Pages

Saturday, May 29, 2010

கயத்தாரிலிருந்து கட்டபொம்மனும் நானும்


அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) நாயக்கர் வம்சத்தில் ஆட்சிபுரிந்தவர் ஜெகவீர பாண்டியன். இவரிடம் அமைச்சராக இருந்த தெலுங்கை பூர்வீகமாக‌ கொண்ட‌ கெட்டிபொம்மு (வீரம் மிகுந்தவர்) என்பவரின் பரம்பரையில் வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனின் இயற்பெயர் வீரபாண்டியன்.

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

அந்த காலகட்டத்தில் வணிகம் செய்ய நம்நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றத் தொடங்கினர். நம்நாட்டை தந்திரமாக ஆங்கிலேயர் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். எல்லா அரசர்களும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டவேண்டும் என்று கி.பி. 1793ல் ஆங்கிலேயர் சட்டம் கொண்டு வந்தனர். இதற்கு நாட்டின் பலபகுதிகளிலிருந்து மன்னர்கள், நம்நாட்டை வெள்ளைக்காரன் அடிமைப்படுத்துவதா என்று வெகுண்டெழுந்தனர். தமிழ்நாட்டிலும் பல மன்னர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

கட்டபொம்மன் திருநெல்வேலி பாளையத்துக்காரகளை ஒன்றுதிரட்டி ஆலன்துரையை எதிர்த்து போரிட்டார். இந்தபோரில் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். பின்னர் நெல்லை கலெக்டராக இருந்த ஜாக்சன் துரையுடனான சந்திப்பு பயனளிக்காமல் போகவே வெள்ளையர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்தார். அக்டோபர் 1, 1799 இல் எட்டப்பனால் காட்டிகொடுக்கப்பட்டு புதுக்கோட்டை மன்னன் தொண்டைமானின் உதவியுடன் ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை கைதுசெய்து கயத்தாறுக்கு கொண்டு வந்தனர்.

அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

************************************

வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி சிறுவயதில் பாடபுத்தகங்களில் படிக்கும்போது பெருமையாக இருக்கும். அப்போதே என்மனதை கவர்ந்தவர் கட்டபொம்மன். என்னுடைய சிறுவயதில் கயத்தாற்றில் இருக்கும் எங்க நன்னி (அம்மம்மா) வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். கட்டபொம்மனை இங்கேதான் தூக்கிலிட்டார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் ஒருதடவை கூட அந்த இடத்தை அப்போது பார்த்ததில்லை.

கயத்தாரிலுள்ள கட்டபொம்மன் சிலை. இதுதான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்.


ஒருநாள் எதோ ஒரு ஊருக்கு சென்றுவிட்டு வரும்போது நன்னி, "எல சேக் இதுதான் கட்டபொம்மன் தூக்குலபோட்ட இடம். பார்க்கணும் பார்க்கணும் என்று சொல்லுவியலே நல்லா பாத்துக்கோ" என்று காட்டும்போதுதான் தெரிந்தது. இதன்பின்னர் கட்டபொம்மன் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டார். நெல்லையில் பாளையங்கோட்டை பேரூந்து நிலையத்துக்கு அருகிலும் கட்டபொம்மன் சிலை உண்டு.

சிறுவயதில் கயத்தாரில்தான் நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்டேன். அங்கே உள்ள சைக்கிள்கடையில் வாடகைசைக்கிள் ஒரு மணிநேரத்துக்கு 50பைசா. சைக்கிள் கடைக்குசென்று எங்கமாமா பேரச்சொல்லுவேன். உடனே கடைக்காரர் "பத்திரமாக ஓட்டு என்ன".. என்றுசொல்லி சைக்கிளை கொடுப்பார். மாமாவிடமிருந்து "ரோட்டுப்பக்கமெல்லாம் போகக்கூடாது" என்று கண்டிப்புடன் அனுமதி கிடைக்கும். நான் எங்கசொந்தக்கார பையனை சேர்த்துக்கொண்டு கட்டபொம்மன் சிலை, குட்டிகுளம், பன்னீர்குளம் என்று மாமாவுக்கு தெரியாமல் சுத்துவேன்.

மாமாவிடம், "மாமா கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடத்தில் எப்படிமாமா சிலை வந்தது?" என்று கேட்டேன்.



அதற்கு மாமா, "இந்தஇடம் ஆரம்பத்தில் வெறும் தரையாகத்தான் இருந்தது. இந்த இடத்தின் மகிமையை தெரிந்து கொண்ட நடிகர் சிவாஜி கணேசன்தான் இந்த இடத்தை வாங்கி அதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை நிறுவினார். சிலை திறப்பு விழா 1970-ம் வருடம் ஜூலை மாதம் 16-ம் நாள் நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டி தலைமை வகிக்க பெருந்தலைவர் காமராஜர் கட்டபொம்மன் சிலையை திறந்து வைத்தார்" என்று மாமா சொன்னபோது பிரமிப்பாக இருந்தது.

மாமா, "கட்டபொம்மனை விசாரணை நடத்தி சிறையில் வைத்திருந்த கட்டடம் போலீஸ் நிலையத்துக்கு பின்னால் உள்ள சந்தைக்கு போகும் தெருவில் உள்ளது. ஆனால் அது இப்போது ரொம்ப சேதமடைந்து உள்ளது" என்றார்.


பாஞ்சாலங்குறிச்சியின் நுழைவாயில். இதிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கட்டபொம்மனின் கோட்டை உள்ளது.



இதனால் எனக்கு ரொம்ப ஆவலானது. அப்படியானால் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமானது. அப்போதைய சூழ்நிலையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு செல்வது இயலாத காரியமாக இருந்தது. இருந்தாலும் என்றாவது ஒருநாள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மட்டும் மாறவே இல்லை.


பின்னர் மாமாவீட்டுக்கு கயத்தாறுக்கு போகும்போதெல்லாம் கட்டபொம்மன் சிலையை பார்க்க தவறுவதில்லை. கல்லூரி படிப்பு முடித்தபின், இந்தகாலத்தில் படித்த படிப்புக்கு ஏத்தமாதிரி எங்கே வேலை கிடைக்குது?.. வீட்டு கஷ்டசூழ்நிலையினால் வேலையை தேடியதில் நிரந்தரமில்லா வேலைதான் மிஞ்சியது. கிடைத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். கயத்தாற்றில் மாமாவுக்கு தெரிந்தவர் டிவிஎஸ் (இருசக்கர வாகன விற்பனை) டீலர்ஷிப் வாங்கினார். அப்போது மாமா, அவரிடம் என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்கே எனக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலை கிடைத்தது.

கயத்தாறில் வேலை கிடைத்ததால் தினமும் வீட்டுக்கு நெல்லை செல்ல முடியாததால் மாமாவீட்டிலே தங்கியிருந்து வேலை பார்த்தேன். எங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள நெல்லை டிவிஎஸ் தான் டிஸ்ரிபியூட்டர். அதனால் தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அலுவலக வேலையாக தூத்துக்குடி, நெல்லை செல்லவேண்டியிருந்தது. இருசக்கர வாகனத்தில்தான் தூத்துக்குடிக்கு செல்வதுண்டு.

இப்போதைய பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ளே இருக்கும் கட்டபொம்மன் நினைவகம்.


அந்த பகுதியில் உள்ள அனைத்துபகுதியும் எனக்கு அத்துப்படி. இந்தநேரத்தில்தான் என்விருப்பமான பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்க்கும்வாய்ப்பு கிடைத்தது. கயத்தாரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில்தான் பாஞ்சாலங்குறிச்சி இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. போகும்போதெல்லாம் குறைவான தூரம் கொண்ட வேறவழி இருந்தாலும் பத்துநிமிசமே அதிகம்எடுக்கும் இந்த வழியில் வருவேன்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை செப்பனிட்டு புதிய கோட்டை மதில்சுவர்கள் நினைவகம், அருங்காட்சியகம் விளையாட்டு திடல் எல்லாம் அந்த கோட்டையில் உண்டு. இந்த கோட்டையை 1974ல் அப்போதைய முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திறந்துவைத்தார். இப்போதும் பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் மே மாதம் 14ம் தேதி மற்றும் 15ம்தேதி கட்டபொம்மன் விழா நடைபெறும். இந்தவிழாவில் தூத்துக்குடிமாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

ஆனால் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தவிழாவில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இப்போது விடுமுறையில் சென்றதும் கயத்தார் சென்றிருந்தேன். நான், என்மனைவி, தங்கை தம்பிகள், மாமா பசங்கள் என்று எல்லோரும் கட்டபொம்மன் சிலையை காண சென்றோம். வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் நெல்லை டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்போது கயத்தார் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டபொம்மன் சிலை அமைவிடத்தில் சிறுபூங்காவும், குடிநீர்வசதிகள் அமைத்து நல்லமுறையில் பராமரித்து வருகிறார்கள்.


***********************************

அன்பு நண்பர்களே!! இந்த கட்டுரையை யூத்புல் விகடனுக்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் இந்த கட்டுரையை பாராட்டி குட்பிளாக்ஸ் பகுதியில் முக்கியத்துவத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

,

Post Comment

28 comments:

  1. பல அரிய தகவல்களை புதிதாக தெரிந்து கொண்டேன். ரொம்ப அருமையான அனுபவ பகிர்வு.

    ReplyDelete
  2. மிக நல்ல கட்டுரை ஸ்டார்ஜன். கட்டுரை எழுதப்பட்டிருக்கும் விதம் அருமை.

    யூத்ஃபுல் விகடனில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நிறைய தகவல்கள் தெரிந்தது நல்ல பதிவு.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு! எங்க ஊருப்பக்கத்துத் தகவல்கள்! :-)

    ஆனால், கட்டபொம்மனின் இன்னொரு பக்கமும் உண்டு. அதை எழுத தமிழ்வாணன் முயன்றபோது நிறுத்தி விட்டார்கள். :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள்..!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நிறைவான பதிவு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  7. அன்பின் ஸ்டார்ஜன்

    பல அரிய தகவல்கள் - தேடிப் பிடித்து பகிர்ந்தமை நன்று - நன்றி.

    இத்தலைமுறையினர் கட்ட பொம்மனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்ற தகவல்கள். அப்பக்கம் செல்பவர்களை நிச்சயம் இங்கும் செல்லத் தூண்டும் தகவல்கள்.

    நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. முதலில் பாராட்டுகளும்.. வாழ்த்தும்..

    ரொம்ப விரிவா எழுதி இருக்கீங்க.. நல்ல அலசல் ..

    ReplyDelete
  9. க‌ட்டுரை ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்... வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு..அருமை..

    ReplyDelete
  11. //ஆனால், கட்டபொம்மனின் இன்னொரு பக்கமும் உண்டு. அதை எழுத தமிழ்வாணன் முயன்றபோது நிறுத்தி விட்டார்கள். :-)//

    கட்டபொம்மன் வாழ்க்கை ம.பொ.சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தாலும்,சிவாஜியின் நடிப்பாலும் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் வரலாற்று பக்கங்கள் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்றே நம்ப வைக்கிறது.

    மாறாக சேட்டைக்காரன் சொல்லும் தமிழ்வாணன் எழுத முயன்ற போது நிறுத்தி விட்டார்கள் என்ற தகவல் தவறு.தமிழக நூலகங்களில் எங்காவது அலமாரிக்குள் அந்த புத்தகம் இருக்க கூடும்.

    தமிழ்வாணன் கூற்றில் நம்பிக்கையற்ற தன்மைக்கு காரணம் அவரது கல்கண்டு துணுக்கு செய்திகளின் சாரம் மாதிரியான விசயங்களாக இருக்கலாம்.

    பொன்னியின் செல்வன் கல்கியின் கற்பனையென்றாலும் வரலாற்று நிகழ்வுகளாக ஆதாரங்களையும் கூடவே சேர்த்திருப்பது புத்தகத்திற்கு வலு சேர்க்கிறது.தமிழ்வாணன் புத்தகத்தில் அந்த மாதிரி ஆதாரங்கள் குறைவு எனலாம்.

    இடுகைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கட்டுரை நன்றாக உள்ளது

    வாழ்த்துக்கள்

    மற்றும்

    தகவலை பகிர்ந்ததற்கு நன்றி

    --

    ReplyDelete
  13. அழகான பதிவு. மண்ணின்மனத்தோடு சொன்ன விதம் அருமை ஷேக் .
    யூத் புல் விகடனில் வருவதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. முறுக்கு மீசை வரைந்து தோப்பில் கட்டப்பொம்மன் வசனம் பேசிய அந்த நாட்களெல்லாம் ரசனைக்குரிய காலம். ...

    ReplyDelete
  15. நல்ல அருமையான தகவல்கள்; தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.

    ReplyDelete
  16. நீங்கள் கூறிய வரலாறு எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது.விகடன் குட்ப்ளாக்கில் தேர்ந்தெடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நிறைய அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  18. எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். டெம்ப்ளட் அழகாக உள்ளது கலக்குறீங்க போங்க.

    இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  19. பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்.

    ராம்ஜி_யாஹூ
    அக்பர்
    செ.சரவணக்குமார்
    Kanchi Suresh
    சேட்டைக்காரன்
    ஜெய்லானி
    ஹேமா
    cheena (சீனா)
    கே.ஆர்.பி.செந்தில்
    நாடோடி
    அஹமது இர்ஷாத்
    ராஜ நடராஜன்
    புருனோ Bruno
    abul bazar/அபுல் பசர்
    ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ மின்மினி
    asiya omar
    ஸ்ரீராம்.
    அன்புடன் மலிக்கா
    சசிகுமார்

    ReplyDelete
  20. உயர சென்று கொண்டிருக்கிறீர்கள்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. புதிய தகவலை தெரிந்துக்கொண்டேன்...

    பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  22. விரிவான பதிவிற்கும் தங்களின் அசாதாரண உழைப்பிற்கும் சிரத்தைக்கும் பாராட்டுக்கள்!
    கட்டபொம்மனின் இயற்பெயர் வீரபாண்டியன் அல்ல என்று நினைக்கிறேன்.
    பாண்டி மன்னனுக்கு தத்து கொடுக்கப்பட்டதால் இணைந்த பெயரது.
    விபரமறிந்தவர்கள் விளக்கலாம்.. குழப்பலாம்.
    நன்றி!

    ReplyDelete
  23. வாங்க வசந்த் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  24. வாங்க கருணாகரசு சார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  25. வாங்க மாப்ஸ் ஜெகா @ நன்றி நன்றி பாராட்டுகளுக்கு.. அப்படியா.. கட்டபொம்மனுக்கு இது உண்மையான பெயரில்லையா.. தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  26. ஸ்டார்ஜன்...
    அருமையான பகிர்வுங்க...
    நிறைய சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்