பின்னர் எங்க ஊர் அக்காவும், நல்லா சொன்னேடா தம்பி என்றார்.

எல்லாம் இறைவனின் சித்தம். சரி சார் எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது நான் வருகிறேன்” என்றபடி இருவரிடமும் விடைப்பெற்று கிளம்பிய எனக்கு கல்லூரியில் நுழைந்ததும் ஆசிரியரிடம், ”ஏண்டா இவ்வளவு லேட்டு!” என்று திட்டு விழுந்தது.

Post Comment

Sunday, December 2, 2012

பெண்ணே..! நீயும்

 பெண்ணே..! நீயும்




மெல்லிய தோகை சிலிர்த்தெழும் தேகம்
அள்ளிய நளினம் மெல்லிடை ஸ்பரிசம்
கொஞ்சிப்பேசும் விழிகளின் இயக்கம்
எஞ்சிய எவரும் காணாத நாணம்

வந்தென்னை அணைத்துக்கொள்ளடா என
ஏங்கும் உந்தன் பருவம் ஒரு தோகையோ!
கார்க்கூந்தல் வாசத்தால் எனை மயக்கும் மங்கையே

பெண்ணே..! நீயும் ஒரு அழகு மயில் தானடி!!..

Post Comment

Wednesday, April 11, 2012

சுனாமி எச்சரிக்கை


இன்று மதியம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை படித்ததும் மனம் என்னவோ போலானது. மிகுந்த வேதனையடைந்தேன். யாருக்கும் எந்தவித துன்பமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று மனம் பதபதைப்பாக இருக்கிறது.

மலேசியாவில் உள்ள தம்பியுடன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது கொஞ்சம் ஆறுதல். நண்பர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்க சொல்லவேண்டும்.

சென்றமுறை 2004ல் சுனாமி வந்து இந்திய இந்தோனேஷியா மற்றும் கடற்கரை பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. மறுபடியும் சுனாமி என்றால் தாங்காது இந்தபூமி. இறைவன் தான் எல்லா மக்களையும் பாதுக்காக்க வேண்டும்.

சென்ற 2004ல் சுனாமி வந்தபோது நான் வேலை விசயமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அங்கே எல்லோரும் ரொம்ப கவலையுடன் இருந்தனர். ரேடியோக்களிலும் தொலைக்காட்சியிலும் ஒலி/ஒளிப்பரப்பட்ட காட்சிகளை கண்டபோது மனம் ரொம்ப வேதனையாக இருந்தது. அன்றைய தினம் மனசு முழுவதும் பிரார்த்தவண்ணமே இருந்தது. மதுரை வந்தபின் பள்ளியில் தொழுது பிரார்த்தனை செய்தது இன்னும் பசுமையாக உள்ளது.


எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.

சென்னையில் உள்ளவர்களும் கடற்கரை மாவட்டங்களில் உள்ளவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கவலைப்படவேண்டாம். இறைவன் பாதுகாப்பான்.

,

Post Comment

Tuesday, April 10, 2012

அவன் வரும் நேரம்


இரவு நேரம். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது எங்கிருந்துதான் அந்த வலி வந்ததோ தெரியவில்லை. அம்ம்ம்ம்ம்மா.... என்ற அலறலுடன் தட்டுதடுமாறி மெதுவாக எழுந்தேன். வாசலுக்கு வந்து பார்த்தால் எங்கும் இருட்டு பயம்வேறு தொற்றிக் கொண்டது. யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று தேடினேன். பக்கத்து வீடுகளை தட்டியதில் குறட்டை சத்தமே பதிலாய் வந்தது. அங்குமிங்கும் நடந்தேன்., பதிலே இல்லை. இந்த நேரம் துணைக்கு யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவரும் இல்லாதது வெறுப்பாய் உணர்ந்தேன். மனம் ஒருவித ஏக்கத்துடன் தவியாய் தவித்திருந்தது.

அம்மாவுக்கும் மாமி வீட்டுக்கும் போன் செய்யும் போது மனமும் வலித்தது. உறவுகளை உதறித்தள்ளி தொலைவில் தனிமையில் இருந்தது முதலில் சந்தோசமாக இருந்தாலும் இப்போது நினைக்கையில் மெல்ல தலையை சுற்றியது. தண்ணீரை அள்ளிஅள்ளி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. மீண்டும் வலி வரத் தொடங்கியிருந்தது.

அந்த ஆளரவமற்ற சாலையில் என் கால்கள் மெல்லமெல்ல விரைந்தன. வலி விட்டுவிட்டு வருகிறதே.. என்னால் நடக்க முடியல.. தலைசுற்றி மயக்கத்துடன் நடந்து வந்தேன். யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போன்று இருந்ததால் அம்ம்ம்மா.. என்றபடி மயங்கி விழுந்தேன். இதமான காற்று என் முகத்தினில் மோத சிலிர்த்தெழுந்து நினைவுகள் பயணிக்கத் தொடங்கியிருந்தது. எழும்போது கால்கள் நடக்க திரணியற்று பயணித்தன.

"மரகதவல்லி மருத்துவமனை" என்ற பெயர்தாங்கி நின்ற இடத்தினிலுள்ளே கால்கள் சென்றன. என் நிலை கண்டும் அங்கிருந்த செவிலியர் கண்களில் அலட்சிய பார்வை "டாக்டர் இல்லை., காலையில்தான் வருவார்" என்ற பதிலுடன்.

நான் பொறுத்துக் கொள்வேன். வலி பொறுக்குமா?.. கத்த தொடங்கினேன். செவிலியர், "ஏம்மா, சும்மா சும்மா கத்திக்கிட்டே இருக்கே.. டாக்டர் வரட்டும்" என்றவளுக்கு மயக்கம்தான் விடையாய் கிடைத்தது என்னிடமிருந்து.

"குவா.. குவா" குரல் கொடுத்து என்னை மெல்ல கண்விழிக்க செய்தான் என் செல்லம். எழ முடியாமல் பெட்டிலிருந்து எழுந்தபோது, "வாடா.. வாடா என் செல்லக்குட்டி" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மாமியை கண்டதும் என் கண்களையும் மீறி நீர் வடிந்தது. "மாமி..." என்று பேச எத்தனிக்கும்போது வார்த்தைக்கு பதிலாய் கண்ணீர். பரவாயில்லமா என்றபடி என் செல்லத்தை கொஞ்சிக் கொண்டிருந்தார்.

,

Post Comment

Monday, March 26, 2012

நேசம் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை

புற்றுநோய் விழிப்புணர்ச்சிக்காக நேசம் அமைப்பினர் நடத்திய சிறுகதை போட்டி முடிவுகளை இன்று அறிவித்துள்ளார்கள். இதில் மூன்று பரிசுகளும் நான்கு ஆறுதல் பரிசுகளுக்கான சிறுகதைகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில் முதல் பரிசு பெற்றது அப்பாவி தங்கமணியின் சிறுகதை. எனது சிறுகதையான "பொழுது விடியட்டும்" சிறுகதையை இரண்டாம் பரிசு சிறுகதையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் நடுவர் குழுவினருக்கும் என்னுடைய‌ நன்றிகள்.



எல்லா புகழும் இறைவனுக்கே!

வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த வெற்றிபெற உதவிய உங்கள் அனைவரின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் என்னால் மறக்க இயலாது.

நண்பர் அக்பர் போன்மூலம் சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப சந்தோசமா இருந்தது.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருநிமிடம் விக்கித்து நின்றேன். இந்த சந்தோசத்தை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நேசம் போட்டி முடிவுகளை இங்கே காணலாம்.

போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை பொழுது விடியட்டும்.

தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் உடான்ஸ் திரட்டிக்கும் நடுவர் குழுவினருக்கும் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Thursday, March 15, 2012

கரையில்லா ஜோதி?..


கவியே என் ஆருயிர் கவியோ நீ
உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்..

வரிகளை கொண்டு உன்னையடையும்
வழிகளாய் உருவகப்படுத்தினோம்..
அது ஏக்கம், சோகம், இன்பம்,
தாங்கி நிற்கும் உணர்வுகளாக..

என்று எழுத்து என்னும் மூதாட்டியை
நிலாவில் கண்டோமோ அன்றே
நீயும் பிறந்திருப்பாய் என்றே
தோன்ற வைத்திருப்பாய்!!

சிக்கிமுக்கி காலம்முதல்
தீப்பொறிகள் போல
காதலுக்காக தூதுச்சென்றாயோ!!
அல்லது விதைகளை தூவிச்சென்றாயோ?..
உன் சக்தியால் சில மக்கியும்
பல விருட்சமாகவும் யெங்கெங்கிலும்...

ஆண்டியிலிருந்து கவிச்சக்கரவர்த்தியையும்
தாண்டி கவியரசாகவும் கவிபேரரசுகளாய்
பரந்துவிரிந்த தேசமிது
உன்னை விரும்பாதோர் அவனியில் உண்டோ?..

கவியே என் ஆருயிர் கவியோ நீ..
பூவையர் மனம் போல மென்மையானவளே!
ஒவ்வொரு நாளும் புத்தம்புது
மலராய் பூக்கின்றாய் என்னுள்..
எனை வந்து சேருவது என்னாளோ?..

வா அருகினில் வா
வந்தெனை அணைத்துக் கொள்
எமை உன் ஜோதியில் கலக்க வா..

உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்...

,

Post Comment

Saturday, March 10, 2012

நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறர்க்கு?..

இப்போதெல்லாம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவது மிக சாதாரணமாகி விட்டது.


"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார். அதில், அண்ணல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும்.

420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். ஆக மொத்த எடை... 1500 கிலோ..!

100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும் இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!.

அடேங்கப்பா......!


ஆட்சியாளர்களுக்கு இவ்வளவு வீண்செலவு செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பது சாதாரணமாக தோன்றுகிறது.

கஷ்டப்படும் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. இவ்வளவு பணத்தைக் கொண்டு பசியால் வாடும் கஷ்டப்பட்ட அரபிகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் செலவு செய்தால் அவர்கள் மனம் குளிருவார்களே..

இந்த பணத்தைக் கொண்டு நாட்டுநலப் பணித்திட்டங்களுக்கு செலவிட்டால் நாட்டில் பணப்பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டங்களும் விரைந்தோடுமே..

சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்?????....

******

* ஒரு 20 ரூபாயை 2 ஏழைகளுக்கு தர்மம் செய்வது நமக்கு பெரிய விசயமாக இருக்கும்.

* ஆனால் இந்த 20 ரூபாயை ஹோட்டல் சர்வருக்கு டிப் ஆக கொடுப்பது சாதாரணமாக தோன்றுகிறது.

* ஒரு 3 நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மிக கடினமாக தோன்றும்.
ஆனால் 3 மணி நேரம் சினிமா படத்தை உக்கார்ந்து பார்ப்பதில் கஷ்டமே தெரியாது.

* நாள்பூராவும் ஜிம்முக்கு போய் நேரத்தை வீணாக்கி கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்வது மிக பிடித்தமான ஒன்று.

* அதே நாள் வீட்டில் சின்னசின்ன வேலைகள் செய்து அம்மாவுக்கு உதவியாய் இருப்பதில் ரொம்பவே டயடாகி விடுவோம்.

* வருடத்தில் ஒருநாள் வரும் லவ்வர்ஸ் டே எப்போ வருதுன்னு ஆவலோடு இருப்போம்.

* ஆனால் அன்னையர் தினம் (மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) எப்போ வருதுன்னு தெரியாமலே போய்விடும்.



* இதோ இந்தப் படத்தில் தோன்றும் இரண்டு சிறுவர்கள் பசி மயக்கத்தில் சுருண்டு கிடக்கின்றனர். இவர்களுக்கு ஆளுக்கொரு ரொட்டித்துண்டுகள் வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு சந்தோப்படுவார்கள்.

* ஆனால் இதே சோகக் காட்சியை படமாக வரைந்து 1 லட்ச ரூபாய்க்கு விற்பது பேசனாகி விட்டது,....

என்ன செய்ய?..

நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறருக்கு அது ரொம்ப பெரிய விசயமாக இருக்கும்.

எனவே இறைவன் கொடுத்த பொருளாதாரத்தை வீண் வகைகளில் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஈடுபாடு காட்டினால் உலகில் வறுமை என்னும் சொல்லே இருக்காது.

,

Post Comment

Monday, March 5, 2012

ஏமாறுகிறவன் இருக்கும்வரை...

சென்ற ஆண்டு ஊருக்கு சென்றிருந்த சமயம், எப்போதும் மதியம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கத்தை போடுவதுண்டு. அப்படி ஒருநாள், சாப்பிட்டுவிட்டு குட்டித்தூக்கத்தை புரண்டு புரண்டு வரவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது அலைபேசி அலறிக்கொண்டிருந்தை பார்த்த என் மனைவி, "ஹலோ! ய்யாரு.." என்றார். "ஹலோ! மிஸ்டர் ஷேக் மைதீன் இருக்கிறாரா.. அவரிடம் கொடுங்க., கொஞ்சம் பேசணும்" என்று கொஞ்சும் குரலில் ஒரு பெண் மறுமுனையில். மனைவி ஒருவித பார்வையுடனே என்னிடம் போனை தந்தார்.



நான் "ஹலோ" என்றேன். "ஹலோ நீங்கதான் ஷேக்மைதீனா?" என்றாள். "ஆமா நாந்தான்.. என்ன வேணும் சொல்லுங்க" என்றேன். உடனே மறுமுனை பெண், "சார்! கன்கிராஜிலேசன்ஸ்! நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படப்போகுது! உங்க கனவு நனவாகப்போகிறது!" என்றாள் அவள். "அட! என்னங்க சொல்றீங்க.. ஒண்ணும் புரியலியே.." என்றேன். "ஆமா சார்.. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. எங்க நிறுவனத்தின் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்)ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் உங்க ரெண்டுபேரையும் செலக்ட் பண்ணிருக்காங்க. இலவசமா பாலிசி தர்றாங்க. பணமே கட்டவேண்டாம். உங்களுக்கு 2 லட்சரூபாய்க்கு பாலிசி இலவசம்" என்றார் அந்த பெண்.

"அடடே.. ரொம்ப நல்ல விசயந்தான் சொல்லியிருக்கீங்க.. அப்ப நான் அதிர்ஷ்டசாலிதான் ரொம்ப சந்தோசமா இருக்கு.." என்றபடி மனைவியை ஒரு லுக் விட்டேன். மனைவியும் "என்ன?.. யாருங்க போன்ல" என்றபடி ஆர்வமானார். இதுபோல நிறைய இலவச பாலிசி மேட்டர் கேள்விபட்டிருந்தாலும் இவங்க என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே என்று போனை துண்டிக்காமல் இன்சூரன்ஸ் கம்பெனி பெண்ணுடன் பேச்சை தொடர்ந்தேன். இதைக் கண்டு என் மனைவியும், அத்தாவும், அம்மாவும், தங்கையும் ஆர்வத்துடன் என் அருகே அமர்ந்ததும், நான் பேசுவதை ஸ்பீக்கர் போனில் போட்டு அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

"ஆமா சார்! நீங்க அதிர்ஷ்டசாலிதான். பாலிசியை வாங்கிக்கொள்ள எங்க அலுவலகத்துக்கு வாங்க" என்றார். "சரிங்க.. உங்க அட்ரஸ் கொடுங்க.. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்" என்றேன். அந்த பெண்ணும் ஆபீஸ் அட்ரஸ் கொடுத்தார். ரொம்ப நன்றி என்றேன். "பரவாயில்லை சார்! எங்களுக்கும் பங்கு கிடையாதா?.." என்றார் அந்தபெண். "என்னது?.. உங்களுக்கும் பங்கா?.. அஸ்குபுஸ்கு!" என்றேன் நான். "அட என்ன சார்! நான் சொன்னது உங்க சந்தோசத்தில்" என்றார் அந்த பெண். இருவரும் கடகடவென சிரித்தோம்.

"சரிங்க அப்ப நான் உங்க ஆபீஸ்க்கு வந்து பாலிசியை வாங்கிக்கிறேன்" என்றேன். "சரிங்க‌ சார்! வரும்போது மறக்காம உங்க மனைவியையும் கூட்டிட்டு வாங்க" என்று அடுத்த குண்டை போட்டார் அந்த பெண். "மனைவியை ஏன் கூட்டிட்டு வரணும்?.. நானே வந்து வாங்கிக்கிறேன் மேடம்" என்றேன். "இல்லீங்க.. கண்டிப்பா உங்க மனைவியையும் கூட்டிட்டு வரணும். மனைவியோட வந்தால்தான் பாலிசி கொடுப்பாங்க. மறந்துருராதீங்க சார்" என்றதும் நான், "மேடம்! மனைவியை இப்ப கூட்டிட்டு வரமுடியாது. நானே வந்து வாங்கிக்கிறேனே மேடம்" என்றதும் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார் அந்த பெண்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். மறுபடியும் அவளிடமிருந்து போன். "ஏன் சார்.. உங்க மனைவி வரமாட்டாங்க?. கண்டிப்பா வரணுமே சார்" என்றார் அந்த பெண். "இல்லீங்க.. அவங்க வரமுடியாத சூழ்நிலை. அதனாலதான் நான் வருகிறேன் என்று சொன்னேன்" என்றேன் நான். அந்த பெண்ணும் லேசுல விடலை. துருவிதுருவி கேட்டுக்கொண்டிருந்தார். "என்ன சூழ்நிலை?. உங்களுக்கு பாலிசி வேணுமென்றால் மனைவியோட வாங்க" என்றார். "என் வொய்ப் ஊருக்கு போயிருக்காங்க. வர 2 நாளாகும். நான்கூட இப்ப ஊருக்குதான் கிளம்பிக்கிட்டு இருக்கிறேன். அதனால நான் இப்ப வந்து வாங்கிக்கிறேன். பாலிசி டாக்குமென்ட்ஸ் எல்லாம் ரெடியா வச்சிருங்க. இப்ப வருகிறேன்" என்றதும் அந்த பெண் போன் இணைப்பை மறுபடியும் துண்டித்து விட்டார்.

எங்க வீட்டிலுள்ளவர்களுக்கு இது உண்மையா இல்லை பொய்யா?.. என்று ஒரே குழப்பம். பொய்தான் என்று தெரிந்தாலும் அந்த பெண் பேசுவதை வைத்து பார்க்கும்போது உண்மையா இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த பெண்ணின் பேச்சு அற்புதமாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. இவர்களுக்கு ரொம்ப நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காங்க.

அப்போதுதான் எனது சிஐடி மூளையில் பல்பு பிரகாசித்தது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் இடம் நன்றாகத் தெரியும். அங்கே சென்று இது பொய்யா?.. உண்மையா? என்று நேரில் பார்த்துவிடலாம் என்று தோன்றியது. உடனே அங்கே கிளம்பிவிட்டேன்.

அதுஒரு ஐந்துமாடி கட்டடம். கீழ் தளத்தில் பிரபலமான ரெஸ்டாரென்ட் இயங்குகிறது. நான் அங்கு சென்று லிப்டை ஆன் செய்தேன். அது ஒர்க் ஆகவில்லை. அங்கிருந்த காவலாளி, "லிப்ட் ஒர்க் ஆகாது., படியில் ஏறி போங்க சார்" என்றார். விறுவிறுவென படிகளில் ஏறி நான்காவது மாடியில் உள்ள அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்றதும் எனக்கு அதிர்ச்சியானது.

சரியாக கட்டிமுடிக்கப்படாத கட்டடம். சுற்றிலும் நோட்டம்விட்டேன். அங்கு யாருமே இல்லை. மேலும் முன்னேறி சென்றேன். அப்போது மீண்டும் அதே குரல். அதே குரல் பல குரல்களாக எதிரொலித்தது. அப்போது எதிரே ஒரு பெண் அலுவலகத்துக்கு உள்ளிருந்து வந்தாள். நான் சுற்றும்முற்றும் பார்ப்பதை உணர்ந்து என்னவென வினவினாள். அதற்கு நான், "நான் கீழே ரெஸ்டாரென்ட்க்கு வந்தேன். மேல்மாடியில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் இலவச பாலிசி தருவதாக பேசிக்கிட்டாங்க. அதான் இங்கே வந்தேன்" என்றேன். "அப்படியா.. ரொம்ப சந்தோசம். ஆமா., இங்கே இலவச பாலிசி உண்டு. உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா ஒய்பை கூட்டிட்டு வாங்க. இலவச பாலிசி தருவாங்க" என்றாள். நான் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நோட்டம் விட்டேன். "சரிங்க மேடம் அப்ப நா வாரேன்" என்று அங்கிருந்து கிளம்பினேன்.

நான் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சிதான் மிஞ்சியது. உள்ளே நாலைந்து கால் கேபின்களில் இளம்பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் பேசிய பெண்ணின் குரலும் கேட்டது. இவர்கள் பேச்சாலே கஸ்டமர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தனர். அந்த அலுவலகத்தில் பாலிசி கொடுப்பதாக இருந்தால் எதாவது அதிகாரியோ இல்லை அலுவலகமாகவோ இயங்கவேண்டுமே. அங்கு ஐந்தாறு பெண்களை தவிர வேறயாருமே இல்லையே?.. பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து ஏமாற்றுதல் முறையற்ற செயல். இந்த பெண்களையும் குற்றம் சொல்லி பயனில்லை

எனக்கு தெரிந்து,

இப்படித்தான் சில இடங்களில் இலவச பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து உங்களுக்கு இலவசமா பாலிசி தருவதானால் இவ்வளவு தொகை செலுத்தினால் போதும். அப்புறம் நீங்க பணம் எதுவும் கட்டவேண்டாம் என்று சொல்லி பணத்தை கறந்துவிடுவார்கள். இப்படி நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

முதலில் இலவசம் என்று சொல்லி பின்னர் டாக்குமென்ட்ஸ் கையெழுத்திடும்போது ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை கேட்டால் என்ன செய்வது?.. இவர்களது இலக்கு நடுத்தர வர்க்கத்தினரை இலவசம் என்ற பெயரில் கவர்ந்து இழுப்பதுதான். இதுபோல கம்பெனி தரும் இலவசங்களை கண்டும் காணாமல் விடுவது சாலச் சிறந்தது.

அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். இதுபோன்ற இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

மறுநாள், மறுபடியும் அதே பெண்

"ஹலோ சேக்மைதீன்!.. உங்க ஒய்ஃப் ஓகே சொன்னாங்களா.. உங்க ஒய்ஃபை கூட்டிட்டு எப்ப வாரீங்க? உங்களுக்கான இலவச பாலிசி வெயிட்டிங்ல இருக்கு.. வந்தீங்கன்னா வாங்கிக்கிரலாம். இல்லன்னா வேற யாருக்காவது கொடுத்திடுவாங்க‌" என்றாள். உடனே நான், "இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோட பாலிசிய வேற யாருக்காவது கொடுத்திடுங்க.. எதோ நம்மளால முடிஞ்ச உதவி. உங்க புண்ணியத்துல அவங்களாவது நல்லாருக்கட்டுமே" என்றேன்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்