Pages

Thursday, May 20, 2010

யூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே...

"அய்யா பாருங்கோ; அம்மா பாருங்கோ, இந்த சிருசு பண்ற வேலையை..," என்றார் அவர். அந்த மனிதர் காலில் சலங்கை ஜல்ஜல்லென்று சத்தத்தோடு கையில் சாட்டையை வைத்து தன்னைத்தானே அடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார். பக்கத்தில் 'ஆடுரா ராமா ஆடுரா ராமா' என்ற தாளத்துக்காக‌ குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருந்தது குரங்கா என்று பார்த்தால் அவரது 4 வயசு குழந்தை.

"அம்மா பசிக்குதும்மா," என்றபடி ஒரு பிச்சைக்காரன் அந்தம்மாவிடம் கேட்கிறான். "அப்படியாப்பா இந்தா," என்று கொஞ்சம் சோறும் குழம்பும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் கொடுகிறார். அவன் சாப்பிட்டுவிட்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான். அந்தம்மா மகிழ்வுடன் "போயிட்டுவாப்பா," என்று அனுப்பி வைக்கிறார்.


இந்த இரண்டு சம்பவங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் நான் கண்ட காட்சிகள்.

இப்போது சற்று விரிவாக பார்க்கலாம்.


நிகழ்வு 1...




சாட்டை அடிக்கும் அந்த மனிதரை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தோம். திடிரென அந்த குழந்தை பசியால் "அப்பா பசிக்குது பசிக்குது," என்று அழ, "ஏல இப்பதான் கூட்டம் கூடிருக்கு. இப்ப போய் அழுவுறீயால" என்று இரண்டு அடி அடிக்க, அந்தப் பிஞ்சு அவரது அதட்டலுக்கு பயந்து மறுபடியும் குட்டிக்கரணம் போடுகிறான். அடித்து முடிந்ததும் ஆளாளுக்கு காசு கொடுத்தனர். நானும் 2 ரூபாய் கொடுத்தேன், சிலர் சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

என் பக்கத்தில் நின்றிருந்த ஒரு தம்பதியில் மனைவி, "என்ன‌ங்க அந்த பிள்ளைக்கு காசு கொடுங்க - பாவமா இருக்கு," என்றார். உடனே அவள் கணவன், "போடி இவளே... வேடிக்கை பார்த்தேல்ல பேசாம இரு," என்றார். அவள், "பாவமா இருக்கு... காசு கொடுங்க பாவம்," என்று மறுப‌டியும் கேட்கிறாள். அதற்கு கணவன், "ஏன்டி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? வேடிக்கை காட்டுறது அவன் வேலை; வேடிக்கை பாக்கிறது நம்ம இஷ்டம், இதுக்கு எதுக்கு காசு? இப்போ நாம இயற்கைக்காட்சியை பாக்கிறோம் அதுக்கு என்ன காசா கொடுக்கிறோம். போடி போடி நாம போற பஸ் வருதான்னு பாரு அதவிட்டுட்டு... காசு அது இதுன்னு," என்று வள்ளென்று விழுந்தார்.

அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் மேல கோபம் வந்ததோ வர‌வில்லையோ - எனக்கு அவர் மேல டன் கணக்கில் ஆத்திரமாக இருந்தது. அவர்கள் போகும் பஸ் வந்ததும் சென்றுவிட்டார்கள்.

அந்த சாட்டைக்காரனின் பையன் இப்போது ரொம்ப அழுதுக்கிட்டே இருந்தான். எல்லோரும் சாட்டைக்காரனுக்காக இல்லாமல் அந்த பிஞ்சுக்காக காசு கொடுத்தனர். ஆனால், அந்த பையனின் அழுகுரலை சட்டைபண்ணாமல் இன்னும் தனக்கு காசு விழவேண்டும் என்பதற்காக மேலும் மேலும் தன்னைத்தானே அடித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துறானாம். உடனே அங்கிருந்த பெருசு, "ஏலே, அந்த பச்சப்பிள்ளை எவ்வளவு நேரமா அழுவுறான், அவனுக்கு ஒரு பன் வாங்கிக் கொடுக்கணுமின்னு தோணாமல் அடிச்சிக்கிட்டே இருக்கிய்யேல‌. அவனுக்கு சாப்பாடுவாங்கிக் கொடுக்கியா... இல்ல உன்னை அடிச்சித் தொரத்தனுமால," என்று சத்தம் போட, அங்கிருந்த அனைவரும் "ஆமா" என்றனர்.

அதன்பின்னர் சாட்டைக்காரன் அந்த இடத்தை விட்டு நகன்றான்.



சாட்டைக்காரன்
தன்னைத் தானே அடித்துக் கொண்டு பிச்சை கேட்பதை பார்க்கும்போது நமக்கு மிகவும் வேதனையாக உள்ளது. கஷ்டப்படும் மக்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யலாம். நம்முடைய அரசாங்கமும் இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யலாம்.

சாட்டைக்காரன் தன்னையும் வேதனைப்படுத்தி, தன்னுடைய குழந்தையையும் பசியால் துடிக்கவைக்கும் இந்தப் பிழைப்பு தேவைதானா? நல்ல திடகாத்திரமாக இருக்கிறான். ஏதாவது வேலைத் தேடி அல்லது ஏதாவது தொழில் செய்து அவனும் அவன் குடும்பமும் நல்லா இருக்கலாமே... இப்படி பொதுவான எண்ணம் மேலிடுகிறது.

ஒரு சில சாட்டைக்காரர்கள் பற்றி விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்களே கிடைத்தது.

சாட்டை அடிக்கும் மனிதர்கள் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து கும்மாளமிட்டு தன் குடும்பத்தை பட்டினி போடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு அறிவுரைகள் சொன்னால் - 'சாமி நான் உடம்ப அடிச்சிக்கிறேன் இல்லையா, அதான் சரக்கடிக்கிறேன். அப்பதான் உடம்பு வலிக்காது. நாளைக்கு அடிச்சாதான் காசு கிடைக்கும்,' என்ற விளக்க அறிக்கை வேறு!

"ஏம்பா, எதாவது வேலை செஞ்சி பொழைக்கலாமே..." என்றால், "என்ன சாமி நாங்கெல்லாம் காலம்காலமாக இப்படியே இருந்துட்டோம். திடீர்னு வேலைக்குபோன்னா எப்படி போகமுடியும்," என்ற பதிலே வந்தது.

விவரம் தெரியாதவர்களைத் திருத்தலாம். ஆனால், எல்லாம் தெரிந்தவர்களை?

******************************

நிகழ்வு 2...

"அம்மா பசிக்குதும்மா.." என்றபடி ஒரு பிச்சைக்காரன் அந்தம்மாவிடம் கேட்கிறான். "அப்படியாப்பா இந்தா," என்று கொஞ்சம் சோறும் குழம்பும் ஒரு வாளி மூடியில் வைத்து அவனிடம் கொடுகிறார். அவன் சாப்பிட்டுவிட்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான். அந்தம்மா மகிழ்வுடன் "போயிட்டுவாப்பா" என்று அனுப்பி வைக்கிறார்.

அந்தம்மாவை சுற்றிலும் நிறைய பிச்சைக்காரர்களும் ஆதரவற்ற அனாதைகளும் இருக்கிறார்கள். எல்லா பிச்சைக்காரர்களும் அந்தம்மாவிடம் சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர்.

அந்தம்மா நீங்க நினைப்பதுபோல பெரிய பணக்காரரோ அல்லது கொடைவள்ளலோ கிடையாது. அவர் ஓர் ஆதரவற்ற வயதான பெண்மணி. அந்தம்மா கொடுக்கும் சாப்பாடு அறுசுவை சாப்பாடு அல்ல. அது பழைய சோறும் சாம்பாரும் தான் என்று நினைக்கிறேன். சாப்பாடு கொடுக்கும் அந்தம்மா முகத்தில் எவ்வளவு சந்தோசம். இந்தக் காட்சியை கண்ட என் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

ஒருபானையில் சோறும் ஒரு தூக்குவாளியில் சாம்பாரும் இருக்கிறது. அவர் எங்கிருந்து சாப்பாடு கொண்டுவருகிறார். அவர் வீடுவீடாக‌ சென்று பிச்சைக்கேட்டு சாப்பாடு வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு கிடைத்த சாப்பாட்டை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தது நெகிழ்வாக இருந்தது. அவருக்கு எவ்வளவு பெரிய மனசு, தாயுள்ளம் கொண்டவர் என்பதை நினைக்கும்போது அந்தம்மா நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

**********************************

ஆதரவற்ற ஒரு அம்மா பசியால் வாடுபவர்களுக்கு உணவு கொடுக்கிறார். நம்மால் ஏன் முடியவில்லை? நாம் இவர்களை போன்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும்போது அவர்களின் மகிழ்ச்சியை முகத்தில் காணலாமே!

ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம் என்று சொல்வார்கள்.

'ஓர் ஏழைப் பெண்மணியிடம் இருக்கும் இரக்க குணம், நம்மில் பலரிடமும் இல்லாதது ஏன்?"

இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால், விடை கிடைக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன்.

***********************************

அன்புள்ள நண்பர்களே!! இந்த சமூக கட்டுரை யூத்புல் விகடனில் சிறப்புக் கட்டுரையாக இன்று வெளியாகி உள்ளது. யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் கொடுத்த யூத்புல் விகடனுக்கு நன்றி.

தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கு நன்றிகள். நன்றி நண்பர்களே..

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

22 comments:

  1. ரொம்ப நெகிழ்வான ஒரு விஷயம். அந்த மாதிரி சாட்டைகாரர்களை திருத்த முடியாது

    ReplyDelete
  2. சிந்திக்க வைத்த பதிவு...

    ReplyDelete
  3. யூத்ஃபுல் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. இடுகை, சமுதாய நோக்கோடு உள்ளது.
    யூத்ஃபுல் விகடனில் வெளியானது
    மகிழ்ச்சியாய் உள்ளது.

    ReplyDelete
  5. நெஞ்சை தொடும் பதிவு ...யூத்ஃபுல் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் ஷேக் .

    ReplyDelete
  6. அந்த வயதான பெண்மணி ரொம்பவே ஈர்த்துவிட்டார். நல்ல சமூக சிந்தனை. யூத்புல் விகடனில் வெளியானதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  8. Congratulations! தொடர்ந்து அசத்துங்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    மனிதம் சில இடங்களில்
    செத்தும் வாழ்ந்தபடியும்தான்.

    ReplyDelete
  10. முதலில் வாழ்த்துக்கள்! அப்புறம், பாராட்டுக்கள்! தொடரட்டும் இந்த ராஜபாட்டை!

    ReplyDelete
  11. ரொம்ப நெகிழ்வான பதிவு இது. இந்த சாட்டைக்காரர்களைக்கண்டா கோபம்தான் வருது. யூத்ஃபுல் விகடனில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிக நல்ல பகிர்வு ஸ்டார்ஜன். யூத்புல் விகடனில் வந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. நன்றாக எழுதி உள்ளீர்கள் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!வாழ்த்துகள்!!வாழ்த்துக்கள்!!! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது யூத் ஃபுல் விகடனில் வெளிவந்தமைக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  15. சமூக முற்போக்கு சிந்தனை உள்ள இந்த கதை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    அந்த வயதானஅம்மா நிறைந்து நிற்கிறார்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்... தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌..

    ReplyDelete
  18. தரமான படைப்பு; வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்